திருப்பரங்குன்றம் விவகாரம்: அவமதிப்பு வழக்கை ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை – பின்னணி என்ன?

திருப்பரங்குன்றம்
    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் விசாரிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

''திருப்பரங்குன்றம் மக்களின் விருப்பத்தை காலம் காலமாக திமுக பாதுகாத்து வருகிறது, அந்த வகையில் இந்த இடைக்கால உத்தரவு வரவேற்க கூடியது" என்றார் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி கே எஸ் இளங்கோவன்.

ஆனால், ''இந்த இடைக்கால உத்தரவு தற்காலிகமானதுதான். அதில் திமுக கொண்டாட எதுவுமில்லை" என்கிறார் அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன்

திருப்பரங்குன்றம்

தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம். ஜோதிராமன் ஆகியோர் கொண்ட அமர்வு "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தனர்.

''நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்கலாமா அல்லது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக" அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
ராம ரவிக்குமார்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் தீபம் வழக்கின் மனுதாரர், இந்து தமிழர் கட்சித் தலைவர், ராம ரவிக்குமார்

'சகோதரத்துவத்தோடு இருக்கவே முயல்கிறோம்'

''இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு உத்தரவை பிறப்பிக்கும் போது அதனை நாங்கள் விமர்சிக்கவில்லை, மாறாக தனி நீதிபதி ஒரு உத்தரவை பிறப்பித்தால் நீதிபதியை விமர்சனம் செய்கின்றனர்" என்கிறார் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்த இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கூடாது என அதனை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளையே இதுபோன்ற மேல்முறையீடுகள் மூலம் அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இது ஓட்டு அரசியலை மையப்படுத்தி திமுக செய்யும் செயல்முறை" என்றார் அவர்

மேலும் பேசிய அவர், "திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணக்கமாகதான் இருக்கிறார்கள் எங்களுக்குள் பிரச்னைகளை தூண்டிவிடுவதே திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும்தான்'' என்று கூறினார்.

டி.கே.எஸ் இளங்கோவன்.

பட மூலாதாரம், X/TKSElangovan

படக்குறிப்பு, திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன்.

'இந்துக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி திமுக'

''இந்துக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி திமுக என்ற வரலாறு தெரியாதவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் போல் எங்களை சித்தரிக்கின்றனர்" என்றார் திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன்.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், ''திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக இருந்து வந்த நடைமுறையை திமுக அரசும் பாதுகாத்து வருகிறது. இந்த விவகாரத்தை தேர்தல் உத்தியாக பாஜக பயன்படுத்த பார்க்கிறது, ஆனால் இது தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை" என்று அவர் தெரிவித்தார்.

''திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று காண்பிக்க பாஜகவினர் முயல்கின்றனர், ஆனால் அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை'' என்று கூறும் இளங்கோவன் ''திமுக தொடங்கப்பட்டதே இந்துக்களில் உள்ள பெரும்பான்மையானவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயமரியாதை உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே" என்று கூறினார்.

நாராயணன் திருப்பதி

பட மூலாதாரம், X/NarayananThirupathy

படக்குறிப்பு, பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி

பாஜக கூறுவது என்ன?

டி கே எஸ் இளங்கோவனின் இந்த கருத்தை ஏற்க மறுத்த பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, இந்துகளுக்காக இருப்பதாக திமுக சொல்வது வேடிக்கையாக உள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், "திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், இந்து கடவுள்களையும், இந்து நம்பிக்கைகளையும், இந்து மத வழிபாடுகளையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றனர் என்பது தொடர்கதை. அப்படி இருக்கையில் அவர்கள் இந்துக்களுக்காக தொடங்கிய இயக்கம் என்று சொல்வது வேடிக்கையானது" என்று கூறினார்

"திருப்பரங்குன்றம் வழக்கு தேர்தல் தொடர்பானது கிடையாது. அது தேர்தல் பிரச்னையும் இல்லை, அது இந்துக்களின் வழிபாட்டு தொடர்பான பிரச்சனை. அரசு நீதிமன்றம் சொன்னதை ஏற்கவில்லை, நீதிமன்றத்திற்கு எதிராக செயல்பட்டது. எனவே இதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை." என்று அவர் கூறினார்.

கோவை சத்யன்

பட மூலாதாரம், X/KovaiSathyan

படக்குறிப்பு, அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன்

அரசு நிர்வாகம் தவறு செய்துள்ளது என கூறும் அதிமுக

"திருப்பரங்குன்றம் விவகாரத்தை திமுக திரும்ப திரும்ப எடுப்பதற்கு முக்கிய காரணம் சிறுபான்மையினரை எப்படியாவது மகிழ்வித்து சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை எப்படியாது ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே'' என்கிறார் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன்.

இஸ்லாமியர்களே இந்த விவகாரத்தை ஒரு பிரச்னையாக பார்க்கவில்லை என்று கூறினார் அவர்.

மேலும் பேசிய அவர் "இந்த வழக்கில் ஆட்சியர் உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு சென்று மன்னிப்பு கேட்கும்போதே அரசு நிர்வாகம் தவறு செய்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது" என்று தெரிவித்தார்.

தனி நீதிபதியின் உத்தரவு யாருக்கு கட்டுப்பட்டது?

தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுகளும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு கட்டுப்பட்டது என்கிறார் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதியாகவும் மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராகவும் இருந்த நீதிபதி கற்பக விநாயகம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 141வது சரத்துப்படி அனைத்து மாநில நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக உச்சநீதிமன்றம் உள்ளது. அதே போல தனி நீதிபதிகள் வழங்கும் அனைத்து உத்தரவுகளும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு கட்டுப்பட்டது. எனவே அவர்கள் தடை விதிப்பது, தடை விதிக்காதது போன்ற முடிவுகளை எடுக்கலாம்" என்றார் அவர்.

பிரச்னைகளை பேசுவோம்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்.

பின்னணி

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி ராம ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கடந்த டிசம்பர் 3 கார்த்திகை தீபம் அன்று தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார். ஆனால் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை.

நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படாததால் ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மனுதாரர் உட்பட 10 பேர் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு மன்னிப்பு கோரி பதில் மனுதாக்கல் செய்தனர்.

ஆனால் மலை மீது 5 நபர்கள் வழிபாடு செய்ய அனுமதித்தால் வழக்கு விசாரனை சுமூகமாக முடித்து வைக்கப்படும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

பின்னர் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் தனி தனியாக மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜி ஆர் சுவாமிநாதன் விசாரிக்கவும் தடை விதித்தனர்.