தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து இறங்குமுகம்: தீபாவளி வரை இந்த சரிவு தொடருமா?

பட மூலாதாரம், Getty Images
உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவும் சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 117 டாலரை எட்டியுள்ள சூழலில், அக்டோபர் 23 அன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவைச் சந்தித்தன.
இந்திய சந்தையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் கீழே சரிந்தது.
சர்வதேச சந்தையில், 'கோமெக்ஸ்' (Comex) தளத்தில் தங்கத்தின் எதிர்கால ஒப்பந்த விலை ஒரு அவுன்ஸிற்கு சுமார் 4,030 டாலராகவும், வெள்ளி விலை ஒரு அவுன்ஸிற்கு சுமார் 54 டாலராகவும் இருந்தது.
இந்திய உள்நாட்டுச் சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), தங்கத்தின் எதிர்கால ஒப்பந்த விலை 10 கிராமுக்கு சுமார் 1,42,300 ரூபாயாகவும், வெள்ளி விலை கிலோவுக்கு சுமார் 1,96,000 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டன.
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிந்துள்ளது.
"எண்ணெய் விலை, வட்டி விகிதங்கள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் நிலைப்பாடு குறித்த கவலைகளால் தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது" என்று டிடி செக்யூரிட்டீஸின் (TD Securities) மூத்த கமாடிட்டி வியூக நிபுணர் ரையன் மெக்கே, ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். சந்தையில் முதலீட்டுச் சூழலும் சாதகமற்ற நிலையில் உள்ளது.
ப்ளூம்பெர்க் தனது செய்தியில், "இந்த வாரம் விலைமதிப்பு மிக்க உலோகங்களின் விலை நான்கு சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத் தொடக்கத்திற்குப் பிறகு, ஒரு வாரத்தில் ஏற்படும் மிகப்பெரிய சரிவு இதுவாகும். அபாயங்களைத் தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்கத்தை விற்பனை செய்வதால், தங்கம் தற்போது சரிவைச் சந்திக்கும் நிலையில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
அவரது கூற்றுப்படி, "மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் எரிசக்தி விலைகளை உயர்த்தியுள்ளன. அதே நேரத்தில், முதலீட்டாளர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதைக் குறைத்துவிட்டு, அமெரிக்கப் பத்திரங்களை நோக்கித் திரும்புகின்றனர். இதனால் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் லாப விகிதம் அதிகரித்துள்ளது, இது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக, பத்திரங்களின் லாப விகிதம் அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலை குறையும்."
தங்கத்தின் விலை சரிந்தாலும், எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் (ETFs) முதலீடு செய்யப்பட்டுள்ள தங்கத்தின் அளவில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
ப்ளூம்பெர்க் கண்காணிக்கும் கோல்ட் இடிஎஃப்களில், கடந்த 14 வாரங்களாகத் தொடர்ந்து முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. தங்கத்தின் விலை சரிந்து வரும் சூழலுக்கு இது முற்றிலும் முரணான ஒரு போக்காகும்.
சாக்ஸோ பேங்க் ஏ/எஸ் நிறுவனத்தின் கமாடிட்டி வியூகத் தலைவர் ஓலே ஹேன்சன் தனது குறிப்பில், "புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவு ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, நீண்டகால முதலீட்டாளர்கள் இடிஎஃப்மூலம் தொடர்ந்து தங்கத்தைச் சேமித்து வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது
வெள்ளி விலை வெள்ளிக்கிழமை 7.5 சதவீதம் சரிந்தது. ஆகஸ்ட் மாதத்தில் கிலோவுக்கு ₹2,48,800 ஆக இருந்த விலை, தற்போது ₹56,000 குறைந்துள்ளது.
வெள்ளி விலை அதன் உச்ச அளவான கிலோவுக்கு ₹4,20,048-லிருந்து பாதிக்கும் மேலாகக் குறைந்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் வெள்ளி விலை 170 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், தற்போது இந்த கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையிலும் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 10 கிராமுக்கு ₹1,64,773 என்ற உச்ச அளவை எட்டியிருந்த தங்கம் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது.
எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் குறித்த கவலைகளையும், வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தையும் அதிகரித்துள்ளது.
ஸே கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்( Zay Capital Markets) நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி நயீம் அஸ்லாம் தனது குறிப்பில், "அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் மீதான வருவாய் அதிகரிப்பு, டாலர் வலுவடைதல் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலருக்கு மேல் உயர்ந்ததால் ஏற்பட்டுள்ள பணவீக்க அச்சங்கள் ஆகியவையே இந்தச் சரிவுக்குக் காரணம் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
பத்திரங்களின் மீதான அதிக வருவாய் மற்றும் அமெரிக்க டாலரின் வலிமை தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் போன்ற விலைமதிப்புமிக்க உலோகங்களை வைத்திருப்பது குறைவான கவர்ச்சிகரமானதாக மாறுகிறது; ஏனெனில், இவற்றிலிருந்து வழக்கமான வட்டி வருமானம் கிடைப்பதில்லை.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் தங்கம் விலை இன்று அதிகமே
இந்திய பொன் மற்றும் நகை வணிகர் சங்கத்தின் செயலாளர் குமார் ஜெயின் கூறுகையில், "கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், மக்கள் தங்கத்தின் மூலம் நல்ல லாபத்தைப் பெற்றுள்ளனர். இது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையைத் தக்கவைத்துள்ளது."
அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இது பண்டிகைக் காலம். தீபாவளி நெருங்கி வருவதால், மக்கள் அதிக அளவில் நகை வாங்குகின்றனர். பழைய தங்கத்தை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டுவரும் போக்கும் கணிசமாக அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, கடந்த ஆண்டு தசரா பண்டிகையின் போது 10 கிராம் தங்கத்தின் விலை ₹1,16,000 ஆக இருந்தது; இந்த ஆண்டு தசரா பண்டிகையின் போது அதன் விலை 10 கிராமுக்கு ₹1,49,000 ஆக உள்ளது.
குமார் ஜெயின் மேலும் கூறுகையில், "விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது" என்று குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "திருமண சீசன் வரவிருப்பதால், மக்கள் நகைகள் செய்வதற்காகத் தங்கத்தை வாங்கி வருகின்றனர். இதுவே தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய காரணமாகும்" என்று தெரிவித்தார்.
இருப்பினும், வெள்ளி முதலீட்டில் மக்களின் அனுபவம் மிகவும் மோசமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
தீபாவளி வரை இந்த சரிவு தொடருமா?
அதே சமயம், மத்திய வங்கிகளின் கொள்முதல் மற்றும் கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் நிலவும் வலுவான தேவை ஆகியவை, தங்கத்தின் விலை சரிவைக் கட்டுப்படுத்தின.
XS.com சந்தை ஆய்வாளர் லின் டிரான் தனது குறிப்பில், "தங்கத்திற்கான வாங்கும் தேவையையும், உயர் வட்டி விகிதங்களால் ஏற்படும் அழுத்தத்தையும் சமநிலைப்படுத்த சந்தை முயற்சித்துக் கொண்டிருக்கிறது. விற்பனை அழுத்தம் சற்று குறைந்துள்ள போதிலும், தற்போதைய வாங்கும் தேவை, விலையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வலுவாக இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
தொழில்துறை பயன்பாட்டில் வெள்ளி முக்கிய பங்கு வகிப்பதால், உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்படும் மந்தநிலை அதன் விலையைப் பாதிக்கிறது என்றும், இதனால் வெள்ளி கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாகிறது என்றும் அஸ்லம் கூறினார்.
தொழில்துறை தேவை அதிகரிப்பதும், வெள்ளி விநியோகத்தில் உள்ள கட்டுப்பாடுகளும், அமெரிக்காவின் இறுக்கமான பணவியல் கொள்கையினால் ஏற்படும் அழுத்தத்தை ஈடுகட்ட முடியுமா என்பதைப் பொறுத்தே வெள்ளியின் விலை அமையும் என்று 'ஸே கேபிடல்' எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
பணவீக்கம் தங்கத்தின் மீது இருமுனை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஃபோரெக்ஸ்.காம் (Forex.com) சந்தை ஆய்வாளர் ஃபவாத் ரசாக்ஸாதா குறிப்பிட்டுள்ளார்.
"கோட்பாட்டு ரீதியாக, விலைகள் தொடர்ந்து உயரும்போது, பாதுகாப்பான முதலீடாக தங்கத்திற்கான தேவை அதிகரிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
"ஆனால், பணவீக்கம் நீண்ட காலம் நீடித்து, அதன் விளைவாக மத்திய வங்கிகள் இறுக்கமான பணவியல் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது உண்மையான மற்றும் பெயரளவு வட்டி விகிதங்களை உயர்த்தும். இது தங்கத்தின் மீதான ஈர்ப்பைக் குறைக்கக்கூடும்."

பட மூலாதாரம், Getty Images
கச்சா எண்ணெய் விலைகளின் தாக்கம்
கச்சா எண்ணெய் விலை தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை, பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் மறைமுகமாகப் பாதிக்கின்றன.
இருப்பினும், எண்ணெய் விலை உயர்ந்தால் மதிப்பு மிக்க உலோகங்களின் விலை குறையும் என்று எந்த ஒரு நிலையான விதியும் இல்லை.
எண்ணெய் விலை உயரும்போது, எரிபொருள், போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கின்றன. பணவீக்கம் நீண்ட காலத்திற்கு அதிகமாக நீடிக்கக்கூடும் என்று சந்தைகள் கவலைப்படத் தொடங்குகின்றன.
மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைப்பதைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்வாகவே வைத்திருக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்; இது கடன் பத்திரங்களின் மீதான வருவாயை அதிகரிக்கிறது. தங்கம் எந்த வட்டியையும் ஈட்டித் தராததால், இத்தகைய சூழல் தங்கத்தின் மீதான ஈர்ப்பைக் குறைக்கக்கூடும்.
இதற்கு மாறான ஒரு சூழலும் உள்ளது: எண்ணெய் விலை உயரும்போது, பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் குறித்த அச்சம் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதி அதை நோக்கித் திரும்பலாம்.
இத்தகைய சூழலில், வட்டி விகித உயர்வுக்கான அழுத்தம் குறைவாக இருந்தால், தங்கத்தின் விலை உயரக்கூடும்.
வெள்ளி என்பது ஒரு விலைமதிப்பு மிக்க உலோகமாகவும், அதே சமயம் தொழில்துறைக்குத் தேவையான மூலப்பொருளாகவும் உள்ளது. இது மின்னணு சாதனங்கள், சூரிய ஆற்றல் தகடுகள் மற்றும் பிற உற்பத்தித் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில், உலகளாவிய வெள்ளித் தேவையில் சுமார் 56 சதவீதம் தொழில்துறை பயன்பாட்டிலிருந்தே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எனவே, எண்ணெய் விலை உயர்வு உற்பத்திச் செலவுகளை அதிகரித்து, உற்பத்தி நடவடிக்கைகளை மந்தமாக்கினால், வெள்ளியைப் பொறுத்தவரை கூடுதல் கவலை ஒன்று எழலாம்; அதாவது, தொழில்துறை தேவை குறைவது.
சந்தையானது இறுக்கமான பணவியல் கொள்கையையும், அதே வேளையில் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலையையும் எதிர்பார்க்கும் போது, தங்கத்தை விட வெள்ளியின் விலை அதிக அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும்.
இருப்பினும், இது தேவை தொடர்பான ஒரு சாத்தியமான இடர் மட்டுமே.
எண்ணெய் விலைகள், விலைமதிப்பு மிக்க உலோகங்களின் விலைகளை நேரடியாகக் கட்டுப்படுத்துவதில்லை.
உண்மையில், எண்ணெய் விலை உயர்வு என்பது வட்டி விகித எதிர்பார்ப்புகள், பணவீக்கத்தைச் சரிசெய்த பிறகான கடன் பத்திரங்களின் வருவாய் மற்றும் வெள்ளியைப் பொறுத்தவரை தொழில்துறை செயல்பாடுகள் ஆகியவற்றில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கவனிப்பது மிக முக்கியம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































