செப்டம்பரிலும் பூக்கும் மேஃபிளவர்; சீசன் தாண்டியும் கிடைக்கும் கொடுக்காப்புளி - காரணம் என்ன?

செப்டம்பரிலும் பூக்கும் மேஃபிளவர்; காலம் தவறி காய்க்கும் தாவரங்கள் - காலநிலை மாற்றம் காரணமா?
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

''மேஃபிளவர் என்ற பெயர் வருவதற்குக் காரணமே, அந்த மரம் மே மாதத்தில் பூப்பதால்தான். ஆனால் செப்டம்பர் மாதத்திலும் மேஃபிளவர் பூத்துக் குலுங்குவதைப் பார்க்க முடிகிறது. சீனிப்புளி எனப்படும் கொடுக்காப்புளிக்கான சீசன் காலம், பிப்ரவரி துவங்கி மே மாதம் வரைதான். ஆனால் இப்போது வரை சந்தையில் கொட்டிக்கிடக்கிறது கொடுக்காப்புளி. இதெல்லாம் சமீபத்திய ஆண்டுகளில்தான் நடக்கிறது.''

பல்வேறு இயற்கைப் பேரிடர்களுக்கு, காலநிலை மாற்றம் முக்கியக் காரணமாக இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டி வரும் சூழலில், இதே காரணத்தால் தாவரங்களின் பூக்கும், காய்க்கும் காலங்களிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்து வருவதாகச் சொல்கிறார் தமிழ்நாடு பல்லுயிர்ப்பெருக்க வாரியத்தின் உறுப்பினரும், தாவரவியல் வல்லுநருமான ராமச்சந்திரன்.

எனவே காலநிலை மாற்றத்தைத் தாங்கும் தாவரங்களை அதிகமாக உற்பத்தி செய்வது அவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார்.

தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி மாற்றங்களுக்கு, காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ளும் காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உயிரியலாளர்கள், நீண்டகால தொடர் ஆய்வுகள் மேற்கொண்ட பின்பே, இதற்கான முடிவான காரணங்களை அறியமுடியும் என்கின்றனர்.

காலநிலை மாற்றத்தால் பயிர்கள் விளைச்சலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வுக்கட்டுரைகள் சுட்டிக்காட்டும் நிலையில், பிற தாவரங்களுக்கான பாதிப்புகளை அறிய ஆய்வுகள் தேவை என்கின்றனர்.

செப்டம்பரிலும் பூக்கும் மேஃபிளவர்; காலம் தவறி காய்க்கும் தாவரங்கள் - காலநிலை மாற்றம் காரணமா?

மே மாதத்தில் மட்டுமே பூக்கும் மேஃபிளவர் செப்டம்பர் வரை பூப்பதன் காரணம்!

காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமயமாதல் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து, உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன.

இதனால் நன்னீர் பற்றாற்குறை, உணவு உற்பத்தி தட்டுப்பாடு, வெள்ளம், புயல்கள் மற்றும் வெப்பஅலைகளின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பது போன்ற வகைகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் இருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சமீபத்தில் நேபாளத்தில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடருக்கு காலநிலை மாற்றமே, மிக முக்கியக் காரணம் என்று பல்வேறு ஆய்வாளர்களும் கூறிவரும் நிலையில், தாவரவியல் பார்வையில் சமூகத்துடன் நேரடித் தொடர்புடைய தாவரங்களிலும் காலநிலை மாற்றம் பல ஆச்சரியமான மாற்றங்களை நிகழ்த்தி வருவதாகச் சொல்கிறார் தமிழ்நாடு பல்லுயிர்ப் பெருக்க வாரிய உறுப்பினர் ராமச்சந்திரன்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தாவரங்களின் வகைகள், தன்மைகள், சிறப்பு, அவற்றின் மருத்துவ குணங்கள், அவற்றுக்கான சூழலியல் பாதிப்புகள் உட்பட பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கிய 8 ஆங்கில நூல்களையும் இவர் எழுதியுள்ளார். தற்போது மருத்துவ குணமுள்ள 300 தாவரங்கள் குறித்த ஓர் ஆங்கில நூலையும் எழுதி வருகிறார்.

கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட சில தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சியை தான் ஆய்வு செய்து வருவதாகக் கூறும் ராமச்சந்திரன், இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் பயிற்சிகளை வழங்கி, கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். அவற்றை பிபிசியிடம் பகிர்ந்த அவர், தற்போது தான் மேற்கொண்டு வரும் ஓர் ஆய்வைப் பற்றி விளக்கினார்.

தமிழ்நாடு பல்லுயிர்ப் பெருக்க வாரிய உறுப்பினரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான ராமச்சந்திரன்
படக்குறிப்பு, தமிழ்நாடு பல்லுயிர்ப் பெருக்க வாரிய உறுப்பினரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான ராமச்சந்திரன்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

''தாவரவியல் பார்வையில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை பல்வேறு தாவரங்களின் வாயிலாக நான் ஆய்வு செய்து வருகிறேன். காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் பூக்கும், காய்க்கும் தன்மையைக் கொண்டிருந்த இந்த தாவரங்கள் சமீபத்திய ஆண்டுகளில் காலம் தவறி பூப்பதையும், காய்ப்பதையும் அறிய முடிகிறது. அதிலும் இந்த ஆண்டில் அதன் தாக்கத்தை மிக அதிகமாகப் பார்க்க முடிகிறது. காட்டு மரங்களில் மட்டுமின்றி, ஊருக்குள் உள்ள மரங்களிலும் இதைக் கண்டறிய முடிகிறது.'' என்றார் பேராசிரியர் ராமச்சந்திரன்.

இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''மேஃபிளவர் என்பதன் அர்த்தமே அது மே மாதத்தில் பூக்கும் மரம் என்பதுதான். ஆனால் இந்த ஆண்டில் செப்டம்பரிலும் அதில் பூக்கள் நிறைந்துள்ளன. விநாயகர் சதுர்த்தி வரும் காலகட்டத்தில்தான் நாவல் பழம் சீசன் இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்திலேயே நாவல் பழங்கள் விற்பதைப் பார்க்க முடிந்தது. அதேபோன்று ஏப்ரல் மாதத்தில் பூக்கும் சரக்கொன்றையும் இப்போது வரை பூக்கிறது. கொடுக்காப்புளி (சீனிப்புளி) பழங்களும் சீசன் காலத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பரவலாக சந்தைகளில் விற்பனை செய்வதைப் பார்க்க முடிகிறது. இவை எளிய உதாரணங்கள்.'' என்றார்.

பருவநிலை உயிரியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும் ஃபீனாலஜி பற்றி அதிகளவிலான நூல்களை எழுதியுள்ள மறைந்த திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியரும், பாதிரியாருமான மேத்யூ, தனது நூல்களில் ஒவ்வொரு தாவரத்தின் வாழ்க்கைச் சுழற்சியை நீண்ட கால ஆராய்ச்சியின் அடிப்படையில் துல்லியமாகக் கணித்திருப்பதாக விளக்குகிறார் பேராசிரியர் ராமச்சந்திரன். ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள பல தாவரங்களின் பூக்கும், காய்க்கும் காலங்களும் பெருமளவில் மாறுபட்டிருப்பதாக அவர் விளக்குகிறார். இதுபற்றிய புத்தக மேற்கொள்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் பிபிசியிடம் அவர் பகிர்ந்தார்.

''தமிழில் கெஜட்டை என்று சொல்லக்கூடிய புல் வகை ஒன்று இருக்கிறது. அது சமவெளியிலும் வளரும். மேற்குத் தொடர்ச்சி மலையில் 500 மீட்டர் உயரமுள்ள மருதமலையிலும், நீலகிரி போன்ற ஆயிரம் மீட்டருக்கும் அதிக உயரமான மலைப்பகுதியிலும் வளரக்கூடியது. அந்தப் புல், வளர்ந்து, காய்ந்து, மீண்டும் துளிர்க்கும் காலத்தையும் ஆய்வு செய்ததில் அதிலும் பெரும் மாற்றத்தைப் பார்க்க முடிகிறது.'' என்றார் ராமச்சந்திரன்.

செப்டம்பரிலும் பூக்கும் மேஃபிளவர்; காலம் தவறி காய்க்கும் தாவரங்கள் - காலநிலை மாற்றம் காரணமா?

கொடுக்காப்புளி இப்போதும் சந்தையில் கிடைப்பதற்கு காரணம் என்ன?

அயல்நாட்டுத் தாவரங்களின் தன்மைகளை, வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வு செய்த நிறைய புத்தகங்கள், ஆய்வுகள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டும் பேராசிரியர் ராமச்சந்திரன், மேஃபிளவர் அயல்நாட்டுத் தாவரம் என்றாலும் நம்மூரிலும் அது பரவலாகிவிட்டது என்கிறார்.

ஆனால் நமது ஊரில் காட்டில் இருக்கும் மரங்கள், தாவரங்கள் குறித்த ஆய்வுகள் மிகக்குறைவாகவே இருப்பதால், இத்தகைய தாவரங்களில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி புதிய ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்கிறார்.

''கொடுக்காப்புளி கோடையில்தான் அதிகமாக சந்தைக்கு வரும். அப்போதுள்ள வெப்பத்தில் அதாவது மார்ச் மாதத்தில் துவங்கி மே மாதம் வரை, அதிகமாக விளையும். ஆனால் இந்த ஆண்டில் இப்போது வரையிலும் கொடுக்காப்புளி அதிகமாகக் காய்ப்பதையும், சந்தையில் அதிகமாக விற்பனையாவதையும் பார்க்க முடிகிறது. ஏனெனில் மார்ச், ஏப்ரலில் இருந்த அதே வெப்பநிலை இப்போதும் இருக்கிறது. இதற்குக் காரணம் காலநிலை மாற்றம்தான். எல்நினோ இதை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.'' என்றார் பேராசிரியர் ராமச்சந்திரன்.

பொதுவாக காட்டுக்குள் இருக்கும் மரங்களை, வனத்துறையினர் கண்காணித்து வந்தாலும், அவற்றைப் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறைவுதான் என்பதை மற்ற உயிரியலாளர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

அதேநேரத்தில் தாவரங்களில் ஏற்படக்கூடிய இந்த மாற்றங்களைப் பற்றி கணிப்பதற்கு நீண்ட நெடிய ஆய்வுகள் அவசியம் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.

காட்டுயிர் உயிரியலாளர் மொய்னுதீன்
படக்குறிப்பு, காட்டுயிர் உயிரியலாளர் மொய்னுதீன்

இதுபற்றி பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றத் துறையின் தலைவர் சத்தியமூர்த்தி, ''நம் மண்ணின் தாவரங்களிலும், அயல் நாட்டுத் தாவரங்களிலும் காலநிலை மாற்றத்தால் பூக்கும், காய்க்கும் காலங்களில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதை உறுதி செய்யக்கூடிய ஆய்வுகள் விரிவாக இல்லை என்பது உண்மையே. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலும் அத்தகைய ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில் வெளிநாடுகளில் இத்தகைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.'' என்றார்.

தாவரங்களில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைப் போலவே, காட்டுயிர்களிலும் காலநிலை மாற்றத்தால் பல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகச் சொல்லும் காட்டுயிர் உயிரியலாளர் மொய்னுதீன், ஆனால் இத்தகைய மாற்றங்கள் குறித்த முடிவுகளை நீண்டகால ஆய்வுகளை வைத்தே பேசவேண்டும் என்கிறார். ஏனெனில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கேற்ப காட்டுயிர்கள் தங்கள் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டு தகவமைத்துக் கொள்வதற்கு பல உதாரணங்கள் இருப்பதாகச் சொல்கிறார் அவர்.

பிபிசியிடம் இதுபற்றிப் பேசிய காட்டுயிர் உயிரியலாளர் மொய்னுதீன், ''ஒரு உயிர் அழிந்து விட்டதாகச் சொல்வார்கள். ஆனால் அது வேறிடத்தில் வேறு காலங்களில் உருவாகியிருக்கும். எந்தவொரு தாவரத்தையும் காலநிலை மாற்றங்களால்தான் இப்படி காலம் தவறிப்பூக்கிறது, காய்க்கிறது என்பதை உறுதிப்படுத்த இயலாது. இதே நிலைதான் காட்டுயிர்களுக்கும் இருக்கிறது.'' என்றார்.

''உதாரணமாக ஜாவா தீவில் மட்டுமே காணப்பட்டு வந்த ஜாவா ஸ்பேரோ, அழிவுப்பட்டியலில் உள்ள பறவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஜாவாவிலும் 10 ஆயிரம் பறவைகள்தான் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பறவை அமெரிக்காவில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதை ஆக்கிரமிப்பு இனமாக கருதி அழிப்பதற்கு அமெரிக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதே பறவையை நமது நாட்டில் விபரம் அறியாமல் செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள்.'' என்றார் மொய்னுதீன்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன்.
படக்குறிப்பு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன்.

பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன், ''நேபாள வெள்ளத்திற்குக் காரணம் காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமயமாதல் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் ஒரு தாவரத்தில் ஏற்படும் இத்தகைய உள்ளீட்டு மாற்றங்களை அவ்வளவு விரைவாகக் கண்டுபிடிக்க முடியுமா என்று சொல்லமுடியாது. ஆனால் அதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணியாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இந்த மாற்றங்களுக்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம்.'' என்றார்.

சில தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களை உடனடியாகக் கணித்துவிடமுடியாது என்று கூறும் பேராசிரியர் கார்த்திகேயன், இதேபோன்ற மாற்றங்கள் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தால் அது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கும் என்கிறார்.

''மைக்ரோபயாலஜியைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றத்தால் மண்ணில் பல மாற்றங்கள் இருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். என்னுடைய 15 ஆண்டுகால தொடர் ஆராய்ச்சியில், மண்ணிலுள்ள ஓர் உயிரி இனம் (Species) காணாமல் போயிருக்கிறது. ஆனால் அதற்கும் காலநிலை மாற்றம் மட்டும்தான் காரணம் என்று நம்மால் அறுதியிட்டுச் சொல்லமுடியாது.'' என்கிறார் பேராசிரியர் கார்த்திகேயன்.

கொடுக்காப்புளி

தாவரங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அறிய நெடிய ஆய்வுகள் அவசியம் என்பதை பலரும் வலியுறுத்தும் நிலையில், மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்களும் விவசாயத்திற்குப் பெரும் சவால்களை ஏற்படுத்துவதை பதிவு செய்திருக்கிறது ஏஆர்சிசி இதழின் ஆய்வுக்கட்டுரை.

சில பகுதிகள் நீண்ட கால வறட்சியை எதிர்கொள்ளும் அதே வேளையில், மற்ற பகுதிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை விளக்குகிறது இதன் ஆய்வுக்கட்டுரை.

வறட்சி நிலைமைகள் மண்ணின் ஈரப்பதத்தைக் குறைப்பதோடு பயிர்களுக்குத் தேவையான நீர் கிடைப்பதையும் மட்டுப்படுத்துகின்றன; இதனால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைகிறது. மறுபுறம், அதிகப்படியான மழைப்பொழிவு மண் அரிப்பு, சத்து இழப்பு மற்றும் நீர் தேக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தி, தாவரங்களின் ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கிறது என்பதை ஆய்வு விளக்கியுள்ளது.

''இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய விவசாய முறைகளைக் கையாள்வது அதன் தாக்கங்களைக் குறைக்க உதவும். வறட்சியைத் தாங்கும் பயிர் ரகங்கள், மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன அமைப்புகள், பயிர் பன்முகத்தன்மை மற்றும் நிலையான மண் மேலாண்மை போன்ற நுட்பங்கள் விவசாயத்தின் மீள்திறனை அதிகரிக்கக்கூடும். நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்ற விவசாய உத்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம், மாறிவரும் காலநிலை நிலைகளிலும் விவசாயம் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து பங்களிக்க முடியும்.'' என்கிறது அந்த ஆய்வு.

தமிழ்நாடு பல்லுயிர்ப்பெருக்க வாரிய உறுப்பினர் ராமச்சந்திரன், '' நம் மண்ணின் தாவரங்களிலும், சமூகத்துடன் நேரடித் தொடர்புடைய தாவரங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் குறித்த புதிய ஆய்வுகள் அவசியம். இதற்கு காலம் அதிகம் தேவைப்படலாம். ஆனால் அதன் முடிவுகள் தெரிவதற்கு முன்பாக காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் தாவரங்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதையே பஞ்சாயத்து ராஜ் தேசிய மையத்திலும் நான் வலியுறுத்தினேன்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு