காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட அதிகாரி என்ன செய்வார்? ஊதியம், சலுகைகள் பற்றிய விவரம்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதோ, ஏதேனும் குற்றச்சாட்டில் சிக்கினாலோ குறிப்பிட்ட அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
"காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஓர் அதிகாரிக்கு ஏழு நாட்களுக்கு மேல் எந்தப் பணியிடமும் ஒதுக்கப்படாவிட்டால் அது அவமானகர நடவடிக்கையாகவே பேசப்படுகிறது" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனவேல்.
தமிழ்நாடு அரசின் வருவாய், காவல்துறை மற்றும் இதர துறைகளில் பணியாற்றும் ஓர் அதிகாரி தனது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு வேறு பணியிடம் ஒதுக்கப்படாமல் காத்திருக்க வைக்கப்படும் நிலையே 'காத்திருப்போர் பட்டியல்' எனப்படுகிறது.
'காரணம் இல்லாத கட்டாய காத்திருப்பு'
சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியின் இயக்குநராக இருந்த அருண் ஐ.பி.எஸ், கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவதாக அரசின் உள்துறை செயலர் மணிவாசன் ஐ.ஏ.எஸ் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இதேநாளில் கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த கண்ணனும் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆனால், இதற்கான காரணம் எதையும் உள்துறை செயலகம் குறிப்பிடவில்லை.
தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருந்த பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டிருந்தது. அவர் கட்டாய காத்திருப்பில் வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை. இதேநாளில் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்ட அறப்போர் இயக்கம், முதலமைச்சரின் நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 45 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியது. இந்த முறைகேட்டில் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளராக இருந்த பாலச்சந்தருக்கு தொடர்பிருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.
இதுகுறித்து பாலச்சந்தர் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. சுமார் 15 நாட்கள் கடந்த பின்னரும் பாலச்சந்தருக்கு மாற்றுப் பணியிடத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கவில்லை.

பட மூலாதாரம், Handout
'பதவி இல்லாமல் காத்திருப்பதே தண்டனை'
"காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படும் அதிகாரிகளுக்கு எந்தப் பணியிடமும் ஒதுக்கப்படாமல் இருப்பதே தண்டனையாகப் பார்க்கப்படுகிறது" எனக் கூறுகிறார், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.
"பொதுவாக, தங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லாமல் இருப்பதை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் விரும்புவதில்லை. எதாவது ஒரு துறையில் அதிகாரம் உள்ள பதவிகளில் நீடிப்பதையே அவர்கள் விரும்புகின்றனர்" என, அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இது சிறிய வகை தண்டனையாக பார்க்கப்படுவதாகக் கூறிய ஜெயராம் வெங்கடேசன், "அதேநேரத்தில், காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டு சில நாட்களில் வேறு ஒரு பதவியைக் கொடுத்துவிடுகின்றனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தும்போக்கு நீடிக்கிறது" எனக் கூறுகிறார்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மீதான அரசின் நடவடிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "அந்தந்த நேரங்களில் ஏற்படும் சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலில் வைக்கின்றனர்" என்றார்.
"காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படும் காலகட்டங்களில் அதிகாரி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கையை எடுப்பதே சரியான ஒன்றாக அமையும்" எனவும் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார்.
"ஆனால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட காலத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு எந்த விதிகளும் இல்லை" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனவேல்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட அதிகாரி என்ன செய்வார்?

பட மூலாதாரம், Handout
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படும் அதிகாரிக்கு கிடைக்கும் சலுகைகளைப் பற்றி அவர் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
- காத்திருப்போர் பட்டியலில் வைப்பதால் மாதச் சம்பளத்தில் எந்தவித பாதிப்பும் வராது. வருகைப் பதிவு அவசியம் இல்லை.
- அது தற்காலிக விடுப்பாக பார்க்கப்படுகிறது. புதிய பணியிடம் ஒதுக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரி ஓய்வில் இருக்கலாம்.
- காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதற்கு காலஅளவு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 'மாற்றுப் பணியிடம் ஒதுக்கலாம்' என அரசு முடிவெடுக்கும் வரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார்.
"ஓர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்பினால் முதலில் அவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைப்பார்கள். அவருக்கு மாற்றுப் பணி ஒதுக்குவதற்கான கோப்புகளை தாமதப்படுத்தும் சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளன" எனக் கூறுகிறார் தனவேல்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, முந்தைய அரசில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியல் அல்லது முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவது தொடர்கிறது.
கடந்த மே 12ஆம் தேதி அரசின் பொதுத்துறை வெளியிட்ட அரசாணையில் அரசின் நிதித்துறை செயலராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இதே பதவியில் இருந்த உதயசந்திரனுக்கு மாற்றுப் பணியிடம் ஒதுக்குவது குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை. மறுநாள் (மே 13) வெளியான அரசாணையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக உதயசந்திரன் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
'ஒரு வாரம் நீடித்தாலே அவமானம்'

பட மூலாதாரம், TNGovt
"காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படும் அதிகாரிக்கு ஓரிரு நாளில் மாற்றுப் பணியிடம் ஒதுக்கப்படலாம். மாதக் கணக்கில் பொறுப்பை வழங்காமல் காலம் தாழ்த்தும் சம்பவங்களும் நடந்துள்ளன" எனக் கூறுகிறார் தனவேல்.
முதலமைச்சரை எளிதில் அணுக முடியாத காலகட்டங்களில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அதிகாரிகள் குறித்து உரிய முடிவை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"சில முதலமைச்சர்கள் கோப்புகளைப் பார்ப்பதற்கு தாமதம் செய்வார்கள். குறிப்பிட்ட சில அதிகாரிகள் குறித்து தலைமைச் செயலாளர் கூறினாலும், 'இருக்கட்டும்' எனக் கூறி சில மாதங்கள் தாமதம் செய்வார்கள்" என்கிறார் தனவேல்.
"ஒருவாரம் கடந்தும் காத்திருப்போர் பட்டியலில் அதிகாரி வைக்கப்பட்டால் அதுகுறித்து அதிகாரிகள் மத்தியில் விவாதம் நடக்கும். எந்தவித வேலையும் கொடுக்காமல் ஒருவரை வைத்திருப்பது அவமானகரமானதாகப் பார்க்கப்படுகிறது" என்கிறார் அவர்.
'சில நேரம் திறமையான அதிகாரிக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை'
தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக ஏழு ஆண்டுகள் சகாயம் ஐ.ஏ.எஸ் பொறுப்பு வகித்தார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விருப்ப ஓய்வுபெறும் வரை அவர் இந்தப் பணியிடத்தில் நீடித்தார்.
முன்னதாக, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சகாயத்துக்கும் அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் இருந்த அமைச்சர் ஒருவருக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்ததால் இடமாற்றம் செய்யப்பட்டதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இதனை சில ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் சகாயம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டுப் பேசும் தனவேல், " அரசுத் துறையில் எந்தப் பதவியாக இருந்தாலும் அது பதவி தான். ஆனால், சில நேரங்களில் திறமையான அதிகாரிக்கு அரசு நிர்வாகத்தில் முக்கியத்துவம் கிடைப்பதில்லை" எனக் கூறுகிறார்.
அரசுத் துறைகளில் அதிகளவில் காலிப் பணியிடங்கள் உள்ளதாகக் கூறும் தனவேல், " காத்திருப்போர் பட்டியலில் உள்ள அதிகாரிக்கு பணியிடம் ஒதுக்காமல் வைத்திருப்பதால் அரசுக்கு வீண் விரயம் ஏற்படுகிறது. மாறாக, விரைவாக மாற்றுப் பணி அளிப்பதே சிறப்பான நிர்வாகத்திற்கு உகந்ததாக இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































