கட்டா குஸ்தி 2: படம் எப்படி இருக்கிறது? எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், Vishnu Vishal/X
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் இன்று (ஜூலை 3) வெளியானது.
"கடந்த 2022, டிசம்பர் 2 அன்று வெளியான 'கட்டா குஸ்தி' முதல் பாகம் ரசிகர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்தே இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இதிலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது" என்று இயக்குநர் செல்லா அய்யாவு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
வேல்ஸ் இண்டர்நேஷ்னல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சான் ரோல்டன் இசைமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் இந்தத் திரைப்படம் பற்றி என்ன சொல்கின்றன?
படத்தின் கதை என்ன?
கட்டா குஸ்தி முதல் பாகத்தில் மல்யுத்த வீராங்கனையாக இருப்பதை மறைத்து விஷ்ணு விஷாலை திருமணம் செய்துகொண்டு அதை கணவருக்குத் தெரியாமல் தக்கவைக்க ஐஸ்வர்யா லட்சுமி செய்த விஷயங்களும், பின்னர் உண்மை தெரிந்த பிறகு என்ன ஆனது என்பதையும் இயக்குநர் செல்லா அய்யாவு படமாக எடுத்திருந்தார்.
இரண்டாம் பாகத்தில் மனைவியை எப்படியாவது சாம்பியன் ஆக்கிவிட வேண்டுமென்ற முனைப்புடன் அவருக்கு உதவும் கணவனாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா லட்சுமிக்கு மல்யுத்த பயிற்சியாளரே எதிரியாக மாறுகிறார்.
ஐஸ்வர்யா லட்சுமி மல்யுத்தம் செய்வதை விரும்பாத அவரது பயிற்சியாளர், விஷ்ணு விஷாலை ஏமாற்றி அதை நிறைவேற்றப் பார்க்கிறார். அதன் விளைவாக விஷ்ணு விஷால் செய்யும் ஒரு காரியம் ஐஸ்வர்யாவின் மல்யுத்தக் கனவை தகர்க்கிறது. அதன் பிறகு கதை எப்படி நகர்கிறது என்பதே படத்தின் கதை.

பட மூலாதாரம், VishnuVishalStudioz/Youtube
படம் எப்படி உள்ளது?
"முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பெண்களின் உடல்நலம் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு இருப்பது வியப்பாக இருக்கிறது" என்று தி இந்து நாளிதழ் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
வளர்ந்து வரும் பாதுகாப்பற்ற உலகில் பெண்களுக்குத் தற்காப்புக் கலை ஏன் அவசியம் என்பதை இயக்குநர் அழகாக வலியுறுத்தியிருக்கிறார் என்று குறிப்பிட்ட தி இந்து, "முதல் பாகத்தில் மல்யுத்த போட்டிக்கு முன்பு பயிற்சி பெற்ற கீர்த்தி (கதாநாயகி) கர்ப்பமாவது, வெறும் 15 நாட்கள் மட்டுமே பயிற்சி பெற்ற அவரது கணவனின் வெற்றிக்கு வழிவகுப்பதாக அமைந்தது. இரண்டாம் பாகத்தின் இறுதிக் காட்சியும் அந்த வகையில் ஒரு ஏமாற்றமாகவும் பிற்போக்குத்தனமான கருத்துகளுடனும் முடிகிறது" என்றும் விமர்சித்துள்ளது.
முதல் பாகம் ஏற்படுத்திய சிறிய முன்னேற்றங்களை அழித்து, இரண்டாம் பாகம் நம்மை 80 மற்றும் 90களுக்கு அழைத்துச் செல்வதாக இந்தியா டுடே விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனைவியையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளும் வீட்டைப் பராமரிக்கும் கணவராக விஷ்ணு விஷால் இருந்தாலும், "கணவன் மனைவிக்கு இடையிலான உணர்வுபூர்வமான புரிதல், கணவன்- மனைவி என்ற ரீதியில் அவர்களின் உறவு ஆகியவை இந்தப் படத்தில் சரியாக காட்டப்படவில்லை" என்று இந்தியா டுடே விமர்சிக்கிறது.
"பயிற்சியாளருடன் வீரா (கதாநாயகன்) பேசும் ஓர் உரையாடல் கீர்த்தியின் வாழ்வில் முக்கியமான ஒன்றாக உள்ள மல்யுத்தத்தை இழக்கும் அளவுக்கு அவர்களுக்கு இடையிலான உறவு புரிதலின்றி இருப்பதாக" இந்தியா டுடே விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் போக்கை கேள்விக்குள்ளாக்கும் சில முரண்பாடான காட்சிகள் இருந்தாலும், பெண்களின் வலிமையை இப்படம் பேச முற்பட்டுள்ளதாக தினமணி விமர்சித்துள்ளது.
மேலும், "வழக்கமான இரண்டாம் பாகத் திரைப்படங்கள் போல் ஏமாற்றாமல், 'கட்டா குஸ்தி 2' சுவாரசியமான நகைச்சுவையோடு குடும்பங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது" என்றும் பாராட்டியுள்ளது.

பட மூலாதாரம், SonyMusicSouth/Youtube
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பு எப்படி?
வீட்டைப் பராமரிக்கும் கணவராக வரும் விஷ்ணு விஷாலும், மல்யுத்த வீராங்கனையாக வரும் கீர்த்தியும் தங்களது முழுமையான பங்களிப்பை வழங்கியிருப்பதாக தி இந்து விமர்சனம் தெரிவித்துள்ளது.
மேலும், சிறப்புத் தோற்றத்தில் வரும் ரம்யா கிருஷ்ணனின் நீதிமன்றக் காட்சி அடுத்த என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்த்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மதிமலரின் ஆசிரியையாக வரும் மோக்ஷா, 80களின் படங்களில் வரும் கதாபாத்திரங்களைப் போல் இருப்பதாகவும், அவர் நாட்டாமை படத்தில் வரும் ஆசிரியையை நினைவுபடுத்துவதாகவும்" இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
மேலும், சொந்தமாகப் போராடி தொழிலை உருவாக்கிய கீர்த்தி பொறாமை கொண்ட மனைவியாகச் சுருக்கப்படுவதாகவும், இது அந்த கதாபாத்திரத்தின் தோல்வி என்றும் இந்தியா டுடே விமர்சிக்கிறது.
"விஷ்ணு விஷாலும், ஐஸ்வர்யா லட்சுமியும் பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளனர். அதே நேரம் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா அதற்கான உடல் மொழிகளில் கவனம் ஈர்த்துள்ளார்" என்று தினமணி விமர்சனம் பாராட்டியுள்ளது.
"அத்துடன், நீதிமன்றக் காட்சிகளில் சிறப்புத் தோற்றத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் வர்ணனையாளராக வரும் யோகி பாபு ஆகியோரின் காட்சிகள் சிறியவை என்றபோதிலும், அவை படத்தில் நகைச்சுவைக்கு வலுசேர்த்துள்ளதாகவும் அந்த விமர்சனம் கூறுகிறது."
கேமரா, இசை போன்றவை படத்திற்கு வலு சேர்த்திருந்தாலும் "சம்பவக்காரி பாடலைத் தவிர வேறு எதுவும் மனதில் நிற்கும்படி இல்லை" என்றும் தினமணி விமர்சித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




















