"பேரைக் கேட்டாலே அஞ்சிய நாடுகள்" இரானின் வலிமையான பேரரசின் வரலாறு என்ன?

பெர்சிய பேரரசு, இரான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜெய் சுக்லா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இன்று இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது. ஆனால், இரான் என்பது ஏதோ புதிய நாடு கிடையாது. அதன் நாகரிகமும் கலாசாரமும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை.

ஒரு காலத்தில் இன்றைய இரான் பேரரசின் வேர்கள் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அன்றைய இந்தியாவின் சிந்து வரை விரிந்து கிடந்தன.

பாரசீக பேரரசு எப்படி உருவானது மற்றும் பாரசீக மன்னர்கள் தங்கள் பேரரசை ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் சிந்து வரை எப்படி விரிவுபடுத்தினார்கள் என்பதைப் பார்ப்போம்.

"கி.மு. 559 முதல் 331 வரை இரானிய நாகரிகம் அதன் உச்ச நிலையில் இருந்தது. பேரரசர் டேரியஸ் காலத்தில், அவரது பேரரசு எவ்வளவு விரிவாகவும் வலிமையாகவும் இருந்ததென்றால், கிரேக்கர்களுக்கு அவரைப் பற்றிய பயத்தால் தூக்கமே வரவில்லையாம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் இரானிய பேரரசரின் பெயரைக் கேட்டாலே அஞ்சின."

இந்த வார்த்தைகள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடையவை. நேரு பல்வேறு சிறைகளிலிருந்து தனது மகள் இந்திரா காந்திக்குக் கடிதங்கள் எழுதினார், அதில் உலக வரலாறு மற்றும் பேரரசுகளின் கதைகளை விவரித்துள்ளார்.

இந்தக் கடிதங்களின் தொகுப்பாக 'உலக வரலாற்றின் ஒரு பார்வை' (Glimpses of World History) என்ற புத்தகம் வெளியானது. இந்தப் புத்தகத்தில் பாரசீக பேரரசின் 'பெருமை மற்றும் அதன் வீழ்ச்சி' பற்றிய கதையின் ஒரு பார்வையும் அளிக்கப்பட்டுள்ளது.

இரான் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. இங்கே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல வம்சங்களின் ஆட்சி இருந்துள்ளது.

இரான் ஒரு காலத்தில் பெர்சியா அல்லது பாரஸ் அல்லது ஃபாரஸ் என்று அழைக்கப்பட்டது. ஒரு காலத்தில் இந்தப் பேரரசின் வேர்கள் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்தன.

ஒரு காலத்தில் இராக், தற்போதைய இரான், சிரியா, ஜோர்டான், லெபனான், இஸ்ரேல், பாலத்தீனம் மற்றும் துருக்கி தவிர அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பண்டைய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் (ஆப்கானிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானின் சில பகுதிகள்) அதன் அங்கமாக இருந்தன.

ஆப்பிரிக்காவில் இந்தப் பேரரசு எகிப்து மற்றும் லிபியா வரை பரவியிருந்தது. ஐரோப்பாவில் இது கிரீஸ், பல்கேரியா, ருமேனியா மற்றும் ஆர்மீனியா, காகசஸ் பகுதி மற்றும் ஜார்ஜியா வரை நீண்டிருந்ததாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய மற்றும் வலிமையானதாகக் கருதப்பட்ட இந்தப் பேரரசு முடிவுக்கு வர என்ன காரணம்? உலகின் பல பகுதிகளில் பரவியிருந்த இந்தப் பேரரசு எப்படி வீழ்ச்சியடைந்தது?

பெர்சிய பேரரசு, இரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சைரஸ் பாபிலோனைக் கைப்பற்றிய நிகழ்வின் வரைபடம்

பாரசீக பேரரசின் ஆரம்பம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உலக வரலாற்றில் மிகச் சிறந்த மற்றும் ஆடம்பரமான பேரரசுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் பேரரசு, அரசியல் சக்தியை மட்டுமல்லாமல் கலாசாரம், மதம், கட்டடக்கலை மற்றும் நிர்வாக அமைப்பிலும் உலகுக்கு ஒரு தனித்துவமான பாரம்பரியத்தை வழங்கியது.

இரானியர்கள் 'ஆரிய' இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. ஆரியர்களின் ஒரு குழு காஸ்பியன் கடல் வழியாக இரானை அடைந்தது என்றும், மற்றொரு குழு இந்தியாவுக்குச் சென்றது என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

கி.மு. 2000-இல் இவர்கள் இங்கு வந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அசீரியாவின் மன்னர் சர்கோன் (சென்னகெரிப்) II, கி.மு. 720 வாக்கில் இஸ்ரேலைக் கைப்பற்றினார். அவர் அங்கிருந்த யூதர்களை அகற்றி மீட் பகுதியில் குடியேற்றினார். அசீரியப் பேரரசு 'அசூர் பேரரசு' என்றும் அழைக்கப்படுகிறது. அவர்கள் இஸ்ரேலில் வெளிநாட்டு மக்களைக் குடியேற்றினர்.

மறுபுறம், இரானுக்கு வந்த மக்கள் மிகவும் வலிமை பெற்றதால், அவர்கள் முதலில் அங்கிருந்த அசீரியர்களை வென்றனர், பின்னர் பாபிலோனையும் வென்றனர். இரானின் கிழக்குப் பகுதியில் இந்த மக்கள் வாழ்ந்து வந்தனர், மேற்குப் பகுதியில் மீட் மக்கள் வாழ்ந்தனர். மீட் மக்களின் ராணுவ பலம் மிகவும் வலுவாக இருந்தது.

மீட் மக்கள் எலம் குடியிருப்பாளர்களைத் தோற்கடித்தனர். இப்போது சூசா நகரம் அவர்கள் கைக்கு வந்தது. பின்னர் மீட் மக்களுக்கும் இரானியர்களுக்கும் இடையே மேலாதிக்கத்துக்காகப் போர்கள் நடந்தன. இறுதியில் சைரஸ் என்ற மன்னர் இரு மக்களையும் ஒன்றிணைத்து ஒரு பேரரசை உருவாக்கினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
இராக்கில் 1879-இல் கண்டெடுக்கப்பட்ட 'சைரஸ் சிலிண்டர்', அரசியல் பிரச்சாரத்தின் ஆரம்பகால உதாரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Tish Wells/Tribune News Service via Getty Images

படக்குறிப்பு, இராக்கில் 1879-இல் கண்டெடுக்கப்பட்ட 'சைரஸ் சிலிண்டர்', அரசியல் பிரசாரத்தின் ஆரம்பகால உதாரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சைரஸ் அரசரின் ஆட்சிக்காலம்

இதற்கு முன்பு இரானியர்கள் மீட் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தனர். சைரஸ் மீட் மன்னருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, அவர்களின் மன்னர் அஸ்டியாக்ஸைப் பதவியிலிருந்து இறக்கி அதிகாரத்தைக் கைப்பற்றினார். இப்போது ஃபாரஸ் அதாவது பெர்சியா அதிகார மையமானது, மீட் அதன் கூட்டாளியானது.

கி.மு. 549 வாக்கில் சைரஸ், அகாமெனிட் வம்சத்தின் அடித்தளத்தை அமைத்தார். சைரஸ் 'குருஷ்' என்றும் அழைக்கப்படுகிறார். சைரஸ் லிடியா, ஆசியா மைனர் அதாவது தற்போதைய துருக்கி ஆகியவற்றின் மீதும் அதிகாரம் செலுத்தினார்.

அவரது பேரரசு துருக்கியின் மேற்கு கடற்கரை (அங்கு அவர்களின் பாரம்பரிய எதிரிகளான கிரேக்கர்கள் இருந்தனர்) முதல் இன்றைய ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தது.

சைரஸ் பாபிலோனை வென்ற பிறகு, கி.மு. 538-இல் யூதர்களை ஜெருசலேமிற்குத் திரும்ப அனுமதித்தார்.

அக்கால வரலாற்றில் சைரஸ் மிகவும் சிறந்த ஆட்சியாளராக இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அவர் வெற்றியாளராக இருந்தபோதிலும், தோற்கடிக்கப்பட்ட மக்களின் மதம், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மதித்தார்.

அந்த 'கொடுமையான' காலக்கட்டத்தில் இது ஒரு 'கற்பனை செய்ய முடியாத' விஷயமாகக் கருதப்பட்டது. சைரஸ் காலத்தில் ஜொராஸ்ட்ரிய மதம் இரானியர்களின் பூர்வீக மற்றும் முக்கிய மதமாக மாறியிருந்தது.

பிபிசியின் முன்னாள் தொகுப்பாளரும் அரசியல் ஆசிரியருமான ஆண்ட்ரூ மர் தனது "அ ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட்" புத்தகத்தில், "யூதர்கள் யூதாவுக்கு (இஸ்ரேல்) செல்ல முடிந்தது மற்றும் சுதந்திரமாகத் தங்களது மதத்தைப் பின்பற்ற முடிந்தது என்றால், அதற்கு அவர் (சைரஸ்) மட்டுமே காரணமாக இருந்தார். இடம்பெயர்ந்த யூதர்கள் தங்கள் தாயகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சைரஸ் பாபிலோனைக் கைப்பற்றியபோதுதான் இதெல்லாம் சாத்தியமானது." என எழுதியுள்ளார்.

பெர்சியர்கள் வெளிநாட்டுக் கலாசாரம் மற்றும் பாரம்பரிய விஷயத்தில் அதிக பழமைவாதிகளாக இருக்கவில்லை என்று கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் நம்பியதாக அவர் எழுதுகிறார்.

"சைரஸ் புதிய நிர்வாக முறையைக் கையாண்டார். மக்கள் கிளர்ச்சி செய்யாமல் இருக்க பல்வேறு மதங்களையும் பாரம்பரியங்களையும் பின்பற்ற அவர் அனுமதித்தார். பல்வேறு பாரம்பரியங்களும் கலாசாரங்களும் செழித்து வளர்ந்த முதல் பேரரசு இதுதான்," என்று ஆண்ட்ரூ மர் எழுதுகிறார்.

யூதர்கள் சைரஸைத் தங்களைக் காக்க வந்த இரட்சகராகக் கருதினர். அவரது காலத்தில் சூசா, எக்பதானா மற்றும் பாபிலோன் என மூன்று தலைநகரங்கள் இருந்தன.

அவர் பசர்கடே நகரில் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்டினார். எவ்வாறாயினும், அவர் பாபிலோனியாவின் சால்டியன் பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு அதன் கலாசாரத்தையும் அழித்ததாக நம்பப்படுகிறது.

இராக்கில் 1879-இல் கண்டெடுக்கப்பட்ட 'சைரஸ் சிலிண்டர்', அரசியல் பிரசாரத்தின் ஆரம்பகால உதாரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சைரஸ் சிலிண்டர் என்பது ஒரு களிமண் துண்டு, அதன் மீது பெர்சிய மன்னரின் சீர்திருத்தங்கள் கியூனிஃபார்ம் எழுத்துக்களில் செதுக்கப்பட்டுள்ளன.

பல வல்லுநர்கள் இதை 'மனித உரிமைகளின் முதல் அறியப்பட்ட சாசனம்' என்று கருதுகின்றனர். அதன்படி, கி.மு. 539-ஆம் ஆண்டில் பாபிலோனை வென்ற சைரஸ் தி கிரேட், முதல் பெரிய உலகப் பேரரசுக்குத் தலைமை தாங்கினார்.

ஆட்சியாளர் அடிமைகளாக இருந்த கைதிகளை விடுவித்தது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் நிலத்திற்குத் திரும்பவும் அனுமதித்தார். அவர் டஜன் கணக்கான இனக் குழுக்களின் பாரம்பரியங்களையும் மதங்களையும் மதித்தார்.

சைரஸின் தலைமையிலான பேரரசு 'முதல் பரந்த பன்முக கலாசார மற்றும் பன்முக மத அரசு' ஆகும். இது 200 ஆண்டுகள் வரை ஸ்திரத்தன்மையுடன் இருந்த ஒரு சக்தியாகும். சைரஸின் மகன் கேம்பிஸஸ் (கம்போஜியா) எகிப்தின் மீது படையெடுத்து அதன் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். அவருக்கு எதிராகக் கிளர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு டேரியஸ் மன்னரின் ஆட்சி வந்தது.

இரானில் ஜொராஸ்ட்ரிய மதம்

ஒரு பூசாரியின் இந்த இடுப்புப் பட்டை 2013-இல் 'தி சைரஸ் அண்ட் ஏன்சியன்ட் பெர்சியா' கண்காட்சியின் ஒரு பகுதியாக நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Spencer Platt/Getty Images

படக்குறிப்பு, ஒரு பூசாரியின் இந்த இடுப்புப் பட்டை 2013-இல் 'தி சைரஸ் அண்ட் ஏன்சியன்ட் பெர்சியா' கண்காட்சியின் ஒரு பகுதியாக நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.

பண்டைய ஜொராஸ்ட்ரிய மதத்தின் நிறுவனர் அஷோ ஜொராஸ்டர் என்று நம்பப்படுகிறது. ஜொராஸ்டர், ஜரத்துஸ்த்ரா அல்லது ஜொராஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறார். ஒரு கருத்தின்படி, அவரது காலம் கி.மு. சுமார் 7000 எனக் கருதப்படுகிறது. மற்றொரு கருத்தின்படி, இது வேத காலத்துக்குச் சமமானது. அதன் அடிப்படையில் ஜொராஸ்டர் சுமார் கி.மு. 3000 வாக்கில் வாழ்ந்திருக்க வேண்டும்.

அறிஞர்கள் பொதுவாக இரானின் பண்டைய இறைத்தூதராகக் கருதப்படும் ஜொராஸ்டர் (பாரசீக மொழியில் ஜர்தோஷ்ட் மற்றும் கிரேக்க மொழியில் ஜொராஸ்டர்) கி.மு. 1500 முதல் 1000-க்கு இடையில் வாழ்ந்ததாக நம்புகிறார்கள். சிலர் அஷோ ஜொராஸ்டர் கி.மு. 600-ல் தற்போதைய அஜர்பைஜானில் பிறந்ததாகக் கருதுகின்றனர். கி.மு. 509 வாக்கில் அவர் ஜொராஸ்ட்ரிய மதத்தை நிறுவினார்.

ஜொராஸ்ட்ரிய மதம் இரானின் அரசு மதமாக மாறியது மற்றும் பாரசீகர்கள் குடியேறிய பிற பகுதிகளிலும் (ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா) பின்பற்றப்பட்டது. பெர்சியப் பேரரசு (இன்றைய இரான்) உலகின் மிகவும் வலிமையான மற்றும் வளமான பேரரசுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. பண்டைய காலத்தில் அகாமெனிட், பார்த்தியன் மற்றும் சசானியன் வம்சங்களின் கீழ் பெர்சிய கலாசாரம் அறிவியல், கலை, ஆட்சி மற்றும் மத பாரம்பரியத்தில் வியக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றது.

உலகின் மிகப்பழமையான ஏகத்துவ மதங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜொராஸ்ட்ரிய மதம், பெர்சியப் பேரரசின் முக்கிய அடிப்படையாக இருந்தது. நெருப்புக் கோவில்கள் (அகியாரி அல்லது ஆதாஷ்-பெஹ்ராம்), கல்வி மையங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் அரசு முழுவதும் நிறுவப்பட்டன. இதிலிருந்து பெர்சிய அல்லது பாரஸ் அல்லது பெர்சிய கலாசாரம் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், மதம் மற்றும் கலாசார ரீதியாகவும் வளமாக இருந்தது என்பது தெளிவாகிறது. பின்னர் இந்த மதமே பெர்சியா அதாவது பாரஸ் அதாவது இரானின் அரசு மதமாக மாறியது.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு