இலங்கை சிறையில் வன்முறை: 25 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
இலங்கையில் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்க்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் அதிகாரிகளும் அடங்குவர் என நீர்கொழும்பு மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்
கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.
இந்த மோதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் 34 பேர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு காயமடைந்த கைதிகள் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதல் சம்பவத்தை அடுத்து, நீர்கொழும்பு உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சுமார் 1800 வரையான சிறைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகள் என இரண்டு தரப்பும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவிக்கின்றது,
இவ்வாறு நேற்றைய தினம் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீதேறி போராட்டமொன்றையும் நடாத்தியிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அதிகாரிகள் சரியான தகவல்களை வழங்கவில்லை என தெரிவித்து, கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்தில் அமைதியற்ற முறையில் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது,
இவ்வாறான பின்னணியில் நேற்றைய தினம் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்திருந்தது.

இன்று மீண்டும் மோதல்
நேற்றைய தினம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட மோதல் மீண்டும் இன்றைய தினம் வலுப்பெற்றிருந்தது.
சிறைச்சாலையிலிருந்த கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸாருக்கு மேலதிகமான விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸார் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்ட சத்தம், சிறைச்சாலைக்கு வெளியில் கேட்கக்கூடியதாக இருந்ததாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், சிறைச்சாலைக்குள் இருந்த காயமடைந்த நிலையிலும், மயக்கமடைந்த நிலையிலும் கைதிகள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பு பிரிவினர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் காட்சிகளை காண முடிந்தது,
சிறைச்சாலைக்குள் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வருவதை காண முடிகின்றது,

(பிபிசி சிங்கள சேவையில் இருந்து பெறப்பட்ட கூடுதல் தகவல்கள் இந்த செய்தியில் சேர்க்கப்பட்டுள்ளன)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























