You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் இரான்-அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை; முதல் சுற்று முடிவடைந்தது
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், இரான் மற்றும் அமெரிக்க தூதுக்குழுக்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை மாலை தொடங்கின.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையேயான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முடிவடைந்துள்ளதாக இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி உருது செய்தியாளர் ரூஹான் அகமது தெரிவித்துள்ளார்.
இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தானிய மத்தியஸ்தர்களும் உடனிருந்ததாக இரண்டு அரசு அதிகாரிகள் பிபிசி உருதுவிடம் உறுதிப்படுத்தினர்.
ஒரு தகவலின்படி, ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் "நேர்மறையாக" இருந்தன. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மும்முனைப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பேச்சுவார்த்தைகள் மாலை 4 மணிக்குத் தொடங்கியதாக பாகிஸ்தானிய அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்திருந்தன. இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசு வட்டாரங்கள் பிபிசி உருதுவிடம் தெரிவித்தன.
முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மத்யஸ்தர்கள் மூலம் நடத்தப்பட்டதாகவும், அதாவது பாகிஸ்தானிய அதிகாரிகள் இரு நாடுகளுக்கும் இடையே செய்திகளைப் பரிமாறிக்கொண்டதாகவும் பாகிஸ்தானிய அரசு வட்டாரங்கள் பிபிசி உருதுவிடம் தெரிவித்தன. பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக நடந்து, சூழல் சாதகமாக இருந்தால், இரு நாடுகளும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.
இரான் பற்றி டிரம்ப் கூறியது என்ன?
இதற்கிடையில், இந்த மோதலில் இரான் 'மிக மோசமாகத் தோற்றுக்கொண்டிருக்கிறது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் ஒரு நீண்ட பதிவில், ஊடகங்களில் உள்ள சிலர் "இரான் 'வெற்றி பெறுகிறது' என்று கூற விரும்புகிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள், அதுவும் மிக மோசமாகத் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று டிரம்ப் கூறினார்.
பின்னர், இந்த மோதலின் போது தனது நிர்வாகம் கூறிய கூற்றுகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்: "அவர்களின் கடற்படை அழிந்துவிட்டது, அவர்களின் விமானப்படை அழிந்துவிட்டது, அவர்களின் விமான எதிர்ப்பு அமைப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது, அவர்களின் ரேடார் அழிந்துவிட்டது, அவர்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழிற்சாலைகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களே அழிக்கப்பட்டுவிட்டன, மேலும் மிக முக்கியமாக, அவர்களின் நீண்டகால 'தலைவர்' இப்போது நம்முடன் இல்லை."
இரான் கடலில் கண்ணிவெடிகளைப் புதைத்ததைக் குறிப்பிட்ட பிறகு, "உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஒரு உதவியாக, அமெரிக்கா இப்போது ஹோர்மூஸ் ஜலசந்தியைச் சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளது" என்று அவர் கூறினார்.
ஷாபாஸ் ஷெரிப்புடன் தலைவர்கள் சந்திப்பு
முன்னதாக இஸ்லாமாபாத் சென்ற அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபைச் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்; இப்பேச்சுவார்த்தைகள் இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு படிக்கல்லாக அமையும் என்று ஷெரீப் நம்பிக்கை தெரிவித்தார் என, பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
முன்னதாக பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இரானிய பேச்சுவார்த்தை குழுவினருடன் மதிய உணவு வேளையில் சந்திப்பு நடத்தியதாகப் பாகிஸ்தான் அரசு பிபிசி-யிடம் தெரிவித்துள்ளது.
முந்தைய பேச்சுவார்த்தைகளைப் போலவே, இரு தரப்பினரும் முன்வைத்த பல்வேறு முன்மொழிவுகளில் ஏதேனும் முன்னேற்றம் காண இயலுமா என்பதை அறியும் பொருட்டு, பாகிஸ்தான் தரப்பு அமெரிக்க அதிகாரிகளுடனும், பின்னர் இரானியக் குழுவினருடனும் மாறி மாறித் தனித்தனி அறைகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புள்ளது என இஸ்லாமாபாத்திலிருக்கும் பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் அஸாதே மொஷிரி தெரிவிக்கிறார்.
இரானியக் குழுவிற்குத் தலைமை தாங்கும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பாகவே, ஈரானின் சொத்துக்களை முடக்க நிலையிலிருந்து விடுவிக்க (unfreeze) அமெரிக்கா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இரானிய சொத்துக்கள் விடுவிப்பா? - மறுக்கும் அமெரிக்கா
முந்தைய அறிக்கைகளுக்கு மாறாக, முடக்கப்பட்ட இரானிய சொத்துக்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்று ஒரு அமெரிக்க அதிகாரி மறுத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கும் இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே இது நடக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அமெரிக்காவில் உள்ள டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களிடம் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை நியாயப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என பிபிசியின் அஸாதே மொஷிரி எழுதுகிறார்.
லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் மூவர் பலி
இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தெற்கு லெபனானின் நபாத்தியாவில் உள்ள ஜெஃப்தா நகரை இஸ்ரேல் தாக்கியதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் லெபனான் குடிமைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் என்று அமைச்சகம் கூறுகிறது. மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் எப்போது கொல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. லெபனானில் நடந்த வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு புகை எழுவதை ராய்ட்டர்ஸ் படங்கள் காட்டுகின்றன.
தெற்கு லெபனானில் 40 "கூடுதல் உள்கட்டமைப்புகள்" மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது.
லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான போர், ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டால், போரை நிறுத்தும்படி அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளர் ஹியூகோ பச்சேகா எழுதுகிறார்.
புதன்கிழமையன்று தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மூலம் நாட்டில் பரவலான கொடூரத்தையும் அழிவையும் ஏற்படுத்திய பின்னர், இஸ்ரேல் தனது தாக்குதல்களின் அளவைக் குறைத்துள்ளது. நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்கா விடுத்த அழைப்புகளுக்குப் பிறகே இது நிகழ்ந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என பச்சேகா கூறுகிறார்.
பரவலாகக் கண்டிக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; அவர்களில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களும் குழந்தைகளும் ஆவர் என லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை தொடர்பான 4 முக்கிய கேள்விகள்
பேச்சுவார்த்தையில் யார் யார் பங்கேற்கின்றனர்?
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருடன் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு வந்துள்ளார்.
இதற்கிடையில், சமீபத்தில் ஒரு முக்கிய அரசாங்கப் பிரமுகராக உருவெடுத்துள்ள இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நள்ளிரவில் வந்தடைந்தனர்.
பாகிஸ்தானின் பங்கு என்ன?
இரு தரப்பினரையும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வரவேற்றனர். போரிடும் இரு நாடுகளுக்கும் இடையே இந்த நாடு ஒரு முக்கிய மத்தியஸ்தராக விளங்குகிறது, மேலும் இரண்டு வார கால நிலையற்ற போர் நிறுத்தத்தை உறுதி செய்வதிலும் இது ஒரு பங்கு வகித்தது.
பேச்சுவார்த்தைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்?
சுருக்கமாகச் சொன்னால், அது தெளிவாக இல்லை. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், பேச்சுவார்த்தைகள் ஒரு நாள், ஒருவேளை சனிக்கிழமை மாலை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கிறது.
முரண்பாடான விடயங்கள் யாவை?
ஹோர்மூஸ் ஜலசந்தியின் மீது தெஹ்ரான் கொண்டுள்ள இறுக்கமான பிடி, லெபனானில் தொடரும் மோதல் மற்றும் இரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு ஆகியவை முக்கிய சர்ச்சைக்குரிய விடயங்களாகும்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு