இந்தியாவில் இருந்து 8 டாலர்களுடன் கனடா சென்று ரூ.52,000 கோடிக்கு ஐடிபிஐ வங்கியை வாங்கும் பிரேம் வாட்சாவின் கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தீபக் மண்டல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
எட்டு டாலர்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஹைதராபாத்திலிருந்து கனடாவுக்குச் சென்ற கோடீஸ்வரத் தொழிலதிபர் பிரேம் வாட்சா, தற்போது ஐடிபிஐ வங்கியின் உரிமையாளராக உள்ளார்.
லைவ் மிண்ட் செய்தியின்படி, கனடாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் பிரேம் வாட்சா, 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபேர்ஃபேக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.
1985-ஆம் ஆண்டு சிறிய காப்பீட்டு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஃபேர்ஃபேக்ஸ், பிரேம் வாட்சாவின் வணிக திறன், தொலைநோக்குப் பார்வை மற்றும் கட்டுப்பாடான செயல்பாடு ஆகியவற்றால் இன்று மிகப்பெரிய நிதி நிறுவனமாக வளர்ந்துள்ளது.
பிரேம் வாட்சாவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம், ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவிகிதப் பங்குகளை வாங்க ரூ.52,878 கோடி செலுத்தவுள்ளது.
யார் இந்தப் பிரேம் வாட்சா? இவ்வளவு பெரிய வணிகப் பேரரசை அவர் எவ்வாறு உருவாக்கினார்?
'கனடாவின் வாரன் பஃபெட்'

பட மூலாதாரம், Getty Images
எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தி மற்றும் பிரேம் வாட்சா எழுதிய தி ஃபேர்ஃபேக்ஸ் வே புத்தகத்தின்படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான அவர், 1970-களில் ஹைதராபாத்திலிருந்து கனடாவுக்குச் சென்றார்.
இந்தச் செய்தியின்படி, வாட்சா அமைதியாகச் செயல்படுபவர். ஊடக வெளிச்சத்தை விரும்பாத அவர், ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்தில் முதல் 15 ஆண்டுகளில் செய்தியாளர்களிடம் அரிதாகவே பேசியுள்ளார்.
2001-ஆம் ஆண்டில்தான் முதலீட்டாளர்களுடன் தொலைபேசி வாயிலான கலந்துரையாடல்களையும் அவர் தொடங்கினார். மதிப்பின் அடிப்படையில் முதலீடு செய்யும் அணுகுமுறைக்காக வாட்சா அறியப்படுகிறார்.
அவரது வழிகாட்டியான ஜான் வாட்சன், பெஞ்சமின் கிரஹாமின் மதிப்பு அடிப்படையிலான முதலீட்டுக் கொள்கைகளை அவருக்குக் கற்றுக்கொடுத்தார்.
பெஞ்சமின் கிரஹாமின் கொள்கையின்படி, வலுவான அடிப்படை நிதிநிலையைக் கொண்டிருந்தும், உண்மையான மதிப்பைவிடக் குறைவான விலையில் கிடைக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து, நீண்ட காலத்துக்கு அவற்றில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டும் இதேபோன்ற முதலீட்டு அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்.
இந்தக் கொள்கைகளைப் பின்பற்றி, பிரேம் வாட்சா பல நிறுவனங்களில் முதலீடு செய்தார். அந்த முதலீடுகள் இன்று அவருக்குப் பெரும் செல்வத்தை ஈட்டித்தரும் வாய்ப்புகளாக மாறியுள்ளன.
இதன் காரணமாகவே வாட்சா, 'கனடாவின் வாரன் பஃபெட்' என்று அழைக்கப்படுகிறார்.
ஹைதராபாத்திலிருந்து கனடாவுக்கு...

பட மூலாதாரம், Reuters
1950-ஆம் ஆண்டு இந்தியாவின் ஹைதராபாத்தில் பள்ளி ஆசிரியருக்குப் பிறந்த பிரேம் வாட்சா, ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் கல்வி பயின்றார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, அடோப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தனு நாராயண், உலக வங்கி குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா ஆகியோரும் இதே பள்ளியில் படித்தவர்கள்தான்.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, வாட்சா சென்னை ஐஐடியில் படித்தார். பின்னர், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.
ஆனால், அவரது வாழ்க்கைப் பயணம் வேறு திசையில் அமைந்தது.
வாட்சாவின் மூத்த சகோதரர் கனடாவில் வசித்து வந்தார். தனது இளைய மகனும் கனடாவுக்குச் சென்று அங்கு தொழில் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார்.
"எனக்குக் கனடா மீது ஆர்வம் இருக்கவில்லை. இந்தியாவை விட்டுச் செல்லவும் நான் விரும்பவில்லை. ஆனால், 22 வயதில் தந்தை சொல்வதைக் கேட்க வேண்டியிருந்தது" என்று தனது தி ஃபேர்ஃபேக்ஸ் வே புத்தகத்தில் வாட்சா எழுதியுள்ளார்.
கனடாவுக்குச் சென்ற பிறகு, வெஸ்டர்ன் ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். தனது படிப்புக்கான செலவுகளைச் சமாளிக்கக் குளிரூட்டிகள் மற்றும் வெப்பமூட்டும் கருவிகளை விற்பனை செய்தார்.
ஒரு விற்பனையாளராகப் பணியாற்றியபோது கற்றுக்கொண்ட பணிவு மற்றும் கடின உழைப்பு ஆகியவை பின்னாளில் தனக்குப் பெரிதும் உதவியதாக வாட்சா கூறுகிறார்.
குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிப்பவர்

பட மூலாதாரம், Getty Images
பிரேம் வாட்சா குடும்ப மதிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நபராவார்.
எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையின்படி, அவரது தந்தை அடிக்கடி ஒரு கருத்தை வலியுறுத்துவார்: "எல்லாமே உன்னைச் சார்ந்திருப்பதைப் போலக் கடினமாக உழை. அதே நேரத்தில், எல்லாமே கடவுளைச் சார்ந்திருப்பதைப் போல முழு பக்தியுடன் பிரார்த்தனை செய்."
1974-ஆம் ஆண்டு கான்ஃபெடரேஷன் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆய்வாளராக வாட்சா தனது பணியைத் தொடங்கினார்.
1984-ஆம் ஆண்டு ஹாம்ப்ளின் வாட்சா இன்வெஸ்ட்மென்ட் கவுன்சல் லிமிடெட் என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். அடுத்த ஆண்டே, நிதி நெருக்கடியில் இருந்த டிரக் காப்பீட்டு நிறுவனமான மெர்கல் ஃபைனான்சியலை வாங்கியதன் மூலம் முக்கிய வெற்றியைப் பெற்றார்.
வெற்றிக்கான சூத்திரம்
வலுவான அடிப்படை நிதிநிலையைக் கொண்டிருந்தும் நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்களைக் கண்டறிந்து முதலீடு செய்வதே பிரேம் வாட்சாவின் வெற்றிக்கான முக்கிய சூத்திரமாக இருந்தது.
அத்தகைய நிறுவனங்களை அடையாளம் காண்பதில் அவர் அபாரத் திறன் கொண்டிருந்தார். அதேபோல், அவற்றில் நீண்ட காலத்துக்கு முதலீட்டைத் தொடர்ந்து வைத்திருக்கும் பொறுமையும் அவரிடம் இருந்தது.
காலத்தின் போக்கையும் வாட்சா நன்கு கணிக்கக்கூடியவர். நெருக்கடிக்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் திறன் அவருக்கு இருந்தது.
இந்தத் திறனின் காரணமாக, 1987-ஆம் ஆண்டு சர்வதேசப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி (பிளாக் மண்டே என்று அழைக்கப்படும் நிகழ்வு), 1990-ஆம் ஆண்டு ஜப்பானியப் பொருளாதாரத்தின் சரிவு, 2008-ஆம் ஆண்டு சர்வதேச நிதி நெருக்கடி ஆகியவற்றை அவர் முன்கூட்டியே கணித்திருந்தார்.
இந்தக் காலகட்டங்களில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலையை வாட்சா சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படும் வாய்ப்புள்ள நிறுவனங்களின் பங்குகளை மிகக் குறைந்த விலையில் வாங்கினார்.
இருப்பினும், ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனமும் சில பின்னடைவுகளைச் சந்தித்தது. ஹார்வி, இர்மா, மரியா ஆகிய சூறாவளிகளும் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயும் நிறுவனத்துக்குக் கணிசமான இழப்புகளை ஏற்படுத்தின.
கோவிட்-19 பெருந்தொற்றும் நிறுவனத்துக்குப் பெரும் சவாலாக அமைந்தது. அப்போது அதன் காப்பீட்டு வணிகத்தில் மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டன.
ஆனால், இந்தப் பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவதில் பிரேம் வாட்சா காட்டிய திறன், ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்தது.
2022-ஆம் ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு நான்கு மடங்காக உயர்ந்தது.
வணிகம் மற்றும் தொழில்துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக பிரேம் வாட்சாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிரேம் வாட்சாவின் வணிகம்

பட மூலாதாரம், @amitabhk87
ஐடிபிஐ வங்கியில் மேற்கொள்ளப்படும் முதலீடு, ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனம் இதுவரை செய்துள்ள மிகப்பெரிய முதலீடாக இருக்கும்.
இருப்பினும், 2014-ஆம் ஆண்டிலேயே ஃபேர்ஃபேக்ஸ் இந்தியா ஹோல்டிங் என்ற பெயரில் இந்தியச் சந்தையில் அந்நிறுவனம் நுழைந்தது.
பிரேம் வாட்சாவின் மகன் பென் வாட்சா, மார்வெல் கேபிடல் என்ற நிதி மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்கிறது.
இந்தியாவில் தங்கக் கடன் வணிகம் தொடர்பாக ஐஇஎஃப் நிறுவனம் ஒழுங்குமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டிருந்தபோது, ஃபேர்ஃபேக்ஸ் அதற்கு நிதியுதவி அளித்திருந்தது.
பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திலும் ஃபேர்ஃபேக்ஸ் பங்குகளை வைத்துள்ளது. மேலும், சமர் கெமிக்கல்ஸ் உள்ளிட்ட பல உற்பத்தி நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளது.
இருப்பினும், ஒழுங்குமுறை விதிமுறைகளின் காரணமாக, சிஎஸ்பி வங்கியில் ஏற்கெனவே வைத்திருந்த தனது முதலீட்டைக் குறைத்துக்கொண்டது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































