தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையா? பிபிசி தமிழ் கள ஆய்வு

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

'பிரச்னைகளைப் பேசுவோம்' என்ற தலைப்பில் பிபிசி தமிழ் மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, 'உங்கள் பகுதியில் போதைப் பொருள் பயன்பாடு எப்படி உள்ளது?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த வாசகர்கள் பலரும், 'தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சரளமாக கிடைக்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் இவை அதிகமாக புழங்குகின்றன' எனக் கூறியிருந்தனர்.

சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், கோவை என பல மாவட்டங்களில் இருந்து பரவலாக இதேபோன்ற தகவல்கள் பிபிசி தமிழுக்கு வந்திருந்தன.

'போதையில்லா தமிழ்நாடு' என்ற பெயரில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், 'பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா?' என்பது குறித்து அறிய சில பள்ளிகளைச் சுற்றியுள்ள இடங்களுக்கு பிபிசி தமிழ் நேரில் சென்றது.

சென்னை புறநகரில் செயல்படும் பள்ளி அது.

காலை சுமார் 10 மணியளவில் பிபிசி தமிழ் அங்கு சென்றபோது, தேர்தல் பணிகளுக்காகப் போலீசாரும் சில அதிகாரிகளும் கூடியிருந்தனர்.

பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, 'புகையிலை போன்ற போதைப் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்துவது தொடர்பான புகார்கள் ஏதேனும் வந்துள்ளதா?' எனக் கேட்டோம்.

ஆசிரியர்கள் கூறியது என்ன?

'கொரோனா தொற்றுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டபோது அதுபோன்ற பிரச்னைகள் இருந்தன. சமீபமாக, அதுபோன்று எங்கள் பள்ளியில் பெரிதாக எந்தப் புகார்களும் இல்லை" என்று அந்த ஆசிரியர் கூறினார்.

அப்போது இடைமறித்த இன்னொரு ஆசிரியர், "இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு சில மாணவர்கள் மத்தியில் போதைப் பயன்பாடு தொடர்பான பிரச்னைகளைப் பார்க்க முடிகிறது" எனக் கூறினார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் மத்தியில் ஒவ்வொரு கால இடைவெளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

"புகையிலையைப் பயன்படுத்துவது தெரிந்தாலும் அதைப் பற்றி வெளிப்படையாகக் கேட்க முடியாத நிலை உள்ளது. தன்னைக் கேள்வி கேட்பதை எந்த மாணவரும் விரும்புவதில்லை. 'உங்களுக்கு என்ன கஷ்டம்?' என்ற பதிலே கிடைக்கிறது," எனவும் அவர் வேதனைப்பட்டார்.

தொடர்ந்து பேசிய அந்த ஆசிரியர், "மாணவர்களின் புத்தகப் பைகளை அவ்வப்போது சோதனை செய்கிறோம். புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்தக் குறிப்பிட்ட மாணவருக்கு போதிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன" என்று மட்டும் பதில் அளித்தார்.

பள்ளியை சுற்றியுள்ள கடைகளில் புகையிலை விற்பனையா?

அங்கிருந்து தாம்பரத்தில் உள்ள பள்ளி ஒன்றுக்கு பிபிசி தமிழ் சென்றது. பள்ளி மைதானத்தில் உள்ளூரைச் சேர்ந்த சில மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பள்ளிக் கட்டடத்தின் நுழைவுவாயிலுக்கு முன்பாக இருந்த மரத்தடியில் பயன்படுத்தப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பார்க்க முடிந்தது. அதன் சுற்றுச்சுவர் பகுதிகளில் ஏராளமான புகையிலைப் பொருட்கள் கிடந்தன.

"இங்குள்ள பெட்டிக் கடைகளில் இவை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. முன்பு 50 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வந்தது," எனப் பள்ளியின் காவலாளி தெரிவித்தார்.

பள்ளிக்குச் சற்று அருகில் இருந்த பெட்டிக் கடைக்குச் சென்று, குறிப்பிட்ட வகை புகையிலையின் பெயரைக் கூறி, ' கிடைக்குமா?' எனக் கேட்டோம். "நாங்கள் அதனை விற்பதில்லை" என்று மட்டும் கடைக்காரர் பதில் அளித்தார்.

அங்கிருந்து சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பள்ளி ஒன்றுக்கு பிபிசி தமிழ் சென்றது. அங்கும் சில இடங்களில் புகையிலைப் பொருட்கள் சிதறிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது.

பள்ளியின் காவலாளியிடம் கேட்டபோது, "சில பெட்டிக் கடைகளில் விற்பனை செய்கின்றனர். நன்கு தெரிந்த நபர்களுக்கு மட்டுமே இவை விற்கப்படுகிறது." என்றார்.

அவரிடம், 'ஒரு பாக்கெட் கிடைக்குமா?' எனக் கேட்டபோது வேறொரு நபர் மூலமாக புகையிலைப் பொருளை வாங்கிக் கொண்டு வந்து காண்பித்தார்.

தமிழ்நாடு முழுவதும் என்ன நிலவரம்?

சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பல பள்ளிகளிலும் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான புகார்கள் வருவதாகக் கூறுகிறார், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் அன்பழகன்.

குறிப்பாக தேனி மாவட்டத்தில் சில பள்ளிகளில் கஞ்சா புகைக்கும் பழக்கமும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மாணவர்களை மேலோட்டமாக கண்டிக்க வேண்டிய நிலையில் மட்டுமே ஆசிரியர்கள் இருப்பதாகவும் சற்று கடுமையாக கண்டித்தால் ஆசிரியர்களுக்கு அவமானம் மட்டுமே மிஞ்சுவதாகவும் அவர் வேதனைப்பட்டார்.

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'பெற்றோர் கண்டுகொள்வதில்லை'

அன்பழகனின் கூற்றை ஆமோதித்து பிபிசி தமிழிடம் சில தகவல்களைப் பகிர்ந்தார், தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மேலாண்மைக் குழுவின் (School Management Committee - SMC) உறுப்பினர் அப்துல்லா பத்ரி.

"பள்ளிகளில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைக்கிறது. பள்ளிக்கு அருகில் புகையிலை சார்ந்த போதைப் பொருள்கள் மிக எளிதாக கிடைக்கின்றன," என்கிறார் அவர்.

அதேநேரம், "வகுப்பறைகளில் பெரிதாக எந்தப் பிரச்னைகளும் வருவதில்லை" எனக் கூறிய அவர், "மாணவர்கள் எந்த நிலையில் வருகிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாததால் ஆசிரியர்களும் மௌனமாக உள்ளனர்." என்கிறார்.

கொரோனா தொற்றுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டதாகக் கூறும் அப்துல்லா பத்ரி, "பள்ளி மேலாண்மைக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு பெற்றோரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதை முக்கிய பிரச்னையாக அவர்கள் பார்ப்பதில்லை," எனக் கூறினார்.

'எந்த புகாரும் வரவில்லை' - பெரியகுளம் டிஎஸ்பி

பிபிசி தமிழிடம் பேசிய பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு, "பெட்டிக் கடைகளில் புகையிலை விற்பவர்கள் மீது ஏராளமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம். சமீபகாலமாக எந்தப் புகார்களும் எங்களுக்கு வரவில்லை" என்கிறார்.

பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களுக்கு போதிய அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகக் கூறிய நல்லு, "சிலர் எல்லை மீறிப் போவது தெரியவந்தால் காவல்நிலையத்துக்கு பெற்றோரை வரவழைத்து கவுன்சிலிங் கொடுக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், "ஏதாவது ஒரு பள்ளியில் மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு உள்ளதாக புகார் வந்தால் அதனைச் சுற்றிலும் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்." என்கிறார்.

தமிழ்நாடு காவல்துறை தகவல்

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் இதர துறைகளின் உதவியுடன் போதையில்லா தமிழ்நாடு என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள தமிழ்நாடு காவல்துறை, ' 'Drug Free TN' என்ற அடையாளம் தெரியாமல் புகார் அளிக்கக்கூடிய மொபைல் செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளது.

இந்த மொபைல் செயலி மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 1058 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை சொல்வது என்ன?

மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறையின் நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநர் சாந்தியிடம் பிபிசி தமிழ் பேசியது.

ஒவ்வொரு பள்ளிகளிலும் போதைக்கு எதிரான குழுவைத் (Anti drug club) தொடங்கியுள்ளதாகக் கூறிய அவர், "வாரம் ஒருமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன." எனக் குறிப்பிட்டார்.

மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைப் பற்றி விவரித்த சாந்தி, "80 சதவிகிதம் கல்லூரிகளையும் 20 சதவிகிதம் பள்ளிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது" என்கிறார்.

ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

'மாணவர்களுக்கு 30 கேள்விகள்'

மாணவர்களின் வருகைப்பதிவேடு, இடைநிற்றல் உள்ளிட்ட விவரங்கள் எமிஸ் (Education Management Information System) செயலியில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்கின்றனர்.

இதைப் பற்றி விவரிக்கும் சாந்தி, "செயலியில் மாணவர் தொடர்பாக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அதில், 'வழக்கத்துக்கு மாறான செயல்பாட்டுடன் மாணவர் இருக்கிறாரா?' என்ற கேள்வி உள்ளது. போதையால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு தனிக் கவனம் கொடுக்கப்படுகிறது." என்கிறார்.

"எத்தனை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விவரத்தைக் கூற முடியுமா?" எனக் கேட்டபோது, " அது தொடர் செயல்பாட்டில் உள்ளது. விவரங்களைச் சரிபார்த்த பிறகே கூற முடியும்." என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

மாணவர்களின் பைகளில் அவ்வப்போது சோதனை செய்வதாகக் கூறிய அவர், "கழிப்பறைகள், மாணவர்கள் அமரும் மரத்தடிகள் ஆகியவற்றில் ரகசியமாக கண்காணிக்கும் நடைமுறைகள் உள்ளன. இதை ஒரு குழு அமைத்து கண்காணிக்கிறோம்." என்கிறார்.

'தண்டித்தால் திருத்த முடியாது'

ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் அச்சம் குறித்துக் கேட்டபோது, "இளவயது என்பதால் எளிதில் அடிமையாகிவிடுகின்றனர். அவர்களின் பிரச்னையை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். இதைச் செய்ய வேண்டாம் எனக் கூறினால் ஒரேநாளில் கேட்க மாட்டார்கள். போதைக்கு அடிமையான மாணவர்களை மீட்டுக் கொண்டு வருவது சவால் நிறைந்த ஒன்று" என்று சாந்தி கூறுகிறார்.

இதே கருத்தை முன்வைக்கும் சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் மாலையப்பன், "போதையின் விளைவுகளைக் கூறியே மாணவர்களைத் திருத்த முடியும். அவர்களை தண்டிப்பதன் மூலம் திருத்த முடியும் என்பது சாத்தியம் இல்லை." என்கிறார்.

விழிப்புணர்வு மூலமாக மட்டுமே அவர்களை மடைமாற்ற முடியும் என பிபிசி தமிழிடம் கூறிய மாலையப்பன், "போதைக்கு அடிமையானவர்களை எவ்வளவு கண்டித்தாலும் மற்றவர்களை ஏமாற்றுவதைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள்." எனக் கூறுகிறார்.

போதை இல்லாமல் எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதைக் கற்றுக் கொடுக்கும்போது அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

போதைக்கு அடிமையான மாணவர்களுக்கு ஆலோசனை அளிப்பதற்கு 14417 என்ற உதவி எண் செயல்படுகிறது. இந்த எண்ணில் பேசும்போது போதிய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இங்கு போதிய ஆலோசனை கிடைக்கவில்லை என்றால் 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். "இந்த எண்ணில் பேசும்போது உளவியல் நிபுணர்கள் மூலமாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன." என்கிறார் சாந்தி.

"இந்த எண்களைத் தொடர்பு கொண்டு பெற்றோரும் போதிய ஆலோசனைகளைப் பெறலாம்," எனவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு