இந்தியாவில் 4.7 கோடி ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த பிரம்மாண்ட 'வாசுகி பாம்பு' கண்டறியப்பட்ட இடத்தில் மற்றொரு அரிய பாம்பு

பட மூலாதாரம், Jugal Kishor Tiwari
- எழுதியவர், கோபால் கடேஷியா
- பதவி, பிபிசி குஜராத்தி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
2005-ஆம் ஆண்டு குஜராத்தின் கட்ச்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த வாசுகி இண்டிகஸ் இனத்தைச் சேர்ந்த பிரமாண்டமான பாம்பு ஒன்றின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வாசுகி இண்டிகஸ் பாம்பின் புதைபடிவங்கள் லக்பத் தாலுகாவில் உள்ள பிராந்தோ கிராமத்தில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டன.
இந்தக் கண்டுபிடிப்பு, சுமார் 4.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கட்சில் வாழ்ந்த உயிரினங்கள் குறித்துப் புரிந்துகொள்வதற்கான ஒரு புதிய வாய்ப்பைத் திறந்தது.
மேலும், கட்சின் கிழக்குப் பகுதியில் பச்சாவ் தாலுகாவில் உள்ள தோலாவிரா கிராமத்துக்கு அருகே அமைந்துள்ள 'வுட் புதைபடிவ பூங்காவில்' கண்டெடுக்கப்பட்ட சில வரலாற்றுக்கு முந்தைய காலப் புதைபடிவங்கள் இதைவிடப் பழமையானவை என்று கருதப்படுகிறது.
இந்தப் பூங்காவில் காணப்படும் மரப் புதைபடிவங்கள், 20 கோடி முதல் 14.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஜுராசிக் காலத்தைச் சேர்ந்தவை; அதாவது டைனோசர்கள் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.
வாசுகி இண்டிகஸ் இனத்தின் புதைபடிவங்கள் 2005-ஆம் ஆண்டிலேயே ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்துவிட்டன. ஆனால், அவை எந்த உயிரினத்தைச் சேர்ந்தவை என்பதைத் துல்லியமாக அடையாளம் காணும் பணியை ரூர்க்கி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2022-ஆம் ஆண்டில்தான் தொடங்கினர்.
புதைபடிவங்களின் பகுப்பாய்வுக்குப் பிறகு, ஆராய்ச்சியாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளின் சுருக்கத்தை விவரிக்கும் ஓர் ஆய்வுக் கட்டுரையை ஏப்ரல் 2024-ல் ஓர் இதழில் வெளியிட்டபோதுதான், தோராயமாக 10 மீட்டர் முதல் 11 மீட்டர் நீளமுள்ள இந்த பிரம்மாண்ட பாம்பைப் பற்றி உலகிற்குத் தெரியவந்தது.
இந்த ஆய்வு வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சில் மீண்டும் ஓர் அரிய பாம்பு தென்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை அது உயிருடன் இருந்தது. மேலும், மிகவும் எதிர்பாராத சூழலில் கட்ச்சை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவரின் பார்வையில் அது சிக்கியது.
ஒரு பாம்பை வாகனத்திலிருந்து வெளியேற்றிக் கொண்டிருந்தபோது மற்றொரு அரிய பாம்பு எப்படி வந்தது?

பட மூலாதாரம், Jayesh Dumadia
இந்த ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி மாலை, கட்சின் வன வட்டத்துக்கு உட்பட்ட பூஜ் (வடக்கு) வனச்சரக வன அலுவலர் ஜெயேஷ் துமாடியா மற்றும் அவரது குழுவினருக்கு இந்த அரிய பாம்பு தென்பட்டது.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள காலா டுங்கர் பகுதியில் ஜெயேஷ் துமாடியாவும் அவரது குழுவினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களுக்கு ஒரு பாம்பு தென்பட்டது.
பிபிசியிடம் பேசிய ஜெயேஷ் துமாடியா, "பஞ்ச்மஹாலில் இருந்து கட்சுக்கு எனக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் பணியிட மாற்றம் கிடைத்தது. அதனால், கட்சின் வனவிலங்குகள் எனக்கு ஒருவகையில் புதிதாகவே இருக்கின்றன" என்றார்.
"நாங்கள் ரோந்துப் பணியில் இருந்தபோது, தாவரங்கள் ஏதும் இல்லாத வறண்ட பகுதியில் ஒரு பாம்பு தென்பட்டது. அந்தப் பாம்பைப் பார்ப்பதற்காக எங்களது வேனை நிறுத்தி, கீழே இறங்கினோம்."
"பாம்புகள் குறித்து ஓரளவு எனக்குத் தெரியும் என்பதால், அது எந்தப் பாம்பு என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். அது பிளாக்-ஹெட்டட் கிரவுன் ஸ்நேக்."
"குஜராத்தியில் இதை ராஜவாடி பாம்பு என்று அழைக்கிறார்கள். இதற்கு முன்பு உயிருடன் இருக்கும் ராஜவாடி பாம்பை நான் பார்த்ததே இல்லை."
"முன்பு ஒரு முறை இறந்த ராஜவாடி பாம்பைப் பார்த்திருக்கிறேன். அதனால், இந்தப் பாம்பை உன்னிப்பாகக் கவனிப்பதற்காகவும் பதிவுக்காகவும் அதன் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினோம்."
"அப்போது ராஜவாடி பாம்பு தற்காப்பு நிலைக்குச் சென்று எங்களது வேனின் அடிப்பகுதிக்குள் புகுந்துகொண்டது."
அதன் பிறகு நடந்தது எதிர்பாராத திருப்பமாக இருந்தது.
"நாங்கள் ராஜவாடி பாம்பை வாகனத்திலிருந்து வெளியே கொண்டுவர முயன்றுகொண்டிருந்தபோது, மங்கலான வெளிச்சத்தில் அங்கு மற்றொரு பாம்பு வந்தது."
"பார்ப்பதற்கு அந்தப் பாம்பு முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அதனால், வேனுக்குள் பதுங்கியிருந்த விஷமற்ற ராஜவாடி பாம்பிலிருந்து எங்களது கவனத்தைத் திருப்பி, உப்புப் படிவத்தின் மீது ஊர்ந்து சென்ற அந்த மற்றொரு பாம்பைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினோம். அதன் புகைப்படங்களையும் காணொளியையும் பதிவு செய்தோம்."
"சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது. அந்தப் பாம்பு எந்த இனத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக அதன் காணொளியையும் புகைப்படங்களையும் இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் நிபுணர்களுக்கும், பாம்புகள் குறித்த பிற நிபுணர்களுக்கும் அனுப்பினேன்."
"புகைப்படத்தில் காணப்படும் பாம்பு ஆஃப்ரோ-ஆசியன் சாண்ட் ஸ்நேக் என்றும், குஜராத்தில் இது மிகவும் அரிய பாம்பாகக் கருதப்படுகிறது என்றும் நிபுணர்கள் என்னிடம் தெரிவித்தனர்." என்றார் ஜெயேஷ் துமாடியா.
இந்தப் பாம்பு எந்த அளவுக்கு அரியது?

பட மூலாதாரம், Jayesh Dumadia
முனைவர் ராஜு வியாஸ் ஊர்வன உயிரினங்கள் குறித்த நிபுணர். இவர் பல ஆண்டுகள் வதோதரா உயிரியல் பூங்காவில் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார்.
ஆஃப்ரோ-ஆசியன் சாண்ட் ஸ்நேக் எனப்படும் மணல் பாம்பின் அறிவியல் பெயர் ஸாமோபிஸ் ஸொகோரி (Psammophis sokoari ) என்று ராஜு வியாஸ் கூறுகிறார்.
ஸாமோபிஸ் குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகள் வறண்ட, மணல் நிறைந்த பகுதிகளில் வாழ்கின்றன என்று அவர் கூறுகிறார்.
இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகள் ஆப்பிரிக்கக் கண்டம் முதல் தெற்காசியா வரை காணப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.
ஸாமோபிஸ் கொண்டாநாரஸ்(Psammophis condanarus) மற்றும் ஸாமோபிஸ் லெய்தி (Psammophis leithii ) ஆகிய இனங்களைச் சேர்ந்த பாம்புகளும் இந்தியாவில் காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குஜராத் வனத்துறை தனது சமூக ஊடகப் பதிவொன்றில், இந்தியாவின் புவியியல் ஆய்வுப் பணிகளுக்காகப் பணியாற்றிய இயற்கை ஆர்வலர் ஃபெர்டினாண்ட் ஸ்டோலிக்ஸ்கா 1871-72ஆம் ஆண்டுகளில் கட்சில் ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
அந்த ஆய்வின்போது ஸ்டோலிக்ஸ்கா ஓர் ஆஃப்ரோ-ஆசியன் சாண்ட் ஸ்நேக்கைப் பிடித்து மாதிரிகளை சேகரித்தார். அதைத் தனி இனப் பாம்பாக விவரித்து அவர் எழுதிய கட்டுரை, ஜர்னல் ஆஃப் தி ஏசியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால் என்ற இதழில் 1972-ஆம் ஆண்டு வெளியானது. ஆனால், பின்னர் அந்த மாதிரி ஆஃப்ரோ-ஆசியன் சாண்ட் ஸ்நேக் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தப் பாம்பு சுமார் நான்கு அடி நீளம் வரை வளரக்கூடும்.
"இந்தப் பாம்பு பெரும்பாலும் தரையில்தான் வாழ்கிறது. ஆனால், பல்லிகள் போன்றவற்றை உண்பதற்காகக் குறைந்த உயரமுள்ள புதர்கள் மற்றும் செடிகளிலும் ஏறுகிறது," என ராஜு வியாஸ் கூறுகிறார்.
"நீளமாகவும் மெலிந்தும் இருக்கும் இந்தப் பாம்பு தரையில் மிக வேகமாக ஓடும். பல்லிகள், பூச்சிகள் போன்றவற்றை உண்கிறது. பல்லிகள் போன்ற உயிரினங்களுக்கு இது விஷத்தன்மை கொண்டது."
"ஆனால், இதன் விஷம் மனிதர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. 1871-72ஆம் ஆண்டுகளில் கட்சில் இந்தப் பாம்பு இருப்பதை ஸ்டோலிக்ஸ்கா பதிவு செய்திருந்தார் என்பது உண்மைதான்."
"அதன் பிறகும் கட்சில் இந்தப் பாம்பு தென்பட்டதற்கான பதிவுகள் உள்ளன. ஜுகல் கிஷோர் திவாரியிடமும் இந்தப் பாம்பின் புகைப்படங்கள் உள்ளன."

பட மூலாதாரம், Jayesh Dumadia
கட்சில் வசித்து வரும் பறவையியல் ஆய்வாளர் ஜுகல் கிஷோர் திவாரி.
பிபிசியிடம் பேசிய அவர், "பன்னி புல்வெளிப் பகுதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லோடாய் கிராமத்தில், 2009-ஆம் ஆண்டு இந்தப் பாம்பை நான் பார்த்தேன். அந்தப் பாம்பை நான் புகைப்படமும் எடுத்தேன். நிபுணர்கள் அதை ஆஃப்ரோ-ஆசியன் சாண்ட் ஸ்நேக் என அடையாளம் கண்டனர். எனினும், இந்தப் பாம்பு மிகவும் அரிதானது. அதன்பிறகு நான் இந்தப் பாம்பை மீண்டும் ஒருபோதும் பார்த்ததில்லை" என்றார்.
இரண்டு பாம்புகளும் ஒரே நேரத்தில் தென்பட்ட பிறகு அதிகாரிகள் என்ன செய்தனர்?

பட மூலாதாரம், Jayesh Dumadiya
இந்த இரண்டு பாம்புகளும் வறண்ட நிலப்பகுதியிலிருந்து ரான் ஆஃப் கட்ச் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது போல் தெரிந்ததாக வனச்சரக அலுவலர் ஜெயேஷ் துமாடியா தெரிவித்தார்.
"ராஜவாடி பாம்பும் குஜராத்தில் மிகவும் அரிதாகவே தென்படும் பாம்பு என்று கூறப்படுகிறது. ராஜவாடி பாம்பும் ஆஃப்ரோ-ஆசியன் சாண்ட் ஸ்நேக்கும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தென்பட்டது மிகவும் அசாதாரணமான நிகழ்வு."
"செப்டம்பர் 6-ஆம் தேதிக்குப் பிறகு அதே பகுதியில் இரண்டு, மூன்று முறை தேடிப் பார்த்தோம். ஆனால், அந்த இரண்டு பாம்புகளில் ஒன்றுகூட எங்களுக்குத் தென்படவில்லை."
ராஜவாடி பாம்பு வனத்துறையின் வேனிலேயே நீண்ட தூரம் பயணம் செய்ததாகவும் வனச்சரக அலுவலர் தெரிவித்தார்.
"அதை வேனிலிருந்து வெளியே கொண்டுவர நாங்கள் பலமுறை முயன்றோம். ஆனால், அது வெளியே வரவில்லை."
"இருட்டாகிக்கொண்டிருந்ததால், நாங்கள் வேனில் ஏறி அந்த இடத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்த வனத்துறையின் விருந்தினர் மாளிகைக்குச் சென்றோம்."
"அங்கு சென்றதும் சோதனை செய்தபோது, ராஜவாடி பாம்பு கேம்பர் வேனின் அடிப்பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இறுதியில் அதை கேம்பர் வேனிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதில் வெற்றி பெற்றோம்."
பிபிசியிடம் பேசிய கட்ச் வன வட்டத்தின் வனப் பாதுகாவலர் தீரஜ் மித்தல், "ஆஃப்ரோ-ஆசியன் சாண்ட் ஸ்நேக்கை வனச்சரக அலுவலர் ஆவணப்படுத்தியிருப்பது, கட்சின் வனவிலங்கு வளம் எவ்வளவு பன்முகத்தன்மை கொண்டது என்பதற்கான சான்றாகும்" என கூறினார்.
"இந்தப் பதிவு குறித்து அறிவியல் இதழ்களின் ஆசிரியர்களுக்கு நாங்கள் எழுதுவோம். இது அறிவியல் பதிவுகளில் இடம்பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வோம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























