ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர், உச்ச நீதிமன்றம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு வழக்குத் தொடர்வதிலிருந்து வழங்கப்பட்டுள்ள சட்டபூர்வப் பாதுகாப்பின் செல்லுபடியாகும் தன்மை குறித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் முடிவுகளை ஒருதலைப்பட்சமாக எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், ஒருமித்த கருத்து இல்லாமல் தலைமைத் தேர்தல் ஆணையர் எந்த முடிவும் எடுப்பதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் சட்டத்திற்குப் புறம்பானது எனத் தெரியவந்தால், அவை ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக 'பிடிஐ' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள நீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ அல்லது பெரும்பான்மை முடிவின் அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட முடிவுகளால் வாக்காளர் பட்டியலே பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இதற்கு நீதிபதி பாக்சி, எதிர்மனுதாரர்களின் தரப்பைக் கேட்காமல் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக உத்தரவைப் பிறப்பிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கு வழக்குத் தொடர்வதிலிருந்து சட்டபூர்வப் பாதுகாப்பு உள்ளதா என்பதையும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
படக்குறிப்பு, ஞானேஷ் குமார்

லைவ் லா தகவலின்படி, நீதிபதி பாக்சி, "பதிவுகளைப் பார்க்கும்போது ஏதேனும் ஒரு முடிவு ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தால், அந்த முடிவுகளுக்கு நாங்கள் தடை விதித்து, அவை அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டவை என்று கூறுவோம். ஆனால், அனைத்து முடிவுகளும் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டவை என்று நாம் ஒருதலைப்பட்சமாக முடிவு செய்ய முடியுமா? அவர்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பே ஊடகங்களில் வெளியான செய்திகளை ஏற்றுக்கொண்டதற்கு சமம் என்று விகாஸ் சிங் கூறியபோது, செய்தித்தாள் செய்திகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், ஞானேஷ் குமாருக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்கு, 10 மாதங்களில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு