காக்ரோச் கனதா கட்சி சீசன் 2 போராட்டத்தை தொடங்க திட்டம் - எதற்காக? அபிஜித் தீப்கே விளக்கம்

பட மூலாதாரம், ANI
டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் நீடித்த போராட்டத்தை காக்ரோச் ஜனதா கட்சி முடித்த ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தனது பிரசாரத்தின் 'சீசன் 2' விரைவில் தொடங்கும் என்று ஆகஸ்ட் 12ஆம் தேதி அறிவித்தார்.
ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற சிஜேபி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தீப்கே விமர்சித்தார். இதற்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், "அமித் ஷா ஏன் நாடாளுமன்றத்தை விட்டு ஓடுகிறார்? ஜூலை 20ஆம் தேதி நடந்த தடியடிக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது உத்தரவின் பேரில் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன, கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இப்போது அவர் ஏன் நாடாளுமன்றத்தை விட்டுத் தப்பி ஓடுகிறார்?" என்றார்.
'சீசன் 2'வில் என்னென்ன இடம்பெறும் என்பதை சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் விளக்கினார். அப்போது அவர், "இந்த முறை, நாட்டிலுள்ள பள்ளிகளின் நிலையை மேம்படுத்துவதில் கட்சியின் கவனம் இருக்கும்" என்று கூறினார்.
பள்ளிகள் தொடர்பான தங்களது கவலைகளை அரசு கண்டு கொள்ளாமல் இருந்தால், மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றும் ரங்கா கூறினார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 'பள்ளிகளைச் சீரமைக்கும் பிரசாரம்' தொடங்கும் என்றும் அவர் கூறினார். மேலும், டெல்லியின் நாராயணாவில் நடைபெற்ற திறந்தவெளி நிகழ்ச்சியில் தன்னார்வலர்களிடம் பேசிய தீப்கே, தான் கூட்டம் நடத்தவிருந்த மண்டபத்திற்கான முன்பதிவு பாஜக-வின் அழுத்தத்தால் 'ரத்து' செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
அத்துடன், "இது சீசன் 2வின் தொடக்கம். சீசன் 2 எப்போது தொடங்கும் என்று இன்ஸ்டாகிராமில் பலர் கேட்டுக் கொண்டிருந்தனர். ஜந்தர் மந்தரில் சீசன் 2 மிக விரைவில் தொடங்கப் போகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், ANI
கூட்டத்திற்கு இடம் கிடைக்கவில்லை
தீப்கே கூறுகையில், தங்கள் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களின் கூட்டங்களை நடத்துவதைத் தடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள், மக்களைத் திரட்டுவதற்கு தங்களுக்கு மற்றொரு தளத்தை உருவாக்கித் தந்துள்ளதாகக் கூறினார்.
அவர் கூறுகையில், "அவர்கள் எங்களுக்கு எதிராக எந்த அளவுக்குச் செயல்படுகிறார்களோ, அந்த அளவுக்கு அது எங்களுக்குச் சாதகமாகவே அமைகிறது. எங்களை எப்படிக் கையாள்வது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஜந்தர் மந்தரில் தண்ணீர், உணவு வழங்குவதை நிறுத்திவிட்டால் நாங்கள் திரும்பிச் சென்றுவிடுவோம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் நாங்கள் செல்லவில்லை.
"இன்றும்கூட மண்டபம் கிடைப்பதில் அழுத்தம் கொடுத்தால், நாங்கள் கூட்டம் நடத்த மாட்டோம் என்று நினைத்தார்கள். இப்போது மூடிய அறைக்குள் நடக்கவிருந்த கூட்டம் பொது நிகழ்ச்சியாக மாறிவிட்டது. அவர்களுக்கு எல்லா இடங்களிலும் ஜந்தர் மந்தர் போன்ற ஒன்று வேண்டுமென நினைக்கிறேன்" என்றார்.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, சிஜேபி தனது நாடு தழுவிய போராட்டத்தை ஜூலை 25ஆம் தேதி முடித்துக்கொண்டது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜந்தர் மந்தரில் அக்கட்சி நடத்திய போராட்டம் 36 நாட்கள் நீடித்தது.
நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவிர, பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
புதன்கிழமை, கூட்டம் நடத்துவதற்கு இடம் கிடைப்பதில் தங்கள் அமைப்புக்கு சிரமம் ஏற்பட்டதாகவும், பல இடங்கள் கூட்டத்தை நடத்த இடம் வழங்க மறுத்ததாகவும் தீப்கே குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்கு தன்னார்வலர்களுக்கான கூட்டத்தை நடத்தவிருந்தோம். அதற்காக இந்த மண்டபத்தை முன்பதிவு செய்திருந்தோம். பல இடங்களுக்குச் சென்றோம். ஆனால் எங்களுக்கு மண்டபம் வழங்கப்படவில்லை. பல இடங்களில் இருந்து எங்களைத் திருப்பி அனுப்பினர்."
"எங்களுக்கு மண்டபம் கொடுத்தால் தங்களுக்குப் பிரச்னை ஏற்படும் என்று அவர்கள் கூறினார்கள். மிகுந்த சிரமத்திற்குப் பிறகுதான் இந்த மண்டபத்தைப் பெற்றோம். ஆனால், அதை எங்களுக்குக் கொடுத்தால் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்களிடம் கூறப்பட்டுள்ளது" என்றார்.
அதாவது, "எங்களுக்கு மண்டபம் வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படுமென பாஜக மக்களை மிரட்டுவதாக" தீப்கே குற்றம் சாட்டினார்.

பள்ளிகளைச் சீரமைக்கும் பிரசாரம்
மோகன்லால் சர்மாவுடன் பிபிசி நியூஸ் ஹிந்தியின் 'தின்பர்' பாட்காஸ்டில் பேசியபோது, ஆகஸ்ட் 15ஆம் தேதி சிஜேபி புதிய பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாக அசுதோஷ் ரங்கா அறிவித்தார்.
அதுகுறித்து பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "ஆகஸ்ட் 15 முதல் 'பள்ளிகளைச் சீரமைப்போம்' பிரசாரத்தைத் தொடங்குகிறோம். நமது குழந்தைகள் பள்ளிக் கல்வியை இழப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுதான் ஜந்தர் மந்தரின் சீசன் 2" என்றார்.
அத்துடன், "இந்த நாட்டின் மக்கள் இந்தப் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சுதந்திரத்துக்குப் பிறகு அரசுப் பள்ளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. கிராமங்களில் வசிக்கும் நமது குழந்தைகள் வேண்டுமென்றே கல்வி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், இந்த நாட்டில் 94 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நாட்டின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக ஒரு நிலைக்குத் தள்ளுவதற்கான அரசின் முயற்சியாக இது தெரிகிறது" என்றார்.
இந்தப் பிரசாரத்தின் போது என்ன நடக்கும் என்பதையும் விளக்கிய ரங்கா, "நாடு முழுவதும் உள்ள ஊராட்சித் தலைவர்களிடம் அவர்களின் பள்ளிகளைச் சீரமைக்குமாறு கோரிக்கை விடுப்போம். வரும் மாதங்களில் எங்கள் குழு நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகளுக்குச் செல்லும். அங்கு ஒன்றிணைந்து, அந்தப் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுப்போம். ஊராட்சித் தலைவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்" என்றார்.
கூடுதலாக, பள்ளிகள் சீரமைக்கப்படாத இடங்களிலும் தங்கள் கட்சி போராட்டம் நடத்துமென்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
தேவேந்திர மஹதோவின் உண்ணாவிரத போராட்டம் குறித்த கலந்துரையாடல்
தற்போது ஜார்க்கண்டில் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹதோ தலைமையில் நடந்து வரும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும், கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்காக சிஜேபி மேற்கொள்ளும் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசிக்கவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தீப்கே கூறினார்.
மஹதோ ராஞ்சியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதுகுறித்துப் பேசிய அவர், "ராஞ்சி போராட்டத்தை உண்ணாவிரதம் இருக்கும் தேவேந்திர மஹதோ தலைமையேற்று நடத்துகிறார். எங்கள் தன்னார்வலர்கள் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். ஜார்க்கண்ட் போராட்டத்தை எவ்வாறு வலுப்படுத்துவது, கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கான எங்கள் பிரசாரத்தை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது என்பது குறித்து இன்று ஆலோசிக்க இருந்தோம்" என்றார்.
தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "குழந்தைகள் போக்குவரத்து சிக்னல்களில் வறுமையின் காரணமாக மூவர்ணக் கொடியை விற்காமல், அதைப் பள்ளிக்குக் கொண்டு செல்லும் இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினார்.
சிஜேபி-யின் ஜந்தர் மந்தர் போராட்டத்துக்குப் பிறகு, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். சமூகச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் ஜூன் 28ஆம் தேதி போராட்டத்தில் இணைந்தார். பின்னர் அவர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜூலை 20ஆம் தேதி, "சன்சத் சலோ" (நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்வோம்) என்ற பேரணியின்போது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர்.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பின. போராட்டம் முடிவடைந்த பிறகு, சிஜேபி தனது தேசியக் குழுவை அறிவித்தது. தீப்கே தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், அந்த அமைப்பு தனது கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































