அமெரிக்கா இரான் மீது விதித்த 'இதுவரை இல்லாத கடுமையான தடைகள்'- இந்தியாவுக்கு என்ன தாக்கம்?

தெஹ்ரானில் உள்ள ஒரு சந்தையில் பொருட்கள் வாங்கும் மக்கள். அமெரிக்கத் தடைகளின் விளைவாக இரான் கடினமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தெஹ்ரானில் உள்ள ஒரு சந்தையில் பொருட்கள் வாங்கும் மக்கள். அமெரிக்கத் தடைகளின் விளைவாக இரான் கடினமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் புதிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இதை "முன்னெப்போதும் இல்லாதது" என வர்ணித்துள்ளார்.

இதன் நோக்கம், "வெளிநாடுகளில் இரானுக்குள்ள பொருளாதார வழிகளை முடக்குவது" என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்கா இரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. பல டஜன் நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இரானுடன் தொடர்ந்து வர்த்தகத் தொடர்பில் உள்ள வெளிநாட்டு வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரானின் வர்த்தகம் மற்றும் வருமானத்திற்கு உதவுவதாக அமெரிக்கா கருதும் சில செயல்பாடுகளை நிறுத்த காலக்கெடுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இந்த புதிய அமெரிக்கத் தடைகள் இரானுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி, தேயிலை மற்றும் மருந்துகளின் வர்த்தகத்தை பாதிக்கக்கூடும்.

இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர்கள் திங்கள்கிழமை கவலை தெரிவித்தனர். அண்மைய ஆண்டுகளில் இப்பொருட்களின் பெரும்பகுதி துபை துறைமுகம் வழியாக இரானுக்குச் சென்றுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா "ஆபரேஷன் பொருளாதார தனிமை" என்று பெயரிட்டுள்ளது. இரானுடன் எந்த வகையிலான வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கும் நாடுகளை தனிமைப்படுத்துவதே இதன் நோக்கம் என அமெரிக்கா கூறுகிறது.

இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர்நிறுத்தம் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் இருக்கும் நேரத்தில்தான் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக நீடித்த ராணுவ மோதலால் இரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளன. பணவீக்கம் அதிகரித்துள்ளது. தேசிய நாணயத்தின் மதிப்பும் சரிந்துள்ளது.

தனது உரையில், அமெரிக்க கருவூலச் செயலாளர் இந்த நடவடிக்கை இரானுக்கு எதிரான இராணுவ அழுத்தத்தின் ஒரு பகுதியாகும் என்று வெளிப்படையாகக் கூறினார். "அமெரிக்க ஆயுதப்படைகள் இதற்கான அடித்தளத்தை ஏற்கனவே அமைத்துவிட்டன" என்றும் அவர் தெரிவித்தார்.

கப்பல் போக்குவரத்து, தங்க வர்த்தகம் மற்றும் இரானிய விமானப் போக்குவரத்து போன்றவற்றின் மீது அமெரிக்கா பல ஆண்டுகளாக பல்வேறு வகையான தடைகளை விதித்து வருகிறது.

தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் கீழ், புதிய துறைகள் சேர்க்கப்படுவதுடன், ஏற்கனவே அமலில் உள்ள தடைகளும் மேலும் கடுமையாக்கப்படுகின்றன.

மேலும், வெளிநாடுகளில் இரானுடன் பணியாற்றும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராகவும் கூடுதல் கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள புதிய தடைகள் என்ன?

இரானுக்கு எதிரான புதிய தடைகளை அறிவித்த அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்.

பட மூலாதாரம், Kent Nishimura / AFP via Getty Images

படக்குறிப்பு, இரானுக்கு எதிரான புதிய தடைகளை அறிவித்த அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

புதிய தடைகளில் மிக முக்கியமான மாற்றம் ஐந்து துறைகளைச் சுற்றி அமைந்துள்ளது: டிஜிட்டல் சொத்துகள், தொழில்நுட்பம், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து.

அமெரிக்க கருவூலத்தின் வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம், 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவின் கீழ் தடைகள் விதிக்கப்படக்கூடிய இரானியப் பொருளாதாரத் துறைகளின் பட்டியலில் இந்த ஐந்து துறைகளையும் அதிகாரப்பூர்வமாகச் சேர்த்துள்ளது.

இந்த உத்தரவு முதன்முதலில் ஜனவரி 2020-இல் டொனால்ட் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் கட்டுமானம், சுரங்கத் தொழில், உற்பத்தித் துறை மற்றும் ஜவுளித் துறை இதில் இடம்பெற்றிருந்தன. பின்னர் மற்ற துறைகளையும் சேர்க்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

அதே ஆண்டில் நிதித்துறையும் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 2024-இல் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருள் துறைகளும் இணைக்கப்பட்டன.

அமெரிக்க நிதியமைச்சகத்தின் கூற்றுப்படி, புதிய ஐந்து துறைகள் சேர்க்கப்பட்டதன் மூலம் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கக்கூடிய நடவடிக்கைகளின் வரம்பு விரிவடைந்துள்ளது.

இந்த துறைகளில் இரானிய பொருளாதாரத்துடன் தொடர்புடைய எந்த நபருக்கும், அவர் எந்த நாட்டில் இருந்தாலும், தடைகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்க கருவூலத்தின் வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் கூற்றுப்படி, இந்த முடிவால் இரானுடன் ஏதாவது வகையில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கண்காணிப்புக்குள் வரலாம்.

இரான் பணப் பரிமாற்றத்திற்கும் தடைகளைத் தவிர்ப்பதற்கும் டிஜிட்டல் சொத்துகளைப் பயன்படுத்துகிறது என்று அமெரிக்க கருவூலத்துறை குற்றஞ்சாட்டுகிறது. மேலும், தனது ஆயுதத் திட்டங்களுக்காக மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பெற முயற்சிக்கிறது. தேசிய நாணயமான ரியாலின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் தங்கத்தின் மூலம் சொத்துகளை பாதுகாக்கிறது. விமான மற்றும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள் மூலம் உபகரணங்கள், பணம் மற்றும் எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் கீழ் சுமார் 60 நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கும் அமெரிக்கா தடைகள் விதித்துள்ளது. அமெரிக்க கருவூலத்தின் வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் தகவலின்படி, அவர்களில் சிலர் இரானின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்களுக்கு உபகரணங்கள் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். சிலர் இணையத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், மற்றவர்கள் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் அதன் வருவாய் பரிமாற்றத்தில் தொடர்புடையவர்களாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் இலக்காக மாறியுள்ள இந்த நபர்களும் அமைப்புகளும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவர் மீதும் தடை விதிப்பதற்கான காரணமும் வெவ்வேறானது.

முன்பு வழங்கப்பட்ட சில விலக்குகள் ரத்து

புதிய தடைகள் இரானிய மாணவர்களையும் பாதிக்கக்கூடும். (குறியீட்டு படம்)

பட மூலாதாரம், Atta Kenare / AFP via Getty Images

படக்குறிப்பு, புதிய தடைகள் இரானிய மாணவர்களையும் பாதிக்கக்கூடும். (குறியீட்டு படம்)

புதிய தடைகளின் மற்றொரு முக்கிய அம்சம், முன்பு வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் பொது அனுமதியின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்த பல நடவடிக்கைகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் கல்வி கற்கும் இரானிய மாணவர்களுக்கு முன்பு பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்கள், இரானிய பல்கலைக்கழகங்களுடன் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் பரிமாற்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடிந்தது. இதில் இரானிய பல்கலைக்கழக மாணவர்கள் அமெரிக்காவில் கற்பதற்கான உதவித்தொகை வழங்குவதும் அடங்கும்.

சேர்க்கை, கல்விக் கட்டணம் தொடர்பான சேவைகள், சில இணையவழி பாடநெறிகள், இலாப நோக்கமற்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள், மேலும் சில கல்வி மற்றும் தொழில்முறைத் தேர்வுகளும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த அனுமதி இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கைகள் இனி இந்த பொது உரிமத்தின் பலனைப் பெற முடியாது. இப்போது இவை தொடர்பான எந்தவொரு நடவடிக்கைக்கும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

விளையாட்டுத் துறையிலும் 2013 முதல் நடைமுறையில் இருந்த ஒரு அனுமதி காலவரையற்ற முறையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் இரான் மற்றும் அமெரிக்கா இடையே தொழில்முறை மற்றும் அமெச்சூர் விளையாட்டு நிகழ்வுகள், பரிமாற்றத் திட்டங்கள், போட்டிகள், கண்காட்சிகள், வீரர் ஆதரவு, பயிற்சி, நடுவர் பணிகள் மற்றும் விளையாட்டுக் கல்வி நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.

எந்த நாடுகள் பாதிக்கப்படலாம்?

இரானிய எண்ணெயின் மிகப்பெரிய வாங்குபவராக சீனா இருந்து வந்துள்ளது; புதிய தடைகள் அதையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

பட மூலாதாரம், ATTA KENARE / AFP / Getty Images

படக்குறிப்பு, இரானிய எண்ணெயின் மிகப்பெரிய வாங்குபவராக சீனா இருந்து வந்துள்ளது; புதிய தடைகள் அதையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

அமெரிக்காவின் புதிய தடைகள் இந்தியாவையும் பாதிக்கக்கூடும்.

ராய்ட்டர்ஸ் தகவலின்படி, இந்தியா இரானின் முக்கிய ஐந்து வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், 2018-19-இல் 17 பில்லியன் டாலர் என்ற உச்ச நிலையை எட்டிய இருதரப்பு வர்த்தகம் தற்போது 90 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. இப்போது, அமெரிக்கத் தடைகளிலிருந்து மனிதாபிமான அடிப்படையில் விலக்கு பெற்ற பொருட்களே பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த புதிய தடைகளால் ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள இந்தியா மற்றும் இரானின் வர்த்தகம் மேலும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை இரானுடனான அனைத்து வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனைகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடந்த வாரம் நிறுத்தியிருந்தது.

சமீப மாதங்களில் அமெரிக்க அதிகாரிகளின் கருத்துப்படி, இந்த பொருளாதார அழுத்தத்தின் முக்கிய குறியாக சீனா உள்ளது. அண்மை ஆண்டுகளில் சீனா, இரானிய எண்ணெயின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்து வந்துள்ளது. இந்த புதிய தடைகளின் மூலம் இரான் மற்றும் சீனாவின் வர்த்தகத்தைத் தடுக்க அல்லது குறைக்க முயன்றுள்ளது.

ராய்ட்டர்ஸ் தகவலின்படி, கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் இரானிய எண்ணெயில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டது சீனாவிற்குச் செல்கிறது. அமெரிக்கத் தடைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்ட பிறகு, சீனாவின் பெரிய அரசுத் துறை நிறுவனங்கள் நேரடியாக இரானிய எண்ணெய் கொள்முதல் செய்வதை பெருமளவு குறைத்துள்ளன. எனினும், சுயாதீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் மலிவான இரானிய எண்ணெயை தொடர்ந்து வாங்கி வருகின்றன.

ஆற்றல் பகுப்பாய்வு நிறுவனம் கெப்லரின் மதிப்பீட்டின்படி, ஆகஸ்ட் மாதத்தில் சீனாவுக்கான இரானிய எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றுக்கு சுமார் 5.34 லட்சம் பீப்பாய்களாக இருந்தது. ஜூலையில் இது 8.23 லட்சம் பீப்பாய்களாக இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருகட்டத்தில் அது 15.80 லட்சம் பீப்பாய்கள் வரை உயர்ந்திருந்தது.

சீனாவுடன் சேர்த்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரானின் வெளிநாட்டு வர்த்தக வலையமைப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் அளவு மட்டுமே இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம் அல்ல. துபை பல ஆண்டுகளாக பொருட்கள் மறு ஏற்றுமதி, பணப் பரிமாற்றம் மற்றும் இரானிய வணிக நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமாக இருந்து வந்துள்ளது.

ஆனால் தற்போது அந்த பாதையும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. தனது எல்லைப்பகுதியை நோக்கி ஏவுகணை ஏவியதாக இரான் மீது குற்றம்சாட்டி ஆகஸ்ட் 18 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரானுடனான அனைத்து வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனைகளையும் நிறுத்தியது..

துருக்கி மற்றும் இராக் ஆகிய நாடுகளும் இந்த சூழலில் குறிப்பிடப்படுகின்றன. துருக்கி, இரானின் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்று. மேலும் பொருட்கள் மற்றும் பணப் பரிமாற்றத்திற்கான மாற்று நில வழித்தடமாகவும் உள்ளது. எமிரேட்ஸ் வழி முடங்கியுள்ள நிலையில், சில இந்திய ஏற்றுமதியாளர்கள் துருக்கி வழியாக இரானுடன் வர்த்தகம் தொடரும் வாய்ப்பை ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளனர்.

இராக் பல ஆண்டுகளாக இரானின் முக்கிய பிராந்தியச் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக எரிவாயு, மின்சாரம் மற்றும் எண்ணெயற்ற பொருட்களின் விநியோகத்தில் இது முக்கியப் பங்காற்றுகிறது. அமெரிக்க அழுத்தம் அதிகரிக்கும் போது, வங்கிகள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் நாடுகளின் இடைத்தரகர்கள் இலக்காகக் கூடும். இதனால் சீனா உட்பட இரானின் பிராந்திய வர்த்தக வழிகளும் பாதிக்கப்படலாம்.

அமெரிக்க கருவூலச் செயலாளர் புதிய தடைகள் தொடர்பான தொகுப்பை அறிவித்தபோது, நிதியமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் குழுக்கள் பல்வேறு அரசுகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். அமெரிக்கா கவலை தெரிவித்து வரும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு காலக்கெடு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், அந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், "பணத்தை மறைக்க" இரானுக்கு உதவி செய்யும் நிறுவனங்கள் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலக்காகும் என்று அவர் எச்சரித்தார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இரான்

இரானில் ஜூலை 2026-இல் ஆண்டு பணவீக்க விகிதம் 66 சதவீதத்தை எட்டியது.

பட மூலாதாரம், Morteza Nikoubazl / NurPhoto via Getty Images

படக்குறிப்பு, இரானில் ஜூலை 2026-இல் ஆண்டு பணவீக்க விகிதம் 66 சதவீதத்தை எட்டியது.

புள்ளிவிவரங்கள் மற்றும் பல்வேறு அறிக்கைகளின்படி, சமீபத்திய போர் இரானின் நிதி மற்றும் பொருளாதார அமைப்பின் மீது முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் தனது ஜூலை மாத மதிப்பீட்டில், 2026-ஆம் ஆண்டில் இரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளது.

நாட்டின் உள்நாட்டு நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது. புள்ளிவிவரங்களும், மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய செய்திகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. இரான் அரசின் சொந்த தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஆண்டு பணவீக்க விகிதம் 66 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்களின் விலை சுமார் 128 சதவீதம் உயர்ந்துள்ளது.

எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு, இரானின் முக்கியமான அன்னிய செலாவணி வருவாய் மூலங்களில் ஒன்றை பெரிதும் பாதித்துள்ளது. மேலும், கப்பல் போக்குவரத்து தடைகள், கடல்சார் கட்டுப்பாடுகள் மற்றும் இடைத்தரகர் வலையமைப்புகள் மீதான அழுத்தம் காரணமாக, இரானிய எண்ணெயை விற்பனை செய்வதும் அதை எடுத்துச் செல்வதும் மேலும் சிக்கலாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு