செளதியில் வேலைக்கு செல்லும் வங்கதேச பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது?

செளதி அரேபியாவில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
படக்குறிப்பு, செளதி அரேபியாவில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
    • எழுதியவர், ராகிப் ஹஸ்னத்
    • பதவி, பிபிசி நியூஸ் பங்களா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

செளதி அரேபியாவில் ஒரு பெண் உட்பட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி, வங்கதேசத்தில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, செளதி அரேபியாவில் பணியாற்றும் வங்கதேசப் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், வங்கதேசத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் செளதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஜோர்டான் உள்ளது.

அரசுத் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி வரை வங்கதேசத்தில் இருந்து 1 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

இவர்களில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் செளதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர்.

அதேநேரத்தில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 1,500க்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் வங்கதேசத்துக்குத் திரும்பியுள்ளனர். இவர்களில் சுமார் 1,000 பேர் செளதி அரேபியாவில் இருந்து திரும்பியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

நாடு திரும்பிய பெண் தொழிலாளர்களுடன் பணியாற்றும் அமைப்புகள், உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்கள், ஊதியம் வழங்கப்படாதது அல்லது முழுமையான ஊதியம் கிடைக்காதது, பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவையே பெரும்பாலான பெண்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதற்கான முக்கியக் காரணங்கள் என்று கூறுகின்றன.

அத்தகைய அமைப்புகளில் ஒன்றான புலம்பெயர் தொழிலாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (OKAP) தலைவர் ஷகிருல் இஸ்லாம், ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து வங்கதேசத்துக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை குறித்த முழுமையான தகவல்கள் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்.

"கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடு திரும்பிய பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், அவர்களில் 90 சதவீதம் பேர் உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக நாடு திரும்பியிருப்பதைக் கண்டறிந்தோம்," என்று பிபிசி பங்களாவிடம் அவர் தெரிவித்தார்.

செளதி அரேபியாவுக்கான வங்கதேச முன்னாள் தூதர் குலாம் மசீஹ், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு செளதி அரேபியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில் வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று கூறுகிறார்.

இந்த விவகாரங்கள் குறித்து வங்கதேசத்தின் புலம்பெயர்ந்தோர் நலத்துறை அமைச்சக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இது தொடர்பாக செளதி அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மட்டும் தெரிவித்தார்.

என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன?

நாடு திரும்பும் பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் செளதி அரேபியாவில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
படக்குறிப்பு, நாடு திரும்பும் பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் செளதி அரேபியாவில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

செளதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்தின் கீழ், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த மாற்றங்களின் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பயணம் செய்வதற்கும், தங்களது வேலையை மாற்றிக்கொள்வதற்கும் கூடுதல் சுதந்திரம் கிடைக்கும் என்று அப்போது செளதி அரேபியா தெரிவித்திருந்தது.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான விதிமுறைகளில் செளதி அரேபியா மாற்றங்களைக் கொண்டுவந்ததாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான செளதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்தது.

இந்த விதிமுறைகளின்படி, வேலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத பணிகளைச் செய்யுமாறு தொழிலாளர்களை முதலாளிகள் கட்டாயப்படுத்த முடியாது.

அதேபோன்று, மூன்றாம் தரப்பினருக்காகப் பணியாற்றுமாறு தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்துவதும், அவர்களது உடல்நலம், உடல் பாதுகாப்பு அல்லது கண்ணியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பணிகளில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இந்த விதிமுறைகள் நடைமுறையில் இருந்தபோதிலும், செளதி அரேபியாவில் பணியாற்றும் வங்கதேசப் பெண் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

வங்கதேசத்தில் இருந்து 1976ஆம் ஆண்டு முதல் செளதி அரேபியாவுக்குத் தொழிலாளர்கள் அனுப்பப்பட்டு வருவதாக, கடந்த ஆண்டு அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான பிஎஸ்எஸ் தெரிவித்திருந்தது.

அதன்பிறகு, வங்கதேசத்தைச் சேர்ந்த 30 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் செளதி அரேபியாவில் பணியாற்றியுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வங்கதேசத்துக்கு அதிக அளவில் பணம் அனுப்பப்படும் நாடாக செளதி அரேபியா உள்ளது.

ஆனால், கடந்த பத்தாண்டுகளின் தொடக்கத்தில் இருந்து, துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பெண் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் நாடு திரும்பிய விவகாரம் பரவலான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக 2015ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரண்டு ஆண்டுகளுக்கான அந்த ஒப்பந்தத்தின்படி, வீட்டுப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு மாதம் 800 செளதி ரியால் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் கட்டணமின்றி செளதி அரேபியாவுக்குச் செல்ல முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், நாடு திரும்பிய பெண் தொழிலாளர்கள் தெரிவித்த தகவல்களை மேற்கோள்காட்டிய தொண்டு நிறுவனங்கள், பல பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டின.

சில சந்தர்ப்பங்களில், ஊதியம் கேட்ட பெண்கள் துன்புறுத்தப்பட்டு, மீண்டும் வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்தன.

துன்புறுத்தல் சம்பவங்கள் ஏன் குறையவில்லை?

மற்ற நாடுகளைப் போலவே, வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலைக்காக செளதி அரேபியாவிற்குச் செல்கின்றனர்.
படக்குறிப்பு, மற்ற நாடுகளைப் போலவே, வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலைக்காக செளதி அரேபியாவிற்குச் செல்கின்றனர்.

செளதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா நகரங்களில் உள்ள வங்கதேசத் தூதரக வட்டாரங்களின்படி, போதிய பயிற்சியும் திறன்களும் இல்லாமல் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலைக்கு அனுப்பப்படுவது இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது.

செளதி அரேபியாவுக்கான வங்கதேச முன்னாள் தூதர் குலாம் மசீஹ், வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் அவர்களது நலன்களுக்கும் பாதுகாப்புக்கும் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிபிசி பங்களாவிடம் பேசிய அவர், "அந்த ஒப்பந்தத்தில் பல முக்கியமான அம்சங்கள் இடம்பெறவில்லை. அதன்பிறகு, தொலைதூர கிராமங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்த முகவர்கள், எந்தப் பயிற்சியும் அளிக்காமல் அவர்களை செளதி அரேபியாவுக்கு அனுப்பத் தொடங்கினர். இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது."

"கிராமங்களில் இருந்து சென்ற, அங்குள்ள சூழலை அறியாத பல பெண்கள் செளதி அரேபியாவுக்குச் சென்ற பிறகு சிரமங்களை எதிர்கொண்டனர். அவர்களுக்காக நாங்கள் பாதுகாப்பான தங்குமிடம் ஒன்றை ஏற்படுத்தினோம். சிறிது காலத்துக்குப் பிறகு, அதிக எண்ணிக்கையிலான வங்கதேசப் பெண்கள் அந்தத் தங்குமிடத்துக்கு வரத் தொடங்கினர்," என்றார்.

பெண் தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிநாடுகளுக்குப் பெண் தொழிலாளர்களை அனுப்புவதை இந்தோனீசியா நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பெண் தொழிலாளர்களை அனுப்புமாறு பிலிப்பைன்ஸ், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை செளதி அரேபியா அணுகியதுடன், அந்த நாடுகளுக்கு அழுத்தமும் கொடுத்தது.

ஆனால், மாதம் 1,700 ரியாலுக்கும் குறைவான ஊதியத்துக்குத் தொழிலாளர்களை அனுப்ப நேபாளமும் இலங்கையும் மறுத்துவிட்டன.

மறுபுறம், பிலிப்பைன்ஸ் பெண் தொழிலாளர்கள் முதலாளிகளின் வீடுகளில் தங்குவதற்குப் பதிலாக, செளதி நிறுவனங்கள் நடத்தும் தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான ஒப்பந்தத்தை அந்நாடு செளதி அரேபியாவுடன் மேற்கொண்டது.

இந்தச் சூழலில், செளதி அரேபியாவின் அழுத்தத்தால், மாதம் 850 ரியால் ஊதியத்தில் வீட்டுப் பணியாளர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வங்கதேசம் ஒப்புக்கொண்டது.

பின்னர், வங்கதேசப் பெண் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான பிரச்னை எழுந்தபோது, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செளதி அரேபியாவின் அப்போதைய தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை இணை அமைச்சர், வங்கதேசத் தூதரகப் பிரதிநிதிகளிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

செளதி முதலாளிகள் மீது வங்கதேசத் தொழிலாளர்கள் ஏன் புகார் அளிக்கிறார்கள், உடனடியாகத் தாயகம் திரும்ப வேண்டும் என்று ஏன் கோருகிறார்கள் என்பதே அவரது அதிருப்திக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

அப்போது செளதி அரேபியாவுக்கான வங்கதேசத் தூதராக இருந்த குலாம் மசீஹ் இதுகுறித்துப் பேசுகையில், "போதிய பயிற்சியும் மொழித்திறனும் இல்லாததே பிரச்னைக்குக் காரணம் என்று அப்போது செளதி அதிகாரிகள் கூறினர்."

"வீட்டுப் பணியாளர்களை அனுப்புவதற்கு முன்பு, அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் வசதிகள் குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும், வீடுகளில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்களை இயக்குவதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நாங்கள் பேசியிருந்தோம். ஆனால், ஆட்சேர்ப்பு முகமைகள் காரணமாக இந்த விஷயங்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை," என்றார்.

"பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுக்கு இருப்பதைப் போல, வங்கதேசத் தொழிலாளர்களுக்கும் தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்ய முயன்றோம். ஆனால், பல்வேறு காரணங்களால் அதைச் செயல்படுத்த முடியவில்லை," என்றும் குலாம் மசீஹ் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூலை 9ஆம் தேதி, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், செளதி அரேபியாவில் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் பெண் தொழிலாளர்கள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொண்ட சம்பவங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

அதிக நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுதல், சுரண்டல், மோசமான நடத்தை மற்றும் சில சந்தர்ப்பங்களில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

'அவர்களது வீடுகளுக்குள் நுழைந்ததும், நாங்கள் மனிதர்களாகவே கருதப்படுவதில்லை' என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில், துன்புறுத்தல்களை எதிர்கொண்ட 19 பெண்களிடம் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் பேசியபோது அவர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அந்தப் பெண்களில் பெரும்பாலானோர் 2023 முதல் 2026ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்கள்.

இதற்கிடையே, 1998ஆம் ஆண்டிலேயே செளதி அரேபியாவுக்குப் பெண் தொழிலாளர்களை அனுப்புவதற்கு நேபாளம் தடை விதித்திருந்தது.

அதே ஆண்டு, குவைத்தில் துன்புறுத்தலுக்கு ஆளான நேபாளத்தைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்நாட்டில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, செளதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குப் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு நேபாள அதிகாரிகள் தடை விதித்தனர்.

பின்னர், 2022ஆம் ஆண்டு அந்தத் தடை நீக்கப்பட்டது. இருப்பினும், நேபாளத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களை செளதி அரேபியாவுக்கு அனுப்புவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.

ஆனாலும், பல்வேறு வழிகளில் நேபாளப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக செளதி அரேபியாவுக்குச் செல்வதால், அங்கு அதிக எண்ணிக்கையிலான நேபாளப் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையே, செளதி அரேபியாவுக்குப் பெண் வீட்டுப் பணியாளர்களை அனுப்புவதில் தங்களுக்கு விருப்பமில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கைக்கு செளதி அரசின் பதில்

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளித்த செளதி அரேபிய அரசு, தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் கீழ் வீட்டுப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தது.

துன்புறுத்தல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் செளதி அரசு கூறியது.

வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், விதிமுறைகளைத் திறம்பட அமல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்தது.

தரப்படுத்தப்பட்ட வேலை ஒப்பந்தங்கள், ஊதியப் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள், புகார்களுக்குத் தீர்வு காணும் நடைமுறைகள் ஆகியவை இதில் அடங்கும்.

துன்புறுத்தல் அல்லது விதிமீறல் சம்பவங்கள் நிகழும்போது, தொழிலாளர்கள் தங்களது முதலாளிகளை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக செளதி அரசு தெரிவித்தது.

ஆனால், வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்த விரிவான கேள்விகள் உள்ளிட்ட தங்களது தகவல் கோரிக்கைகளுக்கு செளதி அரசு பதிலளிக்கவில்லை என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு