'ரோட் ஷோ'-வில் மோதியை பின்தொடர்ந்து வந்த விஜய் - சென்னை ஐஐடி நிகழ்வில் என்ன பேசினார்?

பூந்தமல்லி - வட பழனி மெட்ரோ ரயில் சேவை, மோதி, விஜய், சென்னை
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

'தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதியை எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் விடுவிக்க வேண்டும்" என பிரதமர் மோதியிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார்.

த.வெ.க அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோதி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சென்னைக்கு வருகை தந்தபோது இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியுடன் சில நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்ற நிலையில், பிரதமர் உடனான அவரது நிகழ்ச்சி கவனம் பெற்றது.

தமிழ்நாட்டில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கு சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோதி வந்துள்ளார்.

சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, விமான நிலையத்தில் இருந்து போரூர் மெட்ரோ ரயில் நிலையம் வரை பிரதமர் மோதி 'ரோட் ஷோ' சென்றார். அவரது காருக்கு பின்னால் முதலமைச்சர் ஜோசப் விஜய் காரில் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து போரூர் மெட்ரோ ரயில் நிலையம் வரையில் அவர் 'ரோட் ஷோ' சென்றார். தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் தடத்தில் பிரதமர் மோதியும் முதலமைச்சர் ஜோசப் விஜயும் பயணித்தனர்.

பூந்தமல்லி - வட பழனி மெட்ரோ ரயில் சேவை, மோதி, விஜய், சென்னை

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

முன்னதாக, சுமார் 4,900 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, பூந்தமல்லி-வட பழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பிரதமர் மோதியும் முதலமைச்சர் ஜோசப் விஜயும் பயணித்தனர்.

இதன்பிறகு ஐஐடி சென்னையில் 'பிரைன் சென்டர்' மையத்தை பிரதமர் மோதி திறந்துவைத்தார். பிறகு பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இன்று உள்ளது. 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நாளில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளோம்" எனக் கூறினார்.

'கருணாநிதி முதல் ஜோசப் விஜய் வரை'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக தான் பதவியேற்றதைக் குறிப்பிட்ட மோதி, "சில நாட்கள் முன்னதாக அரசின் முன்னவர் என்ற வகையில் எனது 25 ஆண்டுகால பயணம் நிறைவடைந்தது. முதலில் மக்கள், இரண்டாவது கூட்டாட்சி என்பதை தாங்கியே பயணித்து வந்துள்ளேன்" எனக் குறிப்பிட்டார்.

குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்ததாகக் கூறிய மோதி, "பிரதமர் ஆன பிறகும் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டது" என்கிறார்.

தமிழ்நாட்டில் அரசுகள் மாறினாலும் இங்குள்ள மக்களுக்கு சேவை செய்யும் மனநிலையில் தொடர்ந்து தான் இருந்து வந்துள்ளதாகவும் இதே நிலைப்பாட்டுடன் ஜோசப் விஜயுடன் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மெட்ரோ ரயில் வலைப் பின்னலை அதிகப்படுத்தியுள்ளதாகக் கூறிய மோதி, "இன்று 25 நகரங்களில் மெட்ரோ ரயில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் 250 கி.மீ என்ற அளவில் மட்டுமே அவை இருந்தனன. தற்போது 1100 கி.மீட்டர்களுக்கும் அதிகமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய செல்போன் தயாரிப்பாளராக இந்தியா உருவெடுத்துள்ளதாகக் கூறிய பிரதமர், "2014 முதல் தற்போது வரை 11 மடங்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி என்பது 50 மடங்கு அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.

மீனவர் நலன் மற்றும் துறைமுகங்கள் மேம்பாடு, கடல்பாசி பூங்கா மேம்பாடு ஆகியவற்றுக்கு மத்திய அரசு உதவிகளைச் செய்து வருவதாகக் கூறிய அவர், "மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தமிழ்நாட்டு மக்களின் உழைப்பும் ஆற்றலும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்" எனப் பேசினார்.

பூந்தமல்லி - வட பழனி மெட்ரோ ரயில் சேவை, மோதி, விஜய், சென்னை

நிபந்தனையின்றி நிதியை விடுவிக்க விஜய் கோரிக்கை

முன்னதாகப் பேசிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், "கல்வி, சுகாதாரம், மீனவர் நலன் என ஒட்டுமொத்த வளர்ச்சியை உள்ளடக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில், அறிவியல், கல்வி, இலக்கியம், சமூக நீதி ஆகியவற்றில் தொடர்ந்து பங்களித்து வரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது" எனக் கூறினார்.

"ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அது மக்களின் வாழ்வில் நேரடியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாக உள்ளது" என முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.

கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைக் கொண்டு வருவதைப் பரிசீலிக்குமாறு பிரதரைக் கேட்டுக் கொண்ட முதலமைச்சர், "மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ திட்டம் குறித்து மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்" எனக் கூறினார்.

ஆறுகள் இணைப்பு மிக முக்கியமானதாக உள்ளதாகக் கூறிய முதலமைச்சர், "கோதாவரி-காவிரி இணைப்பு தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும். இதை தேசிய திட்டங்களாக எடுத்துச் செல்ல வேண்டும்" எனப் பேசினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வருவதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் குறிப்பிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், "தமிழ் வழக்காடு மொழியாக கொண்டு வருவதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.

தவிர, தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய ரூ5,110 கோடி கல்வி நிதியை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பூந்தமல்லி - வட பழனி மெட்ரோ ரயில் சேவை, மோதி, விஜய், சென்னை

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம்

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மற்றும் புறநகர்ப் பகுதிகளின் இணைப்பை மேம்படுத்தும் வகையில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இவை ஓட்டுநர் இல்லாத ரயில்களாக இயக்கப்பட உள்ளன. ஆட்டோமேட்டிக் டிரெயின் ஆபரேஷன் (ATO) என்ற தொழில்நுட்பத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த ரயில்கள் ஓட்டுநர் இல்லாமலேயே இயங்கும் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் தொடக்க நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுடனேயே இயக்கப்பட உள்ளன. 2027 ஆம் ஆண்டில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான 15 கி.மீ நீளத்துக்கு 11 உயர் மட்ட ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி பேருந்து நிலையம், கரையான் சாவடி, குமணன் சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல் போரூர் புறவழிச்சாலை, வடபழனி உள்பட 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

மஞ்சள் நிற வழித்தடம் எனப்படும் இந்தப் பாதையில் 3.7 கி.மீ நீளமுள்ள ஈரடுக்கு மேம்பால அமைப்பும் நவீன சிக்னல்களும் வடிமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பயண நேரத்தைக் குறைப்பதில் புதிய வழித்தடம் முக்கியப் பங்கு வகிக்க உள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூந்தமல்லி - வட பழனி மெட்ரோ ரயில் சேவை, மோதி, விஜய், சென்னை

மெட்ரோ ரயில்: உரிமை கொண்டாடும் திமுக, அதிமுக

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதியும் முதலமைச்சர் ஜோசப் விஜயும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். முன்னதாக, மெட்ரோ ரயில் வழித்தடம் பயன்பாட்டுக்கு வருவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், 'வயிற்றில் சுமந்த குழந்தை அடியெடுத்து வைப்பதைக் காணும் தாய்போல் மகிழ்ச்சியும் மனநிறைவும் நான் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் வரலாற்றிலும் தி.மு.க.வின் பெயர் என்றும் நிலைபெற்றிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தத் திட்டம் தனது தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

'தனது ஆட்சிக்காலத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் அனுமதி பெற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் அடிக்கல் நாட்டப்பட்டது' என்கிறார் எடப்பாடி பழனிசாமி. மத்திய அரசின் நிதி வராத சூழலிலும் மாநில அரசின் நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்கியதாகக் கூறியுள்ள அவர், 'பிரதமரை சந்தித்து இதற்கான நிதி குறித்து கோரிய நிலையில் 63,246 கோடி ரூபாயை ஒதுக்குவதற்கு 2024 ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, 'அந்த அடிப்படையில் பூந்தமல்லி வடபழனி வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் விதைத்த விதைகள் தற்போது விருட்சமாவதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

'நயினார் நாகேந்திரனை எதற்காக அமர வைக்கிறார்கள்?" - மாணிக்கம் தாகூர்

பிரதமரின் நிகழ்ச்சி தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எந்தப் பொறுப்பிலும் இல்லாத நயினார் நாகேந்திரன் எந்த புரோட்டாகால் மூலமாக பிரதமரின் மேடையில் அமரவைக்கப்பட்டார் என்பது வியப்பாக உள்ளதாகக் கூறியுள்ளார்.

"இது மத்திய அரசின் நிகழ்ச்சி. இதற்கென சில புரோட்டாகால் உள்ளது. உள்ளூர் எம்.எல்.ஏ இருக்கலாம். எம்.பிக்கள் இருக்கலாம். அமைச்சர்கள் இருக்கலாம். நயினார் நாகேந்திரனை எதற்காக அமர வைக்கிறார்கள்?" எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு