நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? கட்டுப்படுத்துவது எப்படி?
வாயு வெளியேற்றம் என்பது மிகவும் பொதுவான, ஆனால் மிகக் குறைவாகவே விவாதிக்கப்படும் உடல் செயல்பாடுகளில் ஒன்று.
அனைவருமே வாயுவை வெளியேற்றுகிறார்கள். பெரும்பாலான மக்கள் ஒரு நாளில் பல முறை, சில ஆய்வுகளின்படி எட்டு முதல் 25 முறை வரை, வாயு வெளியேற்றுகிறார்கள்.
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் மெட்லைன்ப்ளஸ் அண்ட் ஜான் ஹாப்கின்ஸ் மெடிசினின் கூற்றுப்படி, காற்றை விழுங்குவதன் மூலம், பெருங்குடலில் உள்ள உணவை பாக்டீரியாக்கள் நொதிக்கச் செய்வதன் மூலம் என செரிமானப் பாதையில் வாயு முக்கியமாக இரண்டு வழிகளில் உருவாகிறது.
பெரும்பாலான குடல் வாயு உண்மையில் வாசனையற்றது. இது முதன்மையாக நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் சில நேரங்களில் மீத்தேன் ஆகியவற்றால் ஆனதாக இருக்கும். இவற்றுக்கு மாறாக, குடல் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் மிகச் சிறிய அளவிலான கந்தகம் கொண்ட வாயுக்களில் இருந்துதான் துர்நாற்றம் வருகிறது.
இந்தக் கந்தக வாயுக்களில், ஹைட்ரஜன் சல்ஃபைட் என்பதுதான் மிகவும் மோசமான துர்நாற்றத்திற்குப் பெயர் பெற்றது. அழுகிய முட்டைகளின் வாசனைக்குக் காரணமாக இருப்பதும் இதே சேர்மம்தான்.
முட்டை, இறைச்சி, ப்ரொக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற கந்தகம் நிறைந்த உணவுகள், செரிமானத்தின்போது கந்தக சேர்மங்களை வெளியிடுவதால், அவை துர்நாற்றம் வீசும் வாயுவை உருவாக்கக்கூடும் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மையம் கூறுகிறது. இவற்றுடன் "லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு பால் பொருட்களாலும் வாயு துர்நாற்றத்துடன் வெளியேறுவதில் பங்கு வகிக்கலாம்."
குடல் வாயு ஆய்வில் முன்னோடி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் மைக்கேல் லெவிட், கந்தகம் கொண்ட உணவுகள் ஹைட்ரஜன் சல்பைடு மற்றூம் அது தொடர்பான சேர்மங்களை உருவாக்கும் பாக்டீரியாக்களுக்கு எரிபொருளை வழங்குவதாக இரைப்பைக் குடலியல் ஆய்விதழில் விளக்கியுள்ளார். அதோடு, வாயுவின் அளவைவிட, இந்த வாயுக்களே வெளியேறும் துர்நாற்றத்திற்குக் காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஒருவர் வாசனை ஏதுமின்றி அதிக அளவிலான வாயுவையும், அதேநேரம் மிகக் குறைந்த அளவிலான வாயுவைக்கூட அதிக துர்நாற்றத்துடனும் வெளியேற்றக்கூடும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வேறுபாடு, குடலுக்குள் வாழும் டிரில்லியன்கணக்கான நுண்ணுயிரிகளான குடல் நுண்ணுயிரித் தொகுதியின் அமைப்பைப் பொறுத்தது.
கடந்த 2023 ஜனவரியில், ஜர்னல் ஆஃப் ஃபன்ஷனல் ஃபுட்ஸ் என்ற ஆய்விதழில் வெளியான 'குடல் நுண்ணுயிரிகளால் நிகழும் குடல் வாயு உற்பத்தி - ஓர் ஆய்வுரை' என்ற ஆய்வுக் கட்டுரை, "பாக்டீராய்ட்ஸ், கிளாஸ்ட்ரிடியம், டெசல்ஃபோவிப்ரியோ, மெத்தனோபிரெவிபாக்டர் போன்ற பாக்டீரியாக்கள் குடலுக்குள் வாயுக்களை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன" என்று கூறுகிறது.
வாயுத்தொல்லை அனைத்திற்கும் பாக்டீரியாக்களின் நொதித்தல் செயல்முறை மட்டுமே காரணமாக இருப்பதில்லை. சில நேரங்களில், உணவு உண்ணும்போதோ அல்லது திரவ உணவுகளைப் பருகும்போதோ மக்கள் சிறிதளவு காற்றையும் சேர்த்து விழுங்கக்கூடும்.
அதேவேளையில், மிக வேகமாகச் சாப்பிடுவது, சூயிங்கம் மெல்வது, புகைப்பிடிப்பது, குளிர்பானங்களை அருந்துவது போன்ற பழக்கங்களால்கூட ஒருவர் விழுங்கும் காற்றின் அளவு அதிகரிக்கக்கூடும்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின் மற்றும் தேசிய நீரிழிவு, செரிமான, சிறுநீரக நோய்கள் அமைப்பின் தகவல்படி, இந்த அதிகப்படியான காற்று செரிமானப் பாதை வழியாகப் பயணித்து இறுதியில் வாயுவாக வெளியேற்றப்படலாம்.
மன அழுத்தம் மற்றும் பதற்றமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். பதற்றமான நபர்கள் தாங்கள் அறியாமலே அதிக காற்றை விழுங்கக்கூடும் எனவும், இது வயிறு உப்புசம், வாயுத்தொல்லை அறிகுறிகளை மோசமாக்கலாம் எனவும் க்ளீவ்லேண்ட் கிளினிக் தரவுகள் குறிப்பிடுகின்றன.
குடல் வாயு துர்நாற்றம் உடல் ஆரோக்கியத்தின் குறியீடா?
வாயு வெளியேற்றம் என்பது முற்றிலும் இயல்பான ஓர் உயிரியல் செயல்முறை என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். எப்போதாவது ஏற்படும் துர்நாற்றம் வீசக்கூடிய வாயு, பொதுவாக நோயைவிட உணவுப் பழக்கத்தாலேயே ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், வாயு வெளியேற்றத்தில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்கள், குறிப்பாக வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச் சிக்கல், எடை இழப்பு அல்லது வயிறு உப்புசம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஏற்பட்டால், அது அடிப்படை செரிமானக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை அறிவுறுத்துகிறது.
குடல் எரிச்சல் நோய்க்குறி, லாக்டொஸ் சகிப்புத்தன்மை இல்லாமை, செலியாக் நோய் மற்றும் சில இரைப்பைக் குடல் தொற்றுகள் போன்ற நிலைகள், வாயு உற்பத்தியை அல்லது குடல் வாயு மீதான உணர்திறனை அதிகரிக்கக்கூடும் என்று தேசிய நீரிழிவு, செரிமான, சிறுநீரக நோய்கள் அமைப்பு விவரிக்கிறது.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாமை என்பது பொதுவானது. பால் பொருட்களில் காணப்படும் சர்க்கரையான லாக்டோஸ் சரியாகச் செரிக்கப்படாதபோது, பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் அதை நொதிக்கச் செய்து, வாயு, வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன.
இவைபோக, மலத்தில் ரத்தம், தொடர்ச்சியான வயிற்று வலி, திடீரென காரணமின்றி ஏற்படும் எடை இழப்பு, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் சேர்த்து, அதிகப்படியான வாயு வெளியேற்றம் இருந்தால் மருத்துவ உதவியை நாடும்படி தேசிய சுகாதார சேவை மையம் அறிவுறுத்துகிறது.
அதை குறைக்க வழிகள் உள்ளனவா? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



