முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு - யாருக்கு எந்த துறை?

பட மூலாதாரம், CMO Tamilnadu
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், த.வெ.க. சார்பில் அமைச்சராக பதவியேற்றவர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் ஜோசப் விஜயின் பரிந்துரையை ஏற்று, 'மே மாதம் 10-ஆம் தேதி பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்களுக்குரிய துறைகள் மற்றும் பொறுப்பு ஒதுக்கீடுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்' என அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் வசம் காவல்துறை உள்ளிட்ட துறைகள் உள்ளன, நிதியமைச்சர் பதவி செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் இலாகா விவரம்
முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல்.
முந்தைய முதலமைச்சர்களைப் போன்றே காவல் , உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம் உள்ளிட்ட துறைகள் முதலமைச்சர் வசம் உள்ளன.
என் ஆனந்த், ஊரக வளர்ச்சித்துறை
அமைச்சர் என் ஆனந்திடம் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன் சுமை மற்றும் நீர்ப்பாசனம், நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்டவை உள்ளன.
ஆதவ் அர்ஜுனா, பொதுப்பணித்துறை
பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டு மேம்பாடு ஆகிய துறைகள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கப்பட்டுள்ளன.
கேஜி அருண்ராஜ், மருத்துவத்துறை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜிடம் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
செங்கோட்டையன், நிதியமைச்சர்
அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை, ஓய்வூதியம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர் வெங்கட்ரமணன்
அமைச்சர் வெங்கட்ரமணனிடம் உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆர்.நிர்மல் குமார்
மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டமன்றம், ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் ஆகிய துறைகள் அமைச்சர் நிர்மல்குமாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகனிடம் பள்ளிக் கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் அச்சுத்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம் உள்ளிட்ட துறைகள் வழங்கப்படுகின்றன.
டி.கே.பிரபு
அமைச்சர் பிரபுவிடம் கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனாவிடம் தொழில்துறை மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இலாகாக்கள் மாற வாய்ப்புள்ளதா?
"அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு ஒதுக்கப்பட்ட இலாகாக்களில் மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது " என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.
பிபிசி தமிழிடம் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அவர், " புதிய அமைச்சரவையிலும் வழக்கம் போல முக்கியமான துறைகளை முதலமைச்சர் வசம் வைத்துள்ளார், ஆனால் நகராட்சி நிர்வாகம், சிறப்புத்திட்ட செயலாக்கம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் கையாள்வது கடினம்" என்கிறார் அவர்.
இந்த துறைகளுக்கு தனியாக அமைச்சர்கள் நியமனம் செய்யவேண்டிய கட்டாயம் இருப்பதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன் கூட்டணிகளுக்கு அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட்டால் பிறகு இதில் மாற்றம் வரலாம் என்றார். அதேநேரத்தில் முக்கியமான துறைகளை தவெகவின் 10 அமைச்சர்களுக்குள் வைத்திருக்கவே இந்த அரசு முயலும் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும் பேசிய அவர், "அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் புதியவர்களாக இருந்தாலும் அந்த துறையின் செயலாளர்கள் மூலம் அவர்கள் சார்ந்த துறையை அவர்களால் கையாள முடியும், இதில் கொள்கை ரீதியிலான முடிவுகள் எடுக்கப்படும் போது மட்டும் அமைச்சர்களின் பங்கு அவசியமாகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































