மாலத்தீவில் 164 அடி ஆழமுள்ள கடல் குகையை ஆராய சென்ற 5 பேருக்கு என்ன நேர்ந்தது?

மாலத்தீவு, ஸ்கூபா டைவிங், இத்தாலி
படக்குறிப்பு, உயிரிழந்த ஐவரில் ஜியோர்ஜியா சோம்மாகல் (இடது), அவரது தாய் மோனிகா மான்டெஃபால்கோன் (மத்தியில் இருப்பவர்) மற்றும் நீச்சல் பயிற்சியாளர் ஜியான்லூகா பெனடெட்டி ஆகிய மூவரும் அடங்குவர்
    • எழுதியவர், யரோஸ்லாவ் லுகிவ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மாலத்தீவில் நிகழ்ந்த ஸ்கூபா டைவிங் விபத்தில் ஐந்து இத்தாலியர்கள் உயிரிழந்துள்ளதாக ரோமில் உள்ள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"சுமார் 50 மீட்டர் (164 அடி) ஆழத்தில் உள்ள குகைகளை ஆராய முயன்றபோது இந்த டைவர்கள் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது" என்று தெரிவித்துள்ள அமைச்சகம், இந்தச் சம்பவம் மாலத்தீவின் வாவ் அட்டோல் பகுதியில் நடந்ததாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் நான்கு பேர் ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சூழலியல் பேராசிரியை மோனிகா மான்டெஃபால்கோன், அவரது மகள் மற்றும் இரண்டு ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர்.

கடலுக்கடியில் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு குகையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், மற்ற நான்கு டைவர்களும் அங்கேயே இருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும் மாலத்தீவு ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிக்குச் சிறப்பு உபகரணங்களுடன் கூடிய டைவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ராணுவம், இந்தத் தேடுதல் நடவடிக்கையை மிகவும் அதிக ஆபத்து நிறைந்தது என விவரித்துள்ளது.

மாலத்தீவு, ஸ்கூபா டைவிங், இத்தாலி
படக்குறிப்பு, முரியல் ஒட்டெனினோ (இடது) மற்றும் ஃபெடரிகோ குவால்டியரி ஆகியோரும் ஜெனோவா பல்கலைக்கழகக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்

பவளத் தீவுகளுக்காகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான இந்தச் சிறிய இந்தியப் பெருங்கடல் நாட்டில், இதுவரை நடந்த டைவிங் விபத்துகளிலேயே இது மிகவும் மோசமான விபத்தாகக் கருதப்படுகிறது.

அந்த ஐந்து இத்தாலியர்களும் வியாழக்கிழமை காலை கடலுக்குள் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் பயணித்த படகின் குழுவினர், அவர்கள் நீண்ட நேரமாகியும் மீண்டும் நீருக்கு மேலே வராததைக் கண்டு, அவர்கள் காணாமல் போனதாகத் தகவல் அளித்தனர்.

தலைநகர் மாலேயிலிருந்து தெற்கே சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள அந்தப் பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததாகப் காவல்துறை தெரிவித்துள்ளது. அங்கு பயணிகள் படகுகள் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

மோனிகா மான்டெஃபால்கோன், அவரது மகளும் மாணவியுமான ஜார்ஜியா சொம்மாக்கல், ஆராய்ச்சி மாணவர் முரியல் ஒடெலினோ மற்றும் கடல்சார் உயிரியல் பட்டதாரி ஃபெடெரிகோ குவால்தேரி ஆகியோர் உயிரிழந்ததாக ஜெனோவா பல்கலைக்கழகம் கூறியது.

ஐந்தாவது நபர் படகு செயல்பாட்டு மேலாளரும், டைவிங் பயிற்சியாளருமான ஜியான்லூகா பெனெடெட்டி என அறியப்படுகிறது.

மாலத்தீவு, ஸ்கூபா டைவிங், இத்தாலி

ஜெனோவா பல்கலைக்கழகம் தனது எக்ஸ் பக்கத்தில், உயிரிழந்தவர்களுக்கு "ஆழ்ந்த இரங்கலை" தெரிவித்துள்ளது.

மாலத்தீவில் கடந்த சில ஆண்டுகளில் ஒருசில உயிரிழப்புகள் பதிவாகியிருந்தாலும், டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் விபத்துகள் ஒப்பீட்டளவில் மிகவும் அரிதானவை.

கடந்த டிசம்பர் மாதம் அனுபவம் வாய்ந்த பிரிட்டன் பெண் டைவர், ஸ்கூபா விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது கணவர் ஐந்து நாட்களுக்குப் பிறகு உடல்நலக்குறைவால் காலமானார்.

2024 ஆம் ஆண்டில், லாவியானி அட்டோல் பகுதியில் ஸ்நோர்கெலிங் செய்துக் கொண்டிருந்தபோது ஜப்பானிய மக்கள் பிரதிநிதி ஒருவர் உயிரிழந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு