முதலாம் உலகப் போர்: மறக்கப்பட்ட பஞ்சாபி வீரர்கள் அங்கீகாரம் பெற உதவிய பாகிஸ்தான் ஆவணங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலீம் மக்பூல்
- பதவி, சமய விவகார ஆசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பிரிவினைக்கு முந்தைய இந்தியாவைச் சேர்ந்த, முதலாம் உலகப் போரில் பணியாற்றி உயிரிழந்த ஆயிரக்கணக்கான மறக்கப்பட்ட வீரர்களுக்கு, 80 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய உயிரிழப்பு பதிவுப் புதுப்பிப்பின் மூலம் இறுதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய 9,909 வீரர்களின் பெயர்கள், ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையத்தின் உயிரிழந்தோர் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.
முதலாம் உலகப் போர் முடிந்த சிறிது காலத்திலேயே பஞ்சாப் மாநிலத்தில் தொகுக்கப்பட்ட தனித்துவமான பதிவேடுகளில், இந்த வீரர்களின் பெயர்களைத் தேடி பிரிட்டனை சேர்ந்த தன்னார்வலர்கள் பல ஆண்டுகள் செலவிட்டனர்.
தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த வீரர்களின் தியாகத்தைத் தொடர்ந்து, அவர்களது பிரிட்டிஷ் வம்சாவளியினரைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

"வட்டம் பூர்த்தியாகிவிட்டது. நான் இப்போது முழுமையானவனாக உணர்கிறேன்," என்கிறார் லெய்செஸ்டரைச் சேர்ந்த பல் மருத்துவர் சன்னி பலஹே.
தன்னுடைய கொள்ளுத் தாத்தா போருக்குச் சென்றுவிட்டுத் திரும்பவில்லை என்று கேள்விப்பட்டிருந்த அவர், அவரைப் பற்றிய தகவல்களைத் தேடி பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார்.
இந்நிலையில், புதிதாக ஆய்வு செய்யப்பட்ட பதிவேடுகளில் அவருடைய கொள்ளுத் தாத்தா கேசர் சிங்கின் பெயர் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அது இப்போது அதிகாரப்பூர்வமான பட்டியலில் முறைப்படி சேர்க்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அவரைத் தொடர்புகொண்டு தெரிவித்தனர்.
"இதுவரை அங்கீகரிக்கப்படாத ஒன்று, இப்போது ஓர் அதிகாரப்பூர்வ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையத்தின் ஆவணங்களில் அவர் இப்போது இடம்பெற்றுள்ளார். அவர் செய்த அனைத்துத் தியாகங்களும் வீண் போகவில்லை என்று தோன்றுகிறது."
இந்த அங்கீகாரம், முதலாம் உலகப் போரில் பணியாற்றியவர்களுடன் தொடர்புடைய உலகளாவிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் தனக்குப் பெருமையளிப்பதாக அவர் கூறுகிறார்.

முதலாம் உலகப் போரின்போது, இன்றைய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த சுமார் 1.4 மில்லியன் மக்கள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றியதாக அறியப்படுகிறது.
போர் முடிந்த ஆண்டுகளில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மட்டும் போரில் பங்கேற்ற 3 லட்சத்து 20 ஆயிரம் ராணுவ வீரர்களின் பெயர்களையும், அவர்களின் நிலையையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் அந்த மாநிலத்தின் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமத்திற்குச் சென்றனர்.
1947-ஆம் ஆண்டில் இந்தியா பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் இடையே பிரிந்தது.
கையால் எழுதப்பட்ட பதிவுகள் நிரம்பிய, தோல் அட்டையால் கட்டப்பட்ட பழமையான பதிவேடுகள் பல தற்போது பாகிஸ்தானின் லாகூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் அவை சேதமடைந்தும் உள்ளன. ஒவ்வொரு பதிவேட்டின் அட்டையிலும் அதற்குரிய கிராமத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது
யுகே பஞ்சாப் ஹெரிடேஜ் அசோசியேஷன் உறுப்பினர்கள், இந்த ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி ஆய்வு செய்யும் திட்டத்தைத் தொடங்கினர். இந்தச் செயல்முறை பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
"ஒரு பஞ்சாபியாக, சமூகத்திற்காக என்னால் இந்த பங்களிப்பைச் செய்ய முடிந்ததில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்," என்கிறார் கிரீன்விச் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி மாணவி ஜாஸ்மின் பஸ்ரா. அவர் இந்தச் சிரமமான ஆய்வில் பங்கேற்றவர்.
இந்த ஆய்வின் போது, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திற்காக முதலாம் உலகப் போரில் போராடிய தனது சொந்த உறவினர்கள் இருவரின் பெயர்களை - அதாவது தனது கொள்ளுத் தாத்தா மற்றும் அவரது சகோதரரின் பெயர்களை எதிர்பாராதவிதமாக அவர் கண்டறிந்தார்.
"அந்தத் தொடர்பு உணர்வுபூர்வமானதாக இருந்தது. பிரிட்டனில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை பஞ்சாபி என்ற வகையில், பஞ்சாபுடனும் ஒர் இடைவெளி இருப்பது போலவும், அதே நேரத்தில் பிரிட்டிஷ் வரலாற்றுடனும் முழுமையாக இணைந்திராதது போலவும் உணர்கிறேன். ஆனால், இவை அனைத்தையும் இணைக்கும் ஒரு கண்கூடான தொடர்பாக இதை நான் பார்க்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

தன்னார்வலர்கள் மேற்கொண்ட இந்த பணிக்கு காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையம் நன்றியுடன் வரவேற்பு தெரிவித்தது, அதன் அடிப்படையில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தனது ஆவணங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய திருத்தத்தை இப்போது வெளியிட்டுள்ளது.
ஆணையத்தின் வரலாற்றாய்வாளர்கள் கூறுவதன்படி, நினைவுகூரல் பதிவுகளில் இதுவரை இடம்பெறாமல் விடுபட்டிருந்த 9,909 வீரர்களில் பெரும்பாலானோர் போர்க்களத்திற்கு வெளியே காயங்களால் உயிரிழந்தவர்கள் ஆவர்.
அக்காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் எடுத்த முடிவுகளால் அவர்களுக்குப் போர் வீரர்களுக்கான கல்லறை அந்தஸ்து வழங்கப்படவில்லை, ஆனால் அந்த முடிவு இப்போது மாற்றப்பட்டுள்ளது.
புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீரர்களில், சுமார் 25 சதவீதம் பேர் சீக்கியர்கள், மற்றொரு 25 சதவீதம் பேர் இந்துக்கள், மற்றும் சுமார் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர்.
போரில் உயிர்நீத்தவர்களின் பெயர்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்லாமல், முதலாம் உலகப் போர் குறித்து நிலவி வந்த ஐரோப்பா மையக் கண்ணோட்டத்தைச் சரிசெய்யும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகவும் இந்தப் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன என்று காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையம் கூறுகிறது.
முதலாம் உலகப் போரை நினைவுகூரும் முயற்சிகள், அந்தப் போரின் முழுமையான உலகளாவிய உண்மையை பிரதிபலிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
































