You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க ராணுவ கப்பல்களை டிரோன் மூலம் தாக்கி இரான் பதிலடி - பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடக்குமா?
- எழுதியவர், கேத்தரின் ஆம்ஸ்ட்ராங்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தைக்கான குழுவை அமெரிக்கா அனுப்பியுள்ள நிலையில், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் இல்லை என இரான் கூறியுள்ளது.
இந்தநிலையில் இரானியக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா சிறைபிடித்ததை அடுத்து, ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவக் கப்பல்கள் மீது இரான் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இரானின் அரசாங்கத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான தஸ்னிம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த டிரோன் தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.
அமெரிக்க கடற்படையின் இந்த நடவடிக்கை போர் நிறுத்தத்தை மீறுகிறது எனக் கூறி, இரானின் உயர்மட்ட ராணுவக் கட்டளைப் பிரிவான கத்தம் அல்-அன்பியா மத்தியத் தலைமையகம் ஏற்கனவே பதிலடி கொடுக்கப்போவதாக எச்சரித்திருந்தது.
தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக வளைகுடா பகுதியில் இரானியக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
பயணத்தை நிறுத்துவதற்கான எச்சரிக்கைகளுக்குப் பதிலளிக்காதபோது 'டோஸ்கா' என்ற பெயருடைய அந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையால் கைப்பற்றப்பட்டதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
"இன்று, இரானியக் கொடி ஏந்திய டோஸ்கா கப்பல் கடற்படை முற்றுகையை மீற முயன்று தோல்வியடைந்தது. அந்தக் கப்பல் 900 அடி நீளமும், கிட்டத்தட்ட ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு இணையான எடையும் கொண்டது" என்று டிரம்ப் எழுதியிருந்தார்.
மேலும் , கப்பலை நிறுத்த அமெரிக்கா எச்சரித்ததாகவும், அது புறக்கணிக்கப்பட்டதால், "எங்கள் கடற்படைக் கப்பல் அதன் எஞ்சின் அறையைத் தாக்கி அங்கே அதை நிறுத்தியது" என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க மத்திய கட்டளையகம் பின்னர் ஒரு வீடியோவை வெளியிட்டது. ஒரு கடற்படைக் கப்பல் அந்தச் சரக்குக் கப்பலை மறிப்பதை அது காட்டுவதாகக் கூறப்பட்டது.
இரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான மற்றொரு குழு பாகிஸ்தான் செல்லும் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்திய பிறகு டிரம்ப் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அமெரிக்காவின் முற்றுகை தொடரும் வரை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டார்கள் என்று இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேச்சுவார்த்தைகள் குறித்த முரண்பாடான தகவல்கள்
இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்படும் வரை இரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்த மோதல் பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு முழுவதும் ஐந்து வாரங்கள் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்தன.
இறுதியில், இரண்டு வார கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.
முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்ததை அடுத்து, இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் இந்த முற்றுகையை அறிவித்தார்.
இந்நிலையில், இரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையின் கட்டுப்பாடு போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்துத் தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது.
தனது பிரதிநிதிகள் திங்கட்கிழமையன்று பாகிஸ்தான் வருவார்கள் என்று ஞாயிற்றுக்கிழமையன்று டிரம்ப் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. போர் நிறுத்தம் புதன்கிழமை முடிவடைய உள்ளது.
வேன்ஸைத் தவிர, முந்தைய பேச்சுவார்த்தைகளிலும் கலந்து ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இந்தத் தூதுக்குழுவில் இடம்பெறுவார்கள் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால் அமெரிக்காவுடன் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வெளிவந்த செய்திகள் "உண்மையல்ல" என்று இரானின் அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் முற்றுகை, "அதிகப்படியான" கோரிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தும் மொழி ஆகியவை "இதுவரை பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைத் தடுத்துள்ளன" என்றும் அது கூறியுள்ளது.
பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
இவை அனைத்திற்கும் மத்தியில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.
கடந்த வார இறுதியில் அமெரிக்க மற்றும் இரானியத் தூதுக்குழுக்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற ஹோட்டலில் தங்கியிருக்கும் விருந்தினர்கள், ஹோட்டலை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிபிசியின் பாகிஸ்தான் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ஞாயிற்றுக்கிழமை மாலை இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடியதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இரான் இடையே நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து அதில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்காவின் முற்றுகை, போர் நிறுத்த விதிகளை மீறுவதால், தற்காலிகமாகத் திறக்கப்பட்டிருந்த ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகும், ஞாயிற்றுக்கிழமை அந்த நீரிணை மூடப்பட்டே இருந்தது.
அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் வரை இந்த முற்றுகை தொடரும் என்று இரான் தெரிவித்துள்ளது.
உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (எல்என்ஜி) சுமார் 20 சதவீதம் பொதுவாக இந்த வழித்தடத்தின் வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
சமீபத்திய மோதலால் இந்தப் பாதையை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது, இது உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர வழிவகுத்துள்ளது.
இந்த நீர்வழிப் பாதையை அச்சுறுத்துவதன் மூலம் இரான் அமெரிக்காவை "மிரட்ட" முடியாது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்பின் அச்சுறுத்தல்கள்
இரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால், அந்நாட்டின் ஒவ்வொரு பாலமும் மின் உற்பத்தி நிலையமும் அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று, அமெரிக்க அதிபர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில், "அவர்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றால், தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயார்" என்று எழுதியுள்ளார்.
சனிக்கிழமையன்று ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இரான் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டினார்.
அவற்றில் ஒரு பிரெஞ்சு கப்பலும், ஒரு பிரிட்டிஷ் சரக்குக் கப்பலும் அடங்கும் என்று அவர் கூறினார்.
தனது கப்பல்களில் ஒன்று துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானதை பிரெஞ்சு கப்பல் போக்குவரத்து நிறுவனமான சிஎம்ஏ சிஜிஎம் உறுதிப்படுத்தியது. "எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது" என்று அந்த நிறுவனம் ஏஎஃப்பி செய்தியிடம் தெரிவித்தது.
இருப்பினும், பிரிட்டனின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகங்களின்படி, சனிக்கிழமையன்று பிரிட்டனுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாக எந்தத் தகவலும் இல்லை.
யுகே மேரிடைம் டிரேட் ஆப்பரேஷன்ஸ் அமைப்பின்படி, சனிக்கிழமையன்று நீரிணையில் ஒரு டேங்கர் கப்பலும் ஒரு சரக்குக் கப்பலும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல்கள் எந்த நாடுகளுக்குச் சொந்தமானவை என்று அந்த அமைப்பு கூறவில்லை.
இதற்கிடையில், இந்தப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்தியக் கொடி ஏந்திய இரண்டு கப்பல்கள் சிக்கியதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கடல்வழி போக்குவரத்துத் தரவுகளின்படி, ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்களின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமையன்று முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், "போட்ஸ்வானா மற்றும் அங்கோலா" நாடுகளின் கொடிகளை ஏந்திய இரண்டு டேங்கர் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முயன்றதாகவும், ஆனால் "இரானிய ஆயுதப் படைகள் சரியான நேரத்தில் மேற்கொண்ட நடவடிக்கையால், அவை பாதையை மாற்றித் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயின" என்றும் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு