பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறது - விஜய் வெளியிட்ட 3 அறிவிப்புகள் என்ன?

பரந்தூர் விமான நிலையம், விஜய், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், TN assembly

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை 2 நாள் விடுமுறைக்குப் பிறகு கூடியதும், மறைந்த நடிகை சௌகார் ஜானகிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், "சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படுகிறது. இது இப்போது ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. வளர்ந்து வரும் சென்னை மாநகரின் தேவைகள், தொழில் வளர்ச்சி மற்றும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக தேர்வு செய்யப்படும் இடம் பெரியளவில் விவசாயிகளை பாதிக்காத வகையிலும் அதிகளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும்.

ஆனால் முந்தைய அரசு விவசாயிகளை அதிகம் பாதிக்கும் வகையிலும் குடியிருப்புகளை அகற்றும் வகையிலும் புதிய விமான நிலையத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது. இதனை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் பிற கிராம மக்கள் நடத்திய போராட்டங்களை அறிந்து நான் அப்பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டேன்.

பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமையவிருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களாக இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு, இந்த விவசாய நிலத்தை பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள்.

விக்கிரவாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதில் விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கறிவேன். அதற்கான என் முழு ஆதரவும் உண்டு. ஆனால் 'பரந்தூரில் இந்த திட்டம் அமையக் கூடாது. இந்த திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைவான விவசாய நிலங்களை எடுக்கும் வகையிலும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும்' என தெரிவித்திருந்தேன்.

மக்கள் மத்தியில் நான் அன்றே தெரிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு துறை அதிகாரிகளிடமும் வல்லுநர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். நான் ஏற்கனவே உறுதியளித்தபடி, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து விவசாய நிலங்களை பாதிக்காதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியங்களை சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்படும்.

இதற்கிடையே, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து அதன் வடமேற்குப் பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் 5-வது முனையத்தை அமைக்க ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவுடன் இணைந்து அணுகுசாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது நடக்கும் 3வது முனைய கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இருக்கும். ஐந்தாவது முனையம் அமைந்த பிறகு ஆண்டுக்கு 55 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இந்த விமான நிலையம் இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை பயணிகளின் போக்குவரத்து தேவை பூர்த்தி செய்யப்படும்." என்று அறிவித்தார்.

பரந்தூர் விமான நிலையம், விஜய், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், tn assembly

பொங்கல் முதல் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்

வரும் பொங்கல் முதல் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் இந்த அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் அறிவித்தார். நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டணமில்லா எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். அதன்படி அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக பட்டியல் பெறப்பட்டு சிலிண்டருக்கான விலை பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்தார். ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள 1,30,16,104 குடும்பங்கள்பயனடையும் என அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவித்த முதலமைச்சர் விஜய் இத்திட்டத்திற்காக ஆண்டு தோறும் தோராயமாக 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்

விதி எண் 1100இன் கீழ் மற்றொரு அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில் மாநகர நகர்புற சாதாரண பேருந்துகள் மற்றும் மலைப்பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார். தற்போது இந்த திட்டம் வெற்றிப் பயணத் திட்டம் என விரிவுபடுத்தப்பட்டு அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்தார்.

முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி மாநகர, நகர பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என அவர் அறிவித்தார். மேலும் மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதி சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்தார். வெற்றிப்பயணத் திட்டம் படிப்படியாக் இதர சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் திருநரும் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக 6000 கோடி ரூபாய் கூடுதலாக செலவினம் ஏற்படும் என முதலமைச்சர் விஜய் கூறினார்

திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

பரந்தூர் விமான நிலையம், விஜய், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், tn assembly

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது குறித்த முதல்வர் விஜய் அறிவிப்பு பற்றி திமுக உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிய படி இருந்தனர். எனினும், 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் அவைக்குள் அதுபற்றி பேச கண்டிப்பாக அனுமதியில்லை என்று அவைத்தலைவர் பிரபாகர் கூறிவிட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தின் பின்னணி

பரந்தூர் விமான நிலையம், விஜய், தமிழ்நாடு அரசு

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முந்தைய திமுக அரசு முன்னெடுத்தது.

பரந்தூர், நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து மொத்தம் 5,746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அரசாணை 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தொழில்துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதாகக் கூறி, பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு ரூ.1,822.45 கோடி ஒதுக்கியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், விமான நிலையம் அமைப்பதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வழங்கியது.

இந்தத் திட்டத்துக்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மே மாத சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடருமா என்ற ஐயம் எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டப்பேரவையில் முதல்வர் விஜயின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு