ஹிப்னிக் ஜெர்க்: தூக்கத்தில் திடீரென உயரத்தில் இருந்து விழுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சண்முகப் பிரியா செல்வராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நம்மில் பலர் நல்ல உறக்கத்தில் இருக்கும் போது திடீரென ஏதாவது ஓர் உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டு அச்சத்தில் துள்ளி விழித்திருப்போம்.
இல்லையென்றால் திடீரென உடலிலோ அல்லது காலிலோ நடுக்கம் ஏற்பட்டு சட்டென விழித்திருப்போம்.
இது மருத்துவத் துறையில் ஹிப்னிக் ஜெர்க் என்று அழைக்கப்படுகிறது.
இது எதனால் ஏற்படுகிறது? இது ஏதேனும் நரம்பியல் பிரச்னையின் அறிகுறியா? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? இது குறித்து நரம்பியல் மருத்துவர் சிந்துஜா பிபிசி தமிழிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
ஹிப்னிக் ஜெர்க் என்றால் என்ன?
உயரத்தில் இருந்து கீழே விழுவது போல் உணர்வு ஏற்பட்டு உறக்கத்தில் இருந்து திடீரென விழித்திருக்கிறீர்களா?
"இந்த உணர்வு உங்களுக்கு மட்டுமல்ல பத்தில் ஏழு பேர், ஏதாவது ஒரு நேரத்தில் இதை அனுபவித்திருப்பார்கள்" என்கிறார் மருத்துவர் சிந்துஜா.
"இதன் தீவிரம் நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு இது மிக மென்மையாக இருக்கக்கூடும், அவர்களே அதை உணராமல், அருகில் உறங்குபவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ கவனித்துச் சொன்னால்தான் தெரியும். ஆனால் சிலருக்கு இது மிகத் தீவிரமாகவும் இருக்கலாம். அதாவது அவர்கள் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளும் அளவுக்குக்கூட இருக்கலாம்" என்கிறார் அவர்.
ஹிப்னிக் ஜெர்க் என்பது தூக்கத்தில் ஏற்படும் தன்னிச்சையான தசை இறுக்கம் எனக் கூறும் மருத்துவர் சிந்துஜா "ஒரு நபர் விழிப்பு நிலையில் இருந்து தூக்க நிலைக்கு மாறும்போது, தூக்கத்தின் முதல் அல்லது இரண்டாம் நிலையில் இது ஏற்படுவதாக" விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக உறக்கத்தை மருத்துவ நிபுணர்கள் NREM மற்றும் REM என இரண்டு முக்கியக் கட்டங்களாக பிரித்துள்ளனர். அதில் நம் உறக்க சுழற்சி நான்கு நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு நிலைகள் 90 முதல் 110 நிமிட சுழற்சிகளாக நிகழ்கிறது.
- N1 (லேசான தூக்கம்): விழிப்பிற்கும் தூக்கத்திற்கும் இடைப்பட்ட நிலை. தசை தளரத் தொடங்கும்.
- N2 (நடுத்தர தூக்கம்): இதயத் துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலை குறையும் நிலை.
- N3 (ஆழ்ந்த தூக்கம்): உடலை சரிசெய்யவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும் மிக முக்கியமான கட்டம்.
- REM (கனவு நிலை): விரைவான கண் அசைவுகள் இருக்கும் நிலை. மூளை தீவிரமாக இயங்கும், கனவுகள் தோன்றும்.
இதில் முதல் இரண்டு நிலைகளில்தான் இந்த தசை அதிர்வு நிகழ்வதாக மருத்துவர் சிந்துஜா கூறுகிறார். அதாவது,
- கீழே விழுவது போன்ற உணர்வு
- மின்சாரம் தாக்கியது போன்ற ஒரு திடீர் உணர்வு
- விழுவது தொடர்பான கனவு அல்லது மாயத்தோற்றம்
- கை கால்கள் இறுகிக் கொள்வது
- சில நேரங்களில் உறக்கத்தில் பேசுவது

பட மூலாதாரம், Getty Images
இது விழிப்பு நிலையில் இருந்து தூக்க நிலைக்கு மாறும்போது ஏற்படும் திடீர் மற்றும் தன்னிச்சையற்ற தசை அதிர்வு எனக் கூறும் அமெரிக்காவின் தேசிய தூக்க அமைப்பு பெரும்பாலும் பலருக்கு இது மிக இயல்பாக ஏற்படுவதாகக் கூறுகிறது.
ஆனால் "எல்லா இடங்களிலும் இது இயல்பாக நடப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது" என்கிறார் மருத்துவர் சிந்துஜா.
அவரது கூற்றுப்படி, "இந்த தசை அதிர்வு எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் பெரியவர்களிடமே இவை அதிகமாகக் காணப்படுகிறது."
கடந்த 2016இல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, "ஹிப்னிக் ஜெர்க் வயது வேறுபாடுடின்றி அனைவருக்கும் சீரற்ற முறையில் ஏற்படலாம். ஆச்சரியப்படத்தக்க வகையில், 60 முதல் 70% பேர் வரை தங்கள் வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் இதை அனுபவித்திருப்பர்" என்று கூறுகிறது.
எனினும், "இது ஒவ்வொரு முறையும் தூக்கத்தில் நிகழும் ஒன்றல்ல. பெரும்பாலான நேரங்களில் இது நோய்களின் அறிகுறியாக இருப்பதில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் ஏற்படும் இந்த தசை அதிர்வுகள் நரம்பியல் கோளாறுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்" என்று அமெரிக்காவின் தேசிய உயிரித் தொழில்நுட்ப தகவல் மையம் (National Center for Biotechnology Information) கூறுகிறது.
"எப்போதாவது ஏற்படும் துடிப்புகள் இயல்பானவை என்றாலும், கடுமையான நிகழ்வுகள் வலிப்பு நோய், நரம்புச் சிதைவு நோய்கள் அல்லது மருந்துகளின் பக்க விளைவுகள் போன்ற அடிப்படைக் காரணங்களைக் குறிக்கலாம், எனவே மருத்துவப் பரிசோதனை அவசியமாகிறது " என்றும் என்.சி.பி.ஐ விவரிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கான காரணங்கள் என்ன?
பெரும்பாலான வேளைகளில் இதற்கு குறிப்பிட்ட காரணம் இருப்பதில்லை. ஆனாலும், சில காரணிகள் இதை அதிகரிக்கச் செய்யக்கூடும் என்கிறார் மருத்துவர் சிந்துஜா.
- தீவிர சோர்வு மற்றும் தூக்கமின்மை: மிகுந்த சோர்வுடன் இருப்பது அல்லது படுக்கையில் சரியான முறையில் படுக்காமல் இருப்பது இதற்குப் பொதுவான காரணமாகக் கருதப்படுகிறது.
- தூண்டும் காரணிகள்: அதிகமாக காபி அல்லது கஃபைன் எடுத்துக்கொள்வது, நிக்கோடின் எடுத்துக் கொள்வது போன்றவை தசை அதிர்வுகளைத் தூண்டலாம்.
- மன அழுத்தம்: அதிக மன அழுத்தம் இருக்கும்போது உடல் தளர்வாக இருக்க முடியாது. விழிப்புடன் இருக்கும் மூளை எளிதில் திடுக்கிடக்கூடும். நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் மனச்சோர்வுடனோ அல்லது மன அழுத்தத்துடனோ இருப்பது இதுபோன்ற தசை அதிர்வுகள் ஏற்படக் காரணமாக இருக்கக்கூடும்.
இதை தேசிய உயிரித் தொழில்நுட்ப மையத்தின் ஆய்வறிக்கைகளும் உறுதி செய்கின்றன. அமெரிக்காவின் தேசிய உயிரி தொழில்நுட்பத் தகவல் மையத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஆய்வு, "அதிகப்படியான மன அழுத்தம், பதற்றம், சோர்வு ஆகியவை தூங்கும்போது ஏற்படும் இந்த தன்னிச்சையான தசைத் துடிப்புகளின் அதிர்வெண்ணையும் தீவிரத்தையும் பெருமளவில் அதிகரிக்கக்கூடும்" என்கிறது.
இதையே அமெரிக்காவின் தேசிய தூக்க அமைப்பு, "மன அழுத்தம், பதற்றம் ஆகியவை மூளையின் நரம்பு மண்டலத்தையும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் அளவையும் உயர்வாகவே வைத்திருக்கின்றன. இதனால் விழிப்பு நிலையில் இருந்து ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சீராக மாறுவது கடினமாகிறது," என்கிறது.
அதேபோல, "நாள்பட்ட தூக்கமின்மை, பிற தூக்கக் கோளாறுகள் அல்லது ஒரு மோசமான இரவுத் தூக்கம் போன்றவற்றால் ஏற்படும் சிரமம் மற்றும் ஒட்டுமொத்தமாக சீரற்ற தூக்கம் ஆகியவை தூக்க இழப்பிற்கு வழிவகுக்கும். இவை உறக்கத்தில் திடீர் அதிர்வுகளின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்" என்கிறார் மருத்துவர் சிந்துஜா.

பட மூலாதாரம், Getty Images
இது எப்போது பிரச்னையாக மாறும்?
பெரும்பாலானவர்களுக்கு இது உறக்கத்தில் ஏற்படும் ஓர் உணர்வாகவே முடிந்துவிடும் எனக் கூறும் மருத்துவர் சிந்துஜா, சில அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதாவது,
- அடிக்கடியோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியிலோ அல்லது தினமுமோ தொடர்ச்சியாக தசை அதிர்வு ஏற்படுவது
- உறக்கத்தில் வலிப்பு ஏற்படுவது போன்ற அறிகுறி
- அடிக்கடி உறக்கத்தில் உளறுவது அல்லது முனகுவது
- உறக்கத்தில் வாயில் நுரை வருவது
- உறக்கத்தில் தசைகள் இறுகிக்கொள்வது
- உறக்கத்தில் நம்மையே அறியாமல் சிறுநீர் கழிப்பது
இந்த அறிகுறிகள் அடிக்கடி தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் அவர். ஏனென்றால் "இவை நாள்பட்ட நரம்பியல் பிரச்னைக்கான முன் அறிகுறியாகக்கூட இருக்கலாம். இவையெல்லாம் டிமென்ஷியா அல்லது வலிப்பு நோய்க்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாகக்கூட இருக்கலாம்" என்கிறார் மருத்துவர் சிந்துஜா.
ஆக, "ஹிப்னிக் ஜெர்க் என்பது ஒரு பொதுவான, இயல்பான நிகழ்வு. இது ஏற்படுவது எந்த உடல்நலப் பிரச்னையையும் குறிக்காது. ஆனால், இது அடிக்கடி அல்லது தீவிரமாக நடந்து தூக்கத்தைப் பாதிக்குமானால், மருத்துவரை அணுகலாம். தேவைப்பட்டால், மருத்துவ நிபுணர்கள் சிறந்த தூக்கத்திற்கு உதவும் மருந்துகளையும் பரிந்துரைக்க முடியும்," என்று விளக்கினார் நரம்பியல் மருத்துவர் சிந்துஜா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























