சச்சின் - வைபவ் சூர்யவன்ஷி இருவரின் சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் பற்றிய ஓர் ஒப்பீடு

வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சச்சின் 1989-இல் தனது 16-வது வயதில் அறிமுகமானார். அதேவேளையில், வைபவ் தனது 15-வது வயதில் அறிமுகமானார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

மிக இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் என்கிற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தற்போது முறியடித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி 15 ஆண்டுகள் 99 நாட்கள் ஆன நிலையில் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது அவருக்கு 16 வயது.

1989-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி பாகிஸ்கானுக்கு எதிராக கராச்சியில் அறிமுகமானார் சச்சின். முதல் இன்னிங்ஸில் அவர் 15 ரன்கள் எடுத்திருந்தார். வைபவ் தனது முதல் சர்வதேச போட்டியில் 14 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே வைபவ் பேசுபொருளாக இருந்தார். ஆனால் போட்டி முடிந்தபோது அனைவரின் கவனமும் ரவி பிஷ்னோய் பக்கம் திரும்பியது.

சமூக ஊடகங்களில் ரசிகர்களும் இந்தியாவின் தோல்விக்கு ரவி பிஷ்னோய் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தச் சூழலில் கிரிக்கெட் வல்லுநர்களும் அவரின் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரவி பிஷ்னோய் விவாதப் பொருளாவது ஏன்?

வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கர், ரவி பிஷ்னோய்

பட மூலாதாரம், Philip Brown/Getty Images

படக்குறிப்பு, ரவி பிஷ்னோய் ஒரே ஓவரில் 29 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இதற்கான பதில் இங்கிலாந்து இன்னிங்ஸின் 17வது ஓவரில் இருக்கிறது. அந்த ஓவரில் 2 'நோ பால்கள்' உள்பட 29 ரன்களை அவர் விட்டுக் கொடுத்திருந்தார்.

இங்கிலாந்து பேட்டர் ஜேகப் பெத்தேல் மூன்று சிக்சர்களும் ஒரு பவுண்டரியும் எடுத்திருந்தார். இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத்தேல் இறுதிவரை அவுட் ஆகாமல் 46 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.

4 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்த பிஷ்னோய் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. மூன்று 'நோ பால்களையும்' அவர் வீசியிருந்தார்.

போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸின் 16வது ஓவர் வரை போட்டி இந்தியாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழந்து 142 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி 24 பந்துகளுக்கு 49 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில் 17வது ஓவரை வீசிய பிஷ்னோய் 29 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்த ஒரு ஓவர் தான் போட்டியை இங்கிலாந்திற்குச் சாதகமாக மாற்றியது.

இதற்குப் பிறகு இங்கிலாந்து அணி 19வது ஓவரிலே வெற்றி பெற்றது.

ரவி பிஷ்னோய் பற்றி கேப்டன் ஷ்ரேயாஸ் கூறியது என்ன?

வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கர். ஷ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், Oli SCARFF / AFP via Getty Images

படக்குறிப்பு, ஆட்டத்திற்குப் பிறகு, 17-வது ஓவரில் பிஷ்னோய் வீசிய இரண்டு 'நோ-பால்'கள் குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் பேசினார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

போட்டிக்குப் பிறகு தோல்விக்கான காரணம் பற்றி இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், இங்கிலாந்து இன்னிங்ஸின் 17வது ஓவரைச் சுட்டிக் காட்டினார்.

ஆனால் இந்த தோல்விக்கு ரவி பிஷ்னோய் தான் முழுக் காரணம் என்று அவர் கூறவில்லை.

"போட்டி எப்போது எங்களது கைகளிலிருந்து விலகிச் சென்றது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் ஒரு குறிப்பிட்ட வீரர் மீது பழி சுமத்த நான் விரும்பவில்லை. 16வது ஓவர் வரை நாங்கள் விளையாடிய விதத்தை வைத்து பார்க்கையில் சிறப்பாகவே செயல்பட்டோம். அதற்குப் பிறகு போட்டி இங்கிலாந்துக்குச் சாதகமாக மாறியது," என்றார் ஷ்ரேயாஸ் ஐயர்.

ரவி பிஷ்னோய் ஓவரில் வீசப்பட்ட 'நோ பால்' பற்றி பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், "முதல் நோ பாலுக்குப் பிறகு சிறப்பாக பந்துவீசுவார் என நினைத்தேன். ஆனால் இரண்டாவது நோ பாலும் எங்களுக்குப் பாதகமாக அமைந்தது. அவர் நிச்சயம் அதிலிருந்து கற்றுக்கொள்வார்." என்றார்.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கர்ரனின் பந்து வீச்சையும் ஜேகப் பெத்தேலின் பேட்டிங்கையும் ஷ்ரேயாஸ் புகழ்ந்து பேசினார்.

"இந்த மைதானத்தில் இது சிறந்த ஸ்கோர் என நினைத்தேன். பவுன்ஸ் சீராக இல்லை, பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைத்தது. சாம் கர்ரன் எங்களுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் அவர் பந்துவீசினார்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பந்துவீச்சின்போது 15வது ஓவர் வரை நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். ஆனால் திடீரென ஆட்டம் மாறியது. ஜேகப் பெத்தேல் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதைப் பார்ப்பதற்குச் சிறப்பாக இருந்தது." என்றார்.

கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுவது என்ன?

வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கர், ரவி பிஷ்னோய்

பட மூலாதாரம், Oli SCARFF / AFP via Getty Images

படக்குறிப்பு, ஆட்டத்திற்குப் பிறகு ரவி பிஷ்னோய் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர்

இந்திய அணி அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இரண்டு ஓவர்களைப் பற்றி கிரிக்கெட் ஆய்வாளரான அயாஸ் மேமன் பதிவிட்டுள்ளார்.

"அர்ஷ்தீப் மற்றும் பிஷ்னோயின் இரண்டு ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணிக்கு 56 ரன்கள் கிடைத்தன. இந்தியாவின் தோல்விக்கு இது தான் காரணம். இந்திய அணியால் வெற்றிக் கணக்கைத் தொடங்க முடியவில்லை." என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பேட்டர்களைப் புகழ்ந்து பேசிய மேமன், "அறிமுக போட்டியிலேயே சூர்யவன்ஷி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் இங்கிலாந்தின் ரன் சேஸ் அவரின் ஆட்டத்தை மழுங்கடித்தது. ப்ரூக், பென்டன் மற்றும் குறிப்பாக பெத்தேல் அதிரடியான பேட்டிங் மூலம் போட்டியை அவர்களுக்குச் சாதகமாக மாற்றினர்." என்று குறிப்பிட்டார்.

இன்னொரு பதிவில் பிஷ்னோயின் தவறுகள் பற்றி கேள்வி எழுப்பிய மேமன், மூன்று சுழற்பந்துவீச்சார்கள் உடன் விளையாடுவது என்கிற இந்தியாவின் முடிவையும் கேள்விக்கு உள்ளாக்கினார்.

"பிஷ்னோய் தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டே இருந்தார். இங்கிலாந்து பேட்டர்கள் அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மூன்று சுழற்பந்துவீச்சார்கள் உடன் விளையாட வேண்டும் என்கிற இந்தியாவின் உத்தி கைகொடுக்கவில்லை." என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, எந்தப் போட்டியிலும் நோ பால் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதுவும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் இத்தகைய தவறைச் செய்வது தீவிரமான பிரச்னை என்றும் தெரிவித்தார்.

"எந்தக் கட்டத்திலும் நோ பால் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு சுழற்பந்துவீச்சாளர் அந்த தவறைச் செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதுவும் ஒரே போட்டியில் மூன்று நோ பால்கள் என்பது அறவே ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கர், ரவி பிஷ்னோய்

பட மூலாதாரம், Darren Arthur-ICC/ICC via Getty Images)

படக்குறிப்பு, கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் எந்த இந்திய பவுலரின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் இங்கிலாந்து பேட்டர் பெத்தேலை புகழ்கிறபோது ரவி பிஷ்னோய் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

தனது எக்ஸ் தளப் பதிவில், "ஜேக்கப் பெத்தேல் ஒரு சிறந்த வீரர். உலக கோப்பை அரை இறுதிப் போட்டியில் நமக்கு கிட்டத்தட்ட மாரடைப்பையே ஏற்படுத்தினார். இன்றும் கூட ரன் சேஸின்போது ஒரு பெரிய ஓவருக்காக அவர் காத்திருந்தார். அந்த ஒவர் கிடைத்ததும் போட்டி அவருக்குச் சாதகமாக மாறியது," என்று தெரிவித்தார் இர்ஃபான் பதான்.

ரவி பிஷ்னோயின் செயல்பாடு பற்றி இந்தியப் பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மூத்த விளையாட்டு பத்திரிகையாளரான விக்ராந்த் குப்தா தனது எக்ஸ் பதிவில், "இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களில் 3 நோ பால்களை ரவி பிஷ்னோய் வீசினார் என்பது தற்செயலானதா? அல்லது வலைப்பயிற்சியிலும் சுழற்பந்து பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே முன்னணியிலும் இதைத்தான் செய்து வந்தாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது சமூக ஊடகப் பதிவில், "டி20 விளையாட்டில் எந்த பவுலர் மீது அனுதாபம் இருக்க வேண்டும். ஆனால் ரவி பிஷ்னோய் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து விளையாடும் வீரர் கூட இல்லை. எனினும் இந்திய அணியின் வெற்றியைப் பாதித்த முக்கியமான ஓவரைப் பந்துவீச அவர் அழைக்கப்பட்டது ஏன்? தயவுசெய்து எனக்கு விளக்குங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

இருவரின் சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் பற்றிய ஓர் ஒப்பீடு

வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சச்சின் 1989-ல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானார்.

சச்சின் டெண்டுலர்கர் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய இருவரின் அறிமுகப் போட்டியையும் ஒப்பிட்டு விளையாட்டு எழுத்தாளர் பிரபுத்தா பட்டாச்சார்ஜி ஆங்கில நாளிதழான ஹிந்துஸ்தான் டைம்ஸில், "1989-இல் சச்சின் அறிமுகமானதும் 2026-இல் வைபவ் அறிமுகமானதும் இரண்டு வெவ்வேறு உலகில் நிகழ்ந்தவை. சிவப்பு பந்து கிரிக்கெட் தீவிரமான ஒரு காலத்திலும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்திலும் சச்சின் அறிமுகமானார்."

"சூர்யவன்ஷி ஐபிஎல் யுகத்தில் அறிமுகமாகிறார். வைரல் காணொளிகள், சமூக ஊடகம் மூலம் மக்கள் உடனடியாக தீர்ப்பு எழுதிவிடும் ஒரு காலத்தில் அவர் இருக்கிறார். சச்சின் 16 வயதிலும் வைபவ் 15 வயதிலும் அறிமுகமானார்கள். சச்சின் ரஞ்சி கோப்பையில் அறிமுகமான போட்டியிலே சதமடித்திருந்தார். மறுபுறம் வைபவின் எழுச்சி ஐபிஎல் மூலம் வந்தது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அறிமுகப் போட்டியை ஒப்பிட முடியாது." என எழுதியுள்ளார்.

மேலும் அவர், "சச்சின் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் கராச்சியில் 15 ரன்கள் எடுத்தார். பேச்சளவில் அது ஒரு சாதாரண ஸ்கோர் தான். ஆனால் அப்போது கிரிக்கெட் முற்றிலும் வேறாக இருந்தது. ஒரு 16 வயது சிறுவன் இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் அப்துல் காதிர் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் விளையாடினார். அதுவும் பாகிஸ்தானில் ஒரு டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட்டின் மிகவும் சவாலான மைதானங்களில் ஒன்றில் சச்சின் அறிமுகமானார். சச்சின் சதமடிக்கவில்லை. ஆனால் அவர் தாக்குப்பிடித்தார். சோதனைகளைச் சமாளித்த அவர் ஜாம்பவான்களுக்கு மத்தியில் ஒரு குழந்தையாகத் தெரியவில்லை."

"வைபவின் முதல் சர்வதேச போட்டியும் அது போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் வடிவமும் வேகமும் முற்றிலும் வேறானது. 10 பந்துகளில் அவர் 14 ரன்கள் எடுத்தது பெரிய ஸ்கோர் அல்ல. ஒரு பெரிய ஆட்டம் என்று சொல்வதற்குள்ளாகவே அந்த இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆனால் அது நேர விரயமும் அல்ல. அவரின் இரண்டு சிக்சர்கள் அந்தத் தருணத்தைச் சிறப்பாக்கின. பெரிய மேடையின் அழுத்தங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் அசைக்க முடியாத திறனையும், இயல்பான தனித்திறமையையும், அச்சமின்மையையும் அவர் வெளிப்படுத்தினார். தனது அறிமுகப் போட்டியில் வெறுமென 'நிலைத்து நின்றால் போதும்' என்று அவர் நினைக்கவில்லை.'

"அவரை இந்த நிலை வரை கொண்டு வந்த அதே துணிச்சலுடனும் ஆக்ரோஷத்துடனும் விளையாடவே அவர் விரும்பினார். அதுதான் உண்மையான ஒப்பீடு. ரன்களோ, அதிர்ஷ்டமோ அல்ல. அதேபோல், ஒரு 15 வயதுச் சிறுவன் எப்படியோ சச்சின் நிழலுக்குள் நுழைந்து, அந்த இடத்தைத் தனதாக்கிக் கொள்ள முடியும் என்ற சாத்தியமற்ற, நியாயமற்ற எதிர்பார்ப்பும் அல்ல அது. உண்மையான ஒப்பீடு என்பது நிதானம் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்தது. டெண்டுல்கர் எடுத்த 15 ரன்கள், இந்த நிலையில் பேசப்பட வேண்டிய தகுதி அந்தச் சிறுவனுக்கு உண்டு என்பதை இந்தியாவுக்கு உணர்த்தின. சூர்யவன்ஷி எடுத்த 14 ரன்கள், இந்த மேடையின் அழுத்தம் அவரை விழுங்கிவிடாது என்பதை இந்தியாவுக்குத் தெரிவித்தன." என்று எழுதியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு