ஜேசன் சஞ்சய் இயக்குநராக ஜெயித்தாரா? 'சிக்மா' படம் பற்றிய ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், Lyca Productions/YT
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள 'சிக்மா' திரைப்படம், சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று (அக்டோபர் 2) வெளியாகியுள்ளது. கடன் சுமையில் இருக்கும் ஒரு நூலக உரிமையாளர், போதைப்பொருள் கும்பல், சட்டவிரோத சூதாட்ட மையம், கோடிக்கணக்கான பணம் இருக்கும் ரகசிய லாக்கர், அதைத் திறப்பதற்கான சாவி, பென்டிரைவ் எனப் பல அம்சங்களை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், இந்த திரைப்படம் குறித்து ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?
படத்தின் கரு என்ன?

பட மூலாதாரம், Lyca Productions/YT
குரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன், தனது தாயின் நினைவாக இயங்கிவரும் நூலகத்தைப் பாதுகாக்கப் போராடுகிறார். குடும்பக் கடனை அடைக்க வேண்டிய சூழலில் சிக்கியுள்ள அவர், அதிகளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் அவருக்கு சட்டவிரோத சூதாட்ட மையம் மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது.
சூதாட்ட மையத்தில் போதைப்பொருள் விநியோகம் தொடர்பான காட்சிகள் அடங்கிய பென்டிரைவ் குருவிடம் கிடைக்கிறது. அதே பென்டிரைவுடன் ரூ.1,000 கோடி மதிப்பிலான ரகசிய லாக்கரின் சாவியும் தொடர்புபடுகிறது. அந்தச் சாவியை மீட்க வில்லன் கும்பல் முயற்சிக்கிறது. இதைச் சுற்றியே கொள்ளைத் திட்டம், துரோகம், பழிவாங்கல் உள்ளிட்ட பல கதைக்கோடுகள் நகர்கின்றன.
திரைக்கதை எப்படி?

பட மூலாதாரம், Lyca Productions/YT
இந்தப்படத்தில் ஹெய்ஸ்ட், போதைப்பொருள், சூதாட்டம், இரட்டைத் துரோகம் என இந்த வகை திரைப்படங்களில் வழக்கமாகக் காணப்படும் பல அம்சங்கள் இருந்தாலும், அவற்றை வலுவான எழுத்துடன் ஒன்றிணைக்க முடியவில்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் குறிப்பிடுகிறது. அதே நேரத்தில், படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு படத்தின் வேகத்தையும் தோற்றத்தையும் ஓரளவு தக்கவைக்க முயன்றிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெய்ஸ்ட் திரைப்படத்துக்குத் தேவையான பதற்றமும் புதுமையும் போதுமான அளவில் இந்தப்படத்தில் இல்லை என்று இந்தியா டுடே விமர்சனம் குறிப்பிடுகிறது. கோடிக்கணக்கான பணம் இருக்கும் லாக்கரைச் சுற்றி கதை நகர்ந்தாலும், அதை எப்படிக் கொள்ளையடிப்பது என்பது குறித்து நாயகனும் அவரது நண்பர்களும் தீவிரமாகத் திட்டமிடும் காட்சிகள் குறைவாக இருப்பதால் இறுதியில் வரும் கொள்ளைத் திட்டத்தில் சில ஓட்டைகள் இருப்பதாக அந்த விமர்சனம் கூறுகிறது.
திரைப்படத்தின் முதல் பாதி கதைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் எழும் சில கேள்விகளுக்கான முன்னோட்டங்கள் முதல் பாதியிலேயே வைக்கப்பட்டிருப்பது சாமர்த்தியமான அணுகுமுறை என தினமணி விமர்சனம் தெரிவித்துள்ளது. ஆனால், முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி சற்று நீளமாகத் தோன்றுவதாகவும் அந்த விமர்சனம் கூறுகிறது.
ஜேசன் சஞ்சயின் இயக்கம் எப்படி?

பட மூலாதாரம், LycaProductions/Facebook
'அறிமுக இயக்குநராக ஜேசன் சஞ்சய் பல கதாபாத்திரங்களையும் பல்வேறு கதைக்கோடுகளையும் ஒரே திரைப்படத்தில் இணைக்க முயன்றிருக்கிறார். ஆனால், புதுமையான அணுகுமுறையை எதிர்பார்க்க வைத்த படத்தில் வழக்கமான ஹெய்ஸ்ட் மற்றும் ஆக்ஷன் திரைப்பட உத்திகள் அதிகம் இடம்பெற்றுள்ளன' என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
திரைப்படத்தின் முதல் பாதியில் கதை அமைக்கப்பட்ட விதத்தையும், பின்னர் எழும் கேள்விகளுக்கான சில காட்சிகள் முன்கூட்டியே வைக்கப்பட்டிருப்பதையும் இயக்குநரின் பலமாகக் குறிப்பிடுகிறது தினமணி.
ஜேசன் சஞ்சய் படத்தின் அளவையும் பிரம்மாண்டத்தையும் சரியாகக் கையாண்டிருப்பதாக தெரிவித்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆனால் திரைக்கதையில் அவர் தவறிவிட்டார் என்று கூறியுள்ளது.
சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா எப்படி?

பட மூலாதாரம், Lyca Productions/YT
குரு கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக தினமணி குறிப்பிடுகிறது. கடனை அடைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் பின்னர் வில்லனை மிரட்டி பணம் பெற முயற்சிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு படத்தைத் தாங்குவதாக அந்த விமர்சனம் கூறுகிறது.
ஆனால் நாயகனின் பிரச்னைகள், காதல், நூலகத்துடனான உணர்வுப்பூர்வமான தொடர்பு ஆகியவற்றுடன் பார்வையாளர்கள் போதுமான அளவு ஒன்றிப்போக முடியவில்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிடுகிறது.
ஃபரியா அப்துல்லா ரேடியோ தொகுப்பாளராக நடித்துள்ளார். அவருக்கு துடிப்பான கதாபாத்திரம் இருந்தாலும், கதையின் முக்கியப் பகுதிகளில் அவருக்கான வலுவான தருணங்கள் குறைவாக இருப்பதாக தினமணி கூறுகிறது.
ஆக்ஷன், தொழில்நுட்ப அம்சங்கள் எப்படி?

பட மூலாதாரம், Lyca Productions/YT
பல அடுக்குகளைக் கொண்ட கார் நிறுத்துமிடத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியைப் படத்தின் குறிப்பிடத்தக்க ஆக்ஷன் காட்சிகளில் ஒன்றாகச் சுட்டிக்காட்டுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. ஆனால் இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் நீளமாக இருப்பதாக அந்த விமர்சனம் கூறுகிறது.
தானியங்கி கார் நிறுத்துமிட சண்டை உள்ளிட்ட சில காட்சிகளில் சுவாரசியமான யோசனைகள் இருந்தாலும், அவை அவசரமாகச் செயல்படுத்தப்பட்டிருப்பதாக இந்தியா டுடே கூறுகிறது. படத்தின் தயாரிப்பு, டிரோன் காட்சிகள் உள்ளிட்ட பிரமாண்டமான காட்சியமைப்புகள் தெரிந்தாலும், அவை திரைக்கதையில் உருவாகாத பதற்றத்தை ஈடுசெய்யவில்லை என அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.
இசை, ஒளிப்பதிவு மற்றும் சண்டைக் காட்சிகளில் தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு படத்துக்கு பலமாக அமைந்துள்ளதாக தினமணி விமர்சனம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































