'சென்னைக்கு குடிநீர் வழங்கும் கூவம்' - நகரில் சாக்கடையாக மாறும் முன் சுத்தமாக ஓடும் கூவம் ஆற்றின் பயணம்

பட மூலாதாரம், Janardhanan/BBC
சென்னை நகரவாசிகளுக்கு கூவம் என்ற சொல் கருப்பான, அடர்த்தியான கழிவுநீர் செல்லும் காட்சியை தான் நினைவுக்கு கொண்டு வரும். கூவம் என்றாலே சாக்கடை என்று கூறும் அளவு மக்களின் மனதில் பதிந்துள்ளது. ஆனால் இந்த கூவம் இன்றும் நல்ல நீர் ததும்பி ஓடும் ஓர் அழகிய ஆறு. சென்னைவாசிகளுக்கு நம்புவது கடினமாக இருந்தாலும், அதுவே உண்மை.

பட மூலாதாரம், Janardhanan/BBC
காவிரியாறு தலைகாவிரி என்ற ஊற்றிலிருந்து பிறப்பது போல, கூவம் ஆற்றுக்கு தனியாக ஊற்று கிடையாது. காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து சென்னை நோக்கி வரும் ஆறாகவே உள்ளது கூவம்.
கூவம் நதியானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் ஏரியின் உபரி நீர் பாதையிலிருந்து உருவாகிறது.
இது சுமார் 65 கிலோமீட்டர் தூரத்திற்குக்கிழக்கு நோக்கிப் பாய்ந்து, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 20 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து நேப்பியர் பாலம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது என தமிழ்நாடு அரசின் சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Janardhanan/BBC
கேசவரம் அணை கட்டப்பட்டதன் நோக்கம் சென்னைக்கு குடிநீர் வழங்குவதாகும். கொசஸ்தலையாறு பூண்டி நீர்த்தேக்கம் நோக்கியும், கூவம் ஆற்றின் ஒரு பகுதி செம்பரம்பாக்கம் ஏரி நோக்கியும் அனுப்பப்படுகிறது.
கேசவரம் அணைக்கட்டில் உள்ள தகவல் பலகையில் கூவம் ஆற்றின் நீர் 18ஆயிரம் ஏக்கர் அளவில் பாசன செய்ய பயன்படுவதாகவும், 'பயனடையும் ஏரி' என செம்பரம்பாக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Janardhanan/BBC
கேசவரம் அணைக்கட்டிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்துக்குள் நுழையும் கூவம் ஆறு, கொரட்டூர் அணைக்கட்டு பகுதியை அடைகிறது. இந்த அணைக்கட்டு 1867-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. கூவம் தொடங்கும் இடத்தில் உள்ள கேசவரம் அணைக்கட்டிலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் இந்த அணைக்கட்டு உள்ளது.

பட மூலாதாரம், Janardhanan/BBC
கொரட்டூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. இந்த அணைக்கட்டிலிருந்து பங்காரு கால்வாய் வழியாக கூவம் ஆற்றின் ஒரு பகுதி சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நோக்கி திருப்பிவிடப்படுகிறது.

பட மூலாதாரம், Janardhanan/BBC
காவேரிப்பாக்கத்திலிருந்து கொசஸ்தலையாறாக தவழ்ந்து வந்து, கேசவரத்தில் கூவமாக பிறப்பெடுத்து ஓடும் ஆறு நகரத்துக்குள் நுழையும் முன் வரை சுத்தமான நீரையே ஏந்தி வருகிறது.
"கேசவர பகுதியில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் கரையின் அருகே சென்றுக் கொண்டிருந்த ஆற்று நீரின் டிடிஎஸ் நிலையை சோதனை செய்த போது அது 500க்கு சற்று அதிகமாக இருந்தது. ஆற்றின் நடுவே உள்ள நீரை எடுத்து சோதனை செய்தால் டிடிஎஸ் இன்னும் குறைவாக இருக்கும். ஆனால் சென்னை நகருக்குள் மாசு காரணமாக டிடிஎஸ் அளவு பல மடங்கு அதிகமாக இருக்கும்" என்கிறார் கூவம் ஆறு மாசடைதலை பற்றி கடந்த மூன்று ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, கூவம் ஆறு குறித்த தரவுகளை சேகரித்து வரும் திருவள்ளூரைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் துரைசாமி.

பட மூலாதாரம், Anandhakrishnan Duraisami

பட மூலாதாரம், Janardhanan/BBC
ஆனால் வேகமாக நகரமயமாகி வரும் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை மாநகரத்தை கூவம் அடையும் போது கழிவுநீர் கலந்து மாசடைகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































