'சிங்கத்தை தடவிக்கொடுத்தேன்; என் கையை விட்டுவிட்டது': உயிர் தப்பியவரின் திகில் அனுபவம்

குஜராத், சிங்கத்தின் பிடியில் இருந்து உயிர் தப்பிய நபர்

பட மூலாதாரம், UGC

    • எழுதியவர், கோபால் கடேஷியா, அல்பேஷ் தாபி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தின் பாலிதானா தாலுகாவில் உள்ள கராஜியா கிராமத்தில், ஜூலை 6 அதிகாலையில் கலுபாய் பர்மர் என்ற கால்நடை மேய்க்கும் நபரை சிங்கம் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.

பலத்த காயமடைந்த அந்த நபர், சிகிச்சைக்காக 60 கி.மீ தூரத்தில் உள்ள பாவ்நகர் நகரின் சர் தக்த்சின்ஜி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கிராமத் தலைவர்கள் தெரிவித்தனர்.

பாவ்நகர் மாவட்டத்தில் சிங்கங்கள் மனிதர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

முன்னதாக, ஜூன் 18 அன்று, பாலிதானா தாலுகாவை ஒட்டியுள்ள மஹுவா தாலுகாவின் கதடா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள புதரில் நக்ஜிபாய் குஜாரியா என்ற இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

நக்ஜிபாயும் சிங்கங்களின் தாக்குதலில்தான் இறந்தார் என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கால்நடை மேய்க்கும் நபர் எப்படி சிங்கத்திடம் சிக்கினார்?

திங்கள்கிழமை காலை 8:30 மணியளவில் தான் வீட்டில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலுபாய் ஊடகங்களிடம் குறிப்பிட்டதாக பிபிசி நியூஸ் குஜராத்தியின் அல்பேஷ் தாபி தெரிவித்தார்.

அச்சம்பவம் குறித்து கலுபாய் விவரிக்கையில், "காலை 8:30 மணிக்கு என் பசுவுக்கு உணவளிக்கச் சென்றபோது, அங்கே ஒரு சிங்கம் அமர்ந்திருந்தது. அங்கிருந்து அது என்னைத் தாக்கியது. முதலில் அது என் தோளில் அடித்து என்னைக் கீழே தள்ளியது. பின்னர் என் கையை அதன் வாயில் கவ்விக்கொண்டது. சுமார் அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்தது. பிறகு நான் அதைத் தடவிக் கொடுத்தேன்; அது என் கையை விட்டதும், நான் என் கையை எடுத்துக்கொண்டேன்." என்றார்.

இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்திய ஷேத்ருஞ்சி வனவிலங்குத் துறையின் துணை வனப் பாதுகாவலர் சிராக் அமின் பிபிசியிடம் பேசுகையில், கராஜியா கிராமத்தில் ஒரு இளம் சிங்கம் தாக்கியதில் கால்நடை மேய்க்கும் நபருக்கு உடல் ரீதியான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தனது ஐம்பது வயதுகளில் உள்ள கலுபாய் தொடர்ந்து பேசுகையில், மக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்ததாகவும், ஆனால் சிங்கம் அங்கிருந்து செல்வதற்குள் வனத்துறை குழுவால் கராஜியாவை அடைய முடியவில்லை என்றும் கூறினார்.

தாக்குதலின் போது பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடியோவில், சுற்றியுள்ள மக்கள் சத்தம் போடுவதும், சிங்கத்தின் மீது கற்களை வீசுவதையும் காண முடிகிறது.

சிங்கத்திடம் சிக்கியவர் தப்பியது எப்படி?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிங்கம் தன் மீது பாய்ந்த பிறகு, கிராம மக்களால் கூட தனக்கு பெரிதாக உதவ முடியவில்லை என்று கலுபாய் கூறினார்.

அந்த வீடியோவில் சிங்கம் திடீரென கலுபாயை விட்டுச் செல்வதைக் காணமுடிகிறது. சிங்கம் தன்னை விட்டுவிட்டு தனது பசுக்களை நோக்கிச் சென்றதாக கலுபாய் கூறுகிறார்.

இருப்பினும், கலுபாயின் இரண்டு பசுக்களுக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காமல் சிங்கம் அங்கிருந்து சென்றுவிட்டதாக கிராமத் தலைவர் கரம்ஷிபாய் சௌஹான் பிபிசியிடம் தெரிவித்தார்.

கரம்ஷிபாய் தொடர்ந்து பேசுகையில், "சிங்கம் திடீரென கிராமத்திற்குள் நுழைந்து, கலுபாயின் பக்கத்து வீட்டுக்காரரின் பண்ணைக்குச் சென்று அவரை நோக்கி ஓடியது. ஆனால் அவரது எருமை மாடு அதை எதிர்த்ததால், சிங்கம் அங்கிருந்து ஓடி, இரண்டு பசுக்கள் கட்டப்பட்டிருந்த கலுபாயின் வீட்டை நோக்கிச் சென்றது. ஆனால் பசுக்களுக்குப் பதிலாக, அது கலுபாயைத் தாக்கியது. இறுதியில், கலுபாயை விட்டுவிட்டு, அது அவரது பசுக்களை நோக்கி ஓடியது. இருப்பினும், கடைசியில் பசுக்களுக்கும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அது அங்கிருந்து சென்றுவிட்டது" என்றார்.

கரம்ஷிபாயின் மனைவி ஜிகுபென், கராஜியா கிராமத்தின் தற்போதைய சர்பஞ்ச் (தலைவர்) ஆவார்.

"இந்தத் தாக்குதலில் கலுபாயின் கழுத்து, தோள் மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் முதலில் சிகிச்சைக்காக பாலிதானாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் காயங்கள் பலமாக இருந்ததால், அவரை பாவ்நகருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அங்குள்ள மருத்துவர் கூறினார்" என்றார் கரம்ஷிபாய் .

சிங்கம் தாக்கியது ஏன் ?

வனத்துறையின் செய்திக்குறிப்பிலும் , கலுபாய் தனது விலங்குகளைப் பாதுகாக்கச் சென்றபோதுதான் சிங்கத்தால் தாக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Bipin Tankaria/BBC

படக்குறிப்பு, ஷேத்ருஞ்ஜய் மலை

கராஜியா கிராமம் பாலிதானா நகரில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில், ஷேத்ருஞ்ஜய் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

ஷேத்ருஞ்ஜய் மலை ஒரு காப்புக்காடு என்றும், அங்கு சிங்கங்களும் சிறுத்தைகளும் வாழ்கின்றன என்றும் உள்ளூர் வனத்துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இந்த கிராமம் ஷேத்ருஞ்ஜி வனவிலங்கு பிரிவின் பாலிதானா எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.

சிராக் அமின் பிபிசியிடம் கூறுகையில், "முந்தைய நாள், இந்த சிங்கங்கள் கராஜியாவுக்கு அருகிலுள்ள சோன்பரி கிராமத்தில் ஒருவரைக் கொன்றுள்ளன. பிறகு, இந்த மூன்று சிங்கங்களும் தங்களின் குகைகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. நேரம் செல்லச் செல்ல, மக்களின் நடமாட்டம் அதிகரித்தது.

இந்த சிங்கக் கூட்டத்தில் ஒரு ஆண் சிங்கமும், ஒரு இளம் சிங்கமும் இருந்தன. மக்கள் சத்தம் போட்டபோது அந்த இளம் சிங்கம் வெளிப்படையாகவே பயந்துபோனது. அத்தகைய சூழ்நிலையில், அது ஒரு கால்நடை உரிமையாளரைத் தாக்கியது. இருப்பினும், அந்தச் சிங்கம் கால்நடை உரிமையாளரைக் கொல்ல முயலவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோவில், அது கால்நடை உரிமையாளரைக் காயப்படுத்திய பின்னர் அங்கிருந்து செல்வது தெரிகிறது" என்றார்.

வனத்துறையின் செய்திக்குறிப்பில், கலுபாய் தனது விலங்குகளைப் பாதுகாக்கச் சென்ற போதுதான் சிங்கத்தால் தாக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் சிங்கங்கள் எவ்வளவு காலமாகத் தென்படுகின்றன?

மஹுவாவில் இருந்து மேலும் முன்னோக்கி நகர்ந்து, பாலிதானா தாலுகாவில் உள்ள ஷேத்ருஞ்ஜய் மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிங்கங்கள் குடியேறியுள்ளன.

பட மூலாதாரம், Bipin Tankaria/BBC

படக்குறிப்பு, பாலிதானா நகரின் அடிவாரத்தில் இருந்து சேத்ருஞ்சய் மலைக்கு ஏறுவதற்காகத் தொடங்கும் படிக்கட்டுகளின் ஒரு காட்சி.

1990-களின் முற்பகுதி வரை, சிங்கங்கள் கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டுமே காணப்பட்டன, இது கிர் காடு என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தக் காடு இன்றைய ஜூனாகத், கிர் சோம்நாத் மற்றும் அம்ரேலி மாவட்டங்கள் முழுவதும் பரவியுள்ளது.

சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், 1990-களின் நடுப்பகுதியில், சிங்கங்கள் கிர் காட்டிற்கு வெளியே வரத் தொடங்கின மற்றும் அம்ரேலியில் உள்ள பனியாவில் காணப்படத் தொடங்கின.

அதன்பிறகு, ஷேத்ருஞ்ஜி ஆற்றின் கரையில் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய சிங்கங்கள், அம்ரேலியில் உள்ள லிலியாவிற்குள் நுழைந்தன.

அங்கிருந்து பாவ்நகரின் மஹுவா தாலுகாவிற்குள் நுழைந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே குடியேறியுள்ளன.

மஹுவாவில் இருந்து மேலும் முன்னோக்கி நகர்ந்து, பாலிதானா தாலுகாவில் உள்ள ஷேத்ருஞ்ஜய் மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிங்கங்கள் குடியேறியுள்ளன.

கடந்த மாதம், ஷேத்ருஞ்ஜய் மலையின் படிக்கட்டுகளில் சிங்கங்கள் ஏறுவதும், அவற்றில் ஒரு சிங்கம் யாத்ரீகர் ஒருவரின் பையுடன் ஓடுவதும் காணப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

கிர் வனப்பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ள அதிக மக்கள் தொகை கொண்ட வருவாய் பகுதிகளில், சிங்கங்கள் குடியேறுவதைத் தடுக்கும் நோக்கிலும் சிங்கங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு, மாநில அரசு 2019-ஆம் ஆண்டில் ஷேத்ருஞ்ஜி வனவிலங்குத் துறையை உருவாக்கி, வனத்துறையிலிருந்து ஊழியர்களை ஒதுக்கீடு செய்தது.

இந்தத் துறையின் துணை வனப் பாதுகாவலர் அலுவலகம் பாலிதானா நகரில் உள்ளது.

"கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் கிராமத்தைச் சுற்றித் திரியும் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அவை கால்நடைகளைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால் சிங்கம் மனிதனைத் தாக்கிய முதல் சம்பவம் இதுதான்" என்கிறார் கரம்ஷிபாய் .

துணை வனப் பாதுகாவலர் சிராக் அமின் இதுகுறித்துப் பேசுகையில், கராஜியாவில் காணப்பட்ட மூன்று சிங்கங்களின் இருப்பிடத்தை வனத்துறை ஊழியர்கள் கண்டறிந்துள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

"காயமடைந்த கால்நடை மேய்ப்பர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் எங்கள் ஊழியர்கள் உள்ளனர், அவர்கள் மருத்துவமனையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்" என்றும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு