'ஒன்றாக பயின்றாலும் நூதன வழியில் சாதியை அறிவார்கள்' - பட்டியல் பிரிவு மாணவர்களின் கல்லூரி அனுபவம்

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

'பிரச்னைகளைப் பேசுவோம்' என்ற தலைப்பில் பிபிசி தமிழ் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சபரி , தான் மேல்படிப்பு படித்தபோது எதிர்கொண்ட சாதி ரீதியான பாகுபாடுகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். அவருடன் தற்போது தமிழ்நாட்டில் படிக்கும் ஒருசில மாணவர்களும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

"மாதந்தோறும் ஆய்வு உதவித்தொகை (fellowship) பெறுவதற்கு மேற்பார்வையாளரிடம் கையெழுத்து பெற வேண்டும். ஆனால், அந்த சமயங்களில்தான் மேற்பார்வையாளர்கள் பல கேள்விகளை எழுப்பி கையெழுத்திடாமல் அலைக்கழிப்பார்கள். ஒருமுறை உதவித்தொகை தொடர்பான ஆவணத்தை அறையிலேயே மேற்பார்வையாளர் ஒருவர் தூக்கியெறிந்தார். உடன் படித்த பல மாணவர்கள் முன்னிலையிலேயே அது நடந்தது." என்றார் சபரி.

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு எனும் கிராமத்தை சேர்ந்த சபரி பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர். அவர் தற்போது, பிரேசிலில் உள்ள ஐ.எஃப்.டி கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தில் முனைவர் பட்டப்படிப்புக்கு பிந்தைய ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். 42 வயதாகும் சபரி சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாய் பத்மா விவசாய கூலி வேலை பார்த்து அவரை படிக்க வைத்துள்ளார்.

பள்ளி முடித்து, உயர்கல்வி பயிலச் சென்ற போது பல்வேறு வகையிலும் சாதி பாகுபாடுகளை சந்தித்ததாக கூறுகிறார்.

"பள்ளிப் படிப்பு முழுவதையும் அரசுப்பள்ளியில் படித்தேன். தந்தையை இழந்துவிட்டதால் ஏழ்மையான சூழல் தான். எங்கள் வீட்டில் மூன்று பெண்கள். நானும் சிறுவயதில் விவசாய கூலி வேலைக்கு சென்றிருக்கிறேன். 12ஆம் வகுப்பு வரை படிப்பில் பெரிய ஆர்வம் இல்லை. 12ஆம் வகுப்பை முடித்ததும் என்னை வேலைக்கு அனுப்பலாம் என்று உறவினர்கள் சொன்னார்கள். ஆனால், நான் மேல்படிப்பை தேர்ந்தெடுத்தேன். அன்றைய காலகட்டத்தில் என் கிராமத்திலிருந்து பட்டப்படிப்பை நோக்கி சென்ற முதல் மாணவன் நான் தான்."

"சிறுவயதில் சாதி பாகுபாடுகளை அனுபவித்திருப்பதை நான் உணரவில்லை. எங்கள் கிராமத்தில் நடைமுறையில் இருந்த இரட்டைக் குவளை முறை சாதி பாகுபாடு என்பதே பின்னர் தான் தெரியவந்தது. அதுகுறித்து ஊரிலிருந்து சிலர் கேள்வியெழுப்பிய போது சண்டையே வந்துவிட்டது."

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2015-ம் ஆண்டு பிஹெச்டி முடித்தார் சபரி. அங்கு படிக்கும்போது பல்வேறு பாகுபாடுகளை எதிர்கொண்டதாக கூறுகிறார்.

"எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கான உதவித்தொகையை பெறுவதற்கு பெருமுயற்சி எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் மேற்பார்வையாளரின் கையெழுத்து பெறப்பட்ட ஆவணத்தை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அதை அனுப்ப வேண்டிய ஓரிரு நாளுக்கு முன்புதான் அதற்கான ஒப்புதலை வழங்குவார்கள். ஒவ்வொரு மாதமும் அப்படிதான் நடக்கும்." என்றார் சபரி.

"ஆய்வு சமர்ப்பிப்புகளில் ஆறு மாதம் கழித்து 'ஓகே' என்று மட்டும் பேராசிரியர் ஒருவர் சான்றளித்துள்ளார். சாதி ரீதியாகத்தான் என் மீது பாகுபாடு காட்டுகின்றனர் என்பதை பின்னர் புரிந்துகொண்டேன். ஏனெனில், சம்பந்தப்பட்ட பேராசிரியர்களுக்கு என் மேல் தனிப்பட்ட முறையில் கோபம் வருவதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை."

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலை படிப்பு படித்தபோதும் வகுப்பில் சக மாணவர்கள் சாதி ரீதியாக இணைந்திருந்ததை பார்த்திருப்பதாக கூறுகிறார் சபரி.

சாதிய ரீதியான பாகுபாடுகள் இருந்தாலும் அதனால் ஏற்பட்ட அழுத்தங்களை தன்னால் சமாளிக்க முடிந்ததாக சபரி தெரிவித்தார்.

"என் வகுப்பில் அப்போது என்னை தவிர மற்ற எல்லோரும் வேறு வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடையே எனக்கும் ஆதரவு கிடைத்தது. வெளிப்படையாக பாகுபாடு காட்ட மாட்டார்கள். உற்றுநோக்கினால் தான் தெரியும். அதை என்னால் சமாளிக்க முடிந்தது." என்றார் சபரி.

"எனக்கு வேறு வழி இருக்கவில்லை. நான் கிராமத்திலிருந்து வருகிறேன். படிப்பை பற்றிக் கொள்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை."

சபரி சந்தித்ததைப் போன்ற சாதிய நெருக்கடிகளை தாங்களும் எதிர்கொள்வதாக, பெயர் குறிப்பிட வேண்டாம் என்கிற நிபந்தனையுடன் இரு மாணவிகள் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிலும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் பிரிவு மாணவி ஒருவர் பேசுகையில், "வகுப்பில் எஸ்.சி/எஸ்.டி உதவித்தொகை வாங்குபவர்களை எழுந்து நிற்க சொல்லி மற்ற மாணவர்கள் முன்பு எங்களின் சாதி தெரியும்படி செய்வார்கள். எங்களுக்கு டியூஷன் கட்டணத்தை அரசே செலுத்தும். முன்பு நேரடியாக பல்கலைக்கழக நிர்வாகத்திடமே செலுத்தியது, இப்போது எங்கள் வங்கிக் கணக்குக்கு செலுத்தும், அதை நாங்கள் நிர்வாகத்திடம் செலுத்த வேண்டும். ஆனால், வங்கிக் கணக்குக்கு பணம் வராமலேயே கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்துவார்கள். அப்படி செலுத்தவில்லையென்றால், வாய்மொழித் தேர்வில் (viva), பங்கேற்க விடாமல் செய்வது, வருகைப் பதிவிலிருந்து பெயர்களை எடுத்துவிடுவது போன்றவற்றை செய்வார்கள்." என்றார் அந்த மாணவி.

இதனால் பலமுறை தான் வகுப்புகளை புறக்கணிக்க நேர்ந்ததாக கூறுகிறார் அம்மாணவி.

"கட்டணம் செலுத்தாமல் இருந்தால், வருகைப்பதிவில் நம்முடைய பெயரை மட்டும் அழைக்காமல் இருப்பார்கள். அது உளவியல் ரீதியாக நம்மை கஷ்டப்படுத்தும். வகுப்புக்கு செல்ல வேண்டாம் என நினைத்து, வகுப்புக்கே செல்லாமல் இருந்துள்ளேன். இதனால் எனக்கு படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. நாம் தனித்துவிடப்பட்டது போன்று தோன்றும். ஒரு வாரம் கூட செல்லாமல் இருந்திருக்கிறேன். சென்னை போன்ற ஒரு நகரத்தில் இப்படி நடக்குமென நான் நினைத்துப் பார்த்ததில்லை." என்கிறார் அவர்.

'ஒன்றாக பயின்றாலும் நூதன வழியில் சாதியை அறிவார்கள்'

இதேபோல், சென்னை ஐஐடியில் படிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பட்டியல் பிரிவு மாணவி தனது அனுபவம் பற்றி பிபிசி தமிழிடம் கூறுகையில் "என்னுடைய ரேங்க் அடிப்படையில் என் சாதி என்ன என்று கண்டுபிடிப்பார்கள். இட ஒதுக்கீட்டு பிரிவில் வந்தேன் என கூறுவார்கள். ஒருமுறை சக மாணவர்கள் இருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அடுத்து, ஒரு பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு தயாராகி வருவதாக கூறினேன். உடனே பிற சாதி மாணவர் ஒருவர், என் சாதி காரணமாக "நிச்சயமாக உனக்கு கிடைத்துவிடும்," என குறிப்பிட்டார். அப்போதிருந்து அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். அவருக்கு எப்படி என் சாதி குறித்து தெரியவந்தது என்றே தெரியவில்லை." என்றார்.

மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் செந்தாமரை கண்ணன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "மேற்கூறிய மாணவர்கள் குறிப்பிடுவது போன்ற சாதிய பாகுபாடுகள் இன்றைய கல்லூரி, பல்கலைக் கழக வளாகங்களில் பெரும்பாலும் இல்லை. சில இடங்களில் மறைமுகமாக பாகுபாடுகள் காட்டப்பட்டாலும் மாணவர்கள் அதுகுறித்து முறையிட்டு உரிய நிவாரணம் பெற வழிவகைகள் உள்ளன" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய ரீதியில் ஏதேனும் பாகுபாடுகள் நடந்தால் அதுகுறித்து புகார் செய்வதற்கென உள்மட்ட எஸ்சி/எஸ்டி குழுக்கள் உள்ளன. அக்குழுக்களில் எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இருப்பார்கள். இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில், எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் பணியாளர், ஆண் பணியாளர், கல்வி நிறுவனத்தின் முதல்வர் உள்ளிட்டோர் அங்கம் வகிப்பார்கள். மாணவர்களையும் இக்குழுக்களில் இணைப்பதற்கான தேவையெழுந்தால் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு