ரத்த அழுத்தம், மன சோர்வுக்கான மருந்துகள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்குமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஐரோப்பா கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த எடுத்துக்கொள்ளப்படும் சில மருந்துகள், உடலின் வெப்பத்தை உணரும் திறனைப் பாதிக்கக்கூடும்.
    • எழுதியவர், நவோமி மிஹாரா
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஐரோப்பா கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், மற்றவர்களை விட தான் ஏன் அதிகமாகப் பாதிக்கப்படுகிறோம் என்பதை இலியானா ஒகுமுஸால் புரிந்துகொள்ள முடியவில்லை.

"அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியே வந்தவுடன், என் முகத்தில் அதிகமாக வியர்க்கத் தொடங்கும்," என்று அவர் கூறுகிறார்.

28 வயதான இலியானா, பிரஸ்ஸல்ஸில் குளிர்சாதன வசதி இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல்தளத்தில் வசித்து வருகிறார். வெப்பத்திலிருந்து நிவாரணம் பெற அவர் பல்வேறு வழிகளை முயற்சித்தார்.

அலுவலகத்துக்கோ அல்லது அருகிலுள்ள காபி கடைக்கோ இலியானா செல்வார். ஆனால், அதனால் அவருக்கு அதிக பலன் கிடைக்கவில்லை.

"எனது உடல் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்ப அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆனது. ஒருமுறை, எனது வீட்டின் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை எட்டியது. அன்று நான் 18 மணி நேரம் தூங்கினேன்," என்று அவர் கூறுகிறார்.

எழுவதற்கு மிகவும் சிரமமாக இருந்ததாகவும், தனது ரத்த அழுத்தம் குறைந்திருக்கலாம் என்று கவலைப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

கடுமையான வெப்பத்தை எதிர்கொள்வது ஒகுமுஸுக்கு புதிதல்ல. இதற்கு முன்பு, உலகின் பிற பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் அவர் எதிர்கொண்டுள்ளார்.

எனினும், வெப்பம் இவ்வளவு மோசமாக அவரைப் பாதித்தது இது தான் முதல் முறை. தன்னைப் போலவே வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்ததை அவர் பார்த்தார்.

அப்போது தான், கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் எடுத்துக்கொண்டிருந்த மனச்சோர்வு மற்றும் பதற்றத்துக்கான மருந்துகளுக்கும் வெப்பத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதை அவர் உணர்ந்தார்.

காலநிலை மாற்றம் காரணமாக வெப்ப அலைகள் மேலும் தீவிரமாகவும் கடுமையாகவும் மாறி வருகின்றன.

இத்தகைய சூழலில், மனநலம், ரத்த அழுத்தம் மற்றும் இதயப் பாதிப்புகளுக்காக பொதுவாக எடுத்துக்கொள்ளப்படும் சில மருந்துகள், உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் திறனைப் பாதிக்கக்கூடும் என்று மருத்துவர்களும் சுகாதார அமைப்புகளும் எச்சரிக்கின்றனர்.

இதனால் வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுக்கான ஆபத்து அதிகரிக்கக்கூடும்.

வெப்பம் மற்றும் மன ஆரோக்கியத்துக்கான மருந்துகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பைபோலார் கோளாறு போன்ற மனநல பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் சில மருந்துகள், வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியான ஹைப்போதலாமஸை இந்த மருந்துகள் பாதிப்பதால் இவ்வாறு நிகழ்கிறது.

நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மனநல மருத்துவராகவும் காலநிலை மற்றும் சுகாதாரம் தொடர்பான மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பின் (Medical Society Consortium on Climate and Health) வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினராகவும் ராபர்ட் ஃபெடர் உள்ளார்.

"மூளையின் இந்தப் பகுதி நமது இயக்கத்தை மெதுவாக்கவும், அதிகமாக வியர்க்கவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கவும் உதவுகிறது. இந்த மாற்றங்கள் வெப்பத்தைச் சமாளிக்க நன்மை பயக்கும்," என்று அவர் கூறுகிறார்.

இந்த மருந்துகளில், அதிகம் பயன்படுத்தப்படும் மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகளான தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறுபிடிப்பு தடுப்பான்கள் (SSRIs) மற்றும் செரோடோனின்-நோரெபினெஃப்ரின் மறுஉறிஞ்சல் தடுப்பான்கள் (SNRIs) ஆகியவை அடங்கும்.

இந்த மருந்துகளில், அதிகம் பயன்படுத்தப்படும் மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகளான தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறுபிடிப்பு தடுப்பான்கள் (SSRIs) மற்றும் செரோடோனின்-நோரெபினெஃப்ரின் மறுஉறிஞ்சல் தடுப்பான்கள் (SNRIs) ஆகியவை அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பதற்றத்துக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பல மருந்துகள், வெப்பம் தொடர்பான பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

செர்ட்ராலைன், ஃப்ளூஆக்சிடின், எஸ்சிட்டாலோப்ராம் மற்றும் வென்லாஃபாக்சின் போன்ற மருந்துகள் இந்த வகையைச் சேர்ந்தவை.

இந்த மருந்துகள் மூளையில் செரோடோனின் மீண்டும் உறிஞ்சப்படுவதைத் தடுப்பதன் மூலம் செயல்படுகின்றன.

செரோடோனின் என்பது உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் ஒரு வேதிப்பொருள்.

இது மனநிலையையும் உடலின் பல்வேறு செயல்பாடுகளையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

ஹைப்போதலாமஸில் அதிக அளவு செரோடோனின் இருப்பது, உடலின் வெப்பநிலை கட்டுப்பாட்டில் தலையிடுவதுடன், அதிகப்படியான வியர்வையையும் ஏற்படுத்தக்கூடும்.

மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் 5 பேரில் ஒருவருக்கு இந்தப் பிரச்னை ஏற்படலாம். இதனால் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை ஏற்படக்கூடும்.

"அதிக வெப்பநிலை காரணமாக உடலில் எலக்ட்ரோலைட் அளவு ஏற்கெனவே குறைந்திருந்தால், இந்தப் பிரச்னை மேலும் தீவிரமாகலாம்" என்று ஃபெடர் கூறுகிறார்.

டிரைசைக்ளிக் மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள் பழைய வகையைச் சேர்ந்த மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகளாகும்.

இந்த மருந்துகள் அதிகப்படியான வியர்வையை ஏற்படுத்தலாம் அல்லது வியர்வை முற்றிலும் நின்றுபோகவும் செய்யலாம். இது ஒரு சிக்கலாகும்.

இதனால், உடல் வெப்பத்தை வெளியேற்றுவது கடினமாகி, உடல் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

இந்த மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள் 'ஆன்டிகோலினெர்ஜிக்' (anticholinergic) விளைவைக் கொண்டுள்ளன.

அதாவது, இந்த மருந்துகள் அசிடைல்கோலின் எனப்படும் ஒரு வேதிப்பொருளின் (நரம்பியக்கடத்தி) செயல்பாட்டைக் குறைக்கின்றன.

இந்த வேதிப்பொருள் வியர்த்தல் உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டு, ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

 இந்த மருந்துகள் அசிடைல்கோலின் எனப்படும் ஒரு வேதிப்பொருளின் (நரம்பியக்கடத்தி) செயல்பாட்டைக் குறைக்கின்றன. இந்த வேதிப்பொருள் வியர்த்தல் உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டு, ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெப்ப அலைகள் குறித்த முந்தைய ஆய்வுகள், மனநோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு இறப்பு அபாயம் அதிகரித்துள்ளதாகக் காட்டியுள்ளன.

லாஸ் ஏஞ்சலீஸில் வசிக்கும் 36 வயதான தொழில் ஆலோசகர் கரோலின் ஃப்ரெசெனெட், இந்த கோடையில் மூன்று வெவ்வேறு வகையான மனநல மருந்துகளை ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவித்தார்.

இந்த மருந்துகளில் மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள், மனநிலையைச் சீராக்கும் மருந்துகள் மற்றும் ஏடிஹெச்டி மருந்துகள் ஆகியவை அடங்கும்.

ஜூலை மாதத்தில் நீண்ட நேரம் நீடித்த வெப்பமான, ஈரப்பதமான நாட்களில், அவர் கவனம் செலுத்துவதில் சிரமப்பட்டார். அவர் அதிக எரிச்சலடைந்தார். மேலும், வழக்கத்தைவிட அதிகமாக அவருக்கு வியர்க்கத் தொடங்கியது.

முதலில், சரியாக சாப்பிடாததாலும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததாலும் இது ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் நினைத்தார்.

பின்னர், அவரது மனநல ஆதரவுக் குழுவில் இருந்த ஒரு நண்பர், வெப்பத்துக்கும் மருந்துகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்த சில கட்டுரைகளை அவருக்கு அனுப்பினார். அந்தக் குழுவில் இருந்த மற்றவர்களும் இதேபோன்ற பிரச்னைகளை அனுபவித்ததாக அவர் கூறினார்.

"எனது மனநலப் பிரச்னைகள் மற்றும் நான் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவுகள் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், வெப்பத்துக்கும் மருந்துகளுக்கும் இவ்வளவு தொடர்பு இருக்கக்கூடும் என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறுகிறார்.

மற்ற வகையான மனநலப் பிரச்னைகளுக்கான மருந்துகளும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஸ்கிசோஃப்ரீனியா மற்றும் பைபோலார் கோளாறுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆன்ட்டிசைக்காட்டிக் மருந்துகள், ஹைப்போதலாமஸில் டோபமைனின் செயல்பாட்டைத் தடுக்கின்றன.

இதன் விளைவாக, உடல் வெப்பநிலையைக் குறைவாக வைத்திருக்கும் உடலின் இயல்பான செயல்முறை சரியாகச் செயல்பட முடியாது.

வெப்ப அலைகள் தொடர்பான முந்தைய ஆய்வுகளில், ஆன்ட்டிசைக்காட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நபர்களிடம் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஏடிஹெச்டி-க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரிட்டலின் போன்ற ஊக்க மருந்துகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கவும், ரத்த நாளங்களைச் சுருக்கவும் செய்யக்கூடும்.

இது, இயற்கையாக குளிர்விக்கும் உடலின் செயல்முறையில் குறுக்கிடுகிறது. ஃபெடரின் கூற்றுப்படி, இந்த மருந்துகள் சோர்வாகவோ அல்லது அதிகமாக வேலை செய்ததாகவோ கூட உங்களை உணர வைக்காது.

இதனால், தங்களது உடல் அதிகமாக வெப்பமடைந்திருப்பதை அந்த நபர் உணராமல் இருக்கக்கூடும்.

பீட்டா-தடுப்பான்கள் முதல் டையூரெடிக்ஸ் வரை

வெப்ப அலைகளுக்கு உடலின் எதிர்வினையை அதிகரிப்பது மனநலத்துக்கான மருந்துகள் மட்டுமல்ல.

ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளும் வெப்பத்துக்கு உடலை ஏற்படுத்திக்கொள்ளும் திறனைக் குறைக்கக்கூடும்.

டையூரெடிக்ஸ் (Diuretics), ஏசிஇ இன்ஹிபிட்டர்கள் மற்றும் ஏஆர்பிக்கள் ஆகியவை உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.

இந்த மருந்துகள் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையைச் சீர்குலைக்கக்கூடும்.

கடைசி இரண்டு வகை மருந்துகளும் தாகத்தை உணர்த்தும் ஹார்மோனைப் பாதிக்கக்கூடும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்திருந்தாலும், உடனடியாகத் தாகம் ஏற்படாமல் இருக்கலாம்.

லோகன் ஹார்ப்பர், குடும்ப மருத்துவராகவும், கொலராடோ அன்ஷுட்ஸ் பல்கலைக்கழகத்தின் காலநிலை மற்றும் சுகாதாரத் திட்டத்தில் உதவிப் பேராசிரியராகவும் உள்ளார்.

இந்த மருந்துகள் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையைச் சீர்குலைக்கக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில இதய நோய் மருந்துகள் நீரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.

"இந்த அனைத்து மருந்துகளும் இணைந்து ஏற்படுத்தும் விளைவு, உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக்கூடும். இது சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு அல்லது உடலின் பிற முக்கிய உறுப்புகளில் தீவிர பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பீட்டா-பிளாக்கர்கள் என்ற மருந்துகள், தோலுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கக்கூடும். இதனால் உடலில் இருந்து வெப்பத்தை வெளியேற்றும் செயல்முறை குறைவான செயல்திறனுடன் செயல்படக்கூடும்.

டிரைசைக்ளிக் மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகளுடன் சேர்த்து, ஆன்டிகோலினெர்ஜிக்ஸ் எனப்படும் பிற மருந்துகளும் உடலின் வெப்பநிலையைப் பாதிக்கக்கூடும்.

பார்கின்சன் நோய், அதிகப்படியான சிறுநீர்ப்பைச் செயல்பாடு, சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளுக்கு இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த மருந்துகள் வியர்வை வெளியேறும் செயல்முறையையும், உடலின் இயற்கையான குளிர்விக்கும் அமைப்பையும் பாதிக்கக்கூடும்.

"மக்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்" என்று கூறும் ஹார்ப்பர், "இந்த மருந்துகள் உடல் தன்னைத்தானே குளிர்வித்துக்கொள்வதை மேலும் கடினமாக்குவதுடன், முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்" என்கிறார்.

வயதானவர்களுக்கு வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளின் அபாயம் அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு இது குறிப்பாக பொருந்தும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

"மக்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்" என்று கூறும் ஹார்ப்பர், "இந்த மருந்துகள் உடல் தன்னைத்தானே குளிர்வித்துக்கொள்வதை மேலும் கடினமாக்குவதுடன், முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்"என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோடைகாலத்தில், ரத்த அழுத்த மருந்துகள் வெவ்வேறு வயதினருக்கு வெவ்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

சில மருந்துகள் லேசான வெப்பத் தாக்குதல்கூட தீவிரமான பாதிப்பாக மாறுவதற்கு காரணமாக இருக்கலாம்.

"டையூரெடிக்ஸ், ஆன்ட்டிசைக்காட்டிக்ஸ், பீட்டா-பிளாக்கர்கள், ஊக்க மருந்துகள் மற்றும் ரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும் வயதானவர்கள், வெப்பத் தாக்குதல் ஏற்படாத நிலையிலும் வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அதிக ஆபத்தில் இருக்கலாம்," என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

"இந்த மருந்துகளை ஒன்றாக எடுத்துக்கொள்வது, ஒரே நேரத்தில் ஒரு மருந்தை மட்டும் எடுத்துக்கொள்வதைவிட உடல்நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்," என்று ஹார்ப்பர் குறிப்பிடுகிறார்.

ஆனால், எந்தெந்த மருந்துகளை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பது இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை என்று அவர் கூறுகிறார்.

சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளும் வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுக்கான அபாயத்தைப் பாதிக்கக்கூடும்.

"ஒருவரின் வேலை உடல் ரீதியாகக் கடினமானதாக இருக்கலாம். அவர்கள் வெப்பமான காலநிலையில் வேலை செய்ய வேண்டியிருக்கலாம்.

சிலர் அதிக நேரத்தை வெளியில் செலவிடுகிறார்கள். மற்றவர்கள் நகரத்தின் வெப்பமான பகுதிகளில் வசிக்கிறார்கள். அங்கு அவர்களால் குளிர்சாதன வசதியைப் பெற முடியாமல் இருக்கலாம்," என்று கூறுகிறார் ஹார்ப்பர்.

தெற்கு நெவாடாவில் உள்ள டூரோ பல்கலைக்கழகத்தின் அவசர மருத்துவத் துறையில் மருத்துவ உதவியாளராகவும் உதவிப் பேராசிரியராகவும் இருக்கும் செசிலியா அஹோனோனுவும் சமீபத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார்.

சிலர் அதிக நேரத்தை வெளியில் செலவிடுகிறார்கள். மற்றவர்கள் நகரத்தின் வெப்பமான பகுதிகளில் வசிக்கிறார்கள். அங்கு அவர்களால் குளிர்சாதன வசதியைப் பெற முடியாமல் இருக்கலாம் என்று கூறுகிறார் ஹார்ப்பர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருந்துகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

லாஸ் வேகாஸில் நடைபெற்ற சமூக சுகாதார நிகழ்வின் போது, அங்கு வெப்பநிலை சுமார் 43 டிகிரி செல்சியஸாக இருந்தது. அப்போது, பூங்கா ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த 60 வயது முதியவர் ஒருவரை அவர்கள் சந்தித்தனர்.

"அவரது முகம் மிகவும் வெளிறியிருந்தது, அவருக்கு அதிகமாக வியர்த்துக் கொண்டிருந்தது. அவரது இதயத் துடிப்பு வேகமாக இருந்தது" என்று அவர் கூறுகிறார்.

அந்த நபர் டையூரெடிக்ஸ் மற்றும் எஸ்எஸ்ஆர்ஐ மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவரது உடல் வெப்பநிலை எந்த அளவுக்கு உயர்ந்திருந்தது என்பது குறித்து அவருக்குத் தெரியவில்லை.

"நம்மில் பெரும்பாலானோர் செய்வதைப் போலவே அவரும் செய்தார்" என்று கூறும் அஹோனோனு, "இந்தப் பிரச்னைக்கு வெப்பம் தான் காரணம் என்று அவர் நினைத்தார்" என்கிறார்.

ஆனால், அவரிடம் மேலும் சில கேள்விகளைக் கேட்டபோது, இந்தப் பிரச்னைக்கு மற்றொரு சாத்தியமான காரணம் இருப்பது தெரியவந்தது. அது அவர் எடுத்துக்கொண்டிருந்த மருந்துகள்.

அஹோனோனு, வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான சில எளிய வழிமுறைகளை அவருக்கு வழங்கினார். நிறைய தண்ணீர் குடிக்கவும், வெப்பமான காலநிலையில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தினார். அருகில் இருந்த குளிரூட்டும் மையங்களின் பட்டியலையும் அவருக்கு வழங்கினார்.

மேலும், உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும் தீவிரமான நிலையான வெப்பத் தாக்குதலைக் குறிக்கும் அறிகுறிகள் குறித்தும் அவரை எச்சரித்தனர்.

"ஒருவரின் நடத்தையில் மாற்றம் ஏற்படுவதை அவர்கள் கவனித்தால், குழப்பமாகத் தோன்றினால் அல்லது வழக்கத்துக்கு மாறாக நடந்துகொண்டால், அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

கூடுதல் தகவல்களும் முறையான கவனிப்பும்

மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்வதை நிறுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வெப்பத்துக்கும் மருந்துகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து மருத்துவர்களுக்கே அதிக பயிற்சியும் தகவல்களும் வழங்கப்பட வேண்டும் என்று ஹார்ப்பர் கூறுகிறார்.

"மருத்துவர்கள் ஒரு புதிய மருந்தை பரிந்துரைக்கும்போது, அந்த மருந்தினால் ஏற்படக்கூடிய தீவிரமான பக்கவிளைவுகள் குறித்து நோயாளிக்கு விளக்குவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் ஹார்ப்பர் .

"குறிப்பாக, வெப்பம் தொடர்பான உடல்நல பாதிப்புகளுக்கான அதிக ஆபத்தைக் கொண்ட சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு, வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளின் அபாயங்கள் குறித்தும் தகவல் வழங்கப்பட வேண்டும்."

இந்த கோடையில் ஒகுமுஸ் எதிர்கொண்ட பிரச்னைகள், தான் இந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதைப் பரிசீலிக்க அவரைத் தூண்டியுள்ளன.

"கோடை காலத்தில் என்னால் சரியாகச் செயல்படவோ அல்லது இயல்பாக என் வாழ்க்கையை வாழவோ முடியவில்லை. எனவே, இந்த மருந்துகளை முழுமையாக நிறுத்த முடியுமா என்பதைப் பற்றி மருத்துவரிடம் சென்று தீவிரமாக ஆலோசிக்கத் தொடங்கியுள்ளேன்" என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், ஃப்ரெஸ்ஸெனெட் அந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தும் எண்ணத்தோடு இருக்கவில்லை.

"இந்த மருந்துகள் எனக்கு மிகவும் நன்றாகப் பலனளிக்கின்றன" என்று அவர் கூறுகிறார்.

மருந்துகளால் தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டது என்பதையும், தனது உடலில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதையும் அறிந்துகொண்டது தங்களுக்கு நிம்மதியாக இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

"இது திடீரென ஏற்பட்ட ஒரு சம்பவம் அல்ல, உண்மையான ஒரு பிரச்னை என்பதை இது எனக்கு உணர்த்தியது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு