You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் அணுசக்தியை விட தனது பலமான 'ஆயுதத்தை' போரில் பயன்படுத்தியது எப்படி?
- எழுதியவர், ஜியார் கோல்
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 40 நாட்கள் நீடித்த போரின் விளைவாக, ஓர் ஆச்சரியமளிக்கும் விஷயம் வெளிப்பட்டுள்ளது.
அதாவது, இரானின் மிகச்சிறந்த பலம் அதன் அணுசக்தித் திறனில் இல்லை, மாறாக ஹோர்மூஸ் நீரிணை போக்குவரத்தை துண்டிப்பதில்தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
தொடக்கத்திலிருந்தே, முக்கிய இடங்கள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகள் மூலம் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகவே இந்தப் போர் பரவலாகப் பார்க்கப்பட்டது.
இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது.
ஆனால், மோதல் தீவிரமடைந்ததால், பாரசீக வளைகுடாவை உலகச் சந்தைகளுடன் இணைக்கும் குறுகிய நீர்வழிப் பாதையில் கடல்சார் போக்குவரத்தைத் துண்டிப்பதில் இரான் தனது கவனத்தைத் திருப்பியது.
இந்த நடவடிக்கை, ஹோர்மூஸ் நீரிணை வழியாகத் தடையின்றி எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை நம்பியிருக்கும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு உடனடியாகப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது.
வழக்கமான ராணுவ மோதல்களை விட, இந்த முக்கியப் பாதையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அதிக உத்தி ரீதியிலான நன்மையை அளிக்கும் என்பதை இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐஆர்ஜிசி) அதிகாரிகள் உணர்ந்துள்ளனர்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை அச்சுறுத்துவதன் மூலம், தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய அமெரிக்காவை இரான் கட்டாயப்படுத்தியது.
இறுதியில், போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனையாக ஹோர்மூஸ் நீர்வழிப் பாதையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா முன்னுரிமை அளித்தது.
தாக்கப்பட்டால் நீரிணையை மூடிவிடுவோம் என்று இரான் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தபோதிலும், ஹோர்மூஸ் நீரிணை இதற்கு முன்பு ஒருபோதும் இதுபோன்று முழுமையாக மூடப்பட்டதில்லை.
1980-1988 இரான் - இராக் போரின்போது, எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டபோதும் கூட அது ஒருபோதும் மூடப்படவில்லை.
இப்போது சில இரானிய தளபதிகள் மற்றும் அதிகாரிகள் நீரிணையின் மீதான நாட்டின் எதிர்காலக் கட்டுப்பாடு குறித்து விவாதித்து வருகின்றனர்.
இரானிய நாடாளுமன்றம், குறிப்பாக அதன் தேசிய பாதுகாப்பு ஆணையம், அந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிப்பதற்கான முன்மொழிவு ஒன்றையும் தயாரித்துள்ளது.
இந்நிலையில், அந்த வழியாகக் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு மூன்று பேரல் எண்ணெய்க்கும் ஒரு டாலர் வீதம் இரான் கட்டணம் வசூலிக்கலாம் என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரைத்துள்ளார்.
வெற்றியின் பிம்பம்
போர்நிறுத்தத்திற்குப் பிறகு, இரானிய அரசு ஊடகங்கள் ஒரு வெற்றிகரமான பிம்பத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
"இரானின் போர்நிறுத்தத் திட்டத்தில் பொருளாதாரத் தடைகளை நீக்குதல், போர் இழப்பீடு மற்றும் அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும்" என்று ஐஆர்ஜிசி உடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இந்த நிகழ்வைக் குறித்துத் தெரிவித்துள்ளது.
மூத்த இரானிய அதிகாரிகளும் இந்தக் கருத்தையே எதிரொலித்தனர்.
இரான் துணை அதிபரின் கருத்துக்கள், இந்த போர்நிறுத்தத்தை "காமனெயி கோட்பாட்டிற்கு" கிடைத்த வெற்றியாகக் கட்டமைத்தன.
அதேநேரத்தில், ஐ.ஆர்.ஜி.சி-யின் முன்னாள் தலைவரும் இரானின் புதிய தலைவரின் ஆலோசகருமான மொஹ்சென் ரெசாய், இரானிய படைகள் "துப்பாக்கியைத் தயார் நிலையில் வைத்தபடி" மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக எச்சரித்தார்.
இருப்பினும், இந்த வெற்றி முழக்கங்களுக்கு அடியில் மிகவும் பலவீனமான ஒரு யதார்த்தம் மறைந்துள்ளது.
இரானிய ராணுவம் கணிசமான இழப்புகளைச் சந்தித்துள்ளது.
பல ஆண்டுகால பொருளாதாரத் தடைகளால் ஏற்கனவே நெருக்கடியில் இருந்த அதன் பொருளாதாரமும் மோசமாகச் சரிந்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதை அடைவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.
புரட்சிகர காவல்படையின் அனுமதியின்றி அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் "குறிவைக்கப்பட்டு அழிக்கப்படும்" என்று இரான் புதன்கிழமை எச்சரித்தது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் பின்னர் கூறுகையில், "ஏற்றுக்கொள்ள முடியாத" இந்த கருத்துக்கள் குறித்து அதிபர் டிரம்பிற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இவை தனிப்பட்ட முறையில் கூறப்பட்டவற்றிலிருந்து வேறுபடுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
இரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஸாதே வியாழக்கிழமை பிபிசியிடம் பேசுகையில், ''அமெரிக்காவுடனான போர் தொடங்கும் வரை திறந்திருந்த அந்த நீர்வழிப்பாதை வழியாக பாதுகாப்பான பயணத்திற்கு இரான் பாதுகாப்பு வழங்கும்" என்றார்.
இருப்பினும், ''அமெரிக்கா இந்த தாக்குதலை நிறுத்திய பின்னரே" இது மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இக்கூற்று, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.
இரான், "சர்வதேச நெறிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு" கட்டுப்படும் என்று காதிப்ஸாதே கூறினார்.
இருப்பினும், இந்த நீரிணை சர்வதேச கடல் எல்லைக்குள் இல்லை என்றும், பாதுகாப்பான பயணம் என்பது "இரான் மற்றும் ஓமனின் நல்லெண்ணத்தை" பொறுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நீரிணை, சர்வதேச கடல்சார் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட மாநாட்டின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இது வணிக கப்பல்களில் கடல்சார் போக்குவரத்திற்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது.
ஆபத்தான முன்னுதாரணம்
எனவே, இரான் அடுத்து என்ன செய்யக்கூடும்? நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இரானிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அந்த திட்டம் ஒன்பது அம்சங்களைக் கொண்டுள்ளது.
அதன் முக்கிய விதிகளில் ஒன்று, "எதிரிக் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டாது" என்று கூறுகிறது. அதற்கு மாற்றாக, இரான் பயணச் சேவைகளை வழங்கும். இதற்கு நிறுவனங்கள் இரானிய நாணயத்தில் பணம் செலுத்த வேண்டும் மற்றும் இரானிய வங்கி கணக்கை வைத்திருக்க வேண்டும். கப்பல்கள் தங்கள் சரக்குகள் குறித்த விவரங்களையும் அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் சிக்கலான இந்தத் திட்டத்துக்கு இன்னும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு இரான் உண்மையிலேயே கட்டணம் விதித்தால், அமெரிக்காவும் அதன் மேற்கத்திய மற்றும் பிராந்திய நட்பு நாடுகளும் அத்தகைய நடவடிக்கையை ஏற்குமா என்பதுதான் முக்கியக் கேள்வி.
இத்திட்டத்துக்கு சமீபத்தில் எழுந்துள்ள எதிர்வினைகள் கடும் எதிர்ப்பையே காட்டுகின்றன, ஏனெனில் கடல்வழிப் போக்குவரத்து சுதந்திரம் என்பது அமெரிக்காவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஒரு முக்கியக் கொள்கையாகும். மேலும் எந்தவொரு கட்டண முறையும் ஓர் ஆபத்தான முன்னுதாரணமாகவே பார்க்கப்படும்.
இரான் இதில் வெற்றி பெற்றால், அது ஒரு குறிப்பிடத்தக்க உத்தி மற்றும் அடையாள வெற்றியாக அமையும்.
மேலும் உலகின் மிக முக்கியமான கடல்சார் பாதைகளில் ஒன்றை கட்டுப்படுத்தும் தனது திறனை இரான் நிரூபிக்கும்.
இருப்பினும், இத்தகைய நடவடிக்கை அமெரிக்காவின் நட்பு நாடுகள், நேட்டோ உறுப்பினர்கள் மற்றும் பிராந்திய சக்திகளை இரானுக்கு எதிராக ஒன்றுபடுத்துவதன் மூலம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அதேபோல், ஒருங்கிணைந்த ராஜீய, பொருளாதார அல்லது ராணுவ ரீதியான பதிலடிகளுக்கு வழிவகுக்கும் அபாயமும் இதில் உள்ளது.
கூடுதல் தகவல்கள்: சாரா பெல்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு