ஹோர்மூஸ் நீரிணை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்?

    • எழுதியவர், பால் ஆடம்ஸ்
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க இரான் முன்வந்திருப்பது, கடந்த ஒரு மாதமாக உலகப் பொருளாதாரத்தின் மீது சுமத்தப்பட்ட சில அழுத்தங்கள் இனி குறையத் தொடங்கும் என்பதைக் காட்டுகிறது.

எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரங்களுக்குத் தேவையான ரசாயனங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட தடை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இயல்பான போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கும் மேலாகும்.

ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒரு நெறிமுறை மற்றும் நிபந்தனைகளை உருவாக்க விரும்புவதாக இரான் கூறுகிறது.

இரான் ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்புடனும், "வரம்புகளை முறையாகக் கருத்தில் கொண்டும்" அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும் என்று இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த நிலைமைக்கு இது உடனடியாகத் திரும்புவதற்கான வழியாகத் தெரியவில்லை.

ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் நகருவதாக தகவல்

இரான் இந்த கடல் பாதையை தடுத்து நிறுத்தியிருந்த நிலையில், ஹோர்மூஸ் நீரிணையில் "கப்பல் நடமாட்டத்தின் ஆரம்ப அறிகுறிகள்" தென்படுவதாகக் கப்பல் கண்காணிப்பு நிறுவனமான மெரைன் டிராஃபிக் இன்று காலை தெரிவித்துள்ளது.

கிரேக்கத்திற்குச் சொந்தமான ஒன்று மற்றும் லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட மற்றொன்று என இரண்டு கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்ததாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

பிபிசி இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

சமீபத்திய வாரங்களில் இந்த நீரிணை வழியாகச் செல்வது ஒரு பிரச்னைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.

இந்தப் பாதைக்கான நீண்ட காலத் திட்டம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், நேற்றிரவு அறிவிக்கப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தத்தின் கீழ் இரான் அதனை மீண்டும் திறக்கவேண்டும்.

பாகிஸ்தான், இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் உள்ளிட்ட சில நாடுகள், தங்கள் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை தொடர்ந்து பயன்படுத்துவதற்காக ஏற்கனவே இரான் அரசுடன் பேசி ஒர் உடன்பாட்டுக்கு வந்தன.

மற்ற சில கப்பல்கள் நீரிணைக்கு அருகிலுள்ள இடங்களிலும், வளைகுடாவின் பிற பகுதிகளிலும் தாக்கப்பட்டன.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு