டெல்லியில் குருத்வாரா பங்களா சாஹிப் உள்ளே போலீஸ் நுழைந்ததாக எழுந்த சர்ச்சை - உண்மை என்ன?

குருத்வாரா பங்களா சாஹிப், ஹர்மீத் சிங் கல்கா, அபிஜித் திப்கே, ஜந்தர் மந்தர், சிஜேபி, டெல்லி காவல்துறை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம், காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு
படக்குறிப்பு, குருத்வாரா பங்களா சாஹிப் மற்றும் ஹர்மீத் சிங் கல்கா
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சனிக்கிழமை (அக்டோபர் 10) டெல்லியில் போராட்டங்கள் நடந்தன. அப்போது, பல போராட்டக்காரர்கள் பங்களா சாஹிப் குருத்வாரா உள்ளே நுழைந்தனர். இதையடுத்து, அவர்களை குருத்வாராவில் இருந்து போலீசார் வெளியேற்றினர்.

இந்தச் சம்பவத்திற்கு குருத்வாரா பங்களா சாஹிப்பின் பொதுச் செயலாளர் ஜக்தீப் சிங் கலோன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "குருத்வாராவுக்குள் அமைதியும் வளமும் நிலவ வேண்டும். குருத்வாரா என்பது போராட்டம் நடத்துவதற்கான இடமல்ல. எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும், இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை. போராட்டம் நடத்த விரும்பினால், வெளியே நடத்துங்கள். குருத்வாராவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கிறோம்" என்றார்.

இதற்கிடையே, குருத்வாரா பங்களா சாஹிப் வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தது மற்றும் அவர்களை வெளியேற்ற காவல்துறை மேற்கொண்ட முயற்சி குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவின் தலைவர் ஹர்மீத் சிங் கல்கா பதிலளித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அவர், "போராட்டக்காரர்கள் குருத்வாரா சாஹிப் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து முழக்கமிட்டனர். அவர்களைத் தடுக்க ஊழியர்கள் முயன்றனர். இந்நிலையில், அவர்களை வெளியேற்றச் சென்ற காவல்துறையினரைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக சில ஆம் ஆத்மி தலைவர்கள் தவறான தகவலைப் பரப்பப் பார்க்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும், குருத்வாரா வளாகத்திற்குள் யாரும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவின் தலைவர் ஹர்மீத் சிங் கல்கா எச்சரித்தார்.

குருத்வாரா பங்களா சாஹிப், ஹர்மீத் சிங் கல்கா, குருத்வாரா பங்களா சாஹிப்பின் பொதுச் செயலாளர் ஜக்தீப் சிங் கலோன், அபிஜித் திப்கே, ஜந்தர் மந்தர், சிஜேபி, டெல்லி காவல்துறை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம், காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு
படக்குறிப்பு, குருத்வாரா பங்களா சாஹிப்பின் பொதுச் செயலாளர் ஜக்தீப் சிங் கலோன்

சனிக்கிழமை அன்று, பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறை தடுப்புக் காவலில் எடுத்தது. தங்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாகவும், பலரை பேருந்துகளில் ஏற்றி தடுப்புக் காவலில் அடைத்ததாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

வெள்ளிக்கிழமை டெல்லி வந்தவர்களில் பலர் பங்களா சாஹிப் குருத்வாராவில் தங்கியிருந்ததாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அங்கு இருந்தவர்கள் தெரிவித்த தகவலின்படி, சனிக்கிழமை காலை சுமார் 600 போராட்டக்காரர்கள் குருத்வாராவில் இருந்துள்ளனர். அவர்களில் சுமார் 300 பேரை காவல்துறை தடுப்புக் காவலில் எடுத்துள்ளது.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் இப்போதைய கோரிக்கை என்ன?

காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்துக் கேள்வி எழுப்பிய ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஜர்னைல் சிங், டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவையும் (DSGMC) விமர்சித்தார். போலீசார் பூட்ஸ் அணிந்து கொண்டும், கைகளில் தடிகளுடனும் குருத்வாரா வளாகத்திற்குள் நுழைந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

குருத்வாராக்களில் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அதிகாரத்திற்கு அடிபணிந்து செயல்படுவதாகவும், இது சீக்கிய கொள்கைகளுக்கு எதிரானது என்றும் அவர் சாடினார்.

இதற்கிடையே, காவலர்கள் காலணிகளுடன் குருத்வாராவுக்குள் நுழையும் காணொளி தொடர்பாக டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அபிஜித் திப்கே, ஜந்தர் மந்தர், சிஜேபி, டெல்லி காவல்துறை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம், காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு
படக்குறிப்பு, போராட்டத்தை முன்னிட்டு, டெல்லி வீதிகளில் பெருமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர் (கோப்புக் காட்சி)

டெல்லி காவல்துறை விளக்கம்

டெல்லி காவல்துறையின் அதிகாரபூர்வ சமூக ஊடக பக்கத்தில் வெளியான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் சில போலீசார் பொதுப் பாதையில் நடந்து செல்வது தெரிகிறது. குருத்வாரா சாஹிப் உள்ளே நுழைவதற்கு முன்பாக காலணிகளை விடும் இடத்திற்குச் செல்ல இந்தப் பாதையை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.

மரியாதைக்குரிய ஒரு மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தவும், மத நல்லிணக்கத்தைக் குலைக்கவும் தவறான நோக்கத்துடன் இந்த வீடியோ திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டு இருப்பதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

அபிஜித் திப்கே, ஜந்தர் மந்தர், சிஜேபி, டெல்லி காவல்துறை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம், காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு
படக்குறிப்பு, டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் (கோப்புக் காட்சி)

அக்டோபர் 10 அன்று டெல்லியில் என்ன நடந்தது?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியின் ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களான அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஸ் ரங்கா ஆகியோரை டெல்லி விமான நிலையத்தில் விமானத்திற்குள் வைத்தே காவல்துறையினர் தடுப்புக் காவலில் எடுத்தனர்.

நாள் முழுவதும், ஜந்தர் மந்தரை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் எடுத்தது. இந்த நடவடிக்கைகளின்போது, போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சிகளும் வெளியாகின.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, டெல்லி: போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அபிஜித் திப்கே

காக்ரோச் ஜனதா கட்சியின் அடுத்த அறிவிப்பு என்ன?

டெல்லி காவல்துறையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி, இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள், எச்.கே.எஸ். சுர்ஜித் பவனில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்தின.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்படும் வரை, தினமும் ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று சிஜேபியின் தற்காலிக தலைவராகச் செயல்படும் அஜிங்க்யா ஷிண்டே அறிவித்தார்.

அபிஜித் தீப்கே உள்ளிட்டோரிடம் டெல்லி காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் குறித்தும் அவர் விமர்சித்தார். அரசுக்கு எதிராகப் பரந்துபட்ட ஒற்றுமைக்கு எஸ்எஃப்ஐ பொதுச் செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா அழைப்பு விடுத்தார்.

ஜந்தர் மந்தர், சிஜேபி, டெல்லி காவல்துறை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம், காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு
படக்குறிப்பு, ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரில் தினசரி பேரணி நடத்தப்படும் என்று சிஜேபி அறிவித்துள்ளது

ஞாயிற்றுக்கிழமை முதல் மாணவர் இயக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவார்கள் என்றும், போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை எங்கு தடுத்து நிறுத்துகிறார்களோ, அந்த இடமே அவர்களுக்கு ஜந்தர் மந்தராக மாறும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் மேலும் பல மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அபிஜித் திப்கே டெல்லி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அவரது பாட்டி உயிரிழந்த செய்தி வெளியானது. சனிக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், "அபிஜித் திப்கேவின் பாட்டி உயிரிழந்துவிட்டார். ஆனால், இந்தத் துயரச் செய்தியை அவரிடம் தெரிவிக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது" என்று சிஜேபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அபிஜித் திப்கேவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்தது.

அபிஜித் திப்கே, ஜந்தர் மந்தர், சிஜேபி, டெல்லி காவல்துறை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், போராட்டம், காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு
படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆனால், அபிஜித் திப்கேவின் பாட்டி உயிரிழந்த தகவல் அவருக்கு உடனடியாகவும், மிகவும் உணர்வுபூர்வமான முறையிலும் தெரிவிக்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தகவல் வெளியிட்டது.

காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே தடுப்புக் காவலில் இருந்ததால், அவரது பாட்டி மரணம் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை டெல்லி காவல்துறை நிராகரித்துள்ளது. மேலும், இறுதிச் சடங்கு நடைபெறும் நேரம் குறித்தும் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

மனிதாபிமான அடிப்படையில், அபிஜித் திப்கே தனது சொந்த ஊருக்குத் திரும்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்ததாகவும் டெல்லி காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்தது. மேலும், அபிஜித் திப்கே உள்பட விமானத்தில் வைத்தே தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட சிஜேபி தலைவர்கள் மூவரும் இன்று (அக்டோபர் 11) ஓர் ஆண்டுக்கு பொது அமைதியைக் குலைக்கும் செய்திகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

அபிஜித் திப்கேவின் பாட்டி சாவித்ரிபாய் சங்கர் திப்கே தனது 85வது வயதில் அக்டோபர் 10ஆம் தேதி உயிரிழந்தார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான சாந்துக் பிம்ப்ரியில் காலமானார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு