தமிழ்நாட்டின் கடன் குறைந்தது சாதனையா? செலவு ஒத்திவைப்பா?

தமிழ்நாட்டின் கடன் குறைந்தது சாதனையா? வளர்ச்சிப் பணிகள் குறைந்ததன் அறிகுறியா?
படக்குறிப்பு, கடன் குறைந்திருப்பது மட்டும் நிதிநிலை மேம்பட்டிருப்பதற்கான அடையாளமா அல்லது திட்டங்களுக்கான செலவுகள் குறைந்திருப்பதன் விளைவா என்ற விவாதமும் உருவாகியுள்ளது.
    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாடு அரசு பத்திரங்கள் மூலம் பெறும் கடன் முதல் அரையாண்டில் 21% குறைந்துள்ளதாக எஸ்பிஐ கேப்ஸ் அறிக்கை கூறுகிறது.

ஆனால், மூலதனச் செலவுகள் குறைந்ததால்தான் கடன் தேவை குறைந்ததா என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசு நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 21% குறைந்துள்ளது. இதனால், மாநில அரசுகளின் கடன் பெறும் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்துக்குச் சென்றுள்ளது.

கடன் பெறுவது குறைந்திருப்பதை நிதி மேலாண்மையில் சாதகமான மாற்றமாக ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசு முன்வைக்கும் நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகள் எவ்வளவு செய்யப்பட்டுள்ளன என்ற கேள்வி எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.

கடன் குறைந்திருப்பது மட்டும் நிதிநிலை மேம்பட்டிருப்பதற்கான அடையாளமா அல்லது திட்டங்களுக்கான செலவுகள் குறைந்திருப்பதன் விளைவா என்ற விவாதமும் உருவாகியுள்ளது.

அறிக்கை கூறுவது என்ன?

தமிழ்நாட்டின் கடன் குறைந்தது சாதனையா? வளர்ச்சிப் பணிகள் குறைந்ததன் அறிகுறியா?

எஸ்பிஐ கேப்ஸின் நிதிநிலை மற்றும் கடன் பெறுதல் குறித்த அறிக்கையின்படி, தமிழ்நாடு அரசு 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் ரூ.40,500 கோடி கடன் பெற்றுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.51,300 கோடி கடன் பெறப்பட்டிருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் கடன் பெறுவது ரூ.10,800 கோடி குறைந்துள்ளது.

இதன் காரணமாக, மாநில அரசுகளின் கடன் பெறுதல் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்துக்குச் சென்றுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா ரூ.60,900 கோடி கடன் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஆந்திரப் பிரதேசம் ரூ.48,800 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், தெலங்கானா ரூ.46,400 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் ரூ.40,700 கோடியுடன் நான்காவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு ரூ.40,500 கோடி கடன் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.

காலாண்டு அடிப்படையில் பார்க்கும்போது, தமிழ்நாடு அரசு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ரூ.23,500 கோடி கடன் பெற்றுள்ளது. இதன்படி, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் சுமார் ரூ.17,000 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

கடன் பெறுதல் குறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா, தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மகாராஷ்டிராவின் கடன் பெறுதல் 13%, தெலங்கானாவின் கடன் பெறுதல் 7%, ராஜஸ்தானின் கடன் பெறுதல் 6%, கேரளாவின் கடன் பெறுதல் 5% குறைந்துள்ளது.

மாறாக, உத்தரப் பிரதேசத்தின் கடன் பெறுதல் 179%, சத்தீஸ்கரின் கடன் பெறுதல் 144%, ஒடிசாவின் கடன் பெறுதல் 50% அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் கடன் குறைந்தது சாதனையா? வளர்ச்சிப் பணிகள் குறைந்ததன் அறிகுறியா?
படக்குறிப்பு, கோப்புப் படம்

ஆனால், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தமிழ்நாடு அரசு அதிக அளவில் கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.48,000 கோடி கடன் பெறுவதற்கான திட்டத்தை அரசு தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் பெறப்பட்ட ரூ.23,500 கோடியைவிட இரண்டு மடங்குக்கும் அதிகம்.

மூன்றாவது காலாண்டில் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ள மொத்தக் கடன் பெறுதல் ரூ.3.61 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 43% அதிகம். இதில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் 13%. மகாராஷ்டிரா ரூ.52,800 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ள நிலையில், மாநிலங்களில் அதிகக் கடன் பெறத் திட்டமிட்டுள்ள பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூலதனச் செலவுகள் எங்கே? தங்கம் தென்னரசு கேள்வி

தமிழ்நாட்டின் கடன் குறைந்தது சாதனையா? வளர்ச்சிப் பணிகள் குறைந்ததன் அறிகுறியா?
படக்குறிப்பு, முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (கோப்புப் படம்)

கடன் பெறுதல் குறைந்திருப்பதை சாதனையாக முன்வைக்கும் தமிழக வெற்றிக் கழக அரசு, அதற்கான காரணங்களையும் முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில், 2025-26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தின் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.13,002.22 கோடி மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு நிதியாண்டில் மூலதனச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தமிழக வெற்றிக் கழக அரசு எவ்வளவு செலவிட்டுள்ளது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது, முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கான நிலுவைத் தொகை எவ்வளவு என்பதையும் அரசு வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்துவதாலும், முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகையை வழங்காமல் இருப்பதாலும் கடன் தேவை குறைந்திருக்கலாம் என்று அவர் விமர்சித்துள்ளார். ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சாலைப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முதல் அரையாண்டில் கடன் குறைந்திருப்பதை மட்டும் நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியாது என்றும், மூலதனச் செலவுகள் மற்றும் நிலுவைத் தொகைகள் குறித்த முழுமையான விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

கடன் குறைந்ததற்குக் காரணம் செலவுகள் ஒத்திவைப்பா?

தமிழ்நாட்டின் கடன் குறைந்தது சாதனையா? வளர்ச்சிப் பணிகள் குறைந்ததன் அறிகுறியா?
படக்குறிப்பு, ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியர் பிரபாகரன்

ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியர் பிரபாகரன், முதல் அரையாண்டில் கடன் பெறுதல் குறைந்திருப்பதை மட்டும் வைத்து அரசின் நிதிநிலையை மதிப்பிட முடியாது என்கிறார். நடப்பு நிதியாண்டின் எஞ்சிய காலத்தில் அரசு எவ்வளவு கடன் பெறத் திட்டமிட்டுள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

''தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள கடன் பெறுதல் அதிகமாக உள்ளது. எனவே, அரசு செலவினங்களை ஒத்திவைத்திருக்கலாம் என்பதையே இது காட்டுகிறது," என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பெரிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதும் கடன் தேவை குறைந்ததற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். அத்தகைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டிய தேவை குறைந்திருப்பதால், அரசு குறைவாகக் கடன் பெற்றிருக்கலாம் என்பது அவரது கருத்து.

அதே நேரத்தில், முதல் ஆறு மாதங்களில் அரசின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும் பிரபாகரன் குறிப்பிட்டார். பயிர்க்கடன் தள்ளுபடி, ஆவின் நிறுவனத்துக்கான கொள்முதல் உள்ளிட்ட பொறுப்புகள் மற்றும் திட்டங்களுக்காக இந்த ஆறு மாதங்களில் அதிக அளவில் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் கடன் குறைந்தது சாதனையா? வளர்ச்சிப் பணிகள் குறைந்ததன் அறிகுறியா?
படக்குறிப்பு, பொருளாதார விமர்சகர் நாகப்பன்

எனினும், அரசு எந்த உள்கட்டமைப்புத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்று முழுமையாகக் கூற முடியாது என்று பிரபாகரன் கூறினார்.

மின் கடத்தல் கட்டமைப்பை நவீனப்படுத்தும் பணிகள், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் போன்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

"ஆறு மாதங்களின் முடிவில் கடன் பெறுதலை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது. தெளிவான சித்திரம் கிடைக்க குறைந்தபட்சம் ஒரு நிதியாண்டு முடியும் வரை காத்திருக்க வேண்டும்," என்று பிரபாகரன் தெரிவித்தார்.

பொருளாதார விமர்சகர் நாகப்பன், அரசு கடன் பெறுவதில் தவறு இல்லை என்றும், அந்தப் பணம் எதற்காகச் செலவிடப்படுகிறது என்பதே முக்கியம் என்றும் கூறுகிறார்.

"கடன் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதன் நோக்கம் முக்கியம். உள்கட்டமைப்பு மற்றும் சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கக் கடன் பெற்று செலவிடுவதில் தவறில்லை. கடன் பெறாமல் இருந்து, அதே நேரத்தில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் செலவிடாமல் இருப்பதால் என்ன பயன்?" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தவெக பதில் என்ன?

தமிழ்நாட்டின் கடன் குறைந்தது சாதனையா? வளர்ச்சிப் பணிகள் குறைந்ததன் அறிகுறியா?
படக்குறிப்பு, முந்தைய அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கான நிதிச் சுமையையும், தற்போதைய அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கான செலவுகளையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டியிருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார் தெரிவிக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார், மாநிலத்தின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், அதற்குக் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

"கட்டாயமாகச் செயல்படுத்த வேண்டிய திட்டங்களையும் நலத்திட்டங்களையும் நாங்கள் நிறுத்தவில்லை. முந்தைய அரசு பெரிய திட்டங்களை அறிவித்திருந்தாலும், அவற்றைச் செயல்படுத்துவதற்குப் போதிய நிதி மாநிலத்திடம் இல்லை. மாநிலத்தின் நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது," என்று அவர் கூறினார்.

முந்தைய அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கான நிதிச் சுமையையும், தற்போதைய அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கான செலவுகளையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார். மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடனைக் குறைப்பதே அரசின் நோக்கம் என்றும், அதற்காகக் கவனமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக் ஆகியோரின் கருத்துக்களைப் பெற பிபிசி தமிழ் முயன்றது. ஆனால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களின் பதில் கிடைத்தவுடன் கட்டுரையில் சேர்க்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு