சிங்கம் 2 கிமீ வரை கேட்கும் அளவுக்கு கர்ஜிப்பது ஏன்? பல வகை கர்ஜனைகள் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கோபால் கடேஷியா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சிங்கங்களைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் அவற்றின் கர்ஜனை தொடர்பான எண்ணங்களும் தவிர்க்க முடியாமல் நம் மனதில் தோன்றும்.
உண்மையில் சிங்கங்கள் ஏன் கர்ஜிக்கின்றன? அவற்றின் கர்ஜனை எவ்வளவு தூரம் வரை கேட்கும்? அந்த கர்ஜனையில் எத்தனை வகைகள் உள்ளன, அவை எவ்வளவு நேரம் கர்ஜிக்கும்?
இவை அனைத்தையும் கண்டறிவதற்காக, குஜராத் வனத்துறை அதிகாரிகளின் குழுவும், பறவைகளின் ஒலிகளைப் பதிவு செய்வதில் புகழ்பெற்ற விரல் ஜோஷி என்ற ஆராய்ச்சியாளரின் குழுவும் இணைந்து 2024-ஆம் ஆண்டில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டன.
அந்த ஆய்வு தொடர்பான ஓர் ஆராய்ச்சி கட்டுரை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
சிங்கங்கள் கர்ஜிக்கும் நேரம் எது?
சிங்கங்களின் கர்ஜனைகளை ஆய்வு செய்வதற்காக, சாசன் வனவிலங்கு பிரிவின் அப்போதைய துணை வனப் பாதுகாவலர் மற்றும் கிர் தேசிய பூங்கா - வனவிலங்கு சரணாலயத்தின் கண்காணிப்பாளரான டாக்டர் மோகன் ராம் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு தயாரானது.
இதற்காக, குஜராத்தில் உள்ள கிர் காடுகளின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் டெடகாடி, தேவலியா மற்றும் அன்கோல்வாடி ஆகிய வனச்சரகங்களில் தானியங்கி ஒலிப்பதிவு கருவிகள் பொருத்தப்பட்டன. மொத்தம் 15 பகுதிகளில் பொருத்தப்பட்ட கருவிகளில் இருந்து 1,259 மணி நேர ஒலிப்பதிவுகள் கிடைத்துள்ளது.
இந்த ஒலிப்பதிவுகளை ஆய்வு செய்ததில், சிங்கங்களின் கர்ஜனைகள் மாலையில் தொடங்கி இரவு முழுவதும் அடிக்கடி ஒலிப்பது ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டது. அதிகபட்ச எண்ணிக்கையிலான கர்ஜனைகள் அதிகாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை பதிவாகியிருந்ததை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

பட மூலாதாரம், Bipin Tankaria/BBC
சிங்கங்களின் கர்ஜனை எவ்வளவு தூரம் வரை கேட்கும்?
சிங்கங்களின் கர்ஜனை எவ்வளவு தூரம் வரை கேட்கும் என்ற கேள்விக்கான விடையைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் இரண்டு சோதனைகளைச் செய்தனர். தேவலியா சவாரி பூங்காவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிங்கங்களுக்கு மிக அருகில், அதாவது சுமார் 100 மீட்டர் தொலைவில் இரண்டு ஒலிப்பதிவு கருவிகளைப் பொருத்தினர். அதன்பிறகு, மற்றொரு ஒலிப்பதிவு கருவியை 2.7 கிலோமீட்டர் தொலைவில் அமைத்தனர்.
அதேபோல், சாசன் அருகிலுள்ள காட்டில் சிங்கங்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வரும் ஒரு பகுதியிலும் ஒரு கருவியைப் பொருத்தினர். மேலும், அந்த நீர்நிலைக்கு அருகில் 1 கி.மீ, 2 கி.மீ மற்றும் 3 கி.மீ தொலைவுகளில் உள்ள மரங்களில் ஒலிப்பதிவுக் கருவிகள் இணைக்கப்பட்டன.
இயற்கையான சூழலில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைக்கப்பட்ட ஒலிப்பதிவுக் கருவியை அடைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதாவது, சிங்கங்களின் கர்ஜனை 2 கிலோமீட்டர் தூரம் வரை கேட்கக்கூடியது என்று அர்த்தம்.
இருப்பினும், சிங்கத்தின் கர்ஜனை எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதைத் துல்லியமாகத் தீர்மானிப்பது, ஒலிப்பதிவுக் கருவியின் மைக்ரோஃபோனின் செயல்திறனைப் பொறுத்தது என்று டாக்டர் மோகன் ராம் பிபிசியிடம் கூறினார்.
"சிங்கத்தின் கர்ஜனை எவ்வளவு தூரம் சென்றடையும் என்பது நேரத்தையும் இடத்தையும் பொறுத்தது. இரவு நேரத்தில் வேறெந்த ஒலியும் இல்லாமல் அமைதியாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் சிங்கம் ஏதேனும் ஒரு குன்றின் அல்லது மலையின் உச்சியில் இருந்து கர்ஜித்தால், அது இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை கேட்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்று இந்திய வனப்பணியின் ஓய்வுபெற்ற அதிகாரி துஷ்யந்த் வஸாவடா பிபிசி குஜராத்தியிடம் கூறினார்.
"இருப்பினும், பகல் நேரத்தில் மனித நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சிங்கத்தின் கர்ஜனையை விட பிற சத்தங்கள் அதிகமாக இருக்கலாம். இதன் விளைவாக, பகல் நேரத்தில் சிங்கத்தின் கர்ஜனை இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை கேட்காமல் போகலாம். ஒரு சிங்கம் சமவெளிப் பகுதியில் இருந்து கர்ஜித்தால், அந்த ஒலி அலைகளைக் காட்டில் உள்ள மரங்களும் பிற தாவரங்களும் தடுத்துவிடும். இதன் விளைவாக, அந்த ஒலி அதிக தூரம் பயணிக்காது" என்றார்.

பட மூலாதாரம், Bipin Tankaria/BBC
சிங்கங்கள் ஏன் கர்ஜிக்கின்றன?
சிங்கம் கூட்டமாக வாழக்கூடிய ஒரு சமூக விலங்காகும். ஒரு ஆண் சிங்கம் தனக்கென ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு, பிற பெரிய ஆண் சிங்கங்கள் அந்தப் பகுதிக்குள் வராமல் தடுப்பதற்கே எப்போதும் முயற்சி செய்கிறது. அதேபோல், அந்த எல்லைக்குள் இருக்கும் பெண் சிங்கங்களுடன் ஜோடி சேர்ந்து தனது வம்சத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் முயல்கிறது.
அதே வேளையில், தனது வம்சத்தைத் தொடர அந்த எல்லைக்குள் இருக்கும் பெண் சிங்கங்களுடன் இணையவும் அது முற்படுகிறது. இத்தகைய எல்லையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிங்கம் 'ஆதிக்கமிக்க ஆண் சிங்கம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த சிங்கங்களுக்கு இடையே எல்லைகளுக்கான சண்டைகள் தொடர்ந்து நடப்பதுண்டு. இந்தச் சண்டையில், வயதாகிக் கொண்டிருக்கும் ஆதிக்க ஆண் சிங்கம் தோற்றுப்போனால், அது தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியைத் தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ பெரும்பாலும் ஒற்றையாகவே கழிக்க வேண்டியிருக்கும். இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் கர்ஜனைகளும், உறுமல்களும் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.
முந்தைய ஆய்வுகளை மேற்கோள் காட்டி, டாக்டர் மோகன் ராம் மற்றும் அவரது குழுவினர் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்: "சிங்கங்களின் நடத்தையில் பல அம்சங்கள் அவற்றின் கர்ஜனைகள் மூலமாகவே வெளிப்படுத்தப்படுகின்றன. அதில் தங்களுடைய எல்லை ஆதிக்கத்தைப் பிரகடனப்படுத்துவது, சமூக ஒருமைப்பாடு, தங்களது கூட்டணியைப் பாதுகாப்பது மற்றும் ஊடுருவல்காரர்களைத் தூரமாக இருக்குமாறு எச்சரிப்பது போன்றவை அடங்கும். ஒலியின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, சிங்கங்கள் தங்களுக்குத் தெரிந்தவற்றையும், தெரியாத புதிய சிங்கங்களையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஒலியை வைத்தே, தங்களுக்கு நன்கு அறிமுகமான சிங்கங்களையும், அறிமுகமில்லாத அந்நிய சிங்கங்களையும் அவற்றால் வேறுபடுத்தி அறிய முடிகிறது. பெரும்பாலும், ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்குக் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற சிங்கங்கள் பரஸ்பர ஒருங்கிணைப்புடன் கர்ஜிப்பதன் மூலம், அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் பிற எதிரி ஆண் சிங்கங்களைத் தூரத்திலேயே வைத்திருக்க முடியும்."

பட மூலாதாரம், Photo by DeAgostini/Getty Images
சிங்கங்கள் அதிகாலையில் அதிகமாக கர்ஜிப்பது ஏன்?
சிங்கங்கள் பெரும்பாலும் இரவு நேரத்தில் நடமாடும் விலங்குகளாகும். பகல் நேரத்தில் அவை பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாதுகாப்பான இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.
சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் சிங்கங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"அதிகாலையில் சிங்கங்கள் பெரும்பாலும் தங்கள் எல்லைகளைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும். அதற்காக அவை அங்கும் இங்கும் உலவிக்கொண்டும், கர்ஜித்துக்கொண்டும் இருக்கும். இந்நேரத்தில் அவை தங்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் அடிக்கடி தொடர்புகொள்கின்றன. இந்த நேரத்தில் வானிலை குளிர்ச்சியாக இருப்பதால் சிங்கங்கள் இன்னும் கூடுதலான சுறுசுறுப்புடன் காணப்படுகின்றன" என்று டாக்டர் மோகன் ராம் பிபிசி-யிடம் தெரிவித்தார்.
கடந்த முப்பது ஆண்டுகளாக கிர் காடுகளில் இயற்கை முகாம்களை நடத்தி வரும் ஜூனாகாத்தைச் சேர்ந்த 'ஸ்கை ஃபாரெஸ்ட் யூத் கிளப்' தலைவர் ரேவத்துபா ராய்ஜாதா பேசுகையில், சிங்கங்கள் பகல் நேரத்தில் கர்ஜிப்பது மிகவும் அரிதான ஒன்று என்று கூறினார்.
"அதிகாலைக்கு முன், ஆண் சிங்கங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீதான தங்கள் ஆதிக்கத்தை மற்ற சிங்கங்களுக்கு உணர்த்தவும், தங்கள் எல்லைக்குள் வராமல் தூரமாக இருக்குமாறும் எச்சரிக்கின்றன. பகல் வெளிச்சம் வருவதற்கு முன் தங்கள் இருப்பிடத்தைத் தங்கள் குடும்பத்தினருக்குத் தெரிவிப்பதற்காகவும் அவை கர்ஜிக்கின்றன. அந்த வகையில் அவை ஒன்றோடொன்று பேசிக்கொள்கின்றன" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், DeAgostini/Getty Images
சிங்கங்களின் கர்ஜனைகள் குறித்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்ன?
இந்த ஆராய்ச்சி சிங்கங்களை பாதுகாக்க பெரிதும் பயன்படும் என்று டாக்டர் மோகன் ராம் கூறியுள்ளார்.
"இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, கிர் சிங்கங்களின் கர்ஜனைகளைத் துல்லியமாகக் கண்டறியக்கூடிய ஒரு கணினி மாதிரியை உருவாக்கியுள்ளோம். இதன் அடிப்படையில், சிங்கங்களை தூரத்திலிருந்தே கண்காணிப்பது சாத்தியமாகும். சிங்கங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கு இது பெரிதும் உதவும். ஒரு சிங்கத்தின் கர்ஜனையை வைத்தே அதன் இருப்பிடம் குறித்த நம்பகமான தகவலைப் பெற முடிந்தால், வனத்துறை ஊழியர்கள் அவற்றை எப்போதும் பின்தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்காது" என்று அவர் கூறினார்.
சிங்கத்தின் கர்ஜனைகளைக் கேட்பதன் மூலம் அவை இருக்கும் பகுதியைப் பற்றிய நம்பகமான தகவல் கிடைக்கும். இந்தத் தகவல், மனிதர்களுக்கும் சிங்கங்களுக்கும் இடையிலான மோதல்கள் ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே கணிக்க உதவுகிறது. அத்தகைய மோதல்களைக் குறைப்பதிலும் இந்த மாதிரி உதவும்" என்று விரல் ஜோஷி பிபிசியிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































