ரூ.8,000 கூப்பன் விநியோகமா? செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில் அதிமுக புகாரின் பின்னணி

செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில், வாக்காளர்களுக்கு ரூ.8000 கூப்பனை திமுக வழங்குவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ள அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன் பிபிசி தமிழிடம் பேசுகையில், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பரப்புரை செய்ய முடியாத வகையில் வாக்காளர்களை தினமும் பணம் கொடுத்து பல்வேறு இடங்களில் அடைத்து வைப்பதாக குற்றம்சாட்டினார்.
காவல்துறையினர் நேரடியாக வந்து வீடியோ எடுத்து, கூப்பன்களைக் கைப்பற்றியும் சம்பந்தப்பட்ட திமுகவினர் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அது மாதிரி கூப்பன் தானே தவிர, பணத்திற்கான கூப்பன் அல்ல என்று கூறும் திமுக, அதிமுக சார்பில் ரூ.10,000 கூப்பன் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
கவனம் ஈர்க்கும் கோவை தெற்கு
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டதால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கோவை தெற்கு, இம்முறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுவதால் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் அம்மன் அர்ச்சுனன், தவெக சார்பில் செந்தில்குமார், நாதக சார்பில் பேரறிவாளன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடக்கும் நிலையில், திமுக சார்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் தொகுதிக்குட்பட்ட காந்திபுரம் 7 வது வீதியில் உள்ள ஒரு தனியார் கணினி மையத்தில், ஏப்ரல் 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணியளவில், வாக்காளர் பட்டியலை வைத்து இந்த டோக்கன் விநியோகிக்கப்பட்டதாகவும், அவற்றை அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் பிடித்ததாகவும் கூறி ஒரு வீடியோ வைரலாகப் பரவியது. வீடியோவின் உண்மைத்தன்மையை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த வீடியோக்களையும் திமுகவினரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் டோக்கன்களையும் பிபிசியிடம் பகிர்ந்த கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணியின் பொருளாளர் வெற்றி, ''வாக்காளர் பட்டியலை வைத்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த 8000 ரூபாய் கூப்பன் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின் இதைக் கொடுத்து பொருள் வாங்கலாம் என உறுதி தரப்பட்டுள்ளது. அதனுடன் ஒரு படிவத்தை நிரப்பி கையெழுத்தும் வாங்கியுள்ளனர். இதைப் பிடித்து போலீசுக்கும், பறக்கும் படைக்கும் நாங்கள் தகவல் கொடுத்தோம்.'' என்றார்.
தேர்தல் அலுவலரிடம் அதிமுக புகார்
தகவல் தெரிந்து அங்கு காவல்துறையினர் வரும்போது, ஆதாரங்களை அழிப்பதற்கு திமுகவினர் முயன்றதாகவும் அதை காவல்துறையினரே வீடியோ எடுத்ததாகவும் அதிமுகவினர் தெரிவித்தனர். ஆனால் ஒரு நாள் ஆகியும் அதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை, வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுமில்லை என்று அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.

பட மூலாதாரம், Amman Arjunan
இதுதொடர்பாக வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன், அதிமுக பகுதிக் கழகச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் சார்பில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் கிரியப்பனவரிடம் தனித்தனியாக புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தொகுதி பார்வையாளர் ஆகியோரிடமும் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டதாக கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞரணி பொருளாளர் வெற்றி தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன், ''ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருட்கள் வாங்க 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுத்ததைப் பிடித்துக் கொடுத்துள்ளோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சட்டப்பூர்வமாக இதைக் கொண்டு சென்று போராடுவோம்.'' என்றார்.
மேலும் பேசிய அவர், ''இதுதவிர, வாக்காளர்களை காலையில் அழைத்துச் சென்று இரவு வரை ஓரிடத்தில் அடைத்து வைத்து தினமும் உணவும், 500 ரூபாய் சம்பளமும் தருகின்றனர். மற்ற கட்சியினர் யாரும் வாக்குக் கேட்டுப் போகவிடாமல் தடுக்க இப்படிச் செய்கின்றனர். வாக்குப்பதிவு நாள் வரையிலும் இதேபோன்று தினமும் பல ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டு செல்ல திமுகவினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.'' என்றார்.
அதிமுகவினர் பிபிசியிடம் பகிர்ந்த கூப்பன்களில், ரூ.8000 என்று தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் இணைத்து வழங்கப்பட்டதாக அவர்கள் பகிர்ந்த படிவங்களில், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன் என்ற தலைப்பில் பகுதி, வாக்காளர் பெயர், வாக்காளர் பட்டியல் தொடர் எண், வார்டு எண், பூத் எண், வீட்டு எண், குடும்ப அட்டை எண், குடும்ப வரிசை எண் போன்றவற்றுடன் செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களும் கோரப்பட்டுள்ளன.
இவற்றைத் தவிர்த்து, ''ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்'' என்பதற்குக் கீழாக, வாஷிங் மெஷின், டிவி, ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன், மின் அடுப்புகள், இதர என எது தேவை என்ற விவரம் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன் சொந்த வீடா, வாடகை வீடா என்ற விபரம் கேட்கப்பட்டிருப்பதுடன், 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தருவதில் வீடு தேவையா என்றும் கேட்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் பதிவு செய்த விவரங்களுடன் இருந்த சில படிவங்களும் பிபிசி தமிழுக்குக் கிடைத்தன. இந்த படிவத்தின் கீழ் பகுதியில் குடும்பத்தினர் கையெழுத்து என்ற பகுதியும் இடம் பெற்றுள்ளது. இந்த படிவத்தைப் பூர்த்தி செய்து படிவங்களின் கீழே கையெழுத்திடும் குடும்பத் தலைவர் அல்லது பெரியவர் அந்த வீட்டிலுள்ள வாக்குகளைப் பெற்றுத்தரவேண்டுமென்பதற்கான மறைமுக மிரட்டல் இது என்கின்றனர் அதிமுகவினர்.

மாவட்ட தேர்தல் அதிகாரி கூறுவது என்ன?
இந்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் கிரியப்பனவரிடம் பிபிசி தமிழ் கேட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''நேற்றே இதுபற்றி புகார் வந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு குழுவினர் சென்றுவிட்டனர். அங்கு கிடைத்த கூப்பன் பற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் தொகுதி தேர்தல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையால் முதல் தகவல் அறிக்கையும் பதியப்படும்.'' என்றார்.
பிபிசியிடம் பேசிய கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், மாநகராட்சி துணை ஆணையருமான குமரேசன், ''கூப்பன் விநியோகித்த கண்ணம்மாள் என்பவரிடம் விசாரித்த போது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்று 8000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என்று கூறி மாதிரி கூப்பனையே விநியோகித்ததாகக் தெரிவித்தார். இருப்பினும் அவர் மீது காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி அனுமதி கிடைத்துவிட்டதால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும்.'' என்றார்.
திமுக தரப்பு விளக்கம்

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அவரிடம் பதில் பெறமுடியவில்லை. அவர் சார்பில் நம்மிடம் பேசிய நேர்முக உதவியாளர் சங்கர், ''செந்தில்பாலாஜி தொடர்ந்து பரப்புரையில் இருப்பதால் இதுபற்றி இப்போது பதில் கூறமுடியாது. இரவு 10 மணிக்கு மேல்தான் பேசமுடியும்.'' என்றார்.
திமுக சார்பில் பிபிசியிடம் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார், ''திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இல்லத்தரசிகளுக்கு, ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ளது. அதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு மாதிரி கூப்பனாக தயாரித்துக் கொடுத்துள்ளனர். மக்களிடையே எங்களுக்கு கிடைக்கும் ஆதரவைப் பார்த்து பொய்யான குற்றச்சாட்டுகளை அதிமுகவினர் முன்வைக்கின்றனர். இதேபோல அதிமுகவும் பல பகுதிகளில் ரூ.10,000 மதிப்பிலான மாதிரி கூப்பனைக் கொடுத்துள்ளது. அதற்காக நாங்கள் அவர்கள் மீது புகார் கொடுக்கலாமா?'' என்று கேள்வி எழுப்பி கூப்பனையும் நம்மிடம் பகிர்ந்தார்.
அதிமுக கூறுவது என்ன?
திமுகவின் ரூ.10,000 கூப்பன் குறித்த குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, "அதிமுக சார்பில் எந்தவொரு கூப்பனும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை. திமுகவினர் கூப்பன் விநியோகித்ததை நாங்கள் கையும் களவுமாக பிடித்ததால் அவர்கள் இதுபோன்ற போலி கூப்பன்களை தயாரித்து, பிரச்னையை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்" என்று வழக்கறிஞர் வெற்றி கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































