மும்பை: முஹர்ரம் ஊர்வலத்தில் 'விஷ மாத்திரை' விநியோகித்த நபர் கைது - 14,900 மாத்திரைகள் பறிமுதல்

- எழுதியவர், அல்பேஷ் கர்கரே
- பதவி, பிபிசி மராத்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மும்பையில் முஹர்ரம் ஊர்வலத்தின் போது எலி விஷம் கொண்ட மாத்திரைகளை விநியோகித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கூட்டத்தில் இந்த மாத்திரைகளை விநியோகித்து வந்த நபரின் நடமாட்டம் சந்தேகத்திற்கிடமாக இருந்ததை அடுத்து, பைகுல்லா போலீசார் அவரைக் கைது செய்தனர்.
அந்த மாத்திரைகள் வலி நிவாரணிகள் என்று அந்த நபர் கூறிய போதிலும், அவற்றை உட்கொண்ட ஒருவருக்கு வாந்தியும் குமட்டலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
என்ன விவகாரம்?
குற்றம் சாட்டப்பட்டவர் ஃபையாஸ் நிசார் பிரேம்ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 39 வயதான அவர், புனே விமான் நகரைச் சேர்ந்தவர்.
பிஎன்எஸ் பிரிவுகள் 109, 110 மற்றும் 123 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை மண்டலம்-1 இன் துணைக் காவல் ஆணையர் ஜெயந்த் மீனா கூற்றுப்படி, 'நேற்று (ஜூன் 27) நடைபெற்ற ஊர்வலத்தின் போது மாத்திரைகளை விநியோகித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒருவரை பைகுல்லா போலீசார் கைது செய்தனர். அந்த மாத்திரைகள் வலி நிவாரணிகள் என்று அந்த நபர் கூறினார். இருப்பினும், மாத்திரைகளில் ஒன்றை உட்கொண்ட நபருக்கு வாந்தி போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.'
காவல்துறையின் உடனடி நடவடிக்கையால் இந்த மாத்திரைகள் மேலும் விநியோகிக்கப்படுவது தடுக்கப்பட்டது என்றும் ஜெயந்த் மீனா கூறினார்.
பாதிக்கப்பட்ட நபர் தற்போது ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டார். அவரது புகாரின் அடிப்படையில், பைகுல்லா காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டம், 2023 இன் பிரிவு 123 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
14,900 மாத்திரைகள் பறிமுதல்
காவல்துறையினரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இதுவரை 14,900 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏஎன்ஐ செய்தி முகமையின் படி, "காலை 4 மணியளவில், சல்மான் என்ற நபர் இந்த மாத்திரைகளில் ஒன்றை உட்கொண்ட பிறகு வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்படத் தொடங்கினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், சந்தேகத்திற்கு இடமான நபரைத் தேடிப் பிடித்து கைது செய்தனர்."

"ஊர்வலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டம் இது என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார். 50 கிலோ துத்தநாக பாஸ்பைடு மற்றும் 30,000 காலியான மாத்திரைகளை வாங்கி, மும்பையில் தங்கியிருந்த 15 நாட்களில் அவற்றை நிரப்பியுள்ளார். வலி நிவாரணிகள் என்று கூறி அவற்றை விநியோகிக்க அவர் திட்டமிட்டிருந்தார்" என்றும் ஜெயந்த் மீனா கூறினார்.
"மும்பை போலீசாரின் விழிப்புணர்வு காரணமாக ஒரு பெரிய விபத்தும், அதனால் ஏற்படக்கூடிய உயிர் இழப்பும் தவிர்க்கப்பட்டது. இதுவரை 14,900 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, மீதமுள்ள மாத்திரைகள் மற்றும் ரசாயனங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது."
"குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் பெயிண்ட் தொழிலில் உள்ளவர். தனது தொழில் மூலமாக ரசாயனங்களைப் பெற்றுள்ள அவர், காலி கேப்சூல்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அவரது வெளிநாட்டுப் பயணத் தொடர்புகள் மற்றும் மும்பையில் அவருக்கு உதவியிருக்கக் கூடிய கூட்டாளிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் வாரிஸ் பதான் கூறுகையில், "நானும் அந்த ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தேன். அதுபோன்ற ஒன்று எனக்கும் நடந்திருக்கலாம். ஒருவேளை யாராவது இதேபோல் என்னிடமும் வந்திருக்கலாம். அல்லாவுக்கு நன்றி, எனக்கு யாரும் அப்படி ஒரு மாத்திரையையோ அல்லது கேப்சூலையோ கொடுக்கவில்லை. நானும் எதையும் வாங்கவில்லை" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "ஆனால் இது மிகுந்த கவலைக்குரிய விஷயம், இது குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்கள் விஷயத்திலும் இதேபோன்ற ஒன்று நடக்கத் திட்டமிடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. நான் அங்கு இருந்தேன், எனது வீடியோவை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அது எல்லா இடங்களிலும் வைரலாகி வருகிறது. நான் அங்கு இருந்தேன். நமது காவல்துறை இணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), ஒட்டுமொத்த போலீஸ் படையும் அங்கு இருந்தது மற்றும் பல சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பலரும் அங்கு இருந்தனர்" என்றார்.

துத்தநாக பாஸ்பைடு என்றால் என்ன?
துத்தநாக பாஸ்பைடு என்பது எலிகள், சுண்டெலிகள் மற்றும் பிற கொறித்துண்ணிகளைக் கொல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதியியல் கலவையாகும்.
இது விவசாயம் மற்றும் தானியக் களஞ்சியங்களில் ஒரு கொறித்துண்ணிகளை நெருங்க விடாமல் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
துத்தநாகம் (Zn) மற்றும் பாஸ்பரஸ் (P) ஆகியவை சேர்ந்த கலவையே துத்தநாக பாஸ்பைடு (Zn₃P₂) ஆகும். இது அடர் சாம்பல் அல்லது கருப்பு தூள் அல்லது துகள்களாகக் காணப்படுகிறது.
இது வயிற்றுக்குள் செல்லும்போது என்ன நடக்கும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, துத்தநாக பாஸ்பைடு வயிற்று அமிலத்துடன் வினைபுரிந்து, பாஸ்பீன் எனப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுவை உருவாக்குகிறது.
இந்த வாயு உடலின் செல்கள் ஆற்றலை உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது. இது இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
துத்தநாக பாஸ்பைடு முக்கியமாகப் பின்வருவனவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது:
- விவசாயத்தில் பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகள் மற்றும் சுண்டெலிகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது.
- தானியக் களஞ்சியங்கள், விவசாய நிலங்கள், தோட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலும், இந்த பொருள் தானியங்கள் அல்லது தீவனங்களுடன் கலக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
துத்தநாக பாஸ்பைடை தற்செயலாக விழுங்கினாலோ அல்லது பாஸ்பீன் வாயுவை சுவாசித்தாலோ அது மரணத்தை விளைவிக்கலாம்.
பல நாடுகளில், இந்த ரசாயனத்தின் பயன்பாடு கடுமையான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளது. இது பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்காது.
மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
துத்தநாக பாஸ்பைடு எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? அது உடலுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது? என்பது குறித்து மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பூஷன் ரொகாடே பிபிசி மராத்தியிடம் கூறுகையில், "துத்தநாக பாஸ்பைடு என்பது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதியியல் கலவையாகும்" என்றார்.
"இது சுண்டெலிகள், எலிகள் மற்றும் பிற பூச்சிகளைக் கொல்ல 'எலி விஷமாகப்' பயன்படுத்தப்படுகிறது.
இது வழக்கமாக கருப்பு அல்லது சாம்பல் நிறத் தூள் வடிவில் இருக்கும். இருப்பினும், அதன் பயன்பாடு மற்றும் தோற்றத்தைப் பொறுத்து சந்தையில் சில வெவ்வேறு வடிவங்களில் இது கிடைக்கிறது."
இதன் பயன்பாடுகள் குறித்து மருத்துவர் பூஷன் ரொகாடே கூறுகையில், "இது எலிகளைக் கட்டுப்படுத்தவும், கிடங்குகள், தானியக் களஞ்சியங்கள் மற்றும் வயல்களுக்குள் அவை நுழைவதைத் தடுக்க பூச்சிக்கொல்லியாக அல்லது எலிக்கொல்லியாகவோ பயன்படுத்தப்படுகிறது" என்றார்.
"இது மனித உடலுக்கும் மற்ற செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது"என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இது உடலுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பது பற்றி மருத்துவர் ரொகாடே கூறுகையில், "இந்த ரசாயனம் வயிறு வழியாக உடலுக்குள் நுழைந்த பிறகு அல்லது ஈரப்பதத்துடன் தொடர்பு கொண்ட பிறகு, அது 'பாஸ்பீன் வாயுவை' உருவாக்குகிறது, இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது" என்றார்.
இந்த வாயு உடலின் செல்கள் ஆக்ஸிஜனைப் பயன்படுத்துவதைத் தடுத்து, பல உறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. இது வாந்தி, மூச்சில் பூண்டு போன்ற வாசனை, நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறைந்த அளவில் உட்கொண்டால் கூட இது மரணத்தைக் விளைவிக்கக் கூடும்.
"இதற்கு என்று குறிப்பிட்ட மாற்று மருந்து எதுவும் இல்லை. எனவே, நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தேவையான ஆதரவு சிகிச்சை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ரசாயனத்தை குழந்தைகள் மற்றும் உணவுப் பொருட்களிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். தற்செயலாக விழுங்கினாலோ அல்லது விஷம் என்று சந்தேகிக்கப்பட்டாலோ, வாந்தியைத் தூண்ட முயற்சிக்கக் கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நோயாளியை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்" என்றும் மருத்துவர் ரொகாடே குறிப்பிட்டார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























