கோவிட் ஊரடங்கின்போது படிக்கவும் எழுதவும் மறந்துவிட்ட சிறுமி இப்போது எப்படி இருக்கிறார்?

ராதிகா
படக்குறிப்பு, ராதிகா ஜார்கண்ட் மாநிலத்தின் லத்தேஹார் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கிறார்.
    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ராதிகா குமாரி தனது பழைய தொடக்கப் பள்ளியின் முன் நின்றுகொண்டு, சுவரில் எழுதப்பட்டுள்ள அரசின் வாசகத்தைப் படிக்க முயற்சிக்கிறார்.

"அசுத்தம் உயிரைப் பறிக்கும்; தூய்மையே சேவை"

ஆனால், 16 வயதான ராதிகாவால் முதல் வார்த்தையைக் கூடச் சரியாகப் படிக்க முடியவில்லை.

மீதமுள்ள வாசகத்தைப் படிப்பதற்குப் பதிலாக, சுற்றிலும் கிடக்கும் குப்பைகளைக் கையால் சுட்டிக்காட்டுகிறார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவைச் சந்தித்தோம். அப்போது, நாட்டின் மிகவும் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான, கல்வித் தரத்தில் பின்தங்கியுள்ள ஜார்கண்டின் லதேஹார் மாவட்டத்துக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள தும்பி என்ற சிறிய கிராமத்தில் அவர் வசிக்கிறார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் உயர் வகுப்புக்குச் சென்றிருந்தாலும், படிப்பில் பின்தங்கியிருப்பது தெரியவந்தது.

கோவிட் பெருந்தொற்றின்போது பள்ளிகள் மூடப்பட்டதால், குறைந்த வளங்களைக் கொண்ட பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறுமிகளின் கல்வி எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை ராதிகா மூலம் அறிந்துகொள்ள விரும்பினோம்.

2024-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி குறித்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், சராசரியாகக் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், எல்லாக் குழந்தைகளுக்கும் இதே அனுபவம் கிடைக்கவில்லை.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பெருந்தொற்றின்போது பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் புரிந்துகொள்வதற்காக ஜார்கண்டின் கிராமம் கிராமமாகப் பயணம் செய்த பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரேஸ் கூறுகையில், "சராசரித் தரவுகள் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளை மறைத்துவிடுகின்றன" என்றார்.

2021-ஆம் ஆண்டு ராதிகாவைச் சந்தித்தபோது, கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, நாட்டின் மற்ற பள்ளிகளைப் போலவே அவரது பள்ளியும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. ராதிகாவின் பள்ளி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் திறக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளிலும் நகர்ப்புறப் பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள் மூலம் படிப்பு தொடர்ந்தது. ஆனால், தொலைதூரப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி முற்றிலும் தடைபட்டது.

அந்த நேரத்தில், ராதிகாவின் கிராமத்தில் இணைய வசதி இல்லை. அவரது குடும்பத்தினரிடமும் ஸ்மார்ட்ஃபோன் இருக்கவில்லை.

பள்ளிக் கல்வி முற்றிலும் தடைப்பட்டதால், ராதிகாவின் வாசிக்கும் மற்றும் எழுதும் திறன் மிகவும் மோசமடைந்தது. இந்தி எழுத்துகளை அடையாளம் காண்பதைக்கூட அவர் மறந்துவிட்டார்.

தலித்-பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் வளர்ந்த ராதிகாவுக்கு, கோவிட் காலத்தில் படிப்பில் பின்தங்கியது மட்டுமின்றி, அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களால் கல்வியில் முன்னேறுவதும் கடினமாகிவிட்டது.

ராதிகா
படக்குறிப்பு, 2021-ஆம் ஆண்டில் ராதிகாவின் புகைப்படம்

பெருந்தொற்றுக் காலத்தில் நீண்டகாலம் பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகளின் கல்வியில் ஏற்பட்ட தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காகப் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

நாட்டின் மிகப்பெரிய கல்வி சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பிரதம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டிலும் குழந்தைகளின் கற்றல் திறன் கணிசமாகக் குறைந்திருப்பதைக் கண்டறிந்தது. இதை ஒரு "பெரும் பின்னடைவு" என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டது.

அந்த அறிக்கையின்படி, "2014-ஆம் ஆண்டில், ஐந்தாம் வகுப்பு படித்த குழந்தைகளில் 48 சதவிகிதத்தினரால் இரண்டாம் வகுப்பு அளவிலான வாசிப்புத் திறனைக் கொண்டிருந்தனர். இந்த விகிதம் 2018-ஆம் ஆண்டில் 50.4 சதவிகிதமாக அதிகரித்தது.

ஆனால், 2022ஆம் ஆண்டில் 42.8 சதவிகிதமாகக் குறைந்தது. தேசிய அளவில் ஏழு சதவிகிதம் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த எண்ணிக்கை மிக மெதுவாகவே மாறும். மேலும், பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற அச்சத்தையும் இது உறுதிப்படுத்துகிறது."

ராதிகா
படக்குறிப்பு, 2021-இல் ராதிகா ஒரு சிலேட்டில் எழுதுகிறார்

இருப்பினும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது ராதிகா அடுத்த வகுப்புக்கு அனுப்பப்பட்டார்.

இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, குழந்தைகளின் படிப்பில் அதிகச் சுமை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்வியை மோசமாகப் பாதிப்பதாகக் கூறி இந்தச் சட்டப் பிரிவு விமர்சிக்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டில் அது நீக்கப்பட்டது.

ஆனால், அதற்குள் ராதிகா ஒன்பதாம் வகுப்புக்குச் சென்றுவிட்டார்.

ஜார்கண்ட் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையும் ராதிகா போன்ற குழந்தைகளுக்கு ஒரு பெரிய சவாலாக இருப்பதாகப் பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரேஸ் கூறுகிறார்.

"கோவிட் ஊரடங்கின்போது பள்ளிகள் மூடப்பட்டதன் விளைவாக, குறைந்த வசதிகளுடன் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்கும் அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே குறைந்த அளவிலான கல்வியைப் பெற்றுவந்த குழந்தைகள், அதையும் இழந்தனர்," என்கிறார் அவர்.

பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ்
படக்குறிப்பு, பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரேஸ் பல ஆண்டுகளாக ஜார்கண்டில் குழந்தைகளின் கல்விக்காகப் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் அரசுப் பள்ளிகள் எப்போதும் போதிய வசதிகள் இல்லாமல் சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளன. கல்வியின் தரம் குறைவாக இருப்பதாகவும் அவை விமர்சிக்கப்பட்டுள்ளன.

ஆனால், கல்வித் தரத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்டில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி தொடர்பான தரவுத்தளமான யூடிஐஎஸ்இ பிளஸ் (UDISE Plus) தரவுகளின்படி, ஜார்கண்டில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 40 சதவிகிதப் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

நாடு முழுவதும் இத்தகைய ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 2025-26ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், ஜார்கண்டில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2021-ஆம் ஆண்டு ராதிகாவைச் சந்தித்தபோது, இந்தி எழுத்துகள் பலவற்றைச் சரியாக அடையாளம் காணவோ எழுதவோ அவரால் முடியவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது பத்தாம் வகுப்புச் சான்றிதழை எங்களிடம் காட்டுகிறார்.

இருப்பினும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்பது, எளிய கணக்குகளைச் செய்வது, தான் எந்தெந்த பாடங்களைப் படிக்கிறார் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது ஆகியவற்றில் ராதிகா சிரமப்படுகிறார்.

தற்போது, மணிகா வட்டத்தில் உள்ள 75 கிராமங்களுக்கு ஒரே உயர்நிலை மேல்நிலைப் பள்ளியாக இருக்கும் பள்ளியில் ராதிகா படித்து வருகிறார்.

அங்கு 2,000 மாணவர்களுக்குக் கற்பிக்க 20 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது, ஒவ்வொரு 100 மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய சராசரியான 23 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்துடன் ஒப்பிடும்போது, இது மிகவும் மோசமான நிலையாகும்.

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மிருகேந்திர நாராயண் சிங், வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது ஆசிரியர்களால் தனிப்பட்ட கவனம் செலுத்துவது கடினமாக இருப்பதாகக் கருதுகிறார்.

மிருகேந்திர நாராயண் சிங்
படக்குறிப்பு, மிருகேந்திர நாராயண் சிங், ராதிகாவின் பள்ளியின் முதல்வர்

"அத்தகைய மாணவர்களை அடையாளம் காண எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். அவர்களுக்குத் தேவைப்பட்டால் உதவுவதற்காக, வகுப்பறையின் முன்வரிசையில் அமர வைக்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.

ஆனால், இவை அனைத்தும் ராதிகாவுக்குப் போதுமானதாக இல்லை. பள்ளியில் என்ன மாற்றம் கொண்டுவர விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, "எனக்கு இன்னும் அதிகமான ஆசிரியர்கள் வேண்டும்" என்று கூறுகிறார்.

ஜார்கண்டில் ஆசிரியர்களுக்கான ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சமீபத்திய அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக ஜீன் ட்ரேஸ் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, 26,000 ஆசிரியர்களை நியமிக்குமாறு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நியமனங்கள் தொடர்பாக, தகுதி குறித்த சட்டப் பிரச்னைகள் தொடர்ந்து நீடிப்பதைக் காரணமாகக் குறிப்பிட்ட ஜார்கண்ட் அரசு, "நியாயமான, வெளிப்படையான மற்றும் உரிய காலத்தில் "நியமனங்களை மேற்கொள்வதாக உறுதியளித்தது.

போதிய வளங்கள் இல்லாத, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கிடைப்பது மிகவும் முக்கியமானது.

ராதிகா
படக்குறிப்பு, ராதிகாவின் அண்டை வீட்டில் வசிக்கும் பெண் மற்றும் ராதிகாவின் சகோதரர் விஷ்ணு

ராதிகாவின் தம்பி விஷ்ணு டியூஷனுக்குச் செல்கிறார். படிப்பிலும் பாடங்களைப் புரிந்துகொள்வதிலும் அவர் ராதிகாவைவிட மிகவும் முன்னிலையில் இருக்கிறார்.

கிராமத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகளைப் போலவே, விஷ்ணுவும் அவரது ஐந்து சகோதரிகளும் தங்கள் குடும்பங்களில் பள்ளிக்குச் செல்லும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.

அவர்களது பெற்றோர் கல்வி கற்காதவர்கள் என்பதால், பள்ளி நேரத்துக்குப் பிறகு அவர்களுக்குக் கிடைக்கும் ஒரே கல்வி ஆதரவு டியூஷன் வகுப்புகள்தான்.

ஆனால், பல இந்தியக் குடும்பங்களில் காணப்படுவதைப் போலவே, வளங்களின் பற்றாக்குறை காரணமாக மகனைப் படிக்க வைப்பதற்கே அதிகம் செலவிடப்படுகிறது. இதனால், விஷ்ணுவுக்கு மட்டுமே தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.

கோவிட் ஊரடங்கின்போது கூட, விஷ்ணுவை நாங்கள் சந்தித்தபோது அவர் தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தார். இதனால், பள்ளிகள் மூடப்பட்டிருந்தது அவரது படிப்பில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

 ராதிகா
படக்குறிப்பு, 2021-ஆம் ஆண்டில் ராதிகாவின் சகோதரர் விஷ்ணு

ஏஎஸ்இஆர் (ASER) 2022 அறிக்கையின்படி, ஊரடங்கின்போது நாடு முழுவதும் டியூஷன் வகுப்புகளுக்குச் சென்ற குழந்தைகளின் சராசரி விகிதம் 2018-ஆம் ஆண்டில் 25 சதவிகிதமாக இருந்தது. இது 2022-ஆம் ஆண்டில் 30 சதவிகிதமாக அதிகரித்தது. ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் 45 சதவிகிதமாக இன்னும் அதிகமாக இருந்தது.

அப்போது ஆசிரியராகப் பணியாற்றிய தலைமை ஆசிரியர் சிங், "எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தும், 10 சதவிகிதக் குழந்தைகளை மட்டுமே எங்களால் சென்றடைய முடிந்தது. இதனால், படிப்பில் பின்தங்கிய சில குழந்தைகள் எதிர்மறையான பாதிப்பைச் சந்தித்தனர்" என்று நினைவுகூருகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பெருந்தொற்றுத் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளியூர்களிலிருந்து வருபவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக நானும் மூன்று மாதங்கள் மரத்தடியில் அமர்ந்து பணியாற்றினேன்" என்றார்.

ஏஎஸ்இஆர் 2024 அறிக்கையின்படி, காலப்போக்கில் குழந்தைகளின் கல்வி நிலை மீண்டும் மேம்பட்டுள்ளது. இதற்கு 2020-ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையும் ஒரு காரணம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்தக் கொள்கையின்படி, "2025-ஆம் ஆண்டுக்குள் தொடக்கப் பள்ளிகளில் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் (FLN) உறுதிப்படுத்துவதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும்."

2024-ஆம் ஆண்டு டிசம்பரில், 3, 6 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் கல்வி நிலையை மத்திய கல்வி அமைச்சகம் மதிப்பீடு செய்தது.

இந்த ஆய்வில், மாநிலங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. அடிப்படை நிலையில் ஜார்க்கண்ட் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்தது. அடுத்தடுத்த வகுப்புகளிலும் அந்த மாநிலம் கடைசி நிலையில் உள்ள மாநிலங்களின் குழுவிலேயே நீடித்தது.

அந்த அறிக்கையின்படி, "தொடக்க வகுப்புகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தங்களது முன்னேற்றத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. அதேவேளையில், தொடக்கத்திலேயே பின்தங்கும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள், பிற்காலத்தில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்."

ராதிகாவும் விஷ்ணுவும்
படக்குறிப்பு, ராதிகாவும் விஷ்ணுவும்

தற்போது ராதிகா மேலும் பல சவால்களை எதிர்கொள்கிறார். அவரது கிராமத்திலிருந்து மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றடைய ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். தோழி யாராவது உடன் வந்தால்தான் அவர் அந்த வழியில் செல்கிறார். இல்லையெனில், அன்றைய தினம் பள்ளிக்குச் செல்வதில்லை.

குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் டெம்போவுக்கான கட்டணத்தைச் செலுத்த ராதிகாவின் தாயார் குந்தி தேவி விரும்பவில்லை.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இதற்கெல்லாம் என்னிடம் பணம் இல்லை. ராதிகா உண்மையிலேயே பள்ளிக்குச் செல்ல விரும்பினால், அவர் நடந்தே செல்லலாம்" என்றார்.

இத்தனை சவால்கள் இருந்தபோதிலும், ஜார்கண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அந்த மாநிலத்தின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) 2014-15-ஆம் ஆண்டில் 37.5 சதவிகிதமாக இருந்த நிலையில், 2025-26-ஆம் ஆண்டில் 55 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது 20 சதவிகிதப் புள்ளிகள் உயர்வாகும். நாடு முழுவதும் இதேபோன்ற மாணவர் சேர்க்கைப் போக்கு காணப்படுகிறது.

ஆனால், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றடைவது மட்டுமே போதுமானதல்ல.

"கல்வி குறைவாக இருப்பதன் விளைவாக, இந்தக் குழந்தைகள் அதிகம் கற்றுக்கொள்வதில்லை. வளர்ந்த பிறகு வேலை தேடி மற்ற மாநிலங்களுக்குச் செல்கின்றனர்" என்று கூறும் ஜீன் ட்ரேஸ், "அவர்களுக்குத் திறன்கள் இருக்கின்றன. ஆனால், நவீனப் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரக்கூடிய திறன்கள் அவர்களிடம் இல்லை"என்கிறார்.

வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள் என்று ராதிகாவிடம் கேட்டபோது, அவர் புன்னகைத்தபடி தலையைக் குனிந்து கொண்டு, "நான் ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், என் குடும்பத்துக்கு உதவ வேண்டும்" என்று கூறுகிறார்.

இருப்பினும், இது எப்படிச் சாத்தியமாகும் என்பது தனக்கு இன்னும் தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு