செம்மணி மனிதப் புதைகுழி: மீட்கப்பட்ட 583 எலும்புகள் பற்றிய புதிய ஆய்வறிக்கையால் சர்ச்சை எழுவது ஏன்?

- எழுதியவர், ஜெ. பரணீதரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இலங்கையில் மிகவும் பாரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியானது, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புதிய அபிவிருத்தி வேலைகளுக்காக செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் குழிகள் வெட்டும்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த பழைய மனிதப் புதைகுழிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக 110 நாட்கள் நடைபெற்ற அகழ்வுப் பணிகளின்போது கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை 583 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இந்த அகழ்வுப்பணிகளுக்கான ஆய்வுகளை இலங்கையின் புகழ்பெற்ற தொல்லியல் நிபுணரும் பல்கலைக்கழக பேராசிரியருமான ராஜ் சோமதேவ தலைமையிலான குழு மேற்கொண்டிருந்தது.
ஏற்கனவே அகழ்வுப்பணிகள் நடைபெறும் இடம் தவிர்த்து மேலும் பல இடங்களில் எலும்புக்கூடுகள் இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்திருந்தது. எனவே அகழ்வுப்பணிகளை எக்காரணம் கொண்டும் இடைநிறுத்தாது, தொடர்ச்சியாக சந்தேகத்துக்குரிய ஏனைய இடங்களிலும் அகழ்வுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என யுத்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் அரசியல்வாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தன.
எனினும் நீதிமன்றம் வழங்கியிருந்த அனுமதி ஆகஸ்ட் 19 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்குதல் உட்பட சில காரணங்களினால் அகழ்வுப்பணிகள் மேற்கொண்டு நடைபெறவில்லை என அறியமுடிகிறது.

பட மூலாதாரம், Wikipedia
தொல்லியல் ஆய்வு நிபுணர்களின் இடைக்கால ஆய்வு அறிக்கை கூறுவது என்ன?
செம்மணி மனிதப் புதைகுழி குறித்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், அக்டோபர் 19 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, செம்மணி புதைகுழியினை ஆய்வு செய்த தொல்லியல் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவ சமர்ப்பித்த இடைக்கால ஆய்வு அறிக்கையில்,
''செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளவர்களின் பின்னணியில், தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு என்பன காரணமாக இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. அத்துடன் இந்தப் புதைகுழியானது சமய ரீதியிலான இறுதிச் சடங்குகள் இடம்பெற்றுள்ளன என்பதற்கான சில குறிப்பிடத்தக்க ஆதாரங்களையும் கொண்டுள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய அறிக்கையில் முக்கியமான அம்சமாக, ''இதுவரை கிடைத்த சான்றுகளின் அடிப்படையில், செம்மணிப் புதைகுழியானது உலகின் பல பகுதிகளில் அவதானிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழிகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காண்பிக்கின்றது. குறிப்பாக சரியான முறையில் அடக்கம் செய்யப்படும் முறைமைகளுடன் ஒப்பிடுகையில், அந்தப் புதைகுழி குறிப்பிட்டுக் கூறக்கூடிய அதிக ஒற்றுமைகளை வெளிப்படுத்துகின்றது. இறந்தவர்களின் அதிக அடர்த்தியானது சடலங்கள் எந்தச் சூழ்நிலையில் அடக்கம் செய்யப்பட்டன என்பதை முறையாகவும், துல்லியமாகவும் நிரூபிக்கவில்லை. அவ்வாறு நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரபூர்வ விடயங்கள் தென்படவில்லை.
செம்மணிப் புதைகுழியில் இருந்து அதிகளவான எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டமைக்குக் காரணம் இதன் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு என்பன இருந்திருக்கலாம். ஆதலால் சடலங்களை முறையாகவும் விரைவாகவும் அப்புறப்படுத்த வேண்டிய தேவை அந்நேரத்தில் ஏற்பட்டிருக்கலாம். இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அதிகளவில் மீட்கப்படாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் இதுவரை மீட்கப்பட்ட சில தடயங்கள், அங்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்டவர்கள் எப்போது உயிரிழந்தார்கள், அவர்களது மரணங்களுக்கான காரணங்கள் என்ன, அவர்கள் எந்தச் சூழ்நிலையில் புதைக்கப்பட்டார்கள் என்பவற்றை இந்த இடைக்கால அறிக்கை உறுதியாகக் கண்டறியவில்லை. தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு தொடர்பான கருத்துகளும் சாத்தியக்கூறுகளாகவே முன்வைக்கப்பட்டுள்ளன. அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் இடம்பெற்றிருக்கக் கூடிய சாத்தியத்தை அறிக்கை நிராகரிக்கவில்லை.

தற்போதைய அறிக்கையின்பின் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு முக்கியமான பின்னணி என்ன ?
பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான தொல்லியல் நிபுணர் குழுவினர், இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட 583 எலும்புக்கூடுகளில் சுமார் 150 வரையிலான எலும்புக்கூடுகளையும் அவற்றுடன் சேர்த்து கண்டெடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களையும் ஆய்வு செய்து இடைக்கால அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
19ஆம் திகதி இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின்போது மேற்படி இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ள பேராசிரியர் ராஜ் சோமதேவ, இதற்கு முன்னர் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதியும் நீதிமன்றில் ஒரு இடைக்கால ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். அந்த அறிக்கையில் மிகவும் தெளிவாக, யாழ் செம்மணியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிப் பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமைக்கான தடயங்கள் உள்ளன எனத் தான் கருதுவதாகவும், வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்வதுபோன்று அங்கிருந்து மீட்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது.
கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு வெளியிட்டிருந்த அறிக்கையில், செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புத் தொகுதிகளின் அமைவிடம், அவை புதைக்கப்பட்டிருந்த ஆழம் உள்ளிட்ட தடயங்களின் அடிப்படையில், சட்டவிரோதமான புதைப்புகள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் இடம்பெற்றிருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், குற்றவியல் பொறுப்புக் குறித்து உறுதியான முடிவுக்கு வருவதற்கு மேலதிக விசாரணைகள் அவசியம் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியிருந்தது.
கடந்த வருட அறிக்கையில் இருந்து இறுதியாக சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான விடயங்கள் முற்றிலும் மாறுபடுவதே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக தொடர்ந்து இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான முரணான அறிக்கைகள் தமக்கு விசாரணைகள் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்புவதாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறுகின்றனர்.
இந்த விடயம் உள்ளூர் ஊடகங்களில் இருந்து சமூக ஊடகங்கள் வரை முக்கியமான பேசுபொருள் ஆகியுள்ளது.

இந்த அறிக்கை குறித்து மக்கள் பிரதிநிதிகள் கூறுவது என்ன ?
இதுகுறித்து பிபிசி தமிழுக்கு கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ''செம்மணிப் புதைகுழி என்பது தமிழர்களின் வரலாற்றில் மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்ந்ததற்கான ஒரு அடையாளம். அங்கே கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளில் பல அடித்து நொறுக்கப்பட்டு, மண்டையோடுகள் உடைக்கப்பட்டு, எலும்புகள் துண்டாக்கப்பட்டு, சித்திரவதை செய்ததற்கான ஆதாரங்களுடன் கிடைத்துள்ளதாக இதற்குமுன் வெளிவந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன."
"அத்துடன் ஆடைகளோ ஆபரணங்களோ இல்லாமலே எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பேராசிரியரின் புதிய அறிக்கையில் உள்ளது போன்று இயற்கை அனர்த்தம் காரணமாகவோ அல்லது தொற்று நோய் காரணமாகவோ இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருந்தால், எவ்வாறு அனைவரும் ஆடைகள் இன்றி புதைக்கப்பட்டிருப்பார்கள் ? தமிழர்களது பண்பாட்டின்படி உடை மற்றும் ஆபரணங்கள் இன்றி உடல்களைப் புதைப்பது மரபு இல்லை. இவ்வாறான நம்பகத் தன்மையற்ற முன்னுக்குப் பின் முரணான ஆய்வு அறிக்கைகள் காரணமாகவே, சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கு ஒரு நீதியைப் பெற்றுத் தராது என நாம் ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறோம். இதனாலேயே நாம் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுக்கின்றோம்'' எனத் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில், பேராசிரியர் ராஜ் சோமதேவ இறுதியாக சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையில், ஏன் எலும்புக் கூடுகளில் ஆடைகள் எதுவும் இருக்கவில்லை என்ற விடயத்துக்கு பின்வருமாறு ஒரு குறிப்பு உள்ளது.
மேலும், ''செம்மணியில் அகழாய்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எதிலும், எலும்பு எச்சங்களுடன் இணைந்த நிலையில் நேரடியாக தொடர்புடைய, சிதைவடையாத, ஆடைகளுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. இருப்பினும், துணிப் பொருட்கள் எஞ்சியிருக்கவில்லை என்பதற்காக, இறந்தவர்கள் ஆடையின்றி அடக்கம் செய்யப்பட்டனர் என்று பொருள் கொள்ளக்கூடாது. துணிகள் உள்ளிட்ட கரிமப் பொருட்கள், சாதகமற்ற அடக்கச் சூழல்களில் சிதைவடையக்கூடியவை. அவை பாதுகாக்கப்படுவதில் அவற்றைச் சூழ்ந்துள்ள மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், ஈரப்பதத்தின் அளவு, நுண்ணுயிர்களின் செயற்பாடு மற்றும் அடக்கம் செய்யப்பட்டதிலிருந்து இன்றையவரையிலான கால அளவு ஆகியன பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன."
"சில சந்தர்ப்பங்களில், மனித எலும்புக் கூடுகளுடன் தொடர்புடைய இடங்களில் பொத்தான்கள், பொத்தான்துளை வளையங்கள் மற்றும் ஆடைகளில் பயன்படுத்தப்படும் சிறிய உலோகப் பொருத்திகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. அவை குறைந்தபட்சம் சிலர் அடக்கம் செய்யப்பட்டபோது ஆடை அணிந்திருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலுச்சேர்க்கும் சான்றுகளாக அமைகின்றன. எனவே, செம்மணியில் சிதைவடையாத துணி எச்சங்கள் கிடைக்காத நிலையை, அடக்கம் செய்யப்பட்ட காலத்தில் ஆடைகள் இல்லாதிருந்ததற்கான உறுதியான சான்றாகக் கருதாமல், எச்சங்கள் காலப்போக்கில் சிதைவடைந்ததன் விளைவாக ஏற்பட்ட தொல்லியல் அவதானிப்பாக கருத வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரும், காணாமற்போன தனது மகனை தேடி வரும் தாயாருமான கதிர்காமநாதன் கோகிலவாணி, ''பேராசிரியர் கூறுவது போன்று, இந்தப் புதைகுழி திட்டமிட்ட படுகொலையுடன் சம்பந்தப்படவில்லை எனின், சில உடல்கள் அமரவைக்கப்பட்ட நிலையிலும், குழந்தைகள் தமது பால்ப் போத்தலுடனும் புதைக்கப்பட்டிருப்பது எவ்வாறு? எங்காவது இயற்கையாக இறந்தவர்களை இவ்வாறு அடக்கம் செய்யும் முறை உள்ளதா ? உறவுகளை இழந்து தவிக்கும் எமது மனநிலையை இவ்வாறான அறிக்கையை வெளியிடும் பேராசிரியர் சிந்தித்துப் பார்க்கவேண்டும். கடந்த வருட ஆய்வு அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையில் அவருக்கு ஏதாவது புற அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நான் கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்.
இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை மீண்டும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பேராசிரியர் ராஜ் சோமதேவவின் முன்னுக்குப்பின் முரணான ஆய்வு அறிக்கைகள் தொடர்பில் அடுத்தவாரம் தமது ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் சார்பில் செம்மணிப் புதைகுழி வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் வி.எஸ். நிரஞ்சன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ''பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கையில் கூறுவதுபோல் பாரிய தொற்றுநோய் மரணங்களோ அல்லது இயற்கைப் பேரழிவோ இடம்பெற்று இவ்வாறு நூற்றுக்கணக்கில் மக்கள் புதைக்கப்பட்ட வரலாறு யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெறவில்லை. அவ்வாறு உண்மையில் இடம் பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அவ்வாறு அவர் குறிப்பிடவில்லை."
ஆனால் "இங்கே ஒரு பாரிய யுத்தம் நடைபெற்றது என்ற உண்மையை அவர் தனது அறிக்கையில் எங்கும் சுட்டிக்காட்டவில்லை. தொல்லியல் சார்ந்த நிபுணரான பேராசிரியர் ராஜ் சோமதேவ, எலும்புகள் தொடர்பில் எவ்வாறு ஒரு அறிக்கையை தயாரிக்க முடியும் என்பது தொடர்பிலும் எமக்கு கேள்விகள் உள்ளன. இவ்வாறான ஒரு ஆய்வறிக்கை எமக்கு மிகுந்த ஏமாற்றமாகவே உள்ளது. எமது சார்பில் தொல்லியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் ஆலோசனைகளுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்'' எனத் தெரிவித்தார்.
அத்துடன் கார்பன் பரிசோதனை மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகள் என்பன துரிதமாகவும் விரிவாகவும் நடத்தப்பட வேண்டும் என பல தரப்பினரும் கோரிவருகின்றனர்.

செம்மணிப் படுகொலைகளுடன் தொடர்புடையவரின் வாக்குமூலம்
இதேவேளை செம்மணிப் பகுதியில் தனது இராணுவப் பணிக்காலத்தில், உயர் இராணுவ அதிகாரிகளினால் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு, புதைப்பதற்காக தம்மிடம் உடல்கள் கையளிக்கப்பட்டதாக கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனது மனைவியினூடாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கடந்த வருடம் தெரிவித்திருந்தார். அத்துடன் உடல்களைப் புதைத்த இடங்களை நேரடியாக அடையாளம் காட்டவும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், மீளவும் வாக்குமூலம் பெற்றுகொள்வதற்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அனுமதி கோரிய நிலையில் அக்டோபர் 19 ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின்போது யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் தொடர்பான தடயவியல் ஆய்வுக்காக அடுத்த வாரமளவில் நிபுணர் குழு அமைக்கப்படும் என்று இந்த ஆய்வில் பணியாற்றிய சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்துவரும் நீதிமன்ற அமர்வுகளில் நடைபெறும் விசாரணைகள் மற்றும் அறிக்கைகளே இந்தப் பிரச்சனை தொடர்பில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வெளிக்கொண்டு வரும் என சம்பந்தப்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































