'தஞ்சாவூரு மண்ணு எடுத்து', 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' பாடல்களை பாடிய பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

பட மூலாதாரம், Krishnaraj/Facebook
பருத்திவீரன், அருணாச்சலம், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று (அக்டோபர் 22) காலை காலமானார். அவருக்கு வயது 75 .
இவர் பாடிய பாடல்களில், பொற்காலம் (1997) திரைப்படத்தில் இடம்பெற்ற 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருது பெற்றார்.
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும், சிங்கப்பூர் முன்னாள் அதிபருமான செல்லப்பன் ராமநாதனின் இறுதிச் சடங்கு நிகழ்வில் (2016), தேவா இசையில் கிருஷ்ணராஜ் பாடிய 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடல் ஒலிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேவா இசையமைத்து திரையில் வெளியாகாத, 'அதிகாலை சுபவேளை' திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான கிருஷ்ணராஜ், 90களில் தேவாவின் இசையில் பாடிய 'வெள்ளரிக்கா..பிஞ்சு வெள்ளரிக்கா', 'காத்தடிக்குது காத்தடிக்குது', 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா', போன்ற பாடல்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பாடகர் கிருஷ்ணராஜின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான சேலத்தில் நாளை (அக்டோபர் 23) நடைபெறவுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























