ஐநா மனித உரிமை அமைப்பு கவலை: சிஜேபி போராட்டத்தில் பிபிசி செய்தியாளர்கள் நேரில் கண்டது என்ன?

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
சனிக்கிழமை டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்தின்போது பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழ்நிலையில், இன்று (அக்டோபர் 11) காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், "சனிக்கிழமை டெல்லியில் நடந்த போராட்டங்களுக்கு முன்னரும், அவை நடந்தபோதும், போராட்டக்காரர்கள், போராட்டத் தலைவர்கள், பொது மக்கள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து கவலை கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளதுடன், அமைதியான முறையில் ஒன்றுகூடிப் போராடுவதற்கான உரிமை முழுமையாக மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுவதையும் அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
சனிக்கிழமை என்ன நடந்தது?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனக் கோரி, சிஜேபி மற்றும் பல இடதுசாரி அமைப்புகள் சார்பில் அக்டோபர் 10 அன்று டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றன. நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் மோதல்களும் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகின.
கன்னாட் பிளேஸ் என்ற பகுதியில் சிஜேபி ஆதரவாளர்களுக்கும் சிஜேபி எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எதிர்ப்பாளர்கள் கடுமையான வார்த்தைகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் முழக்கங்களைப் பயன்படுத்தியதாக சிஜேபி போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன் காவல்துறை இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பல சிஜேபி தொண்டர்களை காவல்துறை காவலில் எடுத்தது.
இதற்கிடையில், ஏ.ஐ.எஸ்.எஃப் தேசியத் தலைவர் நேஹா போரா உள்ளிட்ட பலர் சஃப்தர்ஜங் மேம்பாலம் அருகே காவலில் எடுக்கப்பட்டனர். நேஹா உள்ளிட்டோரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இடதுசாரி அமைப்புகள் குற்றம்சாட்டின. காவலில் இருந்தபோதும் போராட்டத்தைத் தொடருமாறு நேஹா போரா தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்ட மூவர் டெல்லி வந்தபோது விமானத்தில் வைத்தே போலீஸ் காவலில் எடுக்கப்பட்டதாகவும், அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது. திப்கேவின் பாட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் வீட்டிற்குச் செல்ல உதவ முன்வந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

சிஜேபி போராட்டக்காரர்கள் பலருடனும் பிபிசி செய்தியாளர் ராகவேந்திர ராவ் பேசினார். அவர்களில் ஒருவர், "ஞானேஷ் குமார் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்" என்று கூறினார்.
மற்றொரு வயதான பெண், "இன்று நடந்ததைப் போன்ற ஒன்றை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் துன்புறுத்தப்படுகிறார்கள். எங்கள் வாழ்க்கையுடன் விளையாடுவோருக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக நாங்கள் ஒடுக்கப்படுகிறோம்" என்றார்.
மற்றொரு பெண் போராட்டக்காரர், "எங்கள் தலைவர்களை அனைவரையும் காவலில் எடுத்தாலும் அதனால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. காக்ரோச் ஜனதா கட்சியின் ஒவ்வோர் உறுப்பினரும் தன்னிச்சையாக ஒரு தலைவர்தான். எங்களுடைய பொறுப்பு என்ன என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்; உறுதியாக நிற்போம்" என்றார்.
இதற்கிடையில், சனிக்கிழமை டெல்லி வந்தபோது விமானத்திலேயே காவலில் எடுக்கப்பட்ட சிஜேபி-யின் மூன்று தலைவர்களான அபிஜித் திப்கே, ஆஷுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து சிஜேபி கவலை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா ஆகியோர் சனிக்கிழமை ல்லி வந்தபோது விமானத்திலேயே காவலில் எடுக்கப்பட்டனர். போராட்டம் தொடங்குவதற்கு முன்பே திப்கே காவலில் எடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, கோபால் ராய், யூடியூபர் துருவ் ராத்தி உள்ளிட்டோரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஜந்தர் மந்தரில் நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க 25,000 காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக பிடிஐ தெரிவித்தது. 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதுடன், ஜந்தர் மந்தரைச் சுற்றிய பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. தில்லி நோக்கி வந்த 245 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
சிஜேபி, இடதுசாரி மாணவர் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. எஸ்.ஐ.ஆர் நடைமுறையால் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக அவை குற்றம்சாட்டுகின்றன.

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
ஞாயிற்றுக் கிழமை உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை
டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு மீறப்பட்டதாகக் கூறி, உள்துறைச் செயலாளர், டெல்லி காவல் ஆணையர் மற்றும் டிஎம்ஆர்சி தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அமர்வில் விசாரிக்கவுள்ளது.
பாதுகாப்புக்காக 120க்கும் மேற்பட்ட காவல் மற்றும் துணை ராணுவப் பிரிவுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, புது டெல்லி 20 கண்காணிப்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அக்டோபர் 10 போராட்டத்திற்கான அனுமதி விண்ணப்பம் மூன்று நாட்களுக்கு முன்பே அளிக்கப்பட்டதாகவும், விதிப்படி 10 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
அக்டோபர் 10 அன்று டெல்லியில் என்ன நடந்தது? காவல்துறையின் நடவடிக்கையையும் மீறி போராட்டக்காரர்கள் எங்கே சென்றார்கள்? மேலும், இந்தப் போராட்டங்கள் பொதுமக்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தின? என்பதை செய்தி அளிக்க, காலை முதல் மாலை வரை, பிபிசி செய்தியாளர்கள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் செய்தி சேகரித்தனர்.
பிபிசி செய்தியாளர் விஷ்ணுகாந்த் திவாரி, நேற்று காலை கன்னாட் பிளேஸ் பகுதிக்குச் சென்றார். அன்று முழுவதும் இந்திரபுரி, ரீகல் சினிமா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து செய்திகளைச் சேகரித்தார்.
காலை 10:30 மணிக்கு, அபிஜீத், சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் விமானத்தில் இருந்தே கைது செய்யப்பட்டபோது, பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா விமான நிலையத்தில் இருந்தார். அவரது கூற்றுப்படி, "அக்டோபர் 10 அன்று தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் காவலில் எடுக்கப்பட்டனர். பல பத்திரிகையாளர்களும் உள்ளடக்க உருவாக்குநர்களும் தடுத்து வைக்கப்பட்டனர்."

பட மூலாதாரம், Shammi MEHRA / AFP via Getty Images
பிபிசி செய்தியாளர் ராகவேந்திர ராவ், அதிகாலை முதல் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாகவும், காவல்துறை அவ்வப்போது போராட்டக்காரர்களைத் தனித்தனியாகக் கைது செய்து வந்ததாகவும் தெரிவித்தார்.
"பிற்பகலில், ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.ஐ.ஆர் செயல்முறை குறித்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்த சுவரொட்டியை ஏந்திபடி ஜந்தர் மந்தருக்கு வந்த புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ் அங்கே தர்ணாவில் அமர விரும்பினார். ஆனால், காவல்துறை அவர்களை அங்கே உட்கார அனுமதிக்கவில்லை. ஏழு-எட்டு போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று ஒரு பேருந்தில் அமர வைத்தனர். அப்போது அவருடன் இருந்த சில பெண் ஆர்வலர்களும் போராட்டக்காரர்களும் அங்கிருந்து அகற்றப்பட்டனர்."
சிஜேபி-யின் உயர்மட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, போராட்டக்காரர்கள் இப்போது அங்கு சென்றடைய மாட்டார்களோ என்ற அச்சங்களுக்கு மத்தியில் மாலை 5:30 மணியளவில்கூட, கன்னாட் பிளேஸை சுற்றி போராட்டக்காரர்கள் இருந்தனர்.
ராகவேந்திர ராவின் கூற்றுப்படி, "மக்கள் சிறிது நேரம் வந்து, போராட்டம் நடத்துவார்கள். பின்னர், தங்களைக் கைது செய்ய காவல்துறை வருவதை உணர்ந்தவுடன், அங்கிருந்து தப்பி ஓடிவிடுவார்கள்."

பட மூலாதாரம், Arvind Yadav/Hindustan Times via Getty Images
நேற்று காலை சுமார் பத்து மணியளவில் புது டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்ற பிபிசி செய்தியாளர் சித்தநாத் கானு, ரயில் நிலையத்தில் தடுப்புகள் இருப்பதால் தங்களால் செல்ல முடியாது என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கூறியதாக தெரிவித்தார். அதே நேரம், வாடகைக் கார் ஓட்டுநர்கள் மிகக் குறுகிய தூரங்களுக்குக் கூட அதிகப் பணம் கேட்டு வந்தனர். மொபைல் இணையத் தடை காரணமாக, செயலி மூலம் வாடகைக் காரை முன்பதிவு செய்ய முடியவில்லை.
புது தில்லி மற்றும் நிஜாமுதீன் நிலையங்களை இணைக்கும் இருநூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக காலை நேர ஊடக அறிக்கைகள் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டார். ஆனால், மற்ற பல ரயில்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Arvind Yadav/Hindustan Times via Getty Images
பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித், சக பத்திரிகையாளர் தீபக் ஜஸ்ரோதியாவுடன் இணைந்து, நொய்டாவிலிருந்து ஜந்தர் மந்தருக்குச் சென்ற பயணத்தின்போது மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளைக் கண்டார்.
போராட்டக்காரர்களிடம் காவல்துறை நடந்துகொண்ட விதம் குறித்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளன, ஆனால் இந்த முழு சம்பவத்தின் பின்னணியிலும் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய மற்றொரு கதை இருக்கிறது என்று ஜுகல் கூறுகிறார்.
பயணத்தின் போது, முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்ததையும், ஆனால் அவர்கள் வீடு திரும்புவதற்கு எந்த வழியும் இல்லாமல் இருந்ததையும் அவர் கண்டார்.
ஆட்டோக்களோ பேருந்துகளோ கிடைக்கவில்லை.ஜுகல் பேருந்து நிறுத்தத்தில் சில மூத்த குடிமக்களைச் சந்தித்தார்.
ஒன்றரை மணி நேரமாகப் பேருந்திற்காகக் காத்திருப்பதாகவும், ஆனால் பேருந்து வரவில்லை என்றும் அவர் கூறினார். தாங்கள் மேலும் சுமார் பத்து முதல் பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்குமோ என்று அந்த மக்கள் அஞ்சினர்.
ஜுகலின் கூற்றுப்படி, சில கடைக்காரர்கள் தங்கள் கடைகளைத் திறந்து வைத்திருந்தனர், வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்தாலும், வேறொரு பிரச்சனை எழுந்தது. வாடிக்கையாளர்களிடம் ரொக்கம் இல்லை. பலருக்கு ரொக்கம் வைத்திருக்கும் பழக்கம் இல்லாமல் போனது. ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டதால், யுபிஐ மூலம் பணம் செலுத்த இயலவில்லை.
இதைத் தவிர, முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத வேறு பல பிரச்னைகளையும் சாமானிய மக்கள் சந்தித்திருக்கக்கூடும் என்று ஜுகல் கூறுகிறார்.
போராட்டங்களால் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சமாளிக்க அரசாங்கத்திடம் என்ன உத்தியும் தீர்வும் உள்ளது என ஜுகல் கேள்வி எழுப்புகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























