இரான் - அமெரிக்கா பேச்சு தோல்வி: அரபு மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் கூறுவது என்ன?

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சனிக்கிழமை அமெரிக்கா - இரான் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் முடிவடையாமல் இருந்தபோதிலும், இரண்டு வார கால போர் நிறுத்தத்தைத் தொடர்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று இவ்விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்துவரும் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐஆர்ஐபி (IRIB) அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி, "நாங்கள் சில விவகாரங்களில் உடன்பாடு எட்டினோம்; ஆனால், அமெரிக்காவின் மிக அதிகமான தலையீட்டின் காரணமாகப் பேச்சுவார்த்தைகள் இறுதியில் தோல்வியடைந்தன. இரண்டு அல்லது மூன்று முக்கிய விவகாரங்களில், இரு தரப்பினருக்கும் இடையிலான நிலைப்பாடுகள் வெகுவாக மாறுபட்டிருந்தன; இதனால், எவ்வித உடன்பாட்டையும் எட்ட இயலவில்லை," என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் பல மணிநேரம் நீடித்தன; இக்காலகட்டத்தில், அமெரிக்கக் குழுவினர் அதிபர் டிரம்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர்.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டதாக ஜே.டி. வான்ஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, அரபு மற்றும் மேற்கத்திய ஊடகங்களில் பல்வேறு விதமான எதிர்வினைகள் எழுந்துள்ளன; அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த ஊகங்களும் வெளியாகி வருகின்றன.

அரபு ஊடகங்களில் கூறப்படுவது என்ன?

அல் ஜசீராவின் ஜேம்ஸ் பேய்ஸ் ஒரு கட்டுரையில், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகளின் தோல்வி பற்றிய டிரம்ப் மௌனம் காப்பது குறித்து ஆச்சரியம் தெரிவித்ததோடு, ராஜீய ரீதியிலான முயற்சிகள் முடிந்துவிட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.

அந்தக் கட்டுரையில், அவர், "இஸ்லாமாபாத்தில் ராஜீய ரீதியிலான செயல்முறை முடிவுக்கு வந்துவிட்ட ஒரு சூழலில் நாம் தற்போது இருக்கிறோம்; ஆனால், ராஜீய முயற்சிகள் முழுமையாகவே முடிந்துவிட்டனவா? அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே மிகப்பெரிய கேள்வியாகும்." என எழுதியுள்ளார்.

"எதைச் சாதிக்க இயலவில்லை என்பது குறித்து ஜே.டி. வான்ஸிடமிருந்து நாம் அறிந்துகொண்டோம்; அதேவேளையில், இரான் மறுபரிசீலனை செய்யக்கூடிய ஒரு ஒப்பந்த முன்மொழிவு இன்னும் பரிசீலனையில் உள்ளது என்பதையே துணை அதிபரின் கருத்து உணர்த்துகிறது."

"இந்த மௌனம் மிகவும் ஆழமானது; ஏனெனில், 'ஒரு முழு நாகரிகமே இன்றிரவு முடிவுக்கு வரும், அது மீண்டும் ஒருபோதும் மீளாது' என்று அவர் (டிரம்ப்) பதிவிட்டபோது, ​​சில நாட்களுக்கு முன்பு உலகம் எவ்வளவு தீவிரமான சூழலில் இருந்தது என்பது நமக்குத் தெரியும்."

"அமெரிக்காவுடன் ஒரே அமர்வில் உடன்பாட்டை எட்ட முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை," என்று தெஹ்ரான் கூறியதாக அல் அரேபியா இங்கிலீஷ் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளது.

"இயல்பாகவே, ஒரே அமர்வில் ஓர் உடன்பாட்டை எட்டுவோம் என்று நாம் தொடக்கத்திலிருந்தே எதிர்பார்த்திருக்கக் கூடாது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை," என்று இரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் கூறியதாக, இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐஆர்டிபி(IRIB)-யை மேற்கோள் காட்டி அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் அப்பிராந்தியத்தில் உள்ள பிற நட்பு நாடுகளுடன் இரான் தொடர்ந்து தொடர்பைப் பேணிவரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மற்றொரு செய்தி அறிக்கையில், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தவொரு ராணுவக் கப்பலும் "கடுமையாகக் கையாளப்படும்" என்று இரான் புரட்சிகர காவல் படை (IRGC) ஞாயிற்றுக்கிழமை எச்சரித்ததாக, இரானிய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி அல் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது.

தெஹ்ரானால் பதிக்கப்பட்ட கடல் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக, அமெரிக்கக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்றதாக, அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இவ்வழியே ராணுவக் கப்பல்கள் செல்ல மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும், "கடுமையாகவும் உறுதியாகவும் பதிலடி கொடுக்கப்படும்" என்று ஐஆர்ஜிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேற்கத்திய ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது என்ன?

துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்க தூதுக்குழு, இரானிய தலைவர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சிஎன்என் கூறியது. பல தசாப்தங்களாக நிலவி வந்த மறைமுக ராஜீய செயல்பாடுகளிலிருந்து இது ஒரு பெரும் மாற்றம் என அந்த ஊடகம் இந்த சந்திப்பை விவரித்தது.

1979-ஆம் ஆண்டின் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இத்தகைய உயர்மட்டச் சந்திப்புகள் நிகழ்வது மிகவும் அரிதாகவே இருந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அவை பெரும்பாலும் மத்தியஸ்தர்கள் மூலமாகவே நடத்தப்பட்டன என்பதையும் அந்த ஊடகம் குறிப்பிட்டது.

இந்தப் பேச்சுவார்த்தைகளை, அவற்றின் சாத்தியமான விளைவுகளுக்காக மட்டுமல்லாமல், அவற்றின் அரிதான தன்மைக்காகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ராஜதந்திரத் தருணம் என்று நியூயார்க் டைம்ஸ் விவரித்தது. வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே இந்த மட்டத்தில் நேரடி உரையாடலுக்கு நடைமுறையில் உறுதியான மரபு எதுவும் இருந்ததில்லை என்பதையும் அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியது.

அதேபோன்று, உடனடியாக ஏதேனும் உறுதியான முடிவுகள் எட்டப்படுகிறதோ இல்லையோ, நேரடிப் பேச்சுவார்த்தைகள் என்பவையே ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுவதாக, வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும், பிராந்திய பதற்றங்கள் தீவிரமடைவதைத் தடுக்கவும், அமெரிக்க அதிகாரிகள் இச்சந்திப்பை ஒரு வழக்கத்துக்கு மாறான, ஆனால் அவசியமான நடவடிக்கையாகக் கருதுவதாக யூஎஸ்ஏ டுடே (USA Today) செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு