'நீ அடுப்படியை எப்படி தேர்வு செய்தாய்?' - சென்னையில் மனைவி அலுவலகம் செல்ல, வீட்டு வேலைகளை கவனிக்கும் இல்லத்தரசரின் அனுபவம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
"வீட்டு பொறுப்புகளை நான் கவனிப்பதால் எந்தவொரு குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதற்கும் வெட்கமாக இருக்கும். உறவினர்கள் ஏதாவது கேள்வி கேட்பார்களே என்று செல்ல மாட்டேன். 'எப்படி நீ அடுப்படியை தேர்வு செய்தாய், எப்படி இந்த முடிவுக்கு வந்தாய்?' என என் அம்மாவே கேட்டார். என் மாமியாரும் மனைவியிடம், 'இது சரியில்லை, என்னவாக இருந்தாலும் அவரை வேலைக்கு அனுப்பு, நீ வேலைக்கு செல்லாதே' என கூறுவார்'" என கூறுகிறார் டேவிட்.
சென்னையை சேர்ந்த டேவிட்- செல்வி தம்பதி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். புகைப்பட கலைஞரான டேவிட், தற்போது வார இறுதி நாட்களில் மட்டும் பணிபுரிந்துவருகிறார். செல்வி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இத்தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு டேவிட்டுக்கு நிலையான வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மகப்பேறு விடுப்புக்குப் பிறகு செல்வி மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
"அப்போது நான் வீட்டிலிருந்து குழந்தையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் என் மனைவிக்கு நிலையான வருமானம் உள்ளது. ஆரம்பத்தில் குழந்தையை கவனித்துக் கொள்வதற்கென என் மனைவி தனியே ஒரு அட்டவணையே போட்டுக் கொடுத்தார்." என்கிறார் டேவிட்.
இப்போது கடந்த 3 ஆண்டுகளாக குழந்தையை முழுவதும் கவனித்துக் கொள்கிறார் டேவிட். காலை 5 மணிக்கு வீட்டில் தனது வேலைகள் ஆரம்பிக்கும் என்கிறார் அவர்.
"வீட்டில் சமையலுக்காக 40% உதவிகளை என் மனைவிக்கு செய்துகொடுப்பேன். என் மனைவி 10 மணிக்கு வீட்டிலிருந்து சென்றால் இரவு வீட்டுக்கு வருவதற்கு 11 மணியாகிவிடும். அதுவரை குழந்தையை நானே கவனித்துக்கொள்வேன். குழந்தையை கீழே கூட விட முடியாது. தூக்கி வைத்துக்கொண்டே தான் இருப்பேன். இடையே குழந்தைக்கு தேவையான உணவு தயாரிப்பேன். வீட்டை முழுவதும் பெருக்கி, துடைத்து, துணிகளை வாஷிங் மெஷினில் துவைப்பது உட்பட வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்துவிடுவேன். இவ்வளவு வேலையும் குழந்தையை வைத்துக்கொண்டே செய்வேன். குழந்தை தூங்கும் வேளையில் சில வேலைகளை செய்வேன். இதுதான் என் ரொட்டீன் (routine)" என்கிறார் டேவிட்.
தனது உதவியுடன் சமையல் பணிகளை மட்டும் மனைவி கவனித்துக்கொள்வார் என்று அவர் கூறுகிறார்.
"இதன்மூலம் பெண்கள் வீடுகளில் செய்யும் வேலை எவ்வளவு கடினமானது என்பதை புரிந்துகொண்டேன்." என்கிறார் டேவிட்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சமூக சூழலிலும் மனைவி வீட்டு பொறுப்புகளை ஏற்பவராகவும் கணவர் வேலை செய்து வருமானம் ஈட்டுபவராகவுமே பெரும்பாலும் கருதப்படுகின்றனர். பெண்கள் கல்வி, பல துறைகளில் சாதித்தல் என முன்னேற்றம் அடைந்தாலும் கூட வீட்டுப் பொறுப்புகளை கவனிப்பவர்களாகவும் பெரும்பாலும் பெண்களே உள்ளனர். சில சந்தர்ப்பங்களில் வீட்டுப் பொறுப்புகளை கவனித்துக் கொள்ளும் ஆண்கள் சமூக ரீதியாக அவமதிக்கப்படுவதாகவும் பல்வேறு கேள்விகளை எதிர்கொள்வதாகவும் டேவிட் போன்றோர் கூறுகின்றனர்.
"என் நண்பர்கள் எனக்கு போன் செய்தால், 'இப்போ என்ன வேலை செய்ற? என்ன சமைக்கிற?' என கேட்பார்கள். சுற்றி உள்ளவர்கள் என்னை நிறைய கிண்டல் செய்துள்ளனர். பெண்ணை வேலைக்கு அனுப்பிவிட்டு நான் வீட்டு வேலைகளை செய்வதை மிகப்பெரும் அவமானமாக நினைப்பார்கள்" என தெரிவித்தார் டேவிட்.
"எனக்கு 32 வயது, இப்போதுதான் எனக்கும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், நான் அவ்வளவாக படிக்காததாலும் நிலையான வருமானம் இல்லாததாலும் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால், வீட்டுப் பொறுப்பை ஏற்றுள்ளேன்." என கூறுகிறார் டேவிட்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு ஒன்றில் 'இல்லத்தரசர்' (house husband) குறித்து தெரிவித்த கருத்துகள் பெரிதும் விவாதிக்கப்படுகின்றன. மனைவி வெளியே வேலை செய்து வருமானம் ஈட்டி, வீட்டு பொருளாதாரத்துக்கு துணைபுரியும்போது, வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல் போன்ற பொறுப்புகளை பார்க்கும் ஆண்கள் குறித்து அந்த விவாதங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த விவாதங்களுக்கு வித்திட்ட நீதிபதிகளின் கருத்து என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
"இல்லத்தரசி (house wife) என ஒருவர் இருந்தால் இல்லத்தரசரும் (house husband) இருக்கலாம்" என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திருமண உறவு தொடர்பான வழக்கு ஒன்றை முடித்துவைத்த போது கருத்து தெரிவித்துள்ளது. வீட்டு பொறுப்புகளை பெரும்பாலும் பகிர்ந்துகொள்ளும்போது அது திருமணம் மற்றும் குடும்ப அமைப்பை வலுப்படுத்துவதற்கு உதவலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தம்பதி இருவரும், தேனி குடும்ப நல நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தனித்தனியே மேல்முறையீடு செய்திருந்தனர். தம்பதி இருவரும் மருத்துவர்கள் என ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிடுகிறது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.

பட மூலாதாரம், Getty Images
நீதிமன்றம் கூறியது என்ன?
அச்செய்தி குறிப்பிடும் நீதிமன்ற உத்தரவின்படி, "2011ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றபோது இருவரும் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளனர். 2012ஆம் ஆண்டில் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து, குழந்தையை பராமரிப்பதற்காக அப்பெண் தன் பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார், அவருடைய கணவர் இதயவியல் துறையில் மேல்படிப்பு படிப்பதை தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு இருவருக்கும் இரண்டாவதாக குழந்தை பிறந்துள்ளது. 2020ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். ஆனால், அதன்பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மனைவி, கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டக் கோரி (restitution of conjugal rights) குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார். அதேவேளையில், கணவர் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்தார்.
இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, குடும்பத்தில் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது குறித்து கருத்துகளைத் தெரிவித்தது.
"நமது கலாசாரத்தில் குடும்பமே அடிப்படை அலகாக உள்ளது. வருமானம் ஈட்டும் பொறுப்புக்கும், குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்புக்கும் சமமான மரியாதை அளிக்கப்பட வேண்டும்" என்று நீதிமன்றம் தெரிவித்ததாக 'லைவ் லா' செய்தி தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
சில நேரங்களில் திருமணம் தங்களது தொழில் வாய்ப்புகளுக்குத் தடையாக இருப்பதாக பெண்கள் கருதக்கூடும் என்றும், திருமணம் செய்துகொள்ளாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
"கணவர்கள் குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டால் இந்த நிலை மாறக்கூடும். 'இல்லத்தரசி' (house wife) என்ற ஒருவர் இருக்கும்போது, 'இல்லத்தரசர்' (house husband) என்பவரும் இருக்கலாம்" என்று நீதிபதிகள் தெரிவித்ததாக 'லைவ் லா' செய்தி குறிப்பிடுகிறது.
இதுபோன்ற ஏற்பாடு சமூக வழக்கமாக மாறினால், அது திருமண உறவுகளை வலுப்படுத்தவும் குடும்ப அமைப்பைப் பாதுகாக்கவும் உதவும் என்றும் அமர்வு கூறியது.
"ஹோம்மேக்கர்" (Homemaker) என்ற சொல் பாலினப் பாகுபாடற்றது என்றும், மனைவி இல்லத்தைப் பராமரிப்பதன் மூலம் ஆற்றும் பணியின் பொருளாதார மதிப்பை உச்ச நீதிமன்றம் பலமுறை அங்கீகரித்துள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
வழக்கு விசாரணையின்போது, குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு மனைவிக்கு ரூ.2.5 கோடி வழங்க கணவர் ஒப்புக்கொண்டார். மனைவியும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார்.
இரு தரப்பினரின் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் விவாகரத்துக்கு அனுமதி வழங்கி, இரு மேல்முறையீட்டு வழக்குகளையும் முடித்து வைத்தது.
நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த மூன்று மாதங்களுக்குள் ரூ.1.5 கோடியை மனைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்துமாறு கணவருக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தம்பதியின் இரு குழந்தைகளின் பெயர்களிலும் தலா ரூ.50 லட்சம் வீதம் ஓராண்டுக்குள் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
'இந்தியாவில் ஆண்கள் வீட்டு பொறுப்புகளை கவனிப்பது குறைவு'
இந்தியாவில் ஆண்கள் வீட்டு பொறுப்புகளை கவனிப்பது என்பது மிகவும் குறைவு என்றே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்திய புள்ளிவிவரங்கள் துறை அமைச்சகம் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் பெண்கள் ஒருநாளைக்கு 7 மணிநேரத்தை வீட்டு வேலைகளிலும் பராமரிப்பு பணிகளிலும் செலவிடுகின்றனர், இது ஆண்களைவிட இருமடங்கு அதிகமாகும். பெண்கள் ஒருநாளைக்கு சராசரியாக 289 நிமிடங்களை வருமானம் தராத வீட்டு வேலைகளில் செலவிடுகின்றனர். ஆண்கள், இதே வேலைகளில் 88 நிமிடங்களையே செலவிடுகின்றனர். ஆண்களைவிட பெண்கள் குறைவான நேரத்தையே வருமானம் ஈட்டும் வேலைகளிலும் தங்களை கவனித்துக் கொள்வதிலும் செலவிடுகின்றனர்.
இந்த நிலை இந்தியாவுக்கு மட்டுமானதல்ல, உலகளவில் பெண்கள் ஆண்களைவிட 2.8 மணிநேரம் அதிகமாக வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவதாக ஐநா பெண்கள் அமைப்பு குறிப்பிடுகிறது. ஆனால், இது இந்தியாவில் கிட்டத்தட்ட 4 மணிநேரமாக உள்ளது.
சமூக ரீதியான பிரச்னைகள்
சமூக ரீதியாக தான் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பகிர்ந்துகொண்டார் வீட்டு பொறுப்புகளை கவனித்துக்கொள்ளும் டேவிட்.
"நான் கிராமத்து சூழலில் வளர்ந்தேன். என் வீட்டில் நான் வேலை செய்ததே இல்லை. இப்போது எல்லா வேலைகளையும் செய்கிறேன். ஆரம்பத்தில் 'என்ன, நாம் இப்படி இருக்கிறோம், வீட்டு வேலைகளை செய்கிறோமே' என நினைத்தேன், ஆனால் என் மனைவி, குழந்தைக்காக இதை செய்கிறேன். என் குழந்தை பள்ளி சென்று ஓரளவுக்கு வளரும் வரை நான் இதைச் செய்வேன்." என்கிறார் அவர்.
வீட்டை சுத்தம் செய்வதில் சிறிதாக குறை இருந்தாலும் கூட தன் மனைவி அதுகுறித்து தன்னிடம் கடிந்துகொள்வார் என கூறுகிறார் டேவிட். "ஆனால் குழந்தை என்னிடம் விளையாடுவதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்."
வீட்டு பொறுப்புகளை கவனித்துக்கொள்ளும் தனக்கு புகைப்பட தொழில் மூலம் மாதம் 4,000-5000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்கிறார் டேவிட். அதை தனக்கும் மற்றும் குழந்தைக்கும் சில பொருட்களை வாங்க பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மனைவியை நோக்கி எழும் கேள்விகள்
டேவிட்டின் மனைவி செல்வியுமே இதனால் சில சங்கடங்களை எதிர்கொள்கிறார்.
"குழந்தையை என் கணவரிடம் விட்டுவிட்டு நான் வேலைக்கு செல்வதால் எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. நான் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற சூழல் உள்ளது. இப்படி இருப்பதற்காக மற்றவர்கள் என்னை திட்டுவார்கள். அதனால் நான் வேலையை விட்டுவிடலாம் என்று கூட நிறைய தடவை யோசித்துள்ளேன்," என்கிறார் செல்வி.
"வேலையை விட்டுவிட்டால் குழந்தைக்கு தேவையானதை செய்ய முடியாது. அதனால், குழந்தையை பெற்ற அப்பாதானே பார்த்துக்கொள்கிறார் என என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன்."
வீட்டு பொறுப்புகள் தொடர்பாக தங்களுக்குள் வாக்குவாதம் வராத நாளே இல்லை எனக்கூறும் செல்வி, "இனி வரும் காலத்தில் இத்தகைய வாழ்க்கை முறை நம் சமூகத்தில் பழகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































