காணொளி: தண்ணீருக்காக மனிதர்களை சார்ந்திருக்கும் குதிரைகள் - காரணம் என்ன?
சில நூறு ஆண்டுகளாக இந்தக் குதிரைகள் இந்தத் தீவில் யாருக்கும் சொந்தமில்லாமல் சுதந்திரமாக வாழ்கின்றன. காற்றோடு ஓடுகின்றன... புல்வெளிகளில் மேய்கின்றன... பற்றைக் காடுகளில் தஞ்சமடைகின்றன. ஆனால் இன்று... தமது உயிரைக் காப்பாற்ற... தண்ணீருக்காக மனிதர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அமைந்திருக்கும் நெடுந்தீவு... இலங்கையின் மற்ற எந்தப் பகுதிகளையும் விட தனித்துவமான ஒரு நிலப்பரப்பு. பவளக் கற்களால் ஆன சுவர்கள்... காலனித்துவ வரலாற்றின் எச்சங்கள்... வறண்ட புல்வெளிகள்... இவற்றுக்கிடையே சுதந்திரமாகத் திரியும் இந்தக் குதிரைகள். ஆனால், இவை இந்தத் தீவின் இயற்கையான பூர்வீகக் குதிரைகள் அல்ல. 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் காலத்தில் தீவுக்கு கொண்டுவரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்களாக இவை கருதப்படுகின்றன.
தென்கிழக்கு ஆசியாவின் பண்பாட்டோடு குதிரைகளுக்கு மிக நெருங்கிய தொடர்புள்ளதாக கூறும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலை வரலாற்றுத் துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி பாக்கியநாதன் அகிலன், நெடுந்தீவுக் குதிரைகளின் முக்கியத்துவம் குறித்து மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் எனக் கூறுகிறார்.
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ராணுவத் தேவைகளுக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இந்தக் குதிரைகள்... காலப்போக்கில் மனிதக் கட்டுப்பாட்டிலிருந்து விலகி... இந்தத் தீவின் பரந்த நிலப்பரப்பையே தங்களுடைய கட்டுப்பாடற்ற வாழ்விடமாக மாற்றிக்கொண்டன.
இங்கே ஒரு விசித்திரமான காட்சியை நீங்கள் பார்க்கலாம். குதிரைகள் இருக்கின்றன... ஆனால் குதிரைப் பண்ணை இல்லை. பழங்காலத்து தொழுவங்கள் இருக்கின்றன... ஆனால், அவை பயன்பாட்டில் இல்லை... அவை தங்களுக்குத் தேவையான உணவைத் தேடி... தண்ணீரைத் தேடி... தீவு முழுவதும் சுதந்திரமாகச் சுற்றுகின்றன.
மனிதர்களால் வளர்க்கப்பட்டு பின்னர் தன்னிச்சையாக வாழத் தொடங்கியவை குதிரைகள். அதனால்தான் இவை தற்போது காட்டுக் குதிரைகள் என்று அழைக்கப்படுகின்றன.
இன்று இந்தக் குதிரைகள் வெறும் விலங்குகள் அல்ல. நெடுந்தீவின் அடையாளத்தின் ஒரு பகுதியாகிவிட்டன. நெடுந்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு... இந்தக் குதிரைகளைப் பார்ப்பது ஒரு முக்கியமான அனுபவம். புல்வெளியில் மேயும் குதிரைகள்... பின்னால் நீலக் கடல்... நடுவே பவளக் கற்களால் ஆன பழமையான சுவர்கள்... இந்தக் காட்சி... நெடுந்தீவை இலங்கையின் மற்ற இடங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சுதந்திரமாக வாழ்ந்த இந்த வாழ்க்கை... இப்போது ஒரு கேள்வியை எதிர்கொள்கிறது. இவை இன்னும் எவ்வளவு காலம் இப்படியே வாழ முடியும்? ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கில் இருந்ததாகக் கூறப்படும் இந்தக் குதிரைகளின் எண்ணிக்கை... தற்போது சில நூறுகளாகக் குறைந்துள்ளது. எண்ணிக்கை தொடர்பில் பொதுவெளியில் பல்வேறு மதிப்பீடுகள் இருந்தாலும்... சுமார் 500 முதல் 1000 வரையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வறட்சி... உணவுப் பற்றாக்குறை... குடிநீர்த் தட்டுப்பாடு... நோய்கள்... இனப்பெருக்கக் குறைவு... இவை அனைத்தும் இந்தக் குதிரைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றன.
நெடுந்தீவின் கோடை... மனிதர்களுக்கே கடினமானது. விலங்குகளுக்கு இன்னும் கடினமானது. மழை குறைந்து... இயற்கையான நீராதாரங்கள் வற்றும்போது... இந்தக் குதிரைகளுக்கு உயிர்வாழ்வதே சவாலாகிறது.
இந்த ஆண்டும் நீடித்த வறட்சியால் நிலைமை மோசமடைந்துள்ளது. இதனால்... கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்... இலங்கை கடற்படையினரும் நெடுந்தீவு உள்ளூராட்சி சபையினரும் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நெடுந்தீவின் குதிரைகளுக்குக் குடிநீர் வழங்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் குதிரைகளின் ஒரு தனித்துவம்... அவற்றின் சுதந்திரம் மட்டுமல்ல. மனிதர்களைப் பார்த்தாலே எச்சரிக்கையாகும் அவற்றின் இயல்பு. அருகில் சென்றால்... அவை உடனடியாக விலகிச் செல்லும் கூச்சம் அல்லது பயந்த சுபாவம் உள்ளவை.
ஆனால் இப்போது... தண்ணீர் எப்போது வரும் என மனிதர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அவற்றின் அருகில் செல்லாத மனிதர்களும் இப்போது தண்ணீரை எடுத்துக்கொண்டு அவற்றைத் தேடி வருகின்றனர்.
பல நூற்றாண்டுகளாக மனிதர்களின் உதவியின்றி வாழ்ந்த இந்த உயிர்கள்... காலநிலையின் மாற்றம் அவற்றின் வாழ்வை எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கான ஒரு சிறிய... ஆனால் வலுவான காட்சியாக இது இருக்கிறது,
இந்தக் குதிரைகளின் தனித்துவத்தைப் பாதுகாக்க... அவற்றை நெடுந்தீவுக்கு வெளியே கொண்டு செல்வதற்கு சட்டரீதியான கட்டுப்பாடுகளும் உள்ளன.
அதாவது... இந்தக் குதிரைகள் நெடுந்தீவின் வரலாறு மட்டுமல்ல... அந்தத் தீவிலேயே அவற்றின் எதிர்காலமும் தங்கியுள்ளது.
ஆனால் ஒரு சட்டம் இருப்பது மட்டும்... ஒரு இனத்தைப் பாதுகாப்பதற்கு போதுமா?
அவற்றுக்கு போதுமான உணவு இருக்கிறதா? போதுமான தண்ணீர் இருக்கிறதா? நோய்கள் கண்காணிக்கப்படுகிறதா? இனப்பெருக்கம் சரியாக நடைபெறுகிறதா? மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் இடையிலான வளப் போட்டி குறைக்கப்படுகிறதா?" "இவை அனைத்துக்கும் பதில் தேடும் ஒரு நீண்டகாலத் திட்டமே... இந்தக் குதிரைகளின் உண்மையான பாதுகாப்பாக இருக்க முடியும்.
பல நூற்றாண்டுகளாக... நெடுந்தீவின் காற்றோடு ஓடிய இவை... காலனித்துவ ஆட்சிகளையும்... போர்களையும்... காலத்தின் மாற்றங்களையும்... கடந்து வந்தவை. இன்று அவற்றுக்கு முன்னால் நிற்பது... இன்னுமொரு பாரிய சவால். அவை வாழ வேண்டுமா என்பது கேள்வியல்ல... நெடுந்தீவின் இந்த தனித்துவமான அடையாளத்தை... எமது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எவ்வாறு வாழவைத்துக் காட்டப் போகிறோம் என்பதுதான் கேள்வி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



