தங்களது வேலையை செய்த இந்த அரசு அதிகாரிகள் நாயகர்களாக பார்க்கப்படுவது ஏன்?

மே மாதம் பொறுப்பேற்றதிலிருந்து, துக்காராம் முண்டே தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
படக்குறிப்பு, மே மாதம் பொறுப்பேற்றதிலிருந்து, துக்காராம் முண்டே தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
    • எழுதியவர், நிகிதா யாதவ்
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய அரசு அமைப்பை இயக்கும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களில், சிலர் மட்டும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை எதிர்பாராத வகையில் மக்கள் மத்தியில் பிரபலமடைகின்றனர்.

51 வயதான துக்காராம் முண்டே அவர்களில் ஒருவர்.

மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையராக உள்ள அவர், மே மாதம் பொறுப்பேற்றது முதல் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். அவரது தலைமையிலான குழுக்கள் உணவகங்கள் மற்றும் பிற உணவு விற்பனை நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பூச்சிகள் பெருமளவில் காணப்பட்டதையும், மோசமான சுகாதார நிலை மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளன.

மருத்துவமனைகள் அன்றாடம் பயன்படுத்தும் மருத்துவப் பொருட்களுக்காக செலுத்தும் தொகைக்கும், அதே பொருட்களுக்கு நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் தொகைக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளால் துக்காராம் முண்டே சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளார். அவரது ஆய்வுகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கானோர், தங்கள் மாநிலத்திலும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க துக்காராம் முண்டே போன்ற அதிகாரிகளை அனுப்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

துக்காராம் முண்டே மட்டும் இவ்வாறு பிரபலமடைந்த அதிகாரி அல்ல. டெல்லி அருகில் உள்ள குருகிராமில், மாவட்ட நகரத் திட்டமிடல் அதிகாரி ஆர்.எஸ். பாத், சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

நாயகர்களாக பார்க்கப்படுவது ஏன்?

ஆனால், தங்கள் பணியைச் செய்வதற்காகவே இந்த அதிகாரிகள் ஏன் நாயகர்களைப் போலப் பார்க்கப்படுகிறார்கள்?

இந்தியாவில், ஆவணங்கள் வழங்குவது முதல் காவல் பணி, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் வரை, மக்கள் அன்றாடம் நம்பியிருக்கும் பல்வேறு சேவைகளுக்கு அரசு ஊழியர்களே பொறுப்பாக உள்ளனர். ஆனால், இவர்களில் பலர் பணிகளைத் தாமதப்படுத்துவதாகவும், லஞ்சம் கேட்பதாகவும், ஒரு பணிக்காக மக்களை அங்குமிங்கும் அலையவைப்பதாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

எனவே, ஓர் அதிகாரி வழக்கமான அதிகார நடைமுறைகளில் உள்ள தடைகளைத் தாண்டி விரைவாக நடவடிக்கை எடுப்பது போல் தெரிந்தால், அதற்கு மக்கள் எதிர்பாராத அளவுக்கு உற்சாகமாக எதிர்வினையாற்றுகின்றனர்.

"வழக்கமானதாக இருக்க வேண்டியது இப்போது அசாதாரணமாக மாறிவிட்டது," என்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கமல் காந்த் ஜஸ்வால்.

பல குடிமக்களுக்கு, பணிகள் தாமதமாவது, அதிகார நடைமுறைகளால் ஏற்படும் தடைகள், அலட்சியமான அணுகுமுறை ஆகியவை மிகவும் பழக்கமானவையாகிவிட்டன. இதனால், திறமையான நிர்வாகம் என்பது இப்போது விதிவிலக்காகத் தெரிகிறது என்று அவர் கூறுகிறார்.

பல இந்தியர்கள் அரசு அலுவலகங்களை நீண்ட நடைமுறைகள், மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டிய வருகைகள் மற்றும் பெரும்பாலும் உரிய முறையில் பதிலளிக்காத அதிகாரவர்க்கம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள்.
படக்குறிப்பு, பல இந்தியர்கள் அரசு அலுவலகங்களை நீண்ட நடைமுறைகள், மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டிய வருகைகள் மற்றும் பெரும்பாலும் உரிய முறையில் பதிலளிக்காத அதிகாரவர்க்கம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள்.

பிரபலமான மற்ற அதிகாரிகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இவ்வாறு தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்ததற்காகப் பிரபலமடையும் முதல் அதிகாரி துக்காராம் முண்டே அல்ல.

1990-களில் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என். சேஷன் இதற்கு மிக முக்கியமான உதாரணங்களில் ஒருவர். விதிகளைத் தயக்கமின்றி அமல்படுத்தியதற்காக அவர் நாடு முழுவதும் பிரபலமானார்.

முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, 1980-களின் தொடக்கத்தில் "கிரேன் பேடி" என்று அழைக்கப்பட்டார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்குச் சொந்தமானதாகக் கூறப்பட்ட சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டிருந்த காரை அவர் இழுத்துச் செல்லச் செய்ததாக செய்திகள் வெளியாகின. எனினும், அவருக்கு கீழ் பணியாற்றிய துணைக் காவல் ஆய்வாளரே அந்தக் காரை அகற்றியதாகவும், தனது முடிவுக்கு கிரண் பேடி ஆதரவளித்ததாகவும் அவர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தெரிவித்தார்.

2012-ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய நிலப் பரிவர்த்தனை விவகாரத்தில் தலையிட்டதன் மூலம் அசோக் கேம்கா நாடு முழுவதும் அறியப்பட்டார். 2020-ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட கொடூரமான மத வன்முறையின்போது ஒரு கும்பலை எதிர்கொண்ட காவல் அதிகாரி நீரஜ் ஜடோனும் பாராட்டப்பட்டார்.

இத்தகைய சம்பவங்கள் "நேர்மையான" அல்லது "எதற்கும் வளைந்து கொடுக்காத" அரசு அதிகாரி என்ற கருத்தை மக்களுக்கு நன்கு பரிச்சயமானதாக மாற்றியுள்ளன. அதேநேரத்தில், அத்தகைய அதிகாரிகள் அரிதானவர்களாகவும் தோன்றுகின்றனர்.

எனினும், இந்தியாவில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் எந்தவிதப் பொது கவனத்தையும் ஈர்க்காமல் தங்கள் பணியைச் செய்து வருகின்றனர் என்று கமல் காந்த் ஜஸ்வால் சுட்டிக்காட்டுகிறார்.

"அவர்களின் பணியில் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பு அதிகம் இருக்காது. அல்லது அவர்களின் பணிகள் வெளியுலகுக்குப் பெரிதாகத் தெரியாமல் இருக்கலாம்."

மக்களின் மனநிலை

ஆனால், சாதாரண மக்களைப் பொறுத்தவரை, அரசு அலுவலகத்துக்குச் சென்று ஒரு வேலையை முடிப்பது என்பது பெரும்பாலும் சோர்வடையச் செய்யும் செயல்முறையாகவே பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் 43 வயதான ராஜேஷ் சிங், தனது பணிகளை முடிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும், புகார்களைத் தீர்க்க அதைவிட நீண்ட காலம் எடுத்துக்கொண்டதாகவும் கூறுகிறார்.

"24 மணி நேரத்தில் முடிய வேண்டிய ஒரு வேலை, ஆறு மாதங்கள் வரை இழுத்தடிக்கப்பட்டதை நான் நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதற்குப் பிறகும் சாதகமான முடிவு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், விதிகளை அமல்படுத்துவதற்காகப் பாராட்டப்படும் ஓர் அதிகாரி, நடைமுறைச் சூழல்களைப் புரிந்துகொள்ளாமல் விதிகளை மிகவும் கடுமையாக அமல்படுத்துகிறார் என்ற விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் (IPS) அதிகாரியான கிரண் பேடி, சட்ட அமலாக்கத்தில் தனது கண்டிப்பான அணுகுமுறைக்காக அறியப்பட்டார்.
படக்குறிப்பு, இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் (IPS) அதிகாரியான கிரண் பேடி, சட்ட அமலாக்கத்தில் தனது கண்டிப்பான அணுகுமுறைக்காக அறியப்பட்டார்.

விமர்சனம் ஏன்?

துக்காராம் முண்டே மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உணவு துறையைச் சேர்ந்த சிலர் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் நடவடிக்கை எடுப்பதாகவோ, சட்டவிரோதமாக நடவடிக்கை எடுப்பதாகவோ கூறப்படும் குற்றச்சாட்டுகளை துக்காராம் மறுத்துள்ளார்.

ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தீவிரமான விதிமீறல்கள் இருக்கும் போது மட்டுமே உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக ஆர்.எஸ். பாத்-ம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். அவரது நடவடிக்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு எதிராக மட்டுமே இருப்பதாகவும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களை அளவுக்கு அதிகமாகப் பாதிப்பதாகவும் விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனினும், வைரலான பல வீடியோக்களில், நகரத் திட்டமிடல் விதிகளின்படியே தாம் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"சட்டத்தின் பார்வையில் ஒரு தெருவோர வியாபாரியின் கடை அங்கீகரிக்கப்படாத கட்டுமானமாக இருக்கலாம். ஆனால், அந்தக் கடைதான் ஒரு குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருக்கக்கூடும்," என்று கமல் காந்த் ஜஸ்வால் விளக்குகிறார். வேலை தேடி கோடிக்கணக்கான மக்கள் நகரங்களுக்கு இடம்பெயரும் நாட்டில், அரசின் அனுமதி பெறாத குடியிருப்புகள்தான் சிலருக்கு வசிப்பதற்கான ஒரே வாய்ப்பாக இருக்கக்கூடும்.

சட்டத்துக்கும் பொருளாதார யதார்த்தத்துக்கும் இடையிலான இந்த முரண்பாடுதான், ஒரே நடவடிக்கை சட்டப்படியானதாகவும் அதே நேரத்தில் கடுமையானதாகவும் ஏன் பார்க்கப்படலாம் என்பதை விளக்குகிறது.

சவால்களை எதிர்கொள்ளும் அதிகாரிகள்

அரசு அதிகாரிகளும் தங்கள் பணிகளைச் செய்யும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

சிறிது காலம் அரசு அதிகாரியாகப் பணியாற்றியவரும், வளர்ச்சிப் பிரச்னைகள் குறித்து விரிவாக எழுதியவருமான புஷ்பா சுந்தர், அதிகாரிகள் அரசியல் அழுத்தத்தையும் பணியிட மாற்றங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்கிறார். குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு இணங்க மறுக்கும்போது இத்தகைய அழுத்தங்கள் ஏற்படலாம் என்கிறார் அவர்.

"அவர்களுக்கும் குடும்பங்கள், பணிச்சூழல் மற்றும் நிதிப் பொறுப்புகள் உள்ளன. சுயாதீனமாகச் செயல்படுவதற்காக அவற்றை ஆபத்தில் ஆழ்த்துவதற்கு அசாதாரணமான துணிச்சல் தேவைப்படுகிறது," என்கிறார் அவர்.

சட்டவிரோதமான அல்லது முறையற்ற செயலைச் செய்ய மறுக்கும் அதிகாரிகளுக்கு வலுவான நிறுவன ரீதியிலான ஆதரவு தேவை என்றும் அவர் கூறுகிறார்.

ஜஸ்வால் தாமும் இதுபோன்ற அழுத்தத்தை எதிர்கொண்டதை நினைவுகூர்கிறார்.

1974-ஆம் ஆண்டு, அப்போது பிரிக்கப்படாத உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்த உத்தர்காசி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக அவர் பணியாற்றினார். அந்த நேரத்தில் ஒரு மூத்த அமைச்சர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார்.

விதிகளுக்கு எதிரானவை என்பதால், அந்த அமைச்சரின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க வேண்டிய நிலையைத் தான் நிராகரிக்க வேண்டியிருந்ததாக ஜஸ்வால் கூறுகிறார். அந்த அமைச்சர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு விரைவிலேயே தனக்கு "பணியிட மாற்ற உத்தரவு" வந்ததாக ஜஸ்வால் கூறுகிறார்.

ஆனால், அடுத்த பணியிடத்துக்குச் செல்ல அவர் புறப்பட்டபோது, மக்கள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு கோடைக்கால வெயிலில் காத்திருந்து அவரை வழியனுப்பி வைத்தனர்.

அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான உறவு ஒருபோதும் எளிமையானதாக இருப்பதில்லை என்கிறார் அவர்.

விரும்பத்தக்க பணியிடங்களைப் பெற விரும்பும் அல்லது அரசியல் ஆதரவைச் சார்ந்திருக்கும் பல அரசு அதிகாரிகள், எதிர்ப்பைக் காட்டாமல் எளிதான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதேவேளையில், அரசியல் அழுத்தத்தை எதிர்த்து நிற்பதற்கு சில விலைகளைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

சமூக வலைதளங்களின் பங்கு

ஒரு அதிகாரி எவ்வளவு வேகமாக மக்கள் மத்தியில் பிரபலமாகிறார் என்பதையும் சமூக வலைதளங்கள் மாற்றியுள்ளன.

முன்பு ஒரு மாவட்டத்துக்குள் மட்டுமே தெரிந்த ஒரு நடவடிக்கை, இப்போது சில மணி நேரங்களுக்குள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, பகிரப்பட்டு, லட்சக்கணக்கானோரால் பார்க்கப்படலாம்.

உத்தரப் பிரதேசத்தின் ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் கமல் காந்த் ஜஸ்வால் (வலதுபுறம்).
படக்குறிப்பு, உத்தரப் பிரதேசத்தின் ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் கமல் காந்த் ஜஸ்வால் (வலதுபுறம்).

"சமூக வலைதளங்கள் ஓர் அரசு அதிகாரியை ஒரே இரவில் நாடு முழுவதும் பேசப்படும் நபராக மாற்றிவிட முடியும்," என்கிறார் புஷ்பா சுந்தர்.

துக்காராம் முண்டேவுக்கும் இதுதான் ஒரு வகையில் நடந்துள்ளது. அவர் சோதனை செய்யும் வீடியோக்கள், வழக்கமான நடவடிக்கையை மக்கள் பெருமளவில் கவனிக்கும் நிகழ்வாக மாற்றியுள்ளன.

ஆனால், துக்காராம் முண்டே இதை வேறு விதமாகப் பார்க்கிறார்.

கடந்த மாதம் பிபிசியிடம் பேசிய அவர், தனது நடவடிக்கைகள் பொது சுகாதாரம் குறித்த அக்கறையால் மேற்கொள்ளப்படுவதாகவும், விதிகளைப் பின்பற்றும் நிறுவனங்கள் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை என்றும் கூறினார்.

துக்காராம் முண்டேவைப் பொறுத்தவரை, கிடைக்கும் கவனம் முக்கியமானது அல்ல. விதிகள் ஏற்கெனவே உள்ளன; அவற்றை அமல்படுத்துவதுதான் தனது பணி என்று அவர் கருதுகிறார்.

ஆனால், மக்கள் காட்டும் இந்த ஆர்வம் ஒரு குறிப்பிட்ட அதிகாரியைப் பற்றியது மட்டுமல்ல.

அரசின் அடிப்படைப் பணிகள் வெளிப்படையாகவும் தொடர்ந்து ஒரே விதமாகவும் மேற்கொள்ளப்படும்போது, அவை அசாதாரணமானதாகத் தோன்றக்கூடும். குறிப்பாக, அதற்கு மாறாகத்தான் பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கப் பழகிவிட்ட சூழலில் இது மேலும் வெளிப்படையாகத் தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு