நாயகன், பாட்ஷா உள்பட பாலகுமாரன் வசனம் எழுதிய முக்கிய படங்களும் பிரபல வசனங்களும்

பாலகுமாரன், வசனகர்த்தா

பட மூலாதாரம், Sri Markandeya Book Gallery

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"நீங்க நல்லவரா கெட்டவரா?", "நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி" என ஒற்றை வரியில் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை எடுத்துக்காட்டும் வசனங்களுக்குச் சொந்தக்காரர் பாலகுமாரன். எழுத்தாளர், திரைப்பட கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா எனப் பன்முகங்கள் கொண்ட அவருக்கு இன்று (ஜூலை 5) பிறந்த நாள்.

நாயகன், ஜென்டில்மேன், குணா, பாட்ஷா எனப் பல திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருபெரும் நட்சத்திரங்களின் திரை வாழ்க்கையில் முக்கிய திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதிய பாலகுமாரன், 100க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். குறிப்பாக மெர்க்குரிப் பூக்கள், இரும்பு குதிரைகள் போன்ற நாவல்கள், உடையார், கங்கை கொண்ட சோழன் போன்ற வரலாற்று நாவல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

"பாலகுமாரனின் நாவல்களையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது என் எண்ணம்," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் வி. ராம்ஜி.

பாலகுமாரன், வசனகர்த்தா, பத்திரிகையாளர் வி. ராம்ஜி

பட மூலாதாரம், V Ramji

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் வி. ராம்ஜி.

"தமிழ் சினிமாவின் வசனப் போக்கை 'நாயகன்' படம் மாற்றியது. சொல்லப்போனால், நாயகன் படத்துக்குப் பின் மணிரத்னத்தின் மற்ற படங்களிலும் வசனங்களின் போக்கையே மாற்றியது. அதிக வசனங்கள் இல்லாமல் மணிரத்னத்தின் படங்கள் அமைந்தன. பாலகுமாரனின் வசனங்கள் சராசரியாக பேசிக்கொள்வதை கவிதைத் தன்மையுடன் கூறுபவையாக இருக்கும்." என்கிறார் அவர்.

சினிமா, இலக்கியம் குறித்து பல ஆண்டுகளாக எழுதிவரும் இவர், முகவரி, உல்லாசம் போன்ற படங்களுக்கு பாலகுமாரன் வசனம் எழுதியபோது அவருடன் இணைந்து பயணித்தவர். அவருடைய சில முக்கியமான படங்கள், அதில் வரும் வசனங்கள் குறித்து ராம்ஜி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இந்த கட்டுரையில் தொகுத்து தரப்பட்டுள்ளன.

நாயகன்

மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் பிரதீப் சக்தி எனும் போலீஸ், கமல்ஹாசனைத் தாக்கிவிட்டு, 'என்னை அடிக்கணும்னு தோணுதா'ன்னு கேட்கும்போது, 'நான் அடிச்சா நீ செத்துடுவ' என ஒரு வரியில் நாயகன் கமல்ஹாசன் கூறுவார். இப்படி, கதாபாத்திரத்தை ஒரு சிறிய வசனத்தில் தூக்கி நிறுத்திவிடுவார்.

அதேபோன்று, நாயகனான வேலு நாயக்கர், 'நான் பாத்துக்குறன்' என்ற ஒற்றை வசனத்தை படத்தில் பல இடங்களில் வெவ்வேறு தருணங்களில் கூறுவார்.

ஒரு வசனத்தை படம் நெடுக்க வெவ்வேறு தருணங்களில் கூறும் பாணி, இன்றும் பல படங்களில் கையாளப்படுகிறது. "நீங்க நல்லவரா, கெட்டவரா?" எனப் பேரன் கேட்டதற்கு உணர்ச்சிவயப்பட்ட நிலையில் வேலுநாயக்கர் கதாபாத்திரம் 'தெரியலையேப்பா, தெரியலை' என்று பதிலளிப்பார். ஒற்றை வரி வசனங்களிலே ஒட்டுமொத்த உணர்வையும் கடத்தியிருப்பார்.

பாட்ஷா

பாட்ஷா திரைப்படம்

பட மூலாதாரம், Cinemasphere Tamil

படக்குறிப்பு, பாட்ஷா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வசனம் பேசும் காட்சி

ரஜினிக்கு பல 'பஞ்ச்' வசனங்களைக் கொண்ட படம் இது. 'நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பான், ஆனால் கைவிட்டுருவான்,' என்பது எல்லோரும் சொல்லும் ஒன்றுதான். ஆனால், பாலகுமாரன் அதை பாட்ஷாவில் எழுதி ரஜினிகாந்த் தன் பாணியில் பேசுவது நம் மனதில் பதிந்துவிட்டது.

"நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி," என்ற வசனம் இன்றும் நம் நினைவில் இருக்கிறது. அது 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தில் இருக்கும் ரஜினிகாந்துக்காக பாலகுமாரன் எழுதியது.

ரஜினிகாந்த் அப்படத்தில் பயன்படுத்தும் ஆட்டோவில், 'உன் வாழ்க்கை உன் கையில்' என எழுதியிருப்பார். அதைப் பார்த்து நாயகி நக்மா, 'அப்படியென்றால் கடவுள் மேல பக்தி இல்லையா' எனக் கேட்பார். அதற்கு ரஜினி, "ஐயயோ கடவுள் மேல ரொம்ப பக்தி இருக்குங்க, நம்மை நாம் நம்பவில்லை என்றால், கடவுள் எப்படி நம்மை நம்புவார்?" எனக் கேட்பார். 'உன் வாழ்க்கை, உன் கையில்' என்ற வாசகம் எழுதப்பட்ட எத்தனை வாகனங்களை நாம் இன்று காண்கிறோம்.

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன் திரைப்படத்தில் வரும் "சத்ரியனாய் இருப்பதைவிட ஜென்டில்மேனாக இருப்பது மேல்" என்ற வசனம் இன்றும் பிரபலமாக உள்ளது. கோபத்துடன் அமைச்சர் ஒருவரைக் கொல்வதற்கு துணியும் நாயகன் அர்ஜூனைப் பார்த்து நம்பியார் அமைதிப்படுத்துவதற்காக பேசுவதாக அமைந்திருக்கும்.

ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவை அடையாளப்படுத்துவதாக அமைந்திருந்தாலும், கதாநாயகன் தன்னை அமைதியாக்கி வேறு வழிக்குச் செல்வதற்கான ஆரம்பப் புள்ளியாக அந்த வசனம் அமைந்திருக்கும்.

காதலன்

பாட்ஷா திரைப்படம்

பட மூலாதாரம், AP International

நாயகனான பிரபுதேவா தன் காதல் குறித்து தந்தை எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திடம் விவரிக்கும் ஒரு காட்சி இருக்கும். அதில், தந்தையும் மகனும் மது அருந்திக்கொண்டே பேசுவர். ஒரு அப்பாவும் மகனும் சேர்ந்து மது அருந்தும் காட்சி தமிழ் சினிமாவுக்கு அப்போது புதிதுதான். தன் மகன் காதல் வலியில் இருப்பதை உணர்ந்த தகப்பன், அவனுடைய வலியை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைப்பார்.

அப்போது, "ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக" எனப் பாடுவார் எஸ்.பி.பி. பின்னர் கதாநாயகன் தன் காதல் வலியை தந்தையுடன் பகிர்ந்துகொள்வதாக அந்தக் காட்சி அமைந்திருக்கும். அதில் தந்தை-மகன் பாசப் பிணைப்பை எடுத்துக் கூறும் வகையில் வசனங்களை எழுதியிருப்பார் பாலகுமாரன்.

உல்லாசம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உல்லாசம் படத்தில் குற்றப் பின்னணி கொண்டவராக ரகுவரன் நடித்திருப்பார். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகனாக குரு என்கிற கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருப்பார். தன் எதிர்வீட்டில் இருக்கும் குற்றப் பின்னணி கொண்ட ரகுவரனின் வீட்டில் வளர்வார் அஜித். ரகுவரன் நடவடிக்கைகள் மீதான ஈர்ப்பால் அஜித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடுவார். அவர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என அறிந்து, அஜித்தை ரகுவரன் காரில் அழைத்து வந்து ஒரு பூங்காவில் நிறுத்துவார்.

அப்போது ரகுவரன், "காதலித்தால் அந்தப் பெண்ணை பூங்காவுக்கெல்லாம் அழைத்துச் செல்ல வேண்டும். என்ன வேண்டும் என கேட்டு வாங்கிக் கொடுக்க வேண்டும்," என காருடைய சாவி, பணத்தை தருவார் ரகுவரன்.

"வாழ்க்கையில் நாம் யாரையாவது காதலிக்க வேண்டும், நம்மை யாராவது காதலிக்க வேண்டும்," என தன் வாழ்க்கையில் காதல் இருந்திருந்தால் தான் கையில் துப்பாக்கியை பிடித்திருக்க மாட்டேனோ என ரகுவரன் கூறுவார். அது அவ்வளவு அழகான காட்சியாக அமைந்திருக்கும்.

காதலித்தால் ஒருவன் மாறிவிடலாம் என்ற விஷயத்தையும் தன்னால் அப்படி மாற முடியவில்லையே என்ற ரகுவரன் கதாபாத்திரத்தின் வலியையும் பாலகுமாரன் தனது வசனங்களால் உணர்த்தியிருப்பார்.

முகவரி

முகவரி திரைப்படம்

பட மூலாதாரம், Bayshore records

அஜித் நடித்த முகவரி திரைப்படத்தில் ஒரு எடை இயந்திரத்தை மையமாக வைத்து ஒரு காட்சி அமைந்திருக்கும். அதில் வசனங்கள் மூலம் நெகிழ வைத்துவிடுவார் பாலகுமாரன்.

நாயகி ஜோதிகா, எடை இயந்திரத்தில் காசு போட்டு அதிலிருந்து நாயகனுக்கு வரும் அதிர்ஷ்ட வாசகத்தை தெரிந்துகொள்ள நினைக்கும்போது, "இதற்கு ஏன் ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டும்? நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்," என தன்னுடைய இசையமைப்பாளர் கனவுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் எப்படி உறுதுணையாக இருக்கிறது என்பதைக் கூறியிருப்பார்.

அதே படத்தில், அஜித்தின் அண்ணனாக வரும் ரகுவரன் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு ஒரு பொருளை வாங்கலாம் எனக் கூறும்போது, எல்லோரும் மற்றவர்களுக்கு ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும் என கூறுவார்கள். அஜித் தனக்கு 'வாக்மேன்' வேண்டும் என்பார். சீட்டில் பெயர் எழுதி தேர்ந்தெடுத்தபோது 'ஸ்ரீதர்' என அஜித்தின் பெயர் வந்திருக்கும். பின்னர், மற்ற சீட்டுகளை அஜித் பிரித்துப் பார்க்கும்போது அதில் வெவ்வேறு வண்ணங்களில் 'ஸ்ரீதர்' என எழுதப்பட்டிருக்கும்.

அதன்பின் குடும்பத்தில் எல்லோரும் வானவில்லைப் பார்க்க செல்லும்போது அஜித்தை ரகுவரன், 'வானவில்லை பார்க்க' அழைப்பார். 'வானவில்லை பார்த்துட்டண்ணே' என அஜித் சொல்வார். குடும்ப ஒற்றுமை, குடும்பத்தாரில் ஒருவருடைய கனவை நிறைவேற்றுவதையே எல்லோரும் இலக்காக கொண்டிருப்பதை சாமர்த்தியமாக உணர்த்தியிருப்பார் பாலகுமாரன்.

நாயகன் தன் லட்சியத்தில் தோற்கும் தருவாயில், 'பத்தடி ஆழத்தில் தங்கம்' என ரகுவரன் ஒரு தன்னம்பிக்கை கதையை கூறியிருப்பார். பத்தடி ஆழத்தில் விடாமுயற்சியுடன் தோண்டியவருக்கு தங்கப் புதையல் கிடைத்த கதை அது. ஏதேனும் ஒரு கனவுடன் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கான நம்பிக்கையாக அது அமைந்தது.

'இந்த உலகம் ரொம்ப சின்னது, நல்லவங்க நல்லவங்கள சந்திச்சிருவாங்க' எனவும் மிக நேர்மறையான வசனங்களை அப்படத்தில் பாலகுமாரன் எழுதியிருப்பார்.

சிட்டிசன்

சிட்டிசன் திரைப்படம்

பட மூலாதாரம், RJS Cinemas

படக்குறிப்பு, சிட்டிசன் திரைப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சி

'அத்திப்பட்டி' எனும் கிராமத்தில் 'அதிகாரத்தால்' நிகழ்ந்த கூட்டுப் படுகொலையை மையமாகக் கொண்ட கதை. கூட்டுப் படுகொலை செய்யப்பட்ட "அத்தனை பேரின் சாட்சிதான்" நான் என கூறுவார் நாயகன் அஜித். 'நான் தனியாள் இல்ல, ஆறு கோடி பேர்ல ஒரு ஆள், நூறு கோடி பேர்ல ஒத்த ஆள்" எனப் பேசுவார்.

படத்தின் இறுதிக்காட்சியில் தமிழ் சினிமாவில் குற்றம் செய்தவர்களுக்கு அதுவரை சொல்லாத ஒரு தண்டனையை அஜித் கூறுவார். குற்றம் செய்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் தண்டிக்க வேண்டும் என கூறுவார். அது அரசர்கள் காலத்தில் நிலவிய சட்டம். 'உடையார்' என சோழர்கள் குறித்து ஆறு பாகங்களாக எழுதியவர் பாலகுமாரன். அதன் ஒற்றை துளிதான் 'சிட்டிசன்' படத்தின் இறுதிக் காட்சி. அப்படத்தில் வசனங்கள் வீரியமானதாக இருந்திருக்கும்.

புதுப்பேட்டை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை படத்துக்கு பாலகுமாரன் வசனங்களை எழுதியிருந்தார். தனுஷ் 'என் பேரு குமாரு…கொக்கி குமாரு" எனக் கூறுவதாக இருக்கட்டும், "என்ன பயப்படுறியா குமாரு," என தனுஷைப் பார்த்துக் கேட்பதாக இருக்கட்டும். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் தனுஷ் கதாபாத்திரத்தை உணர்த்திய ஒற்றை வரி வசனங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.

பாலகுமாரன், வசனகர்த்தா, எழுத்தாளர் ஜா தீபா

பட மூலாதாரம், Deepa Janakiraman

படக்குறிப்பு, எழுத்தாளர் தீபா ஜானகிராமன்

பாலகுமாரனின் வசனங்கள் குறித்து எழுத்தாளர் தீபா ஜானகிராமனும் பகிர்ந்துகொண்டார். இவர், கதை டூ திரைக்கதை, ஒளி வித்தகர்கள் என சினிமா குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

"ஒரு எழுத்தாளர் உதவி இயக்குநராக இருந்து சினிமாவைக் கற்றுக்கொண்டு எழுத வந்தார். எல்லாவற்றையும் பற்றி தன்னால் எழுத முடியும் என்பதை நாவல்களில் பாலகுமாரன் ஏற்கெனவே நிரூபித்துவிட்டார். எல்லாவற்றையும் அறிந்துகொண்டு சினிமாவுக்கு எழுத வந்தவர்களில் பாலகுமாரனும் சுஜாதாவும் முக்கியமானவர்கள். பாலகுமாரனின் நாவல்களில் பேச்சுமொழி அதிகமாக இருக்கும். உரையாடல்களாக இருக்கும்.

அதனால் தான் அவரால் வசனகர்த்தாவாக ஆக முடிந்தது என எண்ணுகிறேன். ஆனால், சினிமாவில் நீண்ட வசனங்களாக இல்லாமல் அதற்கென சிறிய வசனங்களில் பலவற்றை உணர்த்துவார். இது அவர் தமிழ் சினிமாவுக்கு அளித்த மிகப்பெரும் பங்களிப்பு. மனிதர்களைப் பற்றிதான் அவர் நிறைய எழுதியிருப்பார். மனிதர்களை இவ்வளவு ஆழமாக எழுதியது பாலகுமாரன் தான். சினிமாவில் கதைக்காக அல்லது காட்சிக்காக எழுதாமல் ஒரு கதாபாத்திரத்துக்கு வசனத்தை எழுதுவார் பாலகுமாரன்." என்றார்.

கமல்ஹாசனின் குணா திரைப்படத்தில் தனக்குப் பிடித்த வசனங்களையும் தீபா பகிர்ந்துகொண்டார்.

"குணா மாதிரியான படங்களுக்கு வசனம் எழுதுவது கடினம். மனநிலை பிறழ்ந்த ஒருவன், ஆனால் அவன் புத்திசாலித்தனமாகவும் பேச வேண்டும். அப்படி ஒரு கதாபாத்திரத்துக்கு வசனம் எழுதுவது கடினம் என நினைக்கிறேன். அதை அவர் கையாண்ட விதம் எனக்கு எப்போதும் பிரமிப்பாக இருக்கும். "குணா எதுக்கு இப்படி பண்ற", " ஏன் அபிராமி அபிராமிங்குற" என மருத்துவர் கேட்பார். "அபிராமி உள்ள இருக்கு, மத்ததெல்லாம் வெளிய இருக்கு" என்பார் கமல். அபிராமி என்பவர் மீது குணாவுக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்திய வசனமாக அது அமைந்திருக்கும்," என்றார் தீபா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு