கொரோனா: தமிழ்நாட்டில் ஜனவரி 6 முதல் இரவு நேர ஊரடங்கு: அரசின் புதிய கட்டுப்பாடுகள் - முழு விவரம்

கொரோனா
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அவை குறித்து விரிவாக இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1)மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

இரவு நேர ஊரடங்கின்போது எந்த சேவைகளுக்கு அனுமதி?

• மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள்

• மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள் (பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிருவாகம் உறுதி செய்ய வேண்டும்.)

• அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

• பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

கொரோனா

• உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

எந்த சேவைகளுக்கு அனுமதி இல்லை?

• பொதுப் போக்குவரத்து, மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

• 9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

• 9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.

இதர கட்டுப்பாடுகள்

1) மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

2) அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

3) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

4) அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

5) பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

கொரோனா

6) பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

7) பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

8) மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

9) அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

10) அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Parks / Amusement Parks) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

11) அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும்.

12) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

13) சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

14) மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

15) தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களிலிருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

16) கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.

17) அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

18) ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ளவேண்டும்.

ஊரடங்கு கட்டுப்பாட்டிற்குட்பட்டு அனுமதிக்கப்படும் சேவைகள்:

கொரோனா

1) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

2) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

3) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

4) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

5) கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

6) உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

7) அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

8) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

9) உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பயிற்சியும், 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

10) அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

11) அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

பொது அறிவுரைகள்:-

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer with Dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (Thermal Screening).

கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஒதவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதியை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

• நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

• கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

• நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

• நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமாக நோய்த் தொற்றுப் பரவலை வீடு வீடாகக் கண்காணிக்க குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்.

• கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.

அரசுத்துறைகளுக்கு முதல்வர் பிறப்பித்த உத்தரவு

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

தற்போது கொரோனா நோய் வேகமாக பரவி வருவதால், பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் / கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசியினை கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம்?

கொரோனா

தமிழ்நாட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவின்படி ஜனவரி 3 முதல் ஜனவரி 10ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய உள்துறை அமைச்சகம் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும், அவசியம் ஏற்பட்டால் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

உலக அளவில், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், புது டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கிய நிலையில், மேற்கு வங்கம், புது டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று வெகுவாகக் குறைந்து கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதியன்று கொரோனா பாதிப்பு 605 ஆக இருந்தது. பொது இடங்களில் கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காததால் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து ஜனவரி 3ஆம் தேதி நிலவரப்படி 1,728 ஆக உள்ளது.

இந்த நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தத் தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

காணொளிக் குறிப்பு, கொரோனா பொதுமுடக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள் என்னென்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: