ரூ.1,417 கோடி மோசடி வழக்கு: ஈரோடு நிறுவனம் விரித்த வலையில் சுமார் 35 ஆயிரம் பேர் விழுந்தது எப்படி? அமலாக்கத்துறை தகவல்

பட மூலாதாரம், Special Arrangement
"ராணுவத்தில் 17 ஆண்டுகள் வேலை பார்த்தேன். ஓய்வூதியப் பலனாக 40 லட்ச ரூபாய் கிடைத்தது. ஊரில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்த ஒரு நிறுவனத்தால் மொத்தக் கனவும் சிதைந்துவிட்டது" - கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் குமுறல் இது.
ஈரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஏற்றுமதி திட்டத்தில் முதலீடு செய்ததால் மொத்தப் பணமும் பறிபோய்விட்டதாக, அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இவரைப் போல சுமார் 35 ஆயிரம் பேரிடம் 1,417 கோடி ரூபாயை மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 'யுனிக் எக்ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளதாக, அக்டோபர் 1-ஆம் தேதி அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லியில் வசிக்கும் ராணுவ வீரர்களை இலக்காக வைத்து மோசடி நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் பின்னணி என்ன?
ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனி பகுதியில் 'யுனிக் எக்ஸ்போர்ட்ஸ்' என்ற நிறுவனமும் நசியனூர் சாலையில் 'ஈஸ்ட் வேலி அக்ரோ ஃபார்ம்ஸ்' என்ற நிறுவனமும் செயல்பட்டு வந்துள்ளது.
2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வந்ததாக, ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

பட மூலாதாரம், Special Arrangement
'ஏற்றுமதியில் முதலீடு... அதிக வட்டி'
'விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்தால் அதிக வருமானம் கிடைக்கும்' எனக் கூறி பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திட்டத்தில் சேரும் நபர்களிடம், 'இந்தியாவில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்றால் வெளிநாடுகளில் 400 ரூபாய்க்கு விலை போகும். அந்த லாபத்தைப் பகிர்ந்து கொடுப்பதாகக் கூறி ஆட்களைச் சேர்த்ததாகக் கூறுகிறார், ஈரோட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரான சுப்ரமணியன்.
அவரது கூற்றுப்படி, இலங்கை, துபை, மொரீஷியஸ், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கு வெங்காயம், உருளை, கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதாக யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
"ஏற்றுமதி தொடர்பான ஆவணங்களைக் காட்டியதால் அதனை நம்பி பணத்தைக் கட்டியுள்ளனர். தொடக்கத்தில் சிறிது லாபம் கிடைத்ததால் அதே தொகையை மீண்டும் மீண்டும் முதலீடு செய்துள்ளனர்," என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Special Arrangement
சுப்ரமணியன், தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். 'யுனிக் எக்ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் திரட்டி காவல்துறையில் புகார் அளித்தவர்களில் இவரும் ஒருவர்.
"ஓய்வுபெறப் போகும் முன்னாள் ராணுவ வீரர்கள் பணத்தை முதலீடு செய்வார்கள் என்பதை நன்கு உணர்ந்து ஏமாற்றியுள்ளனர்," என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"வெளியில் கிடைக்கும் வட்டியைவிட அதிகமாகக் கிடைக்கும் என்ற ஆசையில் வட்டிக்குப் பணம் வாங்கி பலரும் முதலீடு செய்தனர். இப்போது வாங்கிய பணத்துக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்," எனவும் அவர் கூறுகிறார்.
'சாகும் வரை 50 ஆயிரம்'

பட மூலாதாரம், Sendhilkumar
"தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களை இலக்காக வைத்து நிதி மோசடி செய்துள்ளனர்," என்கிறார், முன்னாள் ராணுவ வீரரான செந்தில்குமார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.
"எனக்கு இதுபோன்ற திட்டங்களில் இணைவதற்கு விருப்பமில்லை. 40 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 60 லட்ச ரூபாய் கிடைக்கும் என சக நண்பர் கூறினார். என் கையில் பணம் இருந்ததால், என்னிடம் கடன் வாங்கி என் பெயரில் முதலீடு செய்துவிட்டு ஓடிப் போய்விட்டார். மொத்தப் பணமும் பறிபோய்விட்டது," எனக் கூறுகிறார்.
"அதிக வட்டி கிடைக்கும் என எந்த வகையில் நம்ப முடிந்தது?" எனக் கேட்டபோது, "அவர்கள் அறிவித்த திட்டங்களும் ஒரு காரணம். 25 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் சாகும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்றார்கள். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் பலரும் இதனை நம்பிவிட்டனர்." என்கிறார்.
அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளனர்.
'மோசடியை அரங்கேற்ற திட்டங்கள்'
யுஎன்ஐ (UNI), எஃப்என்பி (FNB), எஃப்.ஏ.பி (FAB) மற்றும் யுஎன்ஆர் (UNR) என்ற பெயரில் நான்கு வகையான முதலீட்டுத் திட்டங்களை மோசடியை மேற்கொள்வதற்குக் கையாண்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
ஈரோட்டில் யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டாலும் அங்கு ஒரு சில புகார்களே தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறும் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரவிக்குமார், "தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் மக்கள் ஏமாந்துள்ளனர்." என்கிறார்.

பட மூலாதாரம், Special Arrangement
'போராட்டம் நடத்தியும் பலன் இல்லை'
17 ஆண்டுகள் ராணுவத்தில் உழைத்து சேமித்த பணம் போய்விட்டதாக கூறுகிறார், கிருஷ்ணகிரியை சேர்ந்த செந்தில்குமார், "தற்போது செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறேன். சொந்த வீடு கட்ட நினைத்தேன். அது முடியாமல் போனதால் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறேன்." என்கிறார்.
பணத்தை முதலீடு செய்தவர்களில் சிலர் இறந்துவிட்டதாகக் கூறும் அவர், "மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினோம். எந்தப் பலனும் கிடைக்கவில்லை" என்கிறார்.
2022 -ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர். அப்போது 440 பேர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அமலாக்கத்துறை தற்போது கையில் எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக நவீன்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்புடைய ஒன்பது இடங்களில் கடந்த ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

பட மூலாதாரம், Naveenkumar
"யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் முத்துச்செல்வம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மூலமாக ராணுவத்தில் ஓய்வுபெறும் நபர்களைக் கண்டறிந்து மோசடி செய்துள்ளனர்" என்கிறார், டி.எஸ்.பி ரவிக்குமார்.
"ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களில் இருந்தே பலரை முகவர்களாக நியமித்துள்ளனர். ஆரம்பத்தில் முதலீட்டுக்கு ஏற்ப வட்டித் தொகையைக் கொடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் பணத்தைத் தராமல் நவீன்குமார் தலைமறைவாகிவிட்டார்" எனக் கூறுகிறார், முன்னாள் ராணுவ வீரரான சுப்ரமணியன்.
'4 பேருக்கு 390 கோடி ரூபாய் சம்பளம்'
அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் எந்த ஏற்றுமதியையும் செய்யவில்லை' எனக் கூறியுள்ளது.
ஆனால், ஏற்றுமதி லாபத்தின் அடிப்படையில் அதிக வருமானம் தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் இருந்து தொடர்ந்து பணத்தைத் திரட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், 35 ஆயிரத்து 759 முதலீட்டாளர்களிடம் 1,417 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகக் கூறியுள்ள அமலாக்கத்துறை, திட்டங்களை வகுப்பதிலும் முதலீட்டாளர்களைத் திரட்டுவதிலும் முத்துசெல்வம் முக்கியப் பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
'முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை வசூலித்ததற்காக 12.72 கோடி ரூபாயை அவர் வருமானமாகப் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் அவர் தனது தனிப்பட்ட கணக்குகள் மற்றும் வேறு சில நிறுவனங்கள் மூலம் நிதியைப் பெற்றுள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
''யுனிக் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் உரிமையாளரான நவீன்குமார் முதலீட்டுத் திட்டங்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இந்நிறுவனத்தில் 4 பேர் மட்டுமே பணிபுரிந்த நிலையில் சுமார் 390 கோடி ரூபாயை சம்பளப்பணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது,' என்கிறது அமலாக்கத்துறை.
மேலும், விவசாய விளைபொருட்களை வாங்காமலேயே வெங்காயம் மற்றும் இதர பொருட்களை வாங்கியதாக சுமார் 79 கோடி ரூபாய்க்கு கணக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் வணிக செலவீனம் என்ற பெயரில் முதலீட்டாளர்களின் நிதியைப் பதுக்கி வைப்பதற்கு இவை பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
நிறுவன உரிமையாளர் கூறியது என்ன?
நவீன்குமார் மற்றும் முத்துச்செல்வம் ஆகியோரை செப்டம்பர் 29-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இவர்கள் இருவரையும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நவீன்குமார் பேசும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. அதில், தனக்கு தேவையற்ற சிறை வாழ்க்கை கிடைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
"கொரோனா காலம் வரையில் எல்லாம் சரியாக இருந்தது. ஜனவரி மாதத்தில் இருந்தே தனக்கு எதிராக பிரச்னைகளை திசைதிருப்பிவிடப்பட்டன. இந்த விவகாரத்தில் பயந்து ஒதுங்கிச் செல்ல விரும்பவில்லை. ஆறு மாதத்தில் அனைத்து பிரச்னைகளும் முடிந்துவிடும்," என அவர் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் இழந்த தொகை இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் தங்களால் முடிந்த அளவு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
"மோசடி வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. கோவையில் நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும் (TNPID) நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது" என்கிறார், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரவிக்குமார்.
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழந்த பணம் மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதா?" என அவரிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டோம். அவர்களின் நிலங்களை பறிமுதல் செய்துள்ளோம். வழக்கு விசாரணையில் உள்ளது. அதன் முடிவில் இதுகுறித்து தெரியவரும்," என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























