'நூற்றுக்கணக்கான அதிகாரிகள்' - தென் கொரியாவில் ஓர் ஓநாய் 9 நாட்களாக தேடப்பட்டது ஏன்?


'100க்கணக்கான அதிகாரிகள், டிரோன்' - தென் கொரியாவில் தப்பி ஓடிய ஓநாய் 9 நாட்களாக தேடப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கோ யூ மற்றும் ஹோசு லீ
    • பதவி, சியோல்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தென் கொரிய உயிரியல் பூங்காவிலிருந்து தப்பி ஓடி, ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்த 'நூக்கு' என்ற இரண்டு வயது ஓநாய், ஒன்பது நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஒருவழியாகப் பிடிபட்டது.

நூக்கு தப்பிச் சென்ற உயிரியல் பூங்கா அமைந்துள்ள மத்திய நகரமான டேஜியோன் அரசாங்கத்தின் தகவல்படி, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 00:44 மணிக்கு ஒரு விரைவுச் சாலைக்கு அருகே அந்த ஓநாய் பிடிபட்டது.

நூக்குவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அதன் நாடித்துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலை சீராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஓநாயைக் கண்டுபிடிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதிகாரிகள் பலமுறை நூக்குவை மிக நெருங்கிச் சென்றபோதிலும், ஒவ்வொரு முறையும் பிடிபடுவது போலத் தெரிந்த அந்த ஓநாய் தப்பி சென்றது.

நூக்குவின் நாடித்துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலை சீராக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Daejeon City

படக்குறிப்பு, பிடிபட்ட பிறகு நூக்குவின் நாடித்துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலை சீராக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் அதனைப் பிடிப்பதற்கு மிக அருகில் சென்றனர். திங்கட்கிழமை இரவு, 'நூக்கு'தப்பிச் சென்ற உயிரியல் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு பூங்காவான 'ஓ-வேர்ல்ட்' பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள ஒரு மலையில் காணப்பட்டதாக உள்ளூர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இருட்டில் ஒரு வாகனத்தின் முகப்பு விளக்கின் ஒளியில், அந்த ஓநாய் சாலையில் ஓடும் வீடியோவும் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக ஒரு தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கினர், ஆனால் இறுதியில் அது மீண்டும் தப்பித்துச் சென்றார்.

பிடிபடாமல் போக்கு காட்டி வந்த 'நூக்கு', ஒரு புதிய 'மீம்' உருவாவதற்கும் தூண்டுகோலாக அமைந்துள்ளது. இதனை உருவாக்கியவர்கள், நூக்குவை "கூண்டுக்குள் அடைபடாத ஓநாய்" என்றும் "சுதந்திரத்தின் அடையாளம்" என்றும் கூறுகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
'நூக்கு' ஓநாயைக் கண்டறியும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை அதிகாரிகள்.

பட மூலாதாரம், YONHAP/EPA/Shutterstock

படக்குறிப்பு, 'நூக்கு' ஓநாயைக் கண்டறியும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

2024-இல் பிறந்த 'நூக்கு', கொரியத் தீபகற்பத்தில் ஒரு காலத்தில் சுற்றித் திரிந்த, ஆனால் தற்போது காடுகளில் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் 'கொரிய ஓநாய்களை' மீண்டும் மீட்டெடுக்கும் ஓ-வேர்ல்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஆனால், பிறந்தது முதல் அடைக்கப்பட்ட சூழலிலேயே வாழ்ந்து வந்ததால், காடுகளில் நூக்குவால் உயிர்வாழ முடியுமா என்ற கவலை சிலருக்கு இருந்தது.

அதே சமயம், நூக்குவைப் பிடிக்கும் முயற்சியில் அது கொல்லப்பட்டுவிடுமோ என்று விலங்கு நல ஆர்வலர்களும் கவலைப்பட்டனர். 2018-ஆம் ஆண்டில் இதே உயிரியல் பூங்காவிலிருந்து தப்பி ஓடிய 'பொரோங்கி' என்ற பூமா விலங்கு, பிடிக்கும் முயற்சியின் போது இறந்தது.

தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் கூட, நூக்கு பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்று தனது சமூக ஊடகப் பதிவில் கேட்டுக்கொண்டார்.

பிரச்னைகளை பேசுவோம்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்.
'நூக்கு' ஓநாயை மீண்டும் உயிரியல் பூங்காவிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக, அதிகாரிகள் அதற்கு மயக்க மருந்து செலுத்தினர்.

பட மூலாதாரம், டேஜியோன் நகரம்

படக்குறிப்பு, 'நூக்கு' ஓநாயை மீண்டும் உயிரியல் பூங்காவிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக, அதிகாரிகள் அதற்கு மயக்க மருந்து செலுத்தினர்.

எங்கு பிடிபட்டது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நூக்கு பாதுகாப்பாகப் பிடிபட்டதையடுத்து, நிலவி வந்த அச்சங்களுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அன்யோங்-டாங் பகுதியில் அதிகாரிகள் மற்றொரு தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அங்குதான் ஒருவழியாக நூக்கு பிடிபட்டது.

சுமார் 20 மீட்டர் (66 அடி) தொலைவில் இருந்து மயக்க மருந்து துப்பாக்கி மூலம் அதன் தொடையில் சுட்ட அதிகாரிகள், பின்னர் பாதுகாப்பாக உயிரியல் பூங்காவிற்கு அழைத்துச் சென்றனர்.

நூக்கு "மிக வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது" என்று தெரிவித்த அதிகாரிகள், டிரோன் மூலம் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்ததாகக் கூறினர்.

மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு, அது "நிலையான" நிலைக்கு வர சுமார் ஆறு நிமிடங்கள் எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

டேஜியோன் நகர அரசாங்கம் வெளியிட்ட பிடிப்பு நடவடிக்கையின் வீடியோவில், மயக்க நிலையில் இருந்த நூக்குவை மீட்புப் படையினர் தூக்கிச் சென்று ஒரு கூண்டுப் பெட்டியில் வைப்பதைக் காண முடிந்தது.

பின்னர், மருத்துவ வசதி ஒன்றில் மயக்க நிலையில் இருந்த நூக்குவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் புகைப்படங்களையும் அதிகாரிகள் வெளியிட்டனர்.

நூக்கு "அதிக உடல் எடையை இழக்கவில்லை" என்றும், "ஏதோ உணவை உட்கொண்டது போலத் தெரிந்தது" என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அதன் வயிற்றுக்குள் ஒரு தூண்டில் முள் இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் அதை அகற்றினர்.

"நூக்குவைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வர கடினமாக உழைத்த அனைவருக்கும் நன்றி" என்று அந்த நகர அரசாங்கம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.

"நூக்குவின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்டு, எங்களுக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி," என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு