இந்தியாவுடன் உறவு மேம்பட்டாலும் வங்கதேசம் சீனாவை நாடுவது ஏன்?

வங்கதேசம், சீனா, இந்தியா, இருதரப்பு உறவுகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் சமீபத்தில் பெய்ஜிங் சென்றிருந்தபோது சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
    • பதவி, உலகளாவிய விவகாரங்கள் செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அண்டை நாடான இந்தியாவுடனான உறவுகளை மறுசீரமைக்க முயற்சித்து வரும் வங்கதேசத்தின் புதிய அரசு, அதே வேளையில் தடுமாறும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அதிக அளவிலான சீன முதலீடுகளை நாடியுள்ளது.

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் கடந்த மாதம் மலேசியா மற்றும் சீனாவிற்கு தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார், இது டாக்காவின் வெளியுறவுக் கொள்கையின் திசையைக் காட்டுகிறது.

வங்கதேசத்தின் மூலோபாய முன்னுரிமைகளை மறுசீரமைப்பதற்கான முயற்சியை இந்த நாடுகளின் தேர்வு பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ரஹ்மான் முதலில் மலேசியாவிற்கு பயணம் செய்திருந்தாலும், அவரது சீனப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் தெற்காசியத் தலைவர்கள் பாரம்பரியமாக முதலில் இந்தியாவிற்குத்தான் பயணம் மேற்கொள்வர். பதவியிலிருந்து நீக்கப்பட்ட வங்கதேசத் தலைவர் ஷேக் ஹசீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணி வரும் இந்தியாவுக்கு, ரஹ்மானின் சீனப் பயணம் ஒரு செய்தியாக இருக்கும் என்று இந்தியாவில் சிலர் கருதுகின்றனர்.

பல இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு மத்தியில், தீஸ்தா நதியை நிர்வகிப்பதற்கான உதவிக்காக பெய்ஜிங்கை ரஹ்மான் நாடியதும், மோங்லா துறைமுகத்திற்கு அருகில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தமும் தனி கவனத்தைப் பெற்றுள்ளன.

வங்கதேசத்தில் செல்வாக்கு பெற இரு ஆசியப் பெருநாடுகளும் போட்டியிடுவதால், இவை டெல்லியால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 2024-இல் ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியிறக்கப்பட்ட பிறகு வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான உறவுகள் உறைந்தன. அவர் நாட்டை விட்டு வெளியேறி டெல்லியில் தஞ்சமடைந்தார்.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்ற பின்னரும் தூதரக உறவுகள் சுமூகமாக இல்லை. இந்தியா உயர்மட்டப் பயணங்களைத் தவிர்த்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) அமோக வெற்றி பெற்று அவர் பொறுப்பேற்ற பிறகு, இரு தரப்பும் தங்களது உறவுகளை மறுசீரமைக்க முன்முயற்சிகளை எடுத்துள்ளன.

"இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் ஓரளவுக்குத் தணிந்துள்ளன என்பதில் சந்தேகமில்லை" என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சியாம் சரண் பிபிசியிடம் தெரிவித்தார்.

"எல்லை கடந்த பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. இந்தியா வங்கதேசத்தினருக்கு சுற்றுலா விசாக்களையும் வழங்கி வருகிறது," என்று அவர் கூறினார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான பயணிகள் பேருந்து சேவைகள் 18 மாத இடைவெளிக்குப் பிறகு பகுதியளவில் மீண்டும் தொடங்கியுள்ளன. தற்போது கொல்கத்தா மற்றும் டாக்கா இடையேயும், டாக்கா மற்றும் அகர்தலா இடையேயும் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய கிழக்கில் போர் வெடித்து, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தைப் பாதித்தபோது, குழாய் வழித்தடம் வழியாக வங்கதேசத்திற்கு ஆயிரக்கணக்கான டன் எரிபொருளை இந்தியா அனுப்பியது.

கடந்த மாதம், வங்கதேசத்திற்கான இந்தியாவின் புதிய தூதர் தினேஷ் திரிவேதி பொறுப்பேற்றார். அரிய நடவடிக்கையாக, இந்தியா அவருக்கு கேபினட் அந்தஸ்தை வழங்கியது, இது இருதரப்பு உறவுகளை மறுசீரமைப்பதற்கான இந்தியாவின் நோக்கத்தைக் காட்டுகிறது.

இடைக்கால அரசு அதிகாரத்தில் இருந்தபோது தூதரக பதற்றங்கள் நிலவிய போதிலும், இரு நாடுகளும் வர்த்தகத்தில் பரஸ்பர கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் சுமார் 13 பில்லியன் பவுண்டுகளாக இருந்தது, இது பெரும்பாலும் இந்தியாவிற்கு சாதகமாகவே இருந்தது.

இருப்பினும், வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான உறவு சீராவது எதிர்பார்த்த அளவில் இல்லை, இருதரப்பு உறவில் தொடர்ந்து எரிச்சலூட்டும் விஷயங்கள் நீடிக்கின்றன.

முக்கியமாக ஹசீனாவை ஆதரித்தமைக்காக நிலவும் வலுவான இந்திய எதிர்ப்பு உணர்வும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று தாங்கள் கருதும் மக்களை வங்கதேசத்திற்குள் தள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மேற்கொள்ளும் முயற்சிகளும் வங்கதேசத்தில் சர்ச்சையையும் கோபத்தையும் தூண்டியுள்ளன.

எந்தவொரு நாடு திருப்பி அனுப்பும் செயல்முறையையும் பின்பற்றாமல், சமீபத்திய ஆண்டுகளில் முக்கியமாக வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை இந்தியா தங்கள் நாட்டின் உள்ளே தள்ளியுள்ளதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வங்கதேசம், சீனா, இந்தியா, இருதரப்பு உறவுகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, சமீபத்திய ஆண்டுகளில் வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை இந்தியா உள்ளே தள்ளியுள்ளதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத் தேர்தலின் போது இந்து தேசியவாத அரசியல்வாதிகள் வங்கதேசத்திற்கு எதிராகப் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் டாக்காவுக்கு முரணான சமிக்ஞைகளை அனுப்புவதாக வங்கதேச ஆய்வாளர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

"இவை அனைத்தும் அதிக கவனத்தைப் பெற்று, வங்கதேசத்தில் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின, இது ஒரு வகையில் வங்கதேசத்தின் சிந்தனைச் செயல்பாட்டில் எதிரொலித்தது" என்று முன்னாள் வங்கதேச தூதரக அதிகாரி ஹுமாயூன் கபீர் கூறுகிறார்.

"வங்கதேச அரசு இந்த பிரச்னைகளையோ, நேர்மறையான அறிகுறிகளையோ பார்க்கவில்லை," என்று அவர் மேலும் கூறுகிறார்.

வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மேற்கு வங்கத்தில் மே மாதம் பிராந்திய திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி, அதன் கிட்டத்தட்ட 16 ஆண்டுகால ஆட்சியை இந்து தேசியவாத பாஜக முடிவுக்குக் கொண்டு வந்தது. மேற்கு வங்கமும் வங்கதேசமும் மொழி, கலாசாரம் மற்றும் இன ரீதியான தொடர்புடையவை.

தீஸ்தா நதியை நிர்வகிப்பதில் சீனாவின் எந்தவொரு பங்கும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஒரு முக்கியமான பிரச்னையாகும்.

இந்த நதியை இந்தியாவும் வங்கதேசமும் பகிர்ந்து கொள்கின்றன. நீர் பகிர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அவற்றின் முயற்சிகள் பல ஆண்டுகளாக முடங்கியுள்ளன. ரஹ்மானின் சீன பயணத்தின் போது, நதியை நிர்வகிப்பது குறித்து இரு தரப்பும் இணைந்து ஒரு கூட்டு தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வை நடத்த ஒப்புக்கொண்டதாக வங்கதேசம் தெரிவித்தது.

இந்த நதிக்கு தூர்வாருதல், மணல் அகற்றுதல் மற்றும் விவசாயத்திற்காக அதன் ஓட்டத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் தேவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"நமது எல்லைக்கு அருகில் உள்ள எந்தவொரு திட்டத்திலும் சீனாவின் ஈடுபாடு எப்போதும் கவலைக்குரிய விஷயமாகவே இருக்கும். எனவே, நாங்கள் அதை நிச்சயமாக வரவேற்கவே மாட்டோம்," என்று சரண் கூறுகிறார்.

இந்தியா மற்றும் சீனா இடையே பல தசாப்த கால எல்லைத் தகராறு உள்ளது. 1962-இல் நடந்த ஒரு குறுகிய போர் இந்தியாவிற்கு ஏமாற்றமளிக்கும் வகையில் தோல்வியில் முடிந்தது. சமீபத்திய எல்லை மோதல்கள் இரு தரப்பிலும் உயிர்களைப் பலி வாங்கியுள்ளன.

இந்தத் திட்டத்தில் சீனாவின் எந்தவொரு பங்கும், மூலோபாய ரீதியாக மிக முக்கியமான சிலிகுரி காரிடார் அல்லது "கோழி கழுத்து" (Chicken's Neck) பகுதிக்கு அதை நெருக்கமாகக் கொண்டுவரும். இது இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியை அதன் ஏழு வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் 22 கிமீ (14 மைல்) நீளமுள்ள குறுகிய பகுதியாகும்.

முந்தைய அரசுகளும் தீஸ்தா திட்டத்தில் இணையுமாறு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தன, ஆனால் டெல்லி முடிவெடுக்க மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்டது என்று வங்கதேச அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த அளவிலான ஒரு திட்டத்தை வழங்குவதற்கான நிபுணத்துவமும் நிதி ஆதாரமும் சீனாவிடம் இருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்தியாவின் கவலைகளைப் போக்க பெய்ஜிங் முன்வந்துள்ளது.

"சீனா - வங்கதேச ஒத்துழைப்பு எந்தவொரு மூன்றாவது தரப்பையும் குறிவைக்கவில்லை மற்றும் அது மூன்றாவது தரப்பின் செல்வாக்கிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்" என்று ரஹ்மானின் சமீபத்திய பயணத்தின் போது பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சீனா ஏற்கனவே வங்கதேசத்தின் மிகப்பெரிய ராணுவ தளவாட விநியோகஸ்தராக உள்ளது. வங்கதேசத்தின் ஆயுத இறக்குமதியில் 70%-க்கும் அதிகமான பங்கை சீனா கொண்டுள்ளது. டாக்கா சீனாவுக்கு 6 பில்லியன் டாலருக்கும் (4.5 பில்லியன் பவுண்டுகள்) அதிகமாகக் கடன்பட்டுள்ளது.

ரஹ்மான் பயணத்தின் போது, சீனாவின் யுனான் மாகாணம் வழியேயான சீனா-மியான்மர்-வங்கதேசம் பொருளாதாரப் பாதையை மேம்படுத்தவும் சீனா முன்வந்தது.

தெற்காசியாவை இந்தியா நீண்டகாலமாக தனது செல்வாக்கு மண்டலமாகவே கருதி வருகிறது. ஆனால் வங்கதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் தனது தடத்தை சீனா படிப்படியாக விரிவுபடுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் புதிய அரசுடன் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் முயற்சிகள், பதவியிறக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் தொடர்ந்து இருப்பதன் மூலம் சிக்கலாகியுள்ளன. அவரை ஒப்படைக்குமாறு டாக்கா கோரியுள்ளது.

நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்த மாணவர் தலைமையிலான போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்காக, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஹசீனா வங்கதேசத்தில் இல்லாத நிலையிலேயே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் , ஆனால் கடந்த ஆண்டு ஒரு சிறப்பு தீர்ப்பாயத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

"ஹசீனா டெல்லியில் இருக்கும் வரை, ரஹ்மான் இந்தியாவிற்கு வருவது அரசியல் ரீதியாக சற்றே கடினமாக இருக்கலாம்" என்று சரண் கூறுகிறார்.

ஆனால், பொருளாதார மற்றும் மூலோபாய ரீதியாக வங்கதேசம் புறக்கணிக்க முடியாத அளவுக்கு இந்தியா மிக முக்கியமான ஒரு அண்டை நாடாக இருப்பதால், ரஹ்மான் டெல்லிக்கு வரக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பல இனப் பிரிவினைவாதக் குழுக்கள் செயல்படும் தனது வடகிழக்குப் பகுதியின் பாதுகாப்பிற்கு வங்கதேசத்துடனான நிலையான உறவுகள் இன்றியமையாதவை என்பதை இந்தியாவும் அறியும்.

ரஹ்மானைப் பொறுத்தவரை, இரு பிராந்திய அதிகார மையங்களுடன் வங்கதேசத்தின் உறவுகளைச் சமநிலைப்படுத்துவது ஒரு நுட்பமான இராஜதந்திர செயலாக இருக்கப் போகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு