'ஏழை சொல்லை யாரும் கேட்பதில்லை' - 13 ஆண்டு சிறையில் இருந்த சாமானியர் 50 வழக்குகளை உடைத்து விடுதலையான கதை

பிர்ஜு புங்காட்டி: 13 ஆண்டு சிறையில் இருந்த சாமானியர் 50 வழக்குகளை உடைத்து விடுதலையான கதை

பட மூலாதாரம், Birju Pungati

படக்குறிப்பு, பிர்ஜு புங்காட்டி
    • எழுதியவர், ஷதாலி ஷெட்மாகே
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

"நான் ஏதோ வேலை விஷயமாக டோங்கர்கர் (சத்தீஸ்கர்) சென்றிருந்தேன். திரும்பி வரும் வழியில் நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் சலேகசாவில் (கோண்டியா) காவல்துறை என்னைக் கைது செய்தது. என் இளமைப் பருவத்தின் 13 ஆண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டேன், இப்போது வெளியே வந்துள்ளேன். ஆனால், எனக்கு இன்னமும் ஒரு கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. எந்த ஆதாரமும் இன்றி 13 ஆண்டுகள் என்னைச் சிறையில் அடைத்து வைக்க நான் செய்த தவறுதான் என்ன?"

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 36 வயதான பிர்ஜு புங்காட்டி தனது கதையைக் கூறிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பேசுவதற்கே அவர் பயந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, "என்னைப்போல் எத்தனையோ பேர் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். எங்களை ஏன் சிறையில் அடைத்தீர்கள் என்பதுதான் அவர்களின் கேள்வியாகவும் இருக்கிறது" என்றார்.

அவரது குரலில் ஏமாற்றத்தின் வேதனை நிறைந்திருந்தது.

பிர்ஜு மீது நக்சல் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தம் 50 வழக்குகளை பிர்ஜு எதிர்கொண்டிருந்தார். அவை அனைத்திலிருந்தும் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும், வெறும் சந்தேகத்தின் பேரில் செய்யப்பட்ட கைதும், நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிய ஆண்டுகளும் அவரது சிந்தனையை விட்டு அகல மறுக்கின்றன. "என் வாழ்வின் 13 ஆண்டுகள் இதில் வீணாகிவிட்டன, அதை அரசு எனக்குத் திரும்பத் தருமா?" என்ற கேள்வி அவரை வாட்டிக் கொண்டே இருக்கிறது.

பிர்ஜு முதன்முதலில் கைது செய்யப்பட்டபோது அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகே கணவனும் மனைவியும் ஒன்றாக இருப்பதாக அவர் கூறினார்.

என்ன வழக்கு இது?

மார்ச் 2012-இல் கோண்டியா மாவட்டத்தின் சலேகசாவில் நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் பிர்ஜு உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

சலேகசா தாலுகாவைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கியது, மிரட்டியது மற்றும் கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கோண்டியா அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. 2017-இல் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவரை விடுவித்தது. எனினும், அவர் விடுதலை செய்யப்படவில்லை.

கோண்டியா நீதிமன்றம் அவரை விடுவித்த உடனே, காவல்துறை அவரை வேறொரு குற்றச்சாட்டின் கீழ் உடனடியாகக் காவலில் எடுத்தது. நக்சல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் கீழ் கட்ச்சிரோலியில் அவர் மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் சந்திரபூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார், மூன்று மாதங்களுக்குப் பிறகு நாக்பூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

பிர்ஜு மீதான மொத்தம் 50 வழக்குகளில், 49 வழக்குகளில் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டு, சிறையிலிருந்து பிணையும் கிடைத்தது. அதன் பிறகு கடைசி வழக்கின் தீர்ப்பு ஜூலை 24 அன்று வந்தது, பிர்ஜு அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் 'குற்றமற்றவர்' என விடுவிக்கப்பட்டார்.

ஆனால், இந்த அனைத்து விவகாரங்களிலும் அவரது வாழ்வின் பெரும் பகுதி வீணாகிப்போனது.

'எல்லாமே மாறியது'

கட்ச்சிரோலி மாவட்டத்தின் எடாபள்ளி தாலுகாவில் உள்ள கோடேலி கிராமத்தைச் சேர்ந்த பிர்ஜு புங்காட்டி விவசாயம் செய்து வருகிறார். கிராமத்தில் அவர்களுக்கு 14 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் தான் குடும்பத்தின் வாழ்வாதாரம் நடப்பதாக அவர் கூறுகிறார். பிர்ஜுவின் வீட்டில் தாய், சகோதரி, மனைவி மற்றும் அவர் உள்ளனர். அவரது தந்தை 2018-இல் காலமானார்.

தான் கைது செய்யப்பட்ட நாளை பிர்ஜு தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார். மார்ச் 2012-இல் சலேகசாவிலிருந்து கைது செய்யப்பட்ட பிறகு, அவர் பண்டாரா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் 5 ஆண்டுகள் இருந்தார். அவர் மீது 2 வழக்குகள் போடப்பட்டன.

பிர்ஜு புங்காட்டி: 13 ஆண்டு சிறையில் இருந்த சாமானியர் 50 வழக்குகளை உடைத்து விடுதலையான கதை

பட மூலாதாரம், Birju Pungati

படக்குறிப்பு, பிர்ஜு மீது நக்சல் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தம் 50 வழக்குகள் இருந்தன. அவற்றில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"நான் காவல்துறையினரிடம், என்னை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்? என் வீட்டாரை வரவழையுங்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்பேன். ஆனால் அவர்கள் வெவ்வேறு கேள்விகளை மட்டுமே கேட்பார்கள். என் வீட்டாருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் என்னைப் பற்றித் தெரிந்தது. அவர்களும் பயந்துபோயிருந்தனர்."

"நான் முதலில் பண்டாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன், பின்னர் கோண்டியா சிறையில் வைக்கப்பட்டேன், அங்கிருந்து 2018-இல் சந்திரபூர் சிறைக்கு அனுப்பப்பட்டேன். பின்னர், பாதுகாப்பு காரணங்களால் இங்கு வைக்க முடியாது என்று கூறி, மூன்று மாதங்களுக்குப் பிறகு சந்திரபூரிலிருந்து நாக்பூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டேன்" என்று பிர்ஜு கூறினார்.

அதன்பின்னர் 2025-இல் சிறையிலிருந்து வெளியேறும் வரை அவர் நாக்பூர் மத்திய சிறையில்தான் இருந்தார்.

இவ்வாறாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவன் நான் மட்டும் அல்ல என்று கூறும் அவர், "என்னைப்போல் எத்தனையோ பேர் எந்தக் குற்றமும் செய்யாமல் வெறும் சந்தேகத்தின் பேரில் பல ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்" என்றும் குற்றம் சாட்டினார்.

மனைவியும் கைது செய்யப்பட்டார்

பிர்ஜுவின் மனைவி பார்வதி சட்மேக் என்பவரும் 2018-இல் நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பார்வதி மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பார்வதி நாக்பூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டு 6 ஆண்டுகள் சிறையில் இக்ருந்தார்.

பார்வதியை அக்டோபர் 2025-இல் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றம் விடுவித்தது, அவரும் சிறையிலிருந்து வெளியே வந்தார். அன்றைய தினத்திலிருந்து அவர் கிராமத்திலேயே இருக்கிறார்.

பிர்ஜு புங்காட்டி: 13 ஆண்டு சிறையில் இருந்த சாமானியர் 50 வழக்குகளை உடைத்து விடுதலையான கதை

பட மூலாதாரம், Birju Pungati

படக்குறிப்பு, பிர்ஜு முதன்முதலில் கைது செய்யப்பட்டபோதுதான் அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. 13 ஆண்டுகளில் அந்தத் தம்பதியினர் ஒன்றாக இருந்தது அதுவே முதல் முறை என்று அவர் கூறினார்.

"முதலில் நான், பின்னர் என் மனைவி சிறையில் இருந்தோம். என் வயதான தாய்-தந்தை மனதளவில் உடைந்துபோயினர். 2018-இல் என் தந்தை காலமானார், மன அழுத்தத்தால் அவரது உடல்நிலை மோசமடைந்து உயிர் பிரிந்தது" என்று பிர்ஜு கூறுகிறார்.

பார்வதி அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார், அதே நேரத்தில் பிர்ஜு மீதான 49 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, நாக்பூர் உயர் நீதிமன்றத்தில் பிர்ஜுவுக்கு பிணை கிடைத்து ஆகஸ்ட் 2025-இல் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார். இப்போது கடைசி வழக்கிலிருந்தும் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார்.

'என் குடும்பமே சீரழிந்துவிட்டது'

பிர்ஜுவின் கைதுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினரும் தொடர் விசாரணைக்கு ஆளாக வேண்டியிருந்ததாக அவர் கூறினார்.

"காரணமற்ற அலைச்சல், மிரட்டல்கள், நெருக்கடிகள் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் செய்வதறியாது தவித்தனர், ஆனால் யாரிடமும் உதவி கேட்கும் வழியும் இருக்கவில்லை. ஏழைகள் தவறு செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் பேச்சை யாரும் கேட்பதில்லை," என்கிறார் பிரஜு.

2012-இல் பிர்ஜு கைது செய்யப்பட்டார், 2018-இல் அவரது மனைவி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் பிர்ஜுவின் தந்தை காலமானார். அதன் பிறகு அவரது தாயும் கைம்பெண் சகோதரியும் பயத்துடனேயே வாழ்ந்து வந்தனர். இருவரும் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.

2025-இல் பிர்ஜுவும் அவரது மனைவியும் சிறையிலிருந்து வெளியே வந்தனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகே இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். இந்த 13 ஆண்டுகளில் பல கனவுகள் காலத்தின் இருளில் மறைந்துவிட்டன. இப்போது இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள், ஆனால் எவ்வளவு காலம் ஒன்றாக இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மீண்டும் ஏதேனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவோமோ என்ற பயம் இருவரின் மனதிலும் நீடிக்கிறது.

"இந்தக் கைது சம்பவங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டில் நிம்மதி போயேவிட்டது. தந்தை இறந்துவிட்டார், ஆனால் என் தாய், சகோதரி, என் மனைவி மற்றும் எனக்கும் இரவில் தூக்கம் போயேவிட்டது. நாம் சுதந்திரமாக இல்லை என்ற அச்சத்திலேயே தினமும் வாழ்ந்து வருகிறோம்," என்று பிரஜு கூறினார்.

பிர்ஜு புங்காட்டி: 13 ஆண்டு சிறையில் இருந்த சாமானியர் 50 வழக்குகளை உடைத்து விடுதலையான கதை

பட மூலாதாரம், Birju Pungati

இதற்கிடையில், கட்ச்சிரோலி மாவட்டத்தில் நக்சல் நடவடிக்கைகளில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து கட்சிரோலி மாவட்ட காவல்துறையிடம் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களால் புள்ளிவிவரங்களை வழங்க முடியாது என்று தெரிவித்தனர். 2005 முதல் இதுவரை 45 முதல் 50 பேர் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

காவல்துறை கண்காணிப்பாளர் எம். ரமேஷிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "2005 முதல் 819 தீவிரவாதிகள் சரணடைந்து அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் மறுவாழ்வுப் பொறுப்பைக் காவல்துறை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, குற்றமற்றவர்கள் என வெளியே வரும் நபர்களுக்கு அரசுத் திட்டம் எதுவும் இல்லை" என்றார்.

கட்ச்சிரோலியின் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் நீலோத்பலிடமும் பிபிசி முன்பு இதுகுறித்து பேசியபோது, "குற்றமற்ற எந்த நபரையும் காவல்துறை கைது செய்வதில்லை. சாதாரண குடிமக்களின் பாதுகாப்பிற்காகக் காவல்துறை எப்போதும் தயாராக உள்ளது, யாருக்கும் வீண் அலைச்சல் ஏற்படாதவாறு காவல்துறை கவனமாக உள்ளது" என்று அவர் தெரிவித்திருந்தார்.

வழக்கறிஞர்கள் என்ன சொன்னார்கள்?

பிர்ஜுவின் வழக்கறிஞர் ஜெகதீஷ் மேஷ்ராம் கூறுகையில், "பிர்ஜு மீது இந்திய ஆயுதச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் நக்சல் தொடர்பாக கோண்டியாவில் 2 மற்றும் கட்ச்சிரோலியில் 48 என மொத்தம் 50 வழக்குகள் இருந்தன. அவர் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரது மனைவியும் சுமார் எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். இருப்பினும், அக்டோபர் 2025-இல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு அவரது மனைவியை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவித்தது, அவரும் சிறையிலிருந்து வெளியே வந்தார். பிரஜுவையும் நீதிமன்றம் அனைத்து விவகாரங்களிலிருந்தும் விடுவித்துள்ளது."

"பிர்ஜுவைப் போல எத்தனையோ பேர் சந்தேகத்தின் பேரில் பல ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், சிலரை நீதிமன்றம் விடுவித்துள்ளது, சிலர் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். காவல்துறை-நக்சல் மோதலில் சாதாரண குடிமக்கள் வீணாகச் சிக்கிக்கொள்கிறார்கள். கடந்த 18 ஆண்டுகளில் நான் இதுபோன்ற பல வழக்குகளைக் கையாண்டுள்ளேன், தற்போது பிர்ஜுவைப் போன்ற 40 வழக்குகள் என்னிடம் உள்ளன" என்றார்.

வல்லுநர்களின் கருத்து என்ன?

இதுகுறித்து மூத்த சட்ட வல்லுநரும் வழக்கறிஞருமான மிஹிர் தேசாய் கூறுகையில், "ஒரு குற்றமற்ற நபர் வெறும் சந்தேகத்தின் பேரில் 10-12 ஆண்டுகள் சிறையில், விசாரணைக் கைதியாக இருந்து, பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டால், அத்தகைய நபர்களுக்குச் சட்டத்தில் இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்கான வலுவான விதிகள் இருக்க வேண்டும். தற்போது இதுபோன்ற விவகாரங்களுக்குச் சில சட்ட விதிகள் உள்ளன, ஆனால் அவை போதுமானதாக இல்லை. அத்தகைய நபர்களுக்குக் காவலில் இருக்கும்போது பல நேரங்களில் பிணையும் கிடைப்பதில்லை. எனவே பிணை கிடைக்கும் நடைமுறை மேலும் எளிமையாக்கப்பட வேண்டும்."

"ஒரு குற்றமற்ற நபர் தவறான முறையில் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருந்தால், அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."

"அத்தகைய நபர்களின் மறுவாழ்வுக்காக அரசு வலுவான திட்டத்தைத் தீட்ட வேண்டும். ஏனெனில், இத்தனை ஆண்டுகள் சிறையில் இருப்பது அந்த நபரை மட்டும் பாதிப்பதில்லை, அவரது முழு குடும்பமும் அதன் பாதிப்பைச் சுமக்க வேண்டியுள்ளது. குடும்பம் அச்ச உணர்வில் வாழ வேண்டியுள்ளது, சம்பந்தப்பட்ட நபர் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு வேலை வாய்ப்பு கிடைப்பது கடினமாகிறது, எதிர்கால வாய்ப்புகள் நழுவிப்போகின்றன, அவரது முழு வாழ்க்கையிலும் இந்த விவகாரம் வடுவை ஏற்படுத்திவிடுகிறது," என்றார்.

பிர்ஜு புங்காட்டி: 13 ஆண்டு சிறையில் இருந்த சாமானியர் 50 வழக்குகளை உடைத்து விடுதலையான கதை

பட மூலாதாரம், BBC/SERAJ ALI

படக்குறிப்பு, பஸ்தரில் உள்ள ஒரு பாதுகாப்புப் படை முகாம்

சமூக ஆர்வலரும் ஆய்வாளருமான பெலா பாட்டியாவைத் தொடர்புகொண்டபோது அவர், "நக்சல் நடவடிக்கைகளில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்படும் நபர்களில் சிலருக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லாதபோதும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக்கொள்கிறார்கள். பல இடங்களில் இந்த நிலைமையைக் காண முடிகிறது."

"பஸ்தரில் (சத்தீஸ்கர்) 3000-க்கும் மேற்பட்ட இதுபோன்ற வழக்குகள் உள்ளன. ஆனால் சட்ட நடைமுறை மிகவும் மெதுவாக இருப்பதால் பல ஆண்டுகள் இவ்வழக்குகள் நிலுவையில் உள்ளன. பஸ்தரில் இப்போது நிலைமை மேம்பட்டு வருகிறது. நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் இதுபோன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன, இவ்வழக்குகளைத் தீர்த்து வீணாகச் சிக்கியவர்களை இந்த வேதனையிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்றார்.

கட்ச்சிரோலி மாவட்டத்தின் மாடியா சமூகத்தின் முதல் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான லால்சு நோகோட்டி கூறுகையில், "பழங்குடிப் பகுதியைச் சேர்ந்த பலர் நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. அவர்களுக்குப் பிணை கிடைப்பதும் கடினமாகிவிடுகிறது. யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைதானவர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. நமது நாட்டில் சட்ட அமைப்பு மிகவும் மெதுவாக செயல்படுகிறது. நீதி கிடைக்கிறது ஆனால் அது கிடைக்க சில நேரங்களில் மிகவும் தாமதமாகிவிடுவதால் மனிதனின் நம்பிக்கையே செத்துப்போகிறது. நீதிக்காகக் காத்திருந்து சிறையிலேயே இறந்த உதாரணங்களும் உண்டு."

"அப்படியானால், தாமதமாகக் கிடைத்த நீதியை உண்மையில் நீதி என்று சொல்ல முடியுமா? இது அநீதிதானே?" என்று நோகோட்டி கேள்வி எழுப்பினார்.

நாட்டில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மத்திய இந்தியாவின் நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சிறைகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிந்திக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

'அரசின் மார்ச் 2026 இலக்கு மற்றும் நக்சலைட் இயக்கத்தின் வீழ்ச்சி'

நக்சலைட் தொடர்புக் குற்றச்சாட்டின் பேரில் ஒருவரைச் சிறையிலிருந்து விடுவித்து, பின்னர் வேறொரு குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் உடனடியாக மீண்டும் காவலில் எடுப்பது இது முதன்முறை அல்ல. பல்வேறு மாநிலங்களில் பலர் இவ்வாறு சந்தேகத்தின் பேரில் பல ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் 2017-இல் சிஆர்பிஎஃப் 121 பேரை நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மத்திய இந்தியாவின் நக்சல் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வாழும் பகுதிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பல நேரங்களில் காவல்துறை-நக்சல் மோதலில் சாதாரண மக்கள் வீணாகத் துன்புறுத்தப்படுவதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிர்ஜு புங்காட்டி: 13 ஆண்டு சிறையில் இருந்த சாமானியர் 50 வழக்குகளை உடைத்து விடுதலையான கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மார்ச் 31, 2026-க்குள் நக்சலிசம் 'முற்றிலும் ஒழிக்கப்படும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

கடந்த 25 ஆண்டுகளில் நக்சல்-காவல்துறை நடவடிக்கைகளால் ஏற்பட்ட வன்முறையில் பல்வேறு மாநிலங்களில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, '31 மார்ச் 2026-க்குள் நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்படும்' என்று கூறியிருந்தார். அதன்படி அரசு இலக்கு நிர்ணயித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நடவடிக்கையில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான நக்சலைட்டுகள் இதுவரை சரணடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் நக்சல் நிறைந்த பகுதிகளில் காவல்துறை-நக்சல் மோதல் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஆனால், காவல்துறை-நக்சல் மோதலில் அதிக நஷ்டமடைந்தது சாதாரண பழங்குடியின மக்கள் தான்.

பிர்ஜு புங்காட்டி: 13 ஆண்டு சிறையில் இருந்த சாமானியர் 50 வழக்குகளை உடைத்து விடுதலையான கதை

பட மூலாதாரம், Getty Images

மத்திய இந்தியாவின் (மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின்) பழங்குடியினர் நிறைந்த பகுதி பல ஆண்டுகளாக நக்சலைட்டுகளின் புகலிடமாக இருந்து வருகிறது. நக்சலிசம் பல ஆண்டுகளாகப் பழங்குடியினப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனை ஒழிப்பதற்காக அரசு நூற்றுக்கணக்கான பாதுகாப்பு முகாம்களை அமைத்தது.

எனினும், பழங்குடியினரின் பாதுகாப்பு விவகாரம் எந்த அளவிற்கு வெற்றியடைந்தது என்பது இன்னமும் கேள்விகுறியாகவே உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை என்ன சொல்கிறது?

உள்துறை அமைச்சகத்தின் 2023-24 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையின்படி, 2013-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டில் வன்முறைச் சம்பவங்களில் மொத்தம் 48 சதவீதம் குறைவு (1,136-லிருந்து 594 ஆக) ஏற்பட்டுள்ளது. தீவிர இடதுசாரி வன்முறை தொடர்பான இறப்புகளில் (சாதாரண குடிமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர்) 65 சதவீதம் குறைவு (397-லிருந்து 138 ஆக) பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில், 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-இல் பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ளது. நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில், அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளால் பெருமளவிலான தீவிர இடதுசாரி அமைப்பினர் வன்முறைப் பாதையைக் கைவிட்டு மையநீரோட்டத்திற்குத் திரும்பி வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2023-இல் சத்தீஸ்கர் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்தது. தீவிர இடதுசாரி வன்முறைச் சம்பவங்களில் மொத்தம் 63 சதவீதச் சம்பவங்களும், அதனால் ஏற்பட்ட இறப்புகளில் 66 சதவீத இறப்புகளும் சத்தீஸ்கரில் நிகழ்ந்துள்ளன. இரண்டாம் இடத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் இருந்தது, அங்கு 27 சதவீத வன்முறைச் சம்பவங்களும் 23 சதவீத இறப்புகளும் பதிவாகியுள்ளன. எஞ்சிய வன்முறைச் சம்பவங்களும் இறப்புகளும் மகாராஷ்டிரா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், பிகார் மற்றும் கேரளாவிலிருந்து பதிவாகியுள்ளன.

பிர்ஜு புங்காட்டி: 13 ஆண்டு சிறையில் இருந்த சாமானியர் 50 வழக்குகளை உடைத்து விடுதலையான கதை

பட மூலாதாரம், BBC/SERAJ ALI

2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கைகளில் 1.7 மடங்கு அதிகரிப்பும், நக்சலைட்டுகள் ஒழிப்பில் 5 மடங்குக்கும் அதிகமான உயர்வும் பதிவாகியுள்ளது.

காவல்துறை-நக்சல் நடவடிக்கைகளில் சந்தேக நபர்களாகச் சிக்கிய நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கை இதில் பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் சிறையிலிருந்து வெளியே வந்திருந்தாலும், பலர் பல்வேறு மாநிலங்களின் சிறைகளில் சந்தேக நபர்களாக அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் நாட்டிலிருந்து நக்சலிசம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உள்துறை அமைச்சர் கூறினாலும், மறுபுறம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமான்யரின் விடுதலை எப்போது சாத்தியமாகும்? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? குடும்பத்தினரின் நிலை என்ன? என்ற கேள்வி அப்படியே உள்ளது. இதற்கு நிர்வாகம் என்ன தீர்வு காணும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு